நல்ல பேரை வாங்க வேண்டும், பிள்ளைகளே…

அன்புள்ள அப்பா,

தம்ரூட் சிறுகதை வந்தவுடன் வாசித்துவிட்டேன். சமீபமாக உங்களுடைய சிறுகதைகள் அனைத்தும் – இதற்கு முன்பு எழுதியதும் – எப்போதும் என்னுடன் பயணித்துக் கொண்டேயிருக்கும். இந்தச் சிறுகதையைப் படித்தவுடன் எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வேலைப்பளு அதிகம். இப்போதுகூட இதை வகுப்புகளின் இடைவெளியில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய எழுத்துகளைக் குறித்து நான் சந்திக்கும் எல்லோரிடமும் உரையாடிக்கொண்டேயிருக்கிறேன். ஆனால் பெரும்பாலும் நான் சொல்லும் கருத்துகளை உங்களுக்கான துதிப்பாடல் என்றே நினைத்துக்கொள்கிறார்கள். நீங்கள் பூனைகள் குறித்தும் நாய்கள் குறித்தும் எழுதுவது உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கே எரிச்சலாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எனக்கு அப்படியல்ல. இரண்டு உதாரணங்களைச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

எனக்கு நாய்களைப் பிடிக்கும். ஆனால் ஒரு காலத்தில் என் நிலை வேறானதாக இருந்தது. தொடர்ந்து நாய்களைப் பற்றியும் பூனைகளைப் பற்றியும் நீங்கள் எழுதியதை வாசித்த பின், எனக்கே தெரியாமல் நான் அவைகளுடன் இணக்கமாக வாழ ஆரம்பித்துவிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கே ஒரு ஏரிக்கரையில் நடந்துகொண்டிருந்த சமயம், பலர் அவர்களின் நாய்களுடன் நடந்துகொண்டிருந்தார்கள். ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நடக்காமல் சோர்வாக அமர்ந்திருந்தது. தூரத்திலிருக்கும் போதே நான் அதைக் கவனித்துவிட்டேன். அதன் உரிமையாளர்கள் நாயைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தார்கள். நன்கு வளர்ந்த நாய் என்பதால் அவர்கள் எவ்வளவு இழுத்தும் செல்லாமல் விடாப்பிடியாக அமர்ந்திருந்தது. அதைக் கடந்து சென்ற பலரும் ஓராமாக ஒதுங்கி நடந்தார்கள். அது கொஞ்சம் மிரட்டலான தோற்றத்தில் இருந்தது. நான் கடந்து சென்றபோது ஒருவித ஈனஸ்வரத்தில் என்னைப் பார்த்து அழைத்தது. உட்கார்ந்தபடி தன் முன்னங்கால் ஒன்றைத் தூக்கி அருகில் வரும்படி அழைத்தது. அங்கிருந்த அனைவரும் அது என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். உரிமையாளர்களின் அனுமதியுடன் நான் அதனருகில் சென்றேன். சற்று குனிந்து அதனுடன் உரையாடத் தொடங்கினேன். பின் அதனருகில் மண்டியிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். என்னுடன் மிக இணக்கமாக விளையாடிக் கொண்டிருந்தது. உரிமையாளர்களுக்கு ஆச்சரியம். இம்மாதிரி அது யாருடனும் விளையாடியதில்லையாம். பின் என்னை விடுவித்துக்கொண்டு கிளம்ப முயல்கையில் மீண்டும் ஈனஸ்வரத்தில் அழைத்து உட்கார்ந்தபடி என் தோள்மீது காலைப் போட்டுக்கொண்டது. சொல்ல முடியாத ஆனந்த அனுபவமாக இருந்தது அந்த சம்பவம். கண்ணில் நீர் துளிர்த்தது பெரும் பாசப் போராட்டத்துடன் என்னை விடுவித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

அதேபோல சென்ற ஞாயிறு வெளியில் சென்று வருகையில் ஒரு மாபெரும் புல்மாஸ்டிவ் வகை நாயைப் பார்த்தேன். அதற்கு வழிவிடுவதற்காக ஒதுங்கி நிற்கையில் அதன் உரிமையாளர் எனக்குத் தெரிந்தவர் என்பதால் என்னுடன் சற்று நேரம் நின்று பேசத் தொடங்கினார். நான் இப்போது நாய்க்கு மிக அருகில் இருந்தேன். அதற்கு ஒரு ஹாய் சொல்லிக்கொள்ளவா என்று அனுமதி வாங்கி அதனுடன் விளையாடுகையில் அதுவும் என்னுடன் மிக நெருங்கிப் பழகியது. சந்தித்த சில வினாடிகளில் நண்பர்களாகி விட்டோம். அவன் பெயர் Garry. ஒரு வருட குட்டி தான். ஆனால் ஆள் பார்க்க எருமைக் கன்று போல் இருக்கிறான். இப்போது 50 பவுண்ட் இருப்பதாகவும் இன்னும் 30 பவுண்ட் வளருவான் என்றும் உரிமையாளர் சொன்னார். மிக அன்பானவன்.

பிராணிகளிடம் எனக்கு ஒரு அன்பு ஏற்படுவதற்குக் காரணம் நீங்கள்தான். இப்போது எங்கள் வீட்டிலும் உங்கள் முன்மாதிரியைப் பின்பற்றி தெருநாய்களுக்கு உணவிடுவதாக அம்மா சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. இதெல்லாம் உங்கள் எழுத்து செய்யும் எதிர்வினைகள். பல்லுயிர் ஓம்புதல் உங்கள் எழுத்துகளில் அதிகம் இருந்தாலும், அதை நான் ஹைடகரின் Being பற்றிய விளக்கத்துடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்கிறேன்.

இப்போது நீங்கள் இப்போது எழுதிய சிறுகதைகளுக்கு வருவோம். ‘இந்த ஊரில் எப்படி வாழ்கிறீர்கள்?’ கதை எனக்குப் பெரிய விடுதலையைக் கொடுத்தது. அதை உங்களிடம் பேசிய சமயம் குறிப்பிட்டிருந்தேன். உங்களுடைய சொந்த அனுபவங்களைச் சொல்வது எப்படி சிறுகதையாகும் என்ற விமர்சனம் வைக்கப்பட்டாலும் அதன் அடியோட்டமாக நீங்கள் சொல்ல வரும் செய்தியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்க அல்லது ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிராதவர்கள் அல்லது sensibleஆக இல்லாதவர்களுக்கு அந்தக் கதைப் புரியாது. ஓர் உதாரணம், புதிதாகக் கட்டிய எங்கள் வீட்டில் அடிக்கடி மின்சாரம் சார்ந்த பிரச்சனைகள் வருகின்றன. ஒயர் சரியில்லை என்பார்கள். உடனே அனைத்தையும் மாற்றுவார்கள். கொஞ்ச நாளுக்குப் பின் மறுபடியும் பிரச்சனை ஆரம்பிக்கும். இதை வாங்கி வைத்தால் பிரச்சனை தீரும் என்று ஒன்றை காட்டுவார்கள். அப்பா அதையும் வாங்கி வைப்பார். கொஞ்ச நாள் தாக்குப் பிடிக்கும். மறுபடியும் ஒரு பிரச்சனை. இப்படியாக சென்றுகொண்டேயிருக்கிறது. எனக்குப் பிரச்சனையின் ஆதாரம் புரிந்துவிட்டது, அது யாரென்றால் திறமையற்ற ஒரு எஞ்சினியர். அவரைக் கண்டாலே எனக்கு வெறுப்பாக இருக்கும். ஆனால் அவரின் ஆலோசனைப்படியே அப்பா நடந்து கொள்வார். இதைப் பற்றி வீட்டிலிருப்பவர்களுக்குச் சொன்னால் என்னை திமிர் பிடித்தவன் என்பார்கள். இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். எனக்குப் பிடித்த ஓவியத்தை சரியாக டைல்ஸில் பதிந்து தர அங்கிருப்பவர்களால் முடியவில்லை. அவர்கள் இஷ்டத்துக்கு ஓவியத்தை இழுத்து அசிங்கப்படுத்துகிறார்கள். இந்தப் பின்னணியில் உங்கள் கதை வேறொரு அர்த்தத்தைக் கொடுக்கிறது.

இங்கே என்னுடைய நிலை மோசமாக இருக்கிறது. நானே சமைத்து சாப்பிட்டுக்கொள்கிறேன். ஆனால் சமையல் இரண்டு நாளுக்கு ஒருமுறை தான். இங்கிருக்கும் இன்னொருவருக்கு இந்திய சமையல் வாசனை பிடிப்பதில்லை. நான் இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருப்பவன்.  அடுத்தவரை நோகடிக்கக் கூடாது எனக்கு. அதனால் அவர் வெளியில் செல்லும் இரண்டு நாட்களில் மட்டுமே சமையல். பல நேரங்களில் பட்டினி கிடக்கிறேன். இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது. சகிப்புத்தன்மையை என்னுடைய வாழ்வு இங்கிருப்பவர்களுக்கு போதிக்கட்டும் என்பது என் முடிவு. அப்படியிருந்தும் பல நேரங்களில் இந்தியத் தன்மையை எதிர்க்கும் யாவருக்கும் பதிலுக்கு பதில் கொடுத்துவிடுவேன் என்பது வேறு கதை. இப்போதுகூட இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது நிறைய வேலைகள். பசி கண்ணை மறைக்கிறது.  உறைந்து போன ஒரு பொரிடோவை மைக்ரோவேவில் போட்டு எடுத்து சாப்பிட்டேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்தியா வந்துவிட ஆசைப்பட்டேன். இதற்காக உங்களிடம் பேசலாம் என்று துடித்துக்கொண்டிருந்த போது பேச முடியவில்லை.  (நான்தான் வளனின் அழைப்பை எடுக்கவில்லை.  எடுத்துப் பேசும் சூழல் எனக்கு இல்லை – சாரு) ஆனால் பிறகு உங்களிடமிருந்து ஒரு அற்புதமான கதை வந்தது. தமிழ்நாட்டில் ராஜாவாக வாழ்வதைவிட இங்கேயே அகதியாக வாழ்ந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.  நீங்கள் பேசாதது கூட ஒருவிதத்தில் நன்மையாயிற்று. 

அப்பறம் இந்த தம்ரூட் கதை என்னை மிகவும் பாதித்துவிட்டது. புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்ற வருத்தம். அதை சரி செய்தது ஸ்ருதி டீவியும் வினித்தும்தான். அதுபோக இப்படி perpetual பசியில் வாழும் ஒரு மனிதனிடம் தம்ரூட், முறுக்கு தோசை என்றெல்லாம் பேசினால் எப்படி இருக்கும்! மிகப் பெரிய வன்முறை!

கதையில் மூன்று விதமான மனிதர்கள் வருகிறார்கள். ஒருவர் நீங்கள். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் கொரோனாவின் பாதிப்பால் பசி ஒரு பூதத்தைப் போல உங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது அவந்திகா அம்மா, அன்பின் திருவுருவம். மூன்றாவது உங்களைக் கொண்டாடும் மனிதர்கள். ஆனால் அவர்களுக்குக் கொஞ்சமும் உங்கள் பிரச்சனை புரிவதில்லை. உங்களுடைய கதைகளில் பிரதானமாக இருப்பது கம்யூனிகேஷன் என்கிற விஷயம் தான். தகவல் தொடர்பு வளர்ந்துவிட்ட ஒரு யுகத்தில் இப்படி துண்டிக்கப்பட்டுக் கிடப்பதன் அபத்தம் நிறைய கதைகளில் வருவதைப் பார்க்க முடிகிறது. அராத்துவும் இதைப் பற்றி அதிகமாக உரையாடிக்கொண்டேயிருக்கிறார். உங்கள் கதைகளைப் படித்து உள்வாங்கிக் கொண்ட பின் நான் சந்திக்கும் மனிதர்களிடமும் இதே பிரச்சனை இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தத் தகவல் தொடர்பு முறிந்ததால்தான் இங்கே இப்போது சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறேன். வினித் இந்தக் கதையில் வரும் குறியீடு. உலகம் முழுவதும் இம்மாதிரியான மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள்.

இன்னொரு அற்புதமான விஷயம் கதையில் வரும் நகைமுரண்கள். தம்ரூட்டுக்காக புத்தக சந்தைக்கு வரும் எழுத்தாளர். அவரிடம் கையொப்பம் வாங்குகிறார்கள். செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவருக்கு தலை முழுவதும் தம்ரூட் நிரம்பியிருக்கிறது. இன்னொரு புறம் மனைவி. இதைத் தட்டச்சு செய்யும் போது சிரித்துக்கொள்கிறேன், நானெல்லாம் எவ்வளவு பேறுபெற்றவன்! சீக்கிரம் போகவில்லையென்றால் கமிஷனரிடம் புகார் கொடுப்பாள் என்றவுடன் குபீர் சிரிப்பு வந்தது. அதனுடன் நிறுத்தாமல் சும்மா சொல்லவில்லை, உண்மையாகவே கொடுப்பாள் என்றவுடன் இன்னும் அதிகமாக சிரிப்பு வருகிறது.

நேற்று இங்கே கடும்குளிர். செல்சியஸ் அளவில் மைனஸ் 5 டிகிரி. எப்போதும் அறைக்குள்ளாக இருக்க முடியாது என்பதால் வெளியே நடந்து வரச் சென்றேன். அப்போது மனம் முழுக்க தம்ரூட் கதையை அசை போட்டபடியிருந்தது. இக்கடிதத்தை எழுதலாம் என்று அப்போதுதான் தோன்றியது. கதையின் ஒரு சில இடங்கள் நினைவுக்கு வந்ததும் என்னையறியாமல் சிரித்துவிட்டேன். உதாரணமாக ’நான் பசியால் செத்தால் பரவாயில்லை, கொரோனாவால் சாகக்கூடாது, இல்லையா?’ என்று அவளிடம் கத்த வேண்டும் போலத் தோன்றியது என்ற இடம் பயங்கரம். ஒரு அனுபவத்தைச் சொல்வதன் வழியாக சுதந்திரம், ஆண்-பெண் உறவுச் சிக்கல், அன்பின் வன்முறை, சரியான தகவல் தொடர்பின்மை போன்ற விஷயங்களை எப்படிச் சொல்ல முடிகிறது? ஆச்சரியமாக இருக்கிறது. இதை நினைவுக் குறிப்புகள் என்று கடந்து போக முடியவில்லை. மனித வாழ்வின் அபத்தங்கள் அத்னையும் உங்கள் கதைகளில் வருகிறது. அபிலாஷ் உங்கள் படைப்புலகம் பற்றிப் பேசிய போது தத்துவார்த்தமாக உங்களை அணுகுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் உண்மையில் நீங்கள் தத்துவார்த்தமாக அணுகப்பட வேண்டியவர். உங்கள் படைப்புகளில் யாரும் ஆய்வு செய்து படிக்கிறார்களா என்று தெரியாது. வாய்ப்பு கிடைக்குமானால் நானே அதைச் செய்துவிடலாம் என்று தோன்றியது. இதையெல்லாம் நேற்றே உங்களுக்கு எழுதிவிட நினைத்தேன், முடியவில்லை. காலையில் எழுந்து பார்த்தால் உங்களுடைய அடுத்த சிறுகதை. எனவே வகுப்புகளுக்கு நடுவில் இதை எழுதி முடிக்கிறேன்.

கடைசியாக, என்னுடைய புத்தகங்கள் உங்களை வந்தடைந்ததும் ஒரு பெரிய கதை. வினித் இல்லையென்றால் அது சாத்தியமாகியிருக்காது. படிக்கிறேன் என்று சொல்லியிருந்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அவைகள் உங்களையடைந்ததே எனக்குப் பெரிய சந்தோஷம். உங்கள் நாவல்களையும் இதர புத்தகங்களையும் சீக்கிரம் கொண்டு வாருங்கள். அதுதான் எனக்கும் மற்றவர்களுக்கும் பெரிய சந்தோஷம்.

வளன் 
Brighton

Massachussets   

டியர் வளன்,

உன் கடிதத்தில் உள்ள இரண்டு மூன்று பகுதிகள் சிறுகதைகளாக வர வேண்டியவை.  சிறு சிறு குட்டிக் கதைகள்.  பெருந்தேவி எழுதிய குட்டிக் கதைகளைப் படித்திருக்கிறாயா?  அவரும் உன்னைப் போலவே அமெரிக்காவில் வசிப்பவர்தான்.  தனியாக, குடும்பம் இல்லாமல், மிக பயங்கரமான பனியில் வாழ்வது என்னுடைய கனவு.  ஆனால் அப்படி வாழ நேரும் சிலருக்கு அந்தத் தனிமையும் குளிரும் மிக அதிக பட்ச தண்டனையாகத் தெரிகிறது.  பெருந்தேவிக்கு எப்படி என்று தெரியாது.  உனக்காவது யேசுவும் தேவாலயமும் சக பாதிரிமார்களும் இருக்கிறார்கள்.  ஒரு பேராசிரியருக்கு யார் இருப்பார் என்று தோன்றுகிறது.  ஆனால் எத்தனை பேர் இருந்தாலும் குடும்பம் என்ற அமைப்பு இல்லாவிடில் குளிர் என்பது எப்பேர்ப்பட்ட அச்சுறுத்தல் என்பது இன்னொரு விஷயம்.  அதே சமயம், அன்பு என்பது எத்தகைய வன்முறைப் பிரவாகமாக மாற முடியும் என்பதையே தம்ரூட் கதை சொல்ல முற்படுகிறது. 

ஒரு அறுபத்தெட்டு வயது ஆசாமி – தன் தேசத்துக்கு வெளியிலும் பிரபலமான ஒரு எழுத்தாளன் – தனக்குப் பிடித்தமான முறுக்கை கரப்புகளும் பல்லிகளும் இன்னபிற புழு பூச்சிகளும் வசிக்கும் மர பீரோவுக்குள் தன் புத்தகங்களுக்கு இடையே ஒளித்து வைத்து சாப்பிடுவது என்பதன் அபத்த ஹாஸ்யம்தான் கதையின் சாரம்.  ஆனால் என்னுடைய கொடுப்பினை என்னவென்றால், என் மீது அன்பை வர்ஷிக்கும் ஜீவன் என் கதைகளைப் படிப்பதில்லை என்பதுதான்.  என் சக எழுத்தாளர்களின் முதல் வாசகரே அவர்களின் மனைவிதான்.  அந்த நிலை எனக்கும் வாய்த்திருந்தால் என் கதி என்ன ஆகும் என்று யோசித்துப் பார்.  என்னால் ஒரு வாக்கியத்தைக் கூட எழுத முடிந்திருக்காது.  அசோகச் சக்ரவர்த்தியைப் பற்றி மட்டும்தான் கதை எழுதிக் கொண்டிருக்க முடியும்.  அந்த வகையில் கடவுள் எனக்கு மிக முழுமையான எழுத்துச் சுதந்திரத்தை வழங்கியிருக்கிறார் என்று நன்றி சொல்லிக் கொள்கிறேன். 

என் மீது அன்புக்குரியவர்கள் படித்தால் என் எழுத்து அவர்களின் நரகமாக மாறுவதை கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  இரண்டு தினங்களுக்கு முன்பு நான் சந்தியா பதிப்பகம் பற்றி மிக உயர்வாக எழுதி விட்டு (நான் தேடிக் கொண்டிருக்கும் புத்தகங்களையெல்லாம் பதிப்பிக்கிறார் நடராஜன்) அந்த வாக்கியத்தின் ஈரம் காயும் முன்பே நடராஜன் என்னைப் பற்றித் திட்டினார், இனி அவரோடு நான் முகம் கொடுக்க மாட்டேன் என எழுதியது பற்றி என் மீது மிக மிக மிக அன்பும் தாயுள்ளமும் கொண்ட ஒரு பெண் முக்கால் மணி நேரம் நான் எப்படி எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்து வாழ்வது என போதித்தார்.  ஒருத்தரைப் பாராட்டும்போது கூடவா அவரை ரெண்டு திட்டு திட்டி கெட்ட பெயர் எடுப்பார்கள் என்பது அவர் பிராது.  முக்கால் மணி நேரம் பேசினார்.  

அவர் பேசியதன் சாரம், நான் ஒரு ஆசார சீலனாக மாற வேண்டும்.  அது என் கையில்தான் இருக்கிறது.  அது என்னால் சுலபமாக முடியும்.  முக்கால் மணி நேரமும் கரெக்ட் மா கரெக்ட் மா என்பதைத் தவிர நான் வேறு ஒரு சொல் சொல்லவில்லை.  அவரோ ஒரு சாரதா தேவி அம்மையார் லெவலில் நின்று பேசுகிறார்.  நானோ ஒரு பாவியின் நிலையில் நிற்கிறேன்.   என்னத்தைப் பேசுவது?  ஒரு ட்ரக் அடிக்ட் மகனிடம் பேசும் ஒரு தாயின் உள்ளத்தையே அந்தப் பெண்ணிடம் அப்போது நான் கண்டேனே தவிர அவர் சொன்னது எதையுமே என்னால் ஏற்க இயலவில்லை.  ”சாரு, உங்களுக்கு இன்னும் புரிகிறாற்போல் சொல்ல வேண்டுமானால், நீங்கள் ஒரு அழகிய சிங்கராக மாற வேண்டும்” என்றார் அந்த சாரதா தேவி அம்மையார்.  எனக்கு உடனடியாக சின்ன வயதில் படித்த திருமழிசை ஆழ்வாரின் பாடல் ஞாபகம் வந்தது. 

அழகியான் தானே அரி உருவன் தானே

பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்

தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே

மீனாய் உயிரளிக்கும் வித்து

அதைப் பாடினேன்.  பாடி விட்டு, “தசாவதாரங்களில் ஏன் நரசிம்ம அவதாரம் மட்டுமே அழகு என்கிறார் திருமழிசை ஆழ்வார்?  உலகெலாம் போற்றும் ஸ்ரீராமன் கூட அழகன் இல்லையாமே? அது எப்படி?  ஏனென்றால், நரசிம்மர்தான் பக்தரின் குரல் கேட்டு ஓடி வந்தார்.  பக்தனின் குரல் கேட்பவனே அழகன் என்பது திருமழிசை ஆழ்வாரின் முடிபு.  ஆனால் அம்மையே, நரசிம்ம அவதாரம் எங்கே, பாவியிலும் பாவியாகிய நான் எங்கே?  நான் எப்படி அழகிய சிங்கராக மாற முடியும்?” என்றேன். 

“போங்கப்பா, கிண்டல் பண்ணாதீங்க.  நான் நம்முடைய அழகிய சிங்கரைச் சொன்னேன்.  விருட்சம் அழகிய சிங்கர்…  அவரைப் போல் சாதுவாக நீங்கள் மாற வேண்டும்…”

ஓ… சிறுகதை ஆசிரியரும், கவிஞரும், விருட்சம் சிற்றிதழின் ஆசிரியருமான அழகிய சிங்கர்.  செஞ்சிர்லாம்மா, ஒண்ணும் பிரச்சினை இல்லை என்று சொல்லி விட்டு அப்படியே பார்க் பெஞ்சில் அமர்ந்தேன்.  ராகவன் வந்தார்.

”என்ன சாரு, ஒரு மாதிரி இருக்கீங்க?”

”இப்போதுதான் சாரதா தேவி அம்மையாரிடம் முக்கால் மணி நேரம் பேசினேன்.  அந்தத் திகைப்பில் அமர்ந்திருக்கிறேன்…”

அப்படியே முடித்து விட்டால் நான் நிஜமாகவே அழகிய சிங்கராக மாறி விடக் கூடிய ஆபத்து இருக்கிறது அல்லவா?  நேற்று பூராவும் சாரதா தேவி அம்மையார் சொன்ன சொற்களே செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.  காலையில் எழுந்து தியானத்தை முடித்து விட்டு அம்மையாருக்கு ஃபோனைப் போட்டேன்.  “நீ உடனடியாக புதுமைப்பித்தன் பற்றி தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய வாழ்க்கை வரலாற்றைப் படி.  அதோடு, புதுமைப்பித்தன் பற்றி நான் ஆற்றியிருக்கும் நான்கு மணி நேர உரையைக் கேள்.”

பேச்சை ரொம்ப வளர்த்தவில்லை.  பிறகு பேசுகிறேன் என்றதோடு முடித்துக் கொண்டேன். 

அவ்வளவுதான் வளன், நீ தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு படித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் புதுமைப்பித்தன் பற்றிய என் நான்கு மணி நேர உரையைக் கேட்டிருக்கிறாய்.  அதனால் உனக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும்.  அழகிய சிங்கர் எப்படி சாருவாக ஆக முடியாதோ அதேபோல் ஒரு காலத்திலும் சாரு அழகிய சிங்கர் ஆக முடியாது. 

புதுமைப்பித்தனுக்கு முன்பு ஒரு கலகக்காரனாக வாழ்ந்த  கலைஞன் பாரதி மட்டுமே.  பாரதிக்குப் பிறகு புதுமைப்பித்தன்.  புதுமைப்பித்தனுக்குப் பிறகு சுந்தர ராமசாமியிடம் ஓரளவுக்கு பித்தனின் சாயல்கள் இருந்தன.  அகிலனுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்த போது தமிழ்நாடே அதைக் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் கொஞ்சமும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அகிலன் ஒரு மலக்கிடங்கு என்று சொன்னபோது பித்தனின் சாயல் சுந்தர ராமசாமியிடம் தெரிந்தது.  சுஜாதா சுந்தர ராமசாமியிடம் நேசக்கரம் நீட்டியபோது ஒரு நாகரீகம் கருதிக் கூட பதில் சமிக்ஞை கொடுக்காதது இன்னொரு உதாரணம்.  வாழ்நாள் முழுவதுமே சு.ரா. சுஜாதாவின் பக்கம் தன் கரங்களை நீட்டவில்லை.  நீ வேறு, நான் வேறு என்பதைத் தீர்மானமாகச் சொல்லி விட்டார்.  இதற்கெல்லாம் ரொம்ப தைரியம் வேண்டும்.  ஆனால் பித்தனின் கலகம் என்பது இது போன்ற சமரசமற்ற தன்மை மட்டும் அல்ல.  படைப்பின் உக்கிரமும் கூட வேண்டும்.  அது ராமசாமியிடம் இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்தான். 

கலைஞனின் வாழ்க்கை சராசரி மனிதர்களின், சராசரி உலகின் தர்க்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டது.  சமூகத்தின் நியாய தர்மங்களை ஏற்றுக் கொண்டது அல்ல.  ஃப்ரெஞ்ச் கலைஞர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அது உங்களுக்குப் புரியும்.  ஜெனே ஒருத்தன் போதும்.  அவன் செய்த “குற்றங்கள்” 300 ஆண்டுக் கால தண்டனைக்கு ஆனவை. அந்தக் குற்றங்களில் பல சிறுவர்களிடம் அவன் பாலுறவு கொண்டது!  ஆனால் ஃப்ரான்ஸின் அத்தனை பிரபலங்களும் சேர்ந்து அரசுக்கு எழுதி அவனுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்கள்.  பதிலுக்கு அவன் ஃப்ரான்ஸிடம் நன்றி பாராட்டினானா?  ஒரு கலைஞனான என்னை கிரிமினலாக நடத்திய ஃப்ரான்ஸில் என் பிரேதம் கூட புதைக்கப்படக் கூடாது, என் உடலை மொராக்கோவில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று உயில் எழுதினான்.  ஃப்ரான்ஸில் நான் தங்குவதற்குக் கூட விரும்பவில்லை என்று மொராக்கோவை தன் தாய்நாடாக ஆக்கிக் கொண்டான்.  இத்தனைக்கும் ஜெனே முஸ்லீம் அல்ல, அரபி அவனுக்குத் தெரியாது.  ஃப்ரெஞ்சில் சிந்தித்து ஃப்ரெஞ்சில் எழுதியவன் அவன்.  ஆனால் தன் தாய் மண்ணைப் புறக்கணித்தான்.  ஏன்?  என்னை ஃப்ரான்ஸ் – என் நாடு என்று கூட சொல்ல மாட்டான் – என்னை ஃப்ரான்ஸ் ஒரு குற்றவாளியாக நடத்தியது; அது என் நாடு அல்ல.

இங்கே நானோ அல்லது வேறு யாரோ அப்படிச் சொல்ல முடியுமா?  எங்களை இவர்கள் குற்றவாளியாகக் கூட நடத்தவில்லை.  பெயரற்றவர்களாக நடத்தினார்கள்.  எழுத்தாளனின் புத்தகத்தை ஒரு சினிமா நடிகர் அறிமுகம் செய்ய வேண்டிய அவல நிலை நிலவுகிறது.  இங்கே அடையாளங்கள் எழுத்தாளர்களுக்கு அல்ல, சினிமா நடிகர்களுக்கு வழங்கப்படுகின்றன.  இங்கே எழுத்தாளர்கள் பெயரற்றவர்கள். 

என்னை அழகிய சிங்கராக மாறச் சொன்ன சாரதா தேவி அம்மையாரிடம் இதையெல்லாம் சொல்ல வேண்டும் ஒருநாள்.  இதையெல்லாம் படிக்க அவருக்கு நேரம் இருக்காது.   

வளன், நீ குறிப்பிட்டபடி பூனைகள் மற்றும் நாய்கள் குறித்து எழுதுவது என் நெருங்கிய நண்பர்களுக்கே எரிச்சலாக இருக்கிறது என்பது உண்மைதான்.  ஆனால் சீனிக்கு அப்படி இல்லை.  பூந்து விளாசுங்கள் என்றே சொல்கிறார்.  ஒரு நாவலையே அப்படி எழுதுங்கள் என்கிறார்.  இன்னொரு நண்பர், ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான செழியன்.  பூனை நாவலை முடித்துத் தாருங்கள், நான் படமாக ஆக்குகிறேன் என்கிறார்.  என் பூனை எழுத்தின் பெரும் ரசிகர் செழியன்.  இதுபோல் இன்னும் பலர் உண்டு. 

என்னுடைய தம்ரூட் கதையை பலரும் புரிந்து கொள்ளவில்லை, நெருங்கிய நண்பர்கள் படிக்கவே இல்லை என்ற நிலையில் நீ புரிந்து கொண்டு இவ்வளவு பெரிய பதில் எழுதியது பற்றி மகிழ்ச்சி.  ஐரோப்பிய, அமெரிக்கப் பத்திரிகைகளில் எழுதும் அளவுக்குப் பிரபலமான, அறுபத்தெட்டு வயதான ஒரு எழுத்தாளன் தனக்குப் பிடித்த முறுக்கை பாச்சையும் பல்லியும் வசிக்கும் மர பீரோவில் ஒளித்து வைத்துச் சாப்பிடும் அபத்தம் அன்பின் பேரால் நிகழ்கிறது என்பதுதானே கதையின் அடியோட்டம். தஸ்தயேவ்ஸ்கி எழுதிய An Unpleasant Predicament என்ற கதையின் இன்னொரு வடிவம்தான் தம்ரூட்.  தஸ்தயேவ்ஸ்கியின் கதை A Nasty Story என்ற தலைப்பிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  லிங்க் கீழே:

http://www.gutenberg.org/files/40745/40745-h/40745-h.htm#AN_UNPLEASANT_PREDICAMENT

அன்பு என்பது எப்போது உயிர்கொல்லும் வாதையாகவும் ஆக்ரமிப்பாகவும் மானுட சுதந்திரத்திற்கு எதிராகவும் மாறுகிறது என்பதுதான் தம்ரூட் கதையின் கதை.  அதில் போய் வரலாறு இல்லை, ரத்தம் இல்லை என்றால் என்ன பைத்தியக்காரத்தனம்?

அக்ரஹாரத்தில் போய் ஆட்டுக்கால் சூப்பையும் மஸ்தான் சாஹிப் தெருவில் போய் பழனி பஞ்சாமிர்தத்தையும் தேடிய கதைதான். 

மேலும், அந்தக் கதையில் ஒரு மந்திரச் சாவி இருக்கிறது.  அந்த மந்திரச் சாவிதான் என்னுடைய இத்தனை கொடூரமான பட்டினி தினங்களையும் சகித்துக் கொள்ள வைத்தது.  இது ஒரு பயிற்சி எனப் பயிற்றுவித்தது.  அந்த மந்திரச் சாவியை என்னுடைய 45 ஆண்டுக் கால அதி தீவிர வாசிப்பின் மூலமாகக் கண்டடைந்தேன்.  அந்த மந்திரச் சாவியின் பெயர் மிலரப்பா.  தமிழில் மிலரப்பா என்ற பெயரை முதல் முதலில் சொல்வது அடியேன்தான் என்று நினைத்தேன்.  முதல் முதலில் சொல்வது என்பதை எந்த எழுத்தாளனுக்கும் விட்டு வைக்காத ஜெயமோகனே மிலரப்பா பற்றி எதுவும் எழுதியதாக எனக்குப் புலப்படவில்லை.  ஆனால் ஜக்கி வாசுதேவ் பேசியிருக்கிறார்.  அவரை அடுத்து அடியேன் தான் மிலரப்பா பற்றிப் பேசுகிறேன்.  அதிலும் ஜக்கி மிலரப்பா பற்றிப் பேசியிருப்பதும் இப்போதுதான் தெரியும்.  மிலரப்பா என்பது தம்ரூட் கதையில் ஒரு குறியீடு.  கதையில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று கடிதம் எழுதியவர்களிடம் நாம் என்ன பேச முடியும்.  மிலரப்பா என்ற குறியீடு சொல்லும் தத்துவமும் புரியாவிட்டால் அவர்களோடு உரையாட நமக்கு ஏதுமில்லை.  

வளன், மே மாதம் உன் இரண்டு நூல்களையும் படித்து விடுகிறேன்.  அதற்குள் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலை முடித்தாக வேண்டும்.  உன்னிடம் எனக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், அந்த ஜெர்மன் ஷெப்பர்ட் சம்பவத்தை ஒரு குட்டிக் கதையாக எழுது.  அந்த இரண்டு பத்திகளும்தான் கதை.  கதைக்காகக் கதை பண்ண வேண்டாம்.  நடந்ததை எழுது.  அது கதை.  உன் வாழ்க்கை யாருக்கும் கிடைக்காது.  பெரும்பான்மையான தமிழ்ப் பாதிரிமார்கள் இலக்கியப் பரிச்சயம் கொண்டவர்கள் அல்ல.  ஜெகத் காஸ்பர் போன்ற ஒரு சிலர் உள்ளனர்.  அவர்களும் எழுத்தாளர்கள் அல்ல.  நீ உன் அனுபவங்களை எழுத்தாக மாற்றினால் அது ஒரு பெரும் கொடையாக இருக்கும்.  வித்தியாசமாக இருக்கும்.  கிறித்தவம் இங்கே தமிழ் நிலத்தில் கால் ஊன்றிய காலத்தில் பாதிரிகளில் பெரும்பாலோர் எழுத்தையே பெரிதும் நம்பினர்.  பாதிரிமாரில் பலப் பல எழுத்தாளர்கள் கவிஞர்கள் இருந்தார்கள்.  அதுதான் வரலாறு.  ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை.  அதிலும் நீ உலக இலக்கியம் தெரிந்தவன் என்பதால் கூடுதல் வசதி.  எப்படி இருந்தாலும் திருச்சபையைப் பகைத்துக் கொள்ளாதே.  சுவரை வைத்தே சித்திரம் எழுத முடியும். 

நிரந்தரப் பசியில் இருக்கும் என்னிடம் தம்ரூட், முறுக்கு என்றெல்லாம் பேசுவதில் தப்பே இல்லை.  பேச வேண்டும்.  எனக்கு உணவுதானே மதம்?  ஆனால் பேசியதைச் செயல்படுத்த வேண்டும்.  சிரமம் எடுத்து எடுத்துக் கொண்டு அவ்வளவு தூரம் கொண்டு வந்த பொருளை சமயோஜிதமாகக் கொடுக்கத் தெரிய வேண்டும்.  செந்தில் கூட என்னிடம் முறுக்கைச் சேர்த்தது தன்னால்தான் என்றார் சீனி.  ஓ, அப்படியா சேதி என்று கேட்டுக் கொண்டேன்.  முறுக்கும் காயத்ரியிடமே போக வேலை நடந்திருக்கிறது.  அதாவது, எல்லோருக்கும் காயத்ரி என் பக்கத்து வீடு என்பதால் அவளிடம் சேர்த்தால் என்னிடம் சேர்ந்து விடும் என்று எண்ணம் போல.  என்னுடைய இன்னொரு பக்கத்து வீடு மீன் வளத்துறை அமைச்சருடையது.  அதை அடுத்து முதலமைச்சரின் வீடு.  என்ன செய்வது?  காயத்ரி இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் பதிப்பக வேலை என்ன ஆவது?  ஒருத்தர் கிளம்பும் நேரத்தில் அவர் கையில் கொடுக்க வேண்டிய பொருளைக் கொடுப்பதற்கு என்னய்யா திறமை வேண்டிக் கிடக்கிறது?  இதற்கும் சீனிதானா வர வேண்டும்?

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai