தம்ரூட் சிறுகதை – சில எதிர்வினைகள்

ஸ்ரீராம், என் சிறுகதைகளைத் தொகுக்கும்போது அந்தக் கதைக்கு வந்த எல்லா எதிர்வினைகளையும் தொகுத்து விடுங்கள்.  தொகுப்போடு வந்தால் சரியாக இருக்கும்.  இன்னும் பல எதிர்வினைகள் வந்தன.  அவற்றில் அ. மார்க்ஸ் அவர் தளத்தில் எழுதியிருந்தது மாஸ்டர் ஸ்ட்ரோக்.  என்ன இருந்தாலும் பின்நவீனத்துவவாதி அல்லவா?

* * *

இன்று மாலை சாரு நிவேதிதாவின் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள  “நமக்கு வாய்த்தது” என்ற சிறுகதையில் சில வரிகள்:

* * *

“ஆனா அது ஒரு பெரிய வேலை.  அ. மார்க்ஸ் எழுதின நாலு வால்யூம்ஸ் ஃப்ரெஷ்ஷா வந்துருக்கு.  இதை எழுதி கிழுதி வச்சிராதீங்கப்பா…

நான் ஏன் எழுதப் போறேன்?  நீ சொன்ன ஒரு விஷயத்தையாவது நான் எழுதியிருக்கேனா இது வரை?  ஆமா, அது என்ன அ. மார்க்ஸ் வால்யூம்ஸ்?  இந்துத்துவ ஃபாஸிஸமும் பன்னாட்டு மூலதனமுமா?

சே.  கேட்டா மிரண்ட்ருவிங்க.  நாலு வால்யூமும் போவ்ம்ஸ்.  ஒவ்வொரு தொகுதியும் ஆயிரம் பக்கம்.  அதில் ஒரு தொகுதி லவ் போவ்ம்ஸ். 

(காயத்ரி Poems என்பதைச் சொல்வது விநோதமாக இருக்கும்.   மேட்டுக்குடியினர் போவ்ம்ஸ் என்றுதான் சொல்கிறார்கள்.  நாம் அவர்கள் எதிரே போயம்ஸ் என்று சொல்லும்போது நமக்கே நம்மைப் பற்றி ரொம்பக் கேவலமாகவும் அவமானமாகவும் தோன்றும்.  ஆனால் அதே சமயம் நாம் போவ்ம்ஸ் என்று சொல்ல முயற்சிக்கையில் உதடுகளை ஒரு மாதிரி குவிக்கும் போது உதடுகளின் அந்த இடங்களெல்லாம் சுளுக்கிக் கொள்வது போல் வலிக்கின்றன.  நாலைந்து தடவை அப்படிச் சொன்னோம் என்றால், நிச்சயம் உதடுகளின் செயல்பாட்டில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது…) 

ஆனால் நான் இப்போது போவ்ம்ஸ் உச்சரிப்பை விட அவள் சொன்ன இன்னொரு விஷயத்தால் அதிர்ச்சி அடைந்தேன்.  என்னது அ. மார்க்ஸ் கவிதையா?  அதுவும் நாலு வால்யூமா? அதுவும் ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கமா? அதில் ஒன்று காதல் கவிதையா?  என்ன இது அந்யாயமா இருக்கு? 

எல்லாம் கொரோனா லாக்டவுன்ல எழுதினதாம்.  ஆமாம், ஏன், நீங்கள் மட்டும்தான் மாயமோகினி எழுதலாம், அவர் எழுதக் கூடாதா?  அவருடைய லவ் போவ்ம்ஸ் தொகுதித் தலைப்பு என்ன தெரியுமா?

ம்?

முத்தமிட்டுப் பிரிவோம் கண்ணே…

ஆ, கலி முத்திரிச்சுன்னு சொல்றது நிஜந்தானா? 

ஹலோ, நீங்க எழுதினா பின்நவீனத்துவம்.  அவர் எழுதினா கலி முத்திருமா?

* * *

கதை முடியவில்லை. அது தொடர்கிறது. ஆனால் அதில் ஒரு பிழை உள்ளது . அதைச் சுட்டிக் காட்டவே இப்பதிவு.

நான் எழுதியுள்ள கதையின் தலைப்பை அவர் தவறாக எழுதியுள்ளார்.

சரியான தலைப்பு : “பிரிந்தபின்னும் முத்தமிடுவோம் கண்ணே…”

-A.Marx

 ***

சாரு, தம்ரூட் கதை இந்திய குடும்ப அமைப்பு என்ற பைத்தியக்கார விடுதியிலிருந்து ‘தப்பி ஓடி’ வருபவனின் கதை.

வளனின் கடிதம் அ. முத்துலிங்கத்தின் ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ கட்டுரைத் தொகுப்பை ஞாபகப்படுத்துகிறது.

திரும்பவும் சொல்கிறேன், தம்ரூட் கதையை நீங்கள் மட்டுமே எழுத முடியும். ‘குடும்ப அமைப்பு’ என்ற ‘புனிதத்தின்’ மீது மூத்திரம் பெய்கிறது இந்தக் கதை. பைத்தியக்காரப் பிள்ளை, பாற்கடல் கதைகளை விட வீரியமான கதை தம்ரூட். அந்தக் கதைகளில் இருந்து தம்ரூட்டை பல படிகள் மேல் நிறுத்துவது மிலரப்பா விஷயம்.

ஸ்ரீராம்

***

தம்ரூட் சாருவுக்குக் கிடைத்ததா என்று புத்தக விழாவில் சுமார் ஐம்பது பேராவது கேட்டு விட்டார்கள் என்றாள் காயத்ரி.  கிடைத்தது.  சொர்க்கம்.

***

உங்களுடைய நாவல் எக்ஸைலைப் படிக்கும் போது பக்கிரிசாமி பகுதி வந்ததும் இதயத்தில் ஒரு பாரம் தோன்றும்.  படிப்பதை நிறுத்தி விடுவேன்.  நீண்டதொரு அமைதியில் ஆழ்ந்து விடுவேன்.  சில தினங்கள் கழித்து மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்குவேன்.  பக்கிரிசாமி வந்ததும் மீண்டும் அதே கதை.  இப்படியே போய்க் கொண்டிருக்கிறது எக்ஸைலுக்கும் எனக்குமான தொடர்பு.  இப்போது தம்ரூட் கதையைப் படித்தபோதும் மனதில் அதே பாரம்.  அதே அமைதி…

டாக்டர் ராஜகோபால்,

தென்காசி.