நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும்… (சிறுகதை)

தம்ரூட் என்ற இனிப்புப் பண்டத்தைப் பற்றி நீங்கள் நாகூர்ப் பக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தால் தவிர கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை.  நாகூர், காரைக்கால், கூத்தாநல்லூர் போன்ற ஊர்களில் தம்ரூட் உண்டு.  நீங்கள் பார்த்திராத, சுவைத்திராத ஒரு தின்பண்டத்தைப் பற்றி உங்களுக்கு நான் எப்படியென்று அறிமுகப்படுத்துவது?  நாகூருக்குச் செல்ல நேர்ந்தால் தர்ஹா பக்கத்தில் உள்ள பஷீர் அல்வா கடையில் தம்ரூட் என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்.  தம்ரூட்டை ஓரளவுக்கு ஹல்வா ஜாதி என்று சொல்லலாம்.  பிராமணர் என்கிறோம், ஆனால் அய்யருக்கும் அய்யங்காருக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது?  அப்படித்தான் தம்ரூட்டும் ஹல்வாவும்.  ஹல்வாவை விட தம்ரூட் ஒஸ்தி என்றுதான் சொல்ல வேண்டும்.  நாகூர் ஏரியாவைத் தவிர வேறு இடங்களில் ஏன் தம்ரூட் இல்லை என்று தெரியவில்லை. 

வினித்துக்குத் திருவாரூர் சொந்த ஊர் என்பதால் இப்போது லாக் டவுன் காலத்தில் வீட்டிலிருந்தே வேலை.  அதனால் சென்னையை விட்டு விட்டு திருவாரூர் போய் விட்டான்.  இப்போது புத்தக விழாவுக்காக சென்னை வரும்போது நாகூருக்குப் போய் உங்களுக்காக தம்ரூட் வாங்கி வருகிறேன் என்றான்.  அந்தக் கணத்திலிருந்து எனக்கு தம்ரூட் ஆசை பிடித்துக் கொண்டது.  தம்ரூட் எனக்கு உயிர்.  சென்னையில் காசு கொடுத்தாலும் கிடைக்காது.  சென்ற ஆண்டு நாகூர் போனபோது சாப்பிட்டதுதான். அதற்கு முன்னால் அதைச் சாப்பிட்டு பத்து வருடம் இருக்கும்.  அதற்கும் முன்னால் என்றால் பள்ளிக்கூடம் படிக்கும்போதுதான்.  அது கூட அந்த இருபது ஆண்டு இளம் பிராயத்தில் இரண்டு மூன்று முறை சாப்பிட்டிருப்பேன்.  அவ்வளவுதான்.  காசு இருக்காது.  இத்தனைக்கும் பஷீர் அல்வா கடையின் முதலாளியின் மகன் பஷீர் பள்ளிக்கூடத்தில் என் வகுப்புத் தோழன்.  அவன் தோழனாக இருந்து என்ன பயன்?  அவன் வாப்பா அல்லவா கடை முதலாளி?  தர்ஹாவுக்குப் போகும்போது பஷீர் அல்வா கடையைத் தாண்டித்தான் போக வேண்டும்.  தினமுமே தர்ஹாவுக்குப் போய் விடுவேன்.  கிட்டத்தட்ட பத்து வயதிலிருந்து இருபத்து நான்கு வயது வரை தர்ஹாவுக்குச் செல்லாத நாள் இருந்ததில்லை.  சில நாட்களில் கடையில் வாப்பாவின் அருகில் பொட்டலம் மடித்தபடி நின்று கொண்டிருப்பான் பஷீர். 

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை போனபோது கடையில் பஷீர் இல்லை.  ஒரு இளைஞர்தான் கல்லாவில் இருந்தார்.  பஷீர் பற்றிக் கேட்டேன்.  தான் பஷீரின் மகன் என்றும் வாப்பா வீட்டில் இருப்பதாகவும் சொன்னார்.  பிறகு நான் பஷீரை வீட்டில் போய்ப் பார்த்தேன். நாகூரில் ஒரு வீடும் சென்னையில் இன்னொரு வீடும் இருப்பதாகச் சொன்னான்.  இரண்டு வீட்டுக்கும் வாரிசுகள் உண்டாம்.  ஓஹோ.   

நேற்று புத்தக விழாவுக்குச் சென்ற போது வினித்தும் வந்தான்.  தம்ரூட் பொட்டலத்தை நீட்டினான்.  நான் வாசகர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தேன்.  பக்கத்தில் கொடுங்கள், கிளம்பும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றேன்.  செந்திலும் முறுக்கு கொண்டு வந்தார்.  சேலம் மாவட்டத்தின் ஆட்டையாம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.  அந்த கிராமத்தின் கை முறுக்கு உலகப் பிரசித்தம்.  அவர் என்னுடைய பங்கை கமுக்கமாக ஒரு தனிப் பையில் போட்டு வைத்து விட்டார்.  நான் அரக்கப்பரக்கக் கிளம்பும் போதும் மறக்காமல் கொடுத்து விட்டார்.  அந்தப் பையிலேயே தம்ரூட்டும் இருக்க வேண்டும்.  அதுதான் ஏற்பாடு. 

ஏழரைக்கே ஸீரோ டிகிரி அரங்கை விட்டுக் கிளம்பி விட வேண்டும் என்பது திட்டம்.  அப்போதுதான் வீட்டுக்கு எட்டுக்கே போய் விட முடியும்.  வீட்டிலிருந்து வெளியே போகக் கிடைத்திருக்கும் இந்தப் பரோல் ஒரு ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு கிடைத்திருக்கும் வரம்.  வெளியே போய் ஒரு வருடம் ஆகிறது.  அட, பேண்ட் போட்டே ஒரு ஆண்டு ஆகிறது.  அப்புறம் என்ன?  இந்தப் பரோல் கூட எப்படிக் கிடைத்தது என்றால் அவந்திகாவின் ஒரு சின்ன அறியாமையினால்தான்.  கொரோனா தடுப்பூசி பழக்கத்துக்கு வந்த இரண்டாம் நாளே ஓடிப் போய் போட்டுக் கொண்டு விட்டேன்.  அவந்திகாவும் என்னோடு சேர்ந்து கொண்டாள். ”இப்படி அவசர அவசரமாகப் போட்டுக் கொண்டதற்குக் காரணம் புத்தக விழாவுக்குப் போக வேண்டும் என்றுதானே?” என்று கேட்டாள் அவந்திகா.  எனக்கு அப்படி எந்த எண்ணமும் இருந்திருக்கவில்லை.  ஆனாலும் கிடைத்த வாய்ப்பை ஏன் விடுவானேன் என்று ஆமாம் என்றேன்.  அப்படியானால் புத்தக விழா எட்டுக்கு முடிந்ததும் எட்டரைக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்றாள்.  ஆஹா, எட்டுக்கே இருப்பேன் என்று சொல்லி விட்டு ஒழுங்காகக் கிளம்பினேன்.

மூன்றரைக்கே நண்பர் பிரபு வந்தார். வழியில் ராஜா அண்ணாமலைபுரம் சங்கீதாவில் காஃபி குடித்தோம். இங்கேதான் காலை நடைப் பயிற்சி முடிந்த கையோடு நானும் ராகவனும் ராமசேஷனும் வந்து கொண்டிருந்தோம். சனி ஞாயிறு நிச்சயம்.  மற்ற தினங்களிலும் அவ்வப்போது வருவோம். இங்கே கிடைக்கும் பெங்களூர் தோசை மற்றும் துப்பா தோசைக்கு நிகர் எதுவுமே இல்லை.  வந்து ஒரு வருடம் ஆயிற்று.

காஃபியைச் சொல்லி விட்டு அமர்ந்தால் என் பக்கவாட்டு மேஜையில் ஆவணப்பட இயக்குனர் ரமணி.  அவர் என் எதிர்ப் பக்கம் அமர்ந்திருக்க அவர் எதிரே ஒரு பெண். பெண் யாரென்று தெரியவில்லை.  அதற்கு நான் பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க வேண்டும்.  ரமணியைப் பார்த்தே ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும். சட்டென்று முகத்தைத் திருப்பி என் நேர் எதிரே அமர்ந்திருந்த பிரபுவிடம் கண்ணிமைக்கும் நேரம் கண்களை ஓட்டி விட்டு, என் வலதுகைப் பக்கம் இருந்த ரோட்டை பராக்கு பார்க்க ஆரம்பித்தேன். பிரபு அவராக எதுவும் பேச மாட்டார். நாமே பேச ஆரம்பித்தாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டு அமைதியாகி விடுவார்.  அவரும் நானும் சந்தித்தால் அந்த சந்திப்பு அமைதியாகவே கழியும்.  அவராக என்னை ஒரு கேள்வி கேட்டதில்லை.  நான் கேட்பதற்கு மட்டும் பதில் ஓரிரு வார்த்தைகளில் சொல்வார்.

அதிகமாக சந்திப்பது திரைப்பட விழாக்களில்.  மவுண்ட் ரோடு புஹாரியில்.  அவர் பேலியோ உணவுக்காரர் என்றாலும் நான் எங்கே சாப்பிட்டாலும் அங்கே அவருக்கென்று ஒரு பேலியோ உணவைத் தயார் பண்ணிச் சொல்லி விடுவார்.  அநேகமாக நான் அசைவ உணவு விடுதிகளுக்குத்தான் செல்வேன் என்பதால் அவருக்கு பேலியோ பிரச்சினையாக இருப்பதில்லை.  எல்லா இடத்திலும் மௌனம்தான்.  ஆனால் நான் எழுதுவது ஒன்றைக் கூட விடுவதில்லை.  இப்போது எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கதையைக் கூட இது இணையதளத்தில் வெளிவந்த அடுத்த நிமிடம் படித்து விடுவார் என்று நினைக்கிறேன். 

பிரபுவின் வீடு என் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  அதனால் திரைப்பட விழா போன்றவைகளுக்கு என் வீட்டுக்கு வந்து அழைத்துக் கொண்டு போவார்.  அவருடைய மௌனத்துக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால், புத்தக விழாதான்.  சென்ற ஆண்டு பதினான்கு தினங்களும் தினம் மூன்று மணிக்குப் போய் இரவு பத்து மணிக்கு புத்தக விழாவிலிருந்து கிளம்புவேன்.  பிரபுவின் இன்னொரு விசேஷ குணம், மூன்று மணிக்குக் கிளம்புவோம் என்று சொன்னால் மிகச் சரியாக மூன்று மணிக்கு என் வீட்டின் தரைத் தளத்திலிருந்து போன் பண்ணுவார்.  அது எப்படி இத்தனைத் துல்லியமாக வருகிறீர்கள் என்று கேட்டதற்கு, ஐந்து நிமிடம் முன்னதாகவே வந்து விடுவேன், மூன்று மணிக்குத்தான் போன் பண்ணுவேன் என்றார்.  புத்தக விழாவில் நான்கு மணியிலிருந்து ஒன்பது மணிக்கு விழா முடியும் வரை அருகிலேயே பேசாமல் அமர்ந்திருப்பார்.  கூட்டம் அதிகமாக இருந்தால் எங்காவது மற்ற அரங்குகளுக்குச் சென்று வருவார். பிறகு வீட்டிற்குக் கிளம்ப பத்து ஆகும்.  வீடு பத்தரை.  இப்படியே இரண்டு வாரமும்.  இந்த ஆண்டு கொரோனா அப்படி நடக்க விடவில்லை. 

சரி, எவ்வளவு நேரம்தான் ரோட்டைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருப்பது?  ரமணியும் என்னை கவனிக்கவில்லை.  அவர் மேஜைக்கும் என் மேஜைக்கும் இடையில் இருந்தது ஒரு அடிதான். திரும்பியதில் அவர் எதிரே இருந்தது கலா என்று தெரிந்தது.  முழுப் பெயர் மறந்து போனேன்.  சே, தொண்டையில் இருக்கிறது.  நாக்குக்கு வர மாட்டேன் என்கிறதே.  ரொம்ப நேரமாக சிப்பந்தி எங்கள் பக்கம் வராததால் பிரபுவே எழுந்து போனார்.  ஐயோ என்று பயந்து விட்டேன்.  எனக்காக யாராவது காஃபி ஆர்டர் கொடுத்தால் சுத்தமாக பயந்து விடுவேன்.  எனக்குக் காஃபி எந்த அளவுக்குப் பிடிக்குமோ அந்த அளவுக்கு அதில் சர்க்கரை அளவோ டிகாக்‌ஷன் அளவோ கூடியோ குறைவாகவோ இருந்தால் குடிக்க மாட்டேன்.  சர்க்கரை கம்மியாக இருக்க வேண்டும்; டிகாக்‌ஷன் அதிகமாக இருக்கக் கூடாது.  இதில் மிகப் பெரிய நுணுக்கம் ஒன்று உண்டு.  சர்க்கரை கம்மி என்று சொல்கின்ற அத்தனை பேருமே காஃபி ஸ்ட்ராங்காகக் குடிக்கும் பேர்வழிகளாக இருப்பார்கள்.  நான் மட்டுமே சர்க்கரையும் கம்மி, காஃபியும் ஸ்ட்ராங்காக இருக்கக் கூடாது என்று குடிப்பவன். 

பிறகு சிப்பந்தியே வந்தார்.  ரமணியும் என்னிடம் எழுந்து வந்தார்.  ஓ ரமணி, எப்படி இருக்கிறீர்கள், உங்களை கவனிக்கவே இல்லை என்று ஒரு பொய்யைச் சொன்னேன்.  பரிச்சயமான நண்பர்களிடம் முகமன் கூறுவதை விரும்பாத என்னுடைய பழக்கத்தைச் சொல்லாமல் மறைப்பதற்காக ஒரு பொய்யைச் சொல்ல நேர்ந்ததற்காக வருந்தினேன்.  கலாவும் என்னைப் பார்த்துச் சிரித்தார்.  கலாவின் சிரிப்பு பிரசித்தியானது.  ஒளிவு மறைவே இல்லாத சிரிப்பு.  எவ்வளவு பளபளவென்று ட்ரிம்மாக இருக்கிறீர்கள் சாரு, அட்டகாசம் என்று அட்டகாசமான சிரிப்புடன் சொன்னார்.  மனதுக்கு இதமாக இருந்தது.  ஏனென்றால், ஒரு வருடம் கழித்து பேண்ட்டை மாட்டிய போது பேண்ட் டக்கென்று முழங்காலுக்கு இறங்கி விட்டது.  பிறகு பெல்ட்டை மாட்டித்தான் சரி பண்ணினேன். 

காஃபி குடித்து விட்டு வெளியே வந்த கையோடு கலாவின் முழுப் பெயர் ஞாபகம் வந்தது.  கலைராணி.  ஆக, கலா இல்லை.  கலை என்றுதான் அழைப்பது.  ஏன் இப்படி எனக்குத் தப்புத் தப்பாக பெயர்கள் ஞாபகத்தில் நிற்கின்றன என்று தெரியவில்லை. காவியா என்ற பெண்ணின் பெயர் கூட எனக்கு மூன்றெழுத்துப் பெயர் என்றும் முதல் எழுத்து க’வில் தொடங்கும் என்றும் மட்டுமே ஞாபகம் நின்றது.  இப்படி ஒரு பழக்கம்.   

புத்தக விழாவில் ஒருத்தர் பாக்கியில்லாமல் கேட்டார்கள், ஏன் இப்படி இளைத்து விட்டீர்கள் என்று.  ஓ, அவ்வளவுக்கா எலும்பும் தோலுமாக இருக்கிறேன்?  எல்லோரிடமும் ஒரே பதில்தான்.  எனக்கு இதிலெல்லாம் ஜாலக்மாலக்காகப் பொய் பேசத் தெரியாது.  எனக்கும் அவந்திகாவுக்குமான கால வித்தியாசம்தான் இந்த இளைப்புக்குக் காரணம்.  வேறு ஒன்றும் பெரிதாக இல்லை.  இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இருக்கும் கால வித்தியாசம் போன்றது அது.  அவந்திகா எழுந்து கொள்வது ஒன்பது.  காலை உணவு பதினொன்றரை.  மதிய உணவு மூன்றரை.  சமயங்களில் நாலு.  நானோ நான்கு மணிக்கு எழுந்து கொள்பவன்.  பதினொன்றரை வரை என்றால், ஏழரை மணி நேரம் ஒரே ஒரு காஃபியைக் குடித்து விட்டுக் கொலைப் பட்டினி என்றால் எப்படி இருக்கும் உடம்பு?  சரியாகக் கணக்குப் போட்டால் அது ஏழரை கூட அல்ல.  பத்தொன்பதரை மணி நேரப் பட்டினி.  மாலை நான்கு மணிக்கு சாப்பிடுகிறேனா?  அதற்குப் பிறகு எப்படி இரவில் பசிக்கும்?  அரை டம்ளர் பால் குடித்து விட்டுப் படுக்க வேண்டியதுதான்.  ஆக, முதல் நாள் மாலை நான்கிலிருந்து மறுநாள் முன்பகல் பதினொன்றரை வரை பத்தொன்பதரை மணி நேரம். 

பசியிலேயே செத்து விடுவோமோ எனத் தோன்றும்.  பசியிலேயே ஹார்ட் அட்டாக் வந்து விடுமோ எனத் தோன்றும்.  அப்படி வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் மருந்து ஒன்றும் வேண்டாம், கேண்டீனிலிருந்து ரெண்டு இட்லியோ ரெண்டு இடியாப்பமோ வாங்கிக் கொடுங்கள், சரியாகி விடும் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

ஆனால் இதையெல்லாம் மிலரப்பாவை நினைத்துத்தான் கடப்பேன்.  தினம் தினம் இந்தப் பாடு அல்லவா?  தினம் தினம்.  தக்காளி இருந்தால் ஒன்றிரண்டு தக்காளியைப் போட்டு சமாளிப்பேன்.  பிஸ்கட் தின்பேன்.  முறுக்கு தின்பேன்.  பதினொன்றரை வரை என்னவெல்லாம் தின்னக் கிடைக்கிறதோ அதெல்லாம் உள்ளே போகும்.  ஆனால் அதெல்லாம் யானைப் பசிக்கு சோளப் பொறி மாதிரிதான். 

எல்லாம் ஸ்விக்கிக்கு நிலவும் தடை காரணமாகத்தான்.  எனக்கு சின்மயா நகர் ஞாபகம் வரும்.  சின்மயா நகரில் காலையில் பிரச்சினை இருக்காது.  ரெண்டு பேரும் ஆஃபீஸ் போவோம் என்பதால் சடபுடவென்று சமையல் ஆகும்.  ஓடி விடுவோம்.  அப்போது எனக்குப் பயில்வான் உடம்பு.  இரவுதான் கன்னாபின்னாவென்று பசிக்கும்.  ஒரு முழுக் கோழியைத் தின்னத் தோன்றும்.  ஆனால் வீட்டில் அடுப்பு எரியாது.  காலையிலும் சோறு சாம்பார், மதியமும் அலுவலகத்துக்கு அதே சோறு சாம்பார்.  இரவும் அதுவேவா?  எனக்கு ஆகாது.  கிட பட்டினி.  சின்மயா நகர் அப்போது ஒரு சுடுகாடு.  ஒரு உணவகம் கிடையாது.  அதிலும் சனி ஞாயிறு வந்தால் வீடு நரகம். அந்த ஒரு காரணத்தினாலேயே ஜாகையை மாற்றிக் கொண்டு மைலாப்பூர் வந்தேன்.  மைலாப்பூரில் தெருவுக்கு நாலு உணவகங்கள், மெஸ்ஸுகள்.  சாப்பாட்டுப் பிரச்சினை தீர்ந்தது. 

ஆனால் கொரோனா அறிமுகமாகி எங்கள் வீட்டில் ஸ்விக்கிக்குத் தடை கிளம்பிய பிறகு சாப்பாட்டில் விழுந்தது மண்.  காலை உணவு பதினொன்றரைக்குக் கிடைத்தால் என்ன சாப்பிட முடியும்?  பசி மரத்துக் கிடக்கும்.  எப்போதும் சாப்பிடும் அளவில் நான்கில் ஒரு மடங்கு உட்கொள்வேன்.  பிறகு மிகச் சரியாக ஒரு மணிக்குப் பசிக்கும்.  நான் பன்னிரண்டு மணிக்கே வெங்காயம், பூண்டு, காய், கீரை எல்லாம் நறுக்கி வைத்து விட்டு, அரிசியையும் பருப்பையும் களைந்து குக்கரில் வைத்திருப்பேன்.  அவந்திகா இரண்டு மணிக்கு சமைக்க வருவாள்.  சமயங்களில் இரண்டரையும் ஆகும்.  மூன்றரைக்கு சமையல் முடியும்.  அப்போதும் என் அளவில் நான்கில் ஒரு மடங்கே சாப்பிட முடியும்.  பசி மரத்துப் போயிருக்கும்.  ஒருநாள் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலில் ஒரு அத்தியாயத்தை காயத்ரியும் நானும் ஸூம் மூலம் சரி பார்த்துக் கொண்டிருந்தோம்.  மணி மூணே முக்கால்.  கை காலெல்லாம் எனக்கு நடுங்கிக் கொண்டிருந்தது.  கண்கள் இருண்டு இருண்டு வந்தன.  நான் மிகவும் சோர்வாக இருப்பதைக் கண்ட காயத்ரி சாப்பிட்டீர்களா என்றாள்.  சமையல் ஆகிக் கொண்டிருக்கிறது என்றேன் ஈனஸ்வரத்தில்.  அப்படியானால் சாப்பிட்ட பிறகு வாருங்கள், செய்வோம் என்றாள்.  சாப்பிட்ட பிறகு வர நாலரை ஆகி விடும்.  அதற்குப் பிறகு அவளுக்கு வீட்டுக்குக் கிளம்பும் நேரம் வந்து விடும்.  வீட்டில் போய் அவளால் இந்த வேலையைச் செய்ய முடியாது.  ஆனாலும் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  கிட்டத்தட்ட மயக்கம் போட்டு விழும் நிலைக்கு வந்து விட்டேன்.  நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிக் கிளம்பி விட்டேன்.  நாலு மணிக்கு சாப்பிடும்போது ஒரு கவளம் கூட சாப்பிட முடியவில்லை.  இரவும் எதுவும் சாப்பிட முடியவில்லை. 

இரண்டே இரண்டு பெயர்கள்தான் இந்தப் பிரச்சினையால் எனக்கு மன உளைச்சல் ஏற்படாமல் காப்பாற்றின. மார்க்கி தெ சாத்.  சிறைச்சாலைகளிலும் மனநோய்க் காப்பகங்களிலும் அவன் வாழ நேர்ந்த போது கக்கூஸில் இருக்கும் டிஷ்யூ காகிதங்களில்தானே தன்னுடைய பெரிய பெரிய நாவல்களை எழுதினான். அவனுடைய எழுத்துகளுக்காகத்தானே அவன் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறைச்சாலையிலும் மனநோய் விடுதிகளிலும் அடைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டான்.  எழுத்துக்கு சன்மானமாக சமூகமும் குடும்பமும் கொடுக்கக் கூடிய மரியாதை இதுதானே.  எனக்குக் கிடைத்தது மிகக் குறைந்த பட்ச தண்டனை.  என் எழுத்தை அவந்திகா வாசிப்பதில்லை என்பதே எத்தனை பெரிய கொடுப்பினை தெரியுமா என்று நினைத்துக் கொள்வேன்.  இன்னொரு பெயர், ஜப்பானிய ஞானி மிலரப்பா.  ஞானத்தை அடைவதற்காக எத்தனை பெரிய தண்டனைகளை அனுபவித்தார்.  நீ செய்த முப்பது கொலைகளுக்கான பிராயச்சித்தத்தை முடிக்காமல் உனக்கு எப்படி நான் ஞானத்தை போதிப்பது என்றல்லவா கேட்டார் மிலரப்பாவின் குரு.  ஞானம் தேடிப் போன மிலரப்பாவிடம் ஒரு கல் குடிலைக் கட்டச் சொன்னார் குரு.  பெரிய பெரிய பாறாங்கற்களைச் சுமந்து வந்து குடிலைக் கட்டினார் மிலரப்பா.  துணைக்கு இன்னொரு ஆளையும் வைத்துக் கொண்டார்.  கட்டி முடித்து குருவிடம் காண்பித்தார்.  நான் உன்னைத் தனியாகத்தானே கட்டச் சொன்னேன், நீ துணையோடு கட்டியிருக்கிறார், இடித்து விட்டு மீண்டும் கட்டு என்றார் குரு.  உடனே தனியாகக் கட்டினார் மிலரப்பா.  கட்டி முடித்ததும் வந்து பார்த்த குரு இதில் வாஸ்து சரியில்லை, இடித்து விட்டுக் கட்டு என்றார்.  மூன்றாவது முறையாகவும் கட்டினார் மிலரப்பா.  வந்து பார்த்த குரு, உன்னை எவன் வீடு கட்டச் சொன்னது, எல்லாவற்றையும் இடித்துப் போடு என்று சொல்ல வீட்டை இடித்து விட்டு குருவும் வேண்டாம், ஞானமும் வேண்டாம் என அந்த இடத்திலிருந்தே தப்பி ஓடினார் மிலரப்பா. பிறகுதான் மிலரப்பாவை அழைத்து வந்த குரு நீ செய்தது அனைத்தும் பிராயச்சித்தம்தான் என்றார்.  அதுபோல என்னுடைய பிராயச்சித்தம்தான் இந்த ஓர் ஆண்டுப் பட்டினியோ என்னவோ யார் அறிவார்.

வீட்டில் பிரச்சினை பண்ணிக் கொள்ளக்கூடாது, எட்டரைக்கு வீட்டில் இருந்தால்தான் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் புத்தக விழாவுக்குச் செல்ல அனுமதி கிடைக்கும் என்று பிரதிக்ஞை எடுத்துக் கொண்டபடி ஏழரை மணிக்கே ஸீரோ டிகிரி அரங்கிலிருந்து கிளம்பினேன்.  ஆனால் அப்போதுதான் வந்தார் ஷ்ருதி டிவி கபிலன்.  ஒரு சின்ன பேட்டி.  பத்து நிமிடத்தில் முடித்து விடலாம் என்று பார்த்தால் எட்டரை வரை நீண்டது.  அப்போது எட்டேகால் மணி அளவில் அவந்திகாவிடமிருந்து போன்.  பேட்டியின் இடையே எப்படி எடுப்பது.  எடுக்கவில்லை.  விடாமல் அடித்துக் கொண்டே இருந்தாள்.  பதினைந்து முறை பண்ணினாள்.  எடுக்காவிட்டால் முப்பது நாற்பது என்று போகும்.  நேராக போலீஸ் கமிஷனரிடமே போனாலும் போவாள்.  கற்பனை அல்ல, நிஜமாகச் செய்வாள்.  அதனால் பதினைந்தாவது தடவை சீனியிடம் கொடுத்து இன்ன மாதிரி டிவி பேட்டியில் இருக்கிறேன் என்று சொல்லச் சொன்னேன்.  ஆனால் அவந்திகாவின் இரண்டாவது மூன்றாவது அழைப்பிலேயே நான் பேட்டியில் உளற ஆரம்பித்து விட்டேன்.  பத்தாவது அழைப்பிலெல்லாம் செம உளறல்.  எட்டரை மணிக்கு எனக்கு வேர்த்து விறுவிறுத்து நெஞ்சு லேசாக வலிக்க ஆரம்பித்து விட்டது. பதற்றம் வந்தால் இப்படித்தான் Angina எட்டிப்பார்க்கும்.  உடனடியாகக் கிளம்பினேன்.  அப்போதும் முறுக்கும் தம்ரூட்டும் மறக்கவில்லை.  செந்தில் கொடுத்த பெரிய முறுக்குப் பையில்தான் தம்ரூட்டும் இருந்ததாகச் சொன்னார்கள். 

மூத்திரம் அடைத்தது.  அதையெல்லாம் வீட்டில் போய்ப் பார்த்துக் கொள்ளலாம்.  விழுந்தடித்து ஓடினேன்.  சீனியிடம் என்ன என்று கேட்டேன்.  ஏதாவது விபத்தோ என்னவோ என்று வேறு பயம் எனக்கு.  அவந்திகா செம கோபத்தில் என்னைச் சத்தம் போட்டார்கள், இதற்குத்தான் இவரை நான் வெளியிலேயே அனுப்புவதில்லை, எல்லாம் உங்களால்தான் இப்படிக் கெட்டுப் போகிறார்,  உங்களிடம் நான் பேச விரும்பவில்லை, அவரைப் பேசச் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டுக் கட் பண்ணி விட்டார் என்றார் சீனி. என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு இது வேறு தண்டனை.  இப்படி அடிக்கடி அவந்திகாவிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். 

போனில் அழைத்து விளக்கினேன்.  நேரில் வா.  அவ்வளவுதான் பேசினாள்.  கட் பண்ணி விட்டாள்.  வலி அதிகரித்தது.  வீட்டுக்கு வரும்போது ஒன்பது.  முறுக்கையும் தம்ரூட்டையும் உள்ளே அனுமதிக்க முடியாது, அதை நான் குப்பையில் போட்டு விடுவேன், கொரோனா இருக்கும் என்றாள்.  ஏம்மா, கிராண்ட் ஸ்வீட்ஸில் வாங்கிச் சாப்பிடுகிறோம், இதைச் சாப்பிட்டால் என்ன என்று சொல்லிப் பார்த்தேன்.  இதெல்லாம் வெளியூரிலிருந்து வந்தது.  வெளியூர்களில் மனிதர்கள் கொரோனாவினால் மடிந்து கொண்டிருக்கிறார்கள், நீ என்ன சொன்னாலும் சரி, குப்பையில்தான் போடப் போகிறேன் என்று சொல்லி விட்டாள். 

மறுநாள் அவள் ஒன்பது மணிக்குத்தானே எழுந்து கொள்வாள்.  நாம் நாலு மணிக்கே எழுந்து இரண்டையும் எங்காவது ஒளித்து வைத்து விடுவோம் என்று திட்டமிட்டேன். ஒளித்து வைத்தால் மட்டும் எங்கே என்று கேட்க மாட்டாளா.  ராகவனை அழைத்து அவரிடம் கொடுத்து விட்டேன் என்று சொல்லி விடலாம் என அதற்கும் ஒரு பதில் தயார் பண்ணி வைத்திருந்தேன். காலையில் பார்த்தால் பையில் முறுக்கு மட்டும்தான் இருந்தது.  தம்ரூட்டைக் காணோம்.  அவள் நள்ளிரவே குப்பையில் போட்டிருந்தால் இரண்டையும் அல்லவா போட்டிருக்க வேண்டும், மேலும் நள்ளிரவு வேலையெல்லாம் செய்ய மாட்டாளே, சரி, தம்ரூட் மிஸ்ஸாகி விட்டது, வினித்திடம் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டு முறுக்கை எடுத்து வந்து என் புத்தக அலமாரிக்குள் ஒளித்து விட்டேன்.  அது ஒரு மர அலமாரி.  மூடியிருக்கும்.  உள்ளே கரப்பானோ பல்லியோ இருந்து எச்சமிட்டால் என்ன செய்வது என்று தோன்றியது.  வேறு வழியில்லை.  எல்லாவற்றோடும் தின்ன வேண்டியதுதான்.  காலையில் அவந்திகா பூனைக்கு உணவு கொடுக்கக் கீழே போன போது இரண்டு முறுக்கு தின்றேன்.  உலக டேஸ்ட்.  இப்படியே ஓரியாகக் காலி பண்ணி விட வேண்டியதுதான்.  தம்ரூட் போன இடம்தான் தெரியவில்லை.  பத்து மணி போல காயத்ரிக்கு போன் போட்டுக் கேட்டேன்.  அவளுடைய காரில் இருக்கிறதாம்.  அங்கே எப்படிப் போனது.  அவளுடைய பையில் வைத்து விட்டார்களாம் யாரோ.  முடிந்தது கதை.  இன்னும் ஒரு மாதத்துக்கு அந்த தம்ரூட் காயத்ரியின் காரிலேயேதான் கிடக்கும்.  அவளுடைய ஞாபக மறதி உலகப் பிரசித்தம்.  ஒருமுறை ஞாபக மறதியாக பிளேட்டில் இருந்த இட்லியை எடுத்துத் தன் கைப்பையில் போட்டாள்.  எல்லார் எதிரிலும்.  பார்த்துக் கொண்டிருந்த எல்லோருடைய கண்களும் பிதுங்கி விட்டன.  பணம் என்று நினைத்துப் போட்டு விட்டாளாம்.  இப்படி பல லீலாவிநோதங்கள் நடக்கும்.  அது இந்தக் கதைக்கு வேண்டாம்.  ஆக மொத்தம் அந்த தம்ரூட் யாருக்கும் இல்லை.  அப்படியே அதை அவள் ஞாபகமாக எடுத்து வந்து விட்டாலும் அது குப்பைக்குத்தான் போகும்.  அவளுக்குத் தின்பண்டங்களில் அவ்வளவு சுரத்து இல்லை.  நான் சொன்னேன், தயை கூர்ந்து அதை புத்தக விழாவுக்கு எடுத்து வா.  நான் எப்படியாவது புத்தக விழாவுக்கு வரப் பார்க்கிறேன், வந்தால் தம்ரூட்டுக்காகத்தான் வர வேண்டும் என்றேன்.  அவ்வளவு ஏம்ப்பா கவலைப்படறீங்க.  என் கிட்ட ரெண்டு காரெல்லாம் இல்லை.  காரிலேயேதான் இருக்கும்.  நீங்க வாங்க, சாப்பிடலாம் என்றாள்.

ஆனால் அனுமதி கிடைப்பது போல் தெரியவில்லை.  நீ நேற்று எட்டுக்கே வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு ஒன்பதரைக்குத்தான் வந்தாய்.  அவரவர் கொரோனாவினால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஏம்மா, என் உயிரைப் பற்றி எனக்கு அக்கறை இருக்காதா?

அதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை.  உனக்கு ஏதாவது என்றால் என் கதி என்ன?  எனக்கு என்னைப் பற்றித்தான் கவலை. 

அதனால் தீர்மானமாகச் சொல்லி விட்டாள் போகக் கூடாது என்று.  காலை பத்து மணி போல் பிரசாத் போன் பண்ணினான்.  அவந்திகாவுக்கு. பிரசாத் எங்கள் மகன் கார்த்திக்கின் நண்பன். ஓ, ஓ, என்று பேசியவள் “இந்தா சாரு, நான் சொன்னா நீ நம்ப மாட்டாய், இதோ பிரசாத்தே சொல்கிறான், கேள்” என்று சொல்லி போனை என்னிடம் கொடுத்தாள்.  பிரசாத் ஹாஹா என்று சிரித்தபடி “என்ன அங்கிள்  ஃபேஸ்புக்கெல்லாம் ஒரே ரகளையா கிடக்கு.  நான் உங்க ஃபேஸ்புக் போஸ்டெல்லாம் ஒண்ணு விடாமப் படிப்பேன்.  தடுப்பூசி இப்போதானே போட்டீங்க.  அது எப்படி வேலை செய்யும்.  அடுத்த தடுப்பூசி இருபத்தெட்டு நாள் கழிச்சு போட்டு அதுக்குப் பிறகு பதினஞ்சு நாள் கழிச்சுல்ல தடுப்பூசியே வேலை செய்யும்.  நாங்கள்ளாம் சின்னப் பசங்க. நாங்களே வீட்டோட ஒடுங்கி உட்கார்ந்து கிடக்கோம்.  நீங்க இப்படிக் கிளம்பிட்டீங்களே” என்றான். 

நான் இங்கே தற்கொலை செய்து கொண்டால் உனக்கு என்னடா தெரியும் மயிராண்டி என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.  புத்தக விழாவுக்குள் இருக்கவே முடியவில்லை.  பார்க்கின்ற அத்தனை பேரும் கேட்கிறார்கள்.  என்ன சாரு, இப்படி எலும்பும் தோலுமாகப் போய் விட்டீர்கள் என்று.  ஏண்டா கொரோனாவில் சாவதை விட நான் பட்டினியால் செத்து விடுவேன் போலிருக்கிறதே இது உனக்குத் தெரியுமாடா என்று கெட்ட வார்த்தைகளோடு அவனிடம் கத்த வேண்டுமென்று தோன்றியது. 

அவந்திகாவிடம் மென்மையான குரலில் சொன்னேன்.  உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம், பன்னிரண்டு மணிக்குப் போய் விட்டு இங்கே இரண்டரைக்கு இருப்பேன் என்றேன்.  எப்படியாவது போ, இனிமேல் உன்னை என்னால் கட்டுப்படுத்த முடியாது என்றாள்.  உடனே குளித்து விட்டு பதினொன்றரைக்குக் கிளம்பி விட்டேன்.  பன்னிரண்டு என்று சொன்னாய் என்றாள்.  பன்னிரண்டிலிருந்து இரண்டு அங்கே.  இங்கே இரண்டரைக்கு நிற்பேன்.

இதே சம்பவங்களை அவந்திகா எழுத்தாளராக இருந்து எழுத நேர்ந்தால் எனக்காகத்தான் வாழ்வதாக எழுதுவாள்.  எனக்காகத்தான் சமைப்பதாகவே எழுதுவாள்.  அதில் கடுகத்தனையும் பொய்யில்லை.  நான் இல்லாவிட்டால் அவள் வெறும் மோருஞ்சாதமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து விடுவாள்.  அவள் சமைப்பதே எனக்காகத்தான். 

பிரபுவும் ராணுவ ஒழுங்குடன் வந்து விட்டார்.  காரில் போகும்போதே காயத்ரிக்கு போன் போட்டு தம்ரூட் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.  வாங்கப்பா இருக்கு என்றாள்.  எனக்கென்னவென்றால், வீட்டுக்குத்தான் எடுத்து வர முடியாது, குறைந்த பட்சம் புத்தக விழாவில் வைத்தாவது ஒரு விள்ளல் சாப்பிட்டு விடலாமே என்றுதான்.

போனவுடன் கேட்டால் நன்றாக இருக்காது என்று ஒரு பத்து நிமிடம் ஆனதும் தம்ரூட் எங்கம்மா என்று கேட்டேன்.  அவள் கணவர் ராமைப் பார்த்து அப்பா, சாருவுக்கு அந்த தம்ரூட்டை எடுத்து என்று சொல்லி முடிப்பதற்குள் புத்தகத்தை எடுத்துக் கொண்டு பில் போட வந்து விட்டார்கள்.  அவள் பில்லில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.  ராமுக்கு அவள் சொன்னதே எதுவும் புரியவில்லை.  சாருவுக்குப் பசி போல என்று நினைத்த படி, கொய்யாவைக் காண்பித்தார். குருக்கள் கல்பூரத் தட்டைக் காண்பிப்பது போல.  ஒரு எவர்சில்வர் டப்பாவில் கொய்யாத்துண்டங்கள் இருந்தன. வேண்டாம் என்று மறுத்து விட்டேன்.  அவர் ரெண்டு துண்டு எடுத்துச் சாப்பிட்டார். ஒரு பத்து நிமிடம் ஆனதும் காயத்ரியிடம் அம்மா அந்த தம்ரூட் என்றேன்.  அவளும் ராமைப் பார்த்து அப்பா, சாருவுக்கு அந்த தம்ரூட் என்று ஆரம்பிக்கவும் ஒருவர் பெரிய புத்தக மூட்டையுடன் பில் போட வந்தார்.  ராமும் உடனடியாக இன்னொரு எவர்சில்வர் டப்பாவை எடுத்துப் பிரித்து குருக்கள் கல்பூரத் தட்டைக் காண்பிப்பது போல் காண்பித்தார்.  உள்ளே தர்ப்பூசணித் துண்டங்கள் இருந்தன.  வேண்டாம் என்று மறுத்து விட்டேன்.  சரி, வளர்த்திக் கொண்டு செல்ல விரும்பவில்லை.  உங்களுக்கு சலிப்பாக இருக்கும்.  மூன்றாவது தடவையும் காயத்ரியிடம், அந்த தம்ரூட் எங்கேம்மா என்று முடித்தேன்.  காயத்ரியும் கர்ம சிரத்தையாக அப்பா, அந்த தம்ரூட்டை எடுத்து சாருவுக்கு என்று வாக்கியத்தை முடிப்பதற்குள்  ஒருவர் புத்தகத்தை பில்லுக்கு நீட்டினார்.  மணி ரெண்டு.  இன்றைக்கும் பிரச்சினை வேண்டாம் என்று கிளம்பி விட்டேன்.  அப்போது ராம் இன்னொரு எவர்சில்வர் டப்பாவைத் திறந்து முன்பு போலவே கல்பூரத் தட்டைக் காண்பிப்பது போல் காண்பித்தார்.  டப்பா நிறைய சிவப்பு நிறத்தில் ஹல்வா மாதிரி ஒரு பண்டம் இருந்தது.  தம்ரூட்டா என்று கேட்டேன்.  இல்லை சார், இது கோதுமை ஹல்வா என்றார்.  வேண்டாம் என்று மறுத்து விட்டுக் கிளம்பினேன்.

வாங்கின பையனுக்கு அதைப் பொறுப்பாகச் சேர்க்கத் தெரியவில்லை பார் என்று நினைத்துக் கொண்டு இரவு வினித்துக்கு போன் பண்ணினேன்.  இப்படியெல்லாம் குழப்படி ஆகும் என்று தெரிந்து விட்டது சாரு, அதனால்தான் முன்கூட்டியே யோசித்து உங்களுக்கான ஒரு கிலோவை நானே வைத்துக் கொண்டிருக்கிறேன், நாளை காலை ஏழு மணிக்கு சேர்த்து விடுகிறேன் என்றான். அதாவது இன்று காலை. இன்று காலைதான் கபிலனோடு ஒரு டிவி பேட்டி நாகேஸ்வர ராவ் பூங்காவில் இருந்தது. 

ஆனாலும் வினித்திடம் சொன்னேன், ஏம்ப்பா ஒரு சின்ன பையன் பேசுகிற மாதிரியா பேசுகிறாய்.  எப்படிப்பா நீ ஆறுக்கே எழுந்து ஏழுக்கு பார்க் பக்கம் வர முடியும்?  நடக்கிற காரியமாகப் பேசு.

இருப்பேன்.  அவ்வளவுதான் சாரு.

காலை பதினோரு மணி வரை அவன் போன் அணைக்கப்பட்டிருந்தது.   

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai