முந்நூறுக்குள் ஒரு கதை

67 வயது வரை எனக்குப் பொறாமை என்றால் என்னவென்றே தெரியாது.  அதாவது, சென்ற ஆண்டு வரை.  சத்தியம்.  இப்போது பொறாமை என்ற கெட்ட குணம் என்னையும் பீடித்து விட்டது.  ஆரம்பித்து வைத்தது பெருந்தேவி.  எனக்குக் கவிஞர்கள் மீது எந்தப் புகாரும் இருந்ததில்லை.  அவர்கள் பாட்டுக்கு அவர்கள் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  அது வேறு ஏரியா.  இப்போது ரமண மகரிஷி உயிரோடு இருந்தால் அவர் மீது உங்களுக்குப் பொறாமை வருமா.  அந்த மாதிரிதான் எனக்குக் கவிஞர்கள்.  ஆனால் பெருந்தேவி என்னுடைய ஏரியாவான கதைக்குள் புகுந்து அதுவும் முந்நூறு வார்த்தைகளுக்குள் கதைகளாக எழுதிக் குவித்த போது கடுப்பாகி விட்டேன்.  ஏனென்றால், என்னால் முடியாத காரியம் அது.  அடுத்து வந்தார் இந்தப் பா. ராகவன்.  அவரும் முந்நூறு வார்த்தைகளில் கதை.  அதுவும் ஆயிரம் கதைகள்.  இதெல்லாம் இந்த ஜெயமோகன் கெம்னாட்டியால் வந்த வினை.  எதை எடுத்தாலும் ஆயிரம் ரெண்டாயிரம் முப்பதாயிரம் என்று.  எல்லாம் நன்றாக வேறு இருந்து தொலைக்கிறதா, பொறாமைப்படாமல் என்ன செய்வது, சொல்லுங்கள்.

எனக்கோ எதை எடுத்தாலும் ரெண்டாயிரம் போய் விடுகிறது.  எங்கேயிருந்து நான் முந்நூறுக்குள் நிறுத்துவது.  என் அதிர்ஷ்டம் சென்ற மாதம் ஒரு முந்நூறு மேட்டர் நடந்தது.  எனக்கு இப்படி ஒரு கடிதம் வந்தது.

ஐயா,

நீங்கள் ஒரு சித்தர் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.  அவருடைய தொடர்பு எண் வேண்டும்.  நான் என் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள இருக்கிறேன்.  என் நிலைமை தெரிந்தால் ஒவ்வொரு மனிதனும் அப்படித்தான் செய்வான்.  நூறு வயதைத் தாண்டிய அம்மா.  படுக்கையிலேயே மலஜலம்.  மனைவிக்கு திடீரென்று பைத்தியம்.  ஒரே மகள் கொரோனாவினால் போய் விட்டாள்.  இப்போது எங்கள் வீட்டில் மூன்று உயிருள்ள பிணங்கள்.  சித்தர் எண் தருவீர்களா.

***

நம்பர் கொடுத்தேன்.  சித்தருக்கு ஏது நம்பர் என்கிறீர்களா.  இவர் மாடர்ன் சித்தர்.  ஆனால் போலி அல்ல.  நிஜம். 

தற்கொலைப் பார்ட்டி நம்பர் வாங்கி ஒரு மாதம் ஆயிற்று.  அதற்குப் பிறகு தொடர்பே இல்லை.