ஒரு சாமியாரும் ஓப்ரா வின்ஃப்ரேயும்… (சிறுகதை)

இது 18.11.2020 அன்று குமுதத்தில் வெளிவந்தது.

போலிச் சாமியார் என்ற வார்த்தையை நாம் இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.  நானே கூட முன்பு ஒரு கட்டுரையில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன்.  ஆனால் உண்மையில் பார்த்தால் போலிச் சாமியார் என்று யாருமே இருக்க முடியாது.  அப்படியானால் இருக்கின்ற சாமியார்களெல்லாம் நிஜ சாமியாரா என்றால் கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கேளுங்கள் என்பேன்.  மற்ற தொழில்களில் நிஜம் போலி என்று இருக்கலாம்.  திருடன், போலீஸ் உடுப்பை மாட்டிக் கொண்டு வந்து திருடலாம், ஏமாற்றலாம்.  அதேபோல் டாக்டருக்கே படிக்காமல் டாக்டர் போர்டு போட்டுக் கொண்டு மருத்துவம் பார்க்கும் போலிகளைப் பற்றியும் பேப்பரில் படிக்கிறோம்.  ஆனால் அதேபோல் சாமியாரில் போலித்தனம் பண்ண முடியாது.  மக்கள் ஏமாற மாட்டார்கள்.  நீங்கள் எந்த சாமியாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.  அவர்களின் சொத்து மதிப்பு பில்லியனில் போகிறது.  நூறு கோடி ஒரு பில்லியனா? இவ்வளவு பணம் எப்படி வந்தது?  அச்சடிப்பார்களா?  சாத்தியமே இல்லை.  எல்லாமே மக்கள் கொடுத்தது.  மக்கள் என்ன முட்டாள்களா?  சாமியாகவே இருந்தாலும் சக்தி வாய்ந்த சாமி என்றால்தான் காணிக்கை,  இல்லாவிட்டால் வெறும் கும்பிடுதான் என்கிற போது ஆசாமியிடம் ஏமாறுவார்களா மக்கள்?  எல்லா பணமும் எப்படி வருகிறது என்றால் ஒரு சம்பவம் சொல்கிறேன்.

ஆந்திராவில் பேணுகொண்டா என்ற ஊரில் காலேஷ்வர் என்று ஒரு சாமியார் இருந்தார்.  பார்ப்பதற்கு உங்கள் பக்கத்து வீட்டுப் பையன் மாதிரிதான் இருப்பார்.  தாடி மீசையெல்லாம் கிடையாது.  ரொம்பவும் சாதாரணமாகத்தான் தெரிவார்.  25 வயதுதான் சொல்லலாம். ஒல்லியான தேகம்.  பழுப்பு நிறம்.  வாரிப் படிய விடாத பரட்டைத் தலை.  தனியாக வந்தால், ’தம்பி, டைம் என்னப்பா ஆவுது?’ என்று கேட்டு விடுவீர்கள்.  அப்படி ஒரு தோற்றம்.  ஆனால் அவருக்கு உலகம் பூராவும் பக்தர்கள் இருந்தார்கள்.   கிட்டத்தட்ட அவருடைய பக்தர்கள் எல்லாருமே வெளிநாட்டுக்காரர்கள்தான்.  ஆங்கிலமும் துப்புரவாகப் பேசுவார்.  பேச்சும் சாதாரணமாக இருக்காது.  தேர்ந்த ஞானியின் பேச்சு.  அவரிடம் ஒரு பழக்கம் இருந்தது.  தன்னிடம் வரும் பக்தர்களிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பார்.  பக்தர் கேட்டது கிடைக்கும்.  உதாரணமாக, பக்தருக்குத் தீராத வயிற்று வலி.  எந்த மருந்தாலும் குணம் ஆகவில்லை.  கைவிடப்பட்ட கேஸ்.  காலேஷ்வரிடம் வருகிறார்.  சொல்கிறார்.  காலேஷ்வர் ஒரு ஹீலரும் கூட.  மிகப் பலரின் வியாதிகளை சொஸ்தப்படுத்தி இருக்கிறார்.  அதேபோல் இந்த பக்தருக்கும் வயிற்று வலி நிரந்தரமாக குணமாகி விட்டது.  பக்தர் கோடீஸ்வரர்.  காலேஷ்வருக்கு அவர் காணிக்கை கொடுப்பாரா மாட்டாரா?  இப்படித்தான் சாமியார்களிடம் சொத்து சேர்கிறது. 

அமெரிக்காவில் ஜான் க்ரே என்று ஒருத்தர் இருந்தார்.  என்னைப் போல் ஒரு ஏழை எழுத்தாளர்.  புத்தகம் போட்டால் அவருடைய நெருங்கிய நண்பர்கள் அம்பது பேர் வாங்குவார்கள்.  அவ்வளவுதான்.  எப்படியோ அவர் நம்முடைய காலேஷ்வர் பற்றிக் கேள்விப்பட்டு (அதிர்ஷ்டம்!) பேணுகுண்டா வந்தார்.  வழக்கம்போல் என்ன வேண்டும் என்று கேட்டார் சுவாமி.  ”எங்கள் அமெரிக்காவில் ஓப்ரா வின்ஃப்ரே என்று பெண்மணி இருக்கிறார். அவருடைய டாக் ஷோதான் அமெரிக்காவின் நம்பர் ஒன்.  அதில் மாதம் ஒரு புத்தகம் பற்றி அறிமுகப்படுத்துகிறார்.  என் புத்தகம் அதில் வர வேண்டும்.  ஆனால் அது ரொம்பக் கஷ்டம்.  நோபல் பரிசைக் கூட நீங்கள் அங்கே பிடித்து இங்கே பிடித்து வாங்கி விடலாம்.  ஆனால் இந்த அம்மாளை யாருமே ஒன்றும் செய்ய முடியாது.  பார்த்து செய்யுங்கள் சுவாமி” என்கிறார் ஜான் க்ரே.   ”சீச்சீ, இதெல்லாம் எனக்கு ஜுஜுபிப்பா” என்று சொன்னார் சுவாமி.  மறுநாளே பேணுகுண்டாவில் இருக்கும் ஜான் க்ரேவுக்கு ஓப்ரா வின்ஃப்ரேவிடமிருந்து போன்.  ”ஜான், உங்கள் புத்தகம் பற்றித்தான் இந்த மாதம் பேசப் போகிறேன்.  வந்து விடுங்கள்.” கடவுளையே நேரில் பார்த்திருந்தால் கூட ஜான் க்ரே அப்படி ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்.  ஓப்ரா தன் நிகழ்ச்சியில் வெறுமனே புத்தகத்தைப் பற்றி மட்டும் சொல்வதில்லை.  எழுதிய ஆளையும் அழைத்து வைத்து பேட்டி எடுப்பார்.  ஜான் க்ரே அடுத்த நாளே அடித்துப் பிடித்து அமெரிக்கா ஓடினார்.  நிகழ்ச்சியில் வந்தார். 

ஆறே மாதங்களில் ஜான் க்ரே அமெரிக்காவின் மில்லியனர் பட்டியலில் வந்து விட்டார்.  இன்றளவும் அவர் எழுதிய அந்தப் புத்தகம் மாதிரி விற்ற புத்தகம் உலக அளவில் ஒன்று இரண்டுதான்.  மென் ஆர் ஃப்ரம் மார்ஸ், விமன் ஆர் ஃப்ரம் வீனஸ் என்ற புத்தகம்தான் அது.  கதை இதோடு முடிந்தது என்று நினைக்காதீர்கள்.  இன்னும் இருக்கிறது.  எல்லா சாமியார்களையும் போலவே காலேஷ்வரும் உலகம் பூராவும் சுற்றுவார்.  அந்த மாதிரி அமெரிக்காவுக்கும் போனார்.  ஜான் க்ரே சுவாமியைச் சந்தித்தார்.  எப்படி சந்தித்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்?  என்னைப் பார்க்க வரும் வாசகர்களைப் போல் நாலு ஆப்பிள் பழம் வாங்கிக் கொண்டு போயா? 

ஆப்பிள் என்றதும் எனக்கு நடந்த ஆப்பிள் சம்பவம் ஞாபகம் வருகிறது.  ஒரு புகழ் பெற்ற பில்டர் என்னைச் சந்திக்க வேண்டும் என்றார்.  நண்பர்களை நான் வழக்கமாகச் சந்திக்கும் அமேதிஸ்ட் உணவகத்தில் சந்தித்தேன்.  அந்த பில்டருக்கு ஊரில் நாலைந்து தியேட்டர்களும் நாலைந்து கல்லூரிகளும் உள்ளன.  என் எழுத்தைப் படித்ததால்தான் அவரால் தன் மனைவியுடன் ஒற்றுமையாக வாழ முடிந்தது.  மன அழுத்தம் விலகியது.  அதற்காக எடுத்துக் கொண்ட மாத்திரைகளைக் கூட நிறுத்தி விட்டார்.  கனவு கேப்பச்சினோ, சொல் தீண்டிப் பழகு எல்லாம் படித்தாலே மனம் லேசாகி விடுகிறது.  நன்றாகத் தூக்கம் வருகிறது.  இன்னும் என்னென்னவோ சொன்னார்.  அவர் காரிலேயே கொண்டு வந்து என்னை வீட்டு வாசலில் விட்ட போது உங்கள் கையெழுத்தோடு உங்கள் புத்தகம் ஒன்று வேண்டும் என்றார்.  வீட்டில் வைத்திருந்த ஒரு புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.  ”உங்களுக்காக வாங்கி வந்தேன்” என்று சொல்லி ஒரு பையைக் கொடுத்து விட்டுப் போனார்.  நாலு ஆப்பிள் பழம்.  எனக்கு நஷ்டம் பொன்னான இரண்டு மணி நேரம்.  அமேதிஸ்ட் போவதற்கு ஆட்டோ செலவு 100 ரூ.  என் புத்தகத்தின் விலை 600 ரூ.  (நல்லவேளை, காஃபிக்காவது காசு கொடுத்தாரே என்று நினைத்துக் கொண்டேன்!)

இதே மனிதர்கள் சாமியார்களிடம் இப்படியா போவார்கள்?  போகிற விதத்தில் போனார் ஜான் க்ரே.  ஏழை எழுத்தாளனாகக் கிடந்தவர் கோடிகளில் புரள்கிறாரே?  சுவாமிக்கும் சந்தோஷம்.  தன் சிஷ்யன் பெரிய ஆளாகி விட்டான்.  சுவாமி வழக்கம் போல் என்ன வேண்டும் கேள் என்றார்.  மறுபடியுமா?  நிஜமா சுவாமி?  ஆமாம்ப்பா, கேள்.  ”சுவாமி, தப்பா நினைச்சுக்கக் கூடாது.  மறுபடியும் ஒரு தடவை ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் என்னுடைய இன்னொரு புத்தகம் வர வேண்டும்.  முடியுமா?”

“என்னப்பா ஜான்,  இன்னமும் என்னை நீ நம்ப மாட்டேங்கிறே?  இதெல்லாம் எனக்கு ஜுஜுபி” என்று சொன்னார் சுவாமி. 

நம்ப முடியாதது நடந்தது.  மீண்டும் ஜான் க்ரேயை அழைத்தார் ஓப்ரா வின்ஃப்ரே.  அந்த ஷோவின் வரலாற்றிலேயே இப்படி இரண்டாவது முறை அழைக்கப்பட்டவர் ஜான் க்ரே மட்டும்தான்.  மில்லியனர் பில்லியனர் ஆனார்.  இதைப் படித்தவுடன் எனக்குத் தலைகால் புரியவில்லை.  உடனடியாக பேணுகுண்டாவுக்கு டிக்கட்டைப் போடலாம் என்று நினைத்து கணினியைத் திறந்தேன்.  எத்தனை காலத்துக்குத்தான் ஏழை எழுத்தாளனாகவே வாழ்வது?   ”ஜான் க்ரேவுக்கு செஞ்ச மாதிரி என்னையும் ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் இடம் பெறச் செய்யுங்கள் சுவாமி.  நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன்.”  என்ன பேச வேண்டும் என்று ஒத்திகையெல்லாம் பார்த்துக் கொண்டேன்.  அங்கேதான் இளங்கோவடிகள் சொன்ன ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியது. 

டிக்கட் போடுவதற்கு முன்னால் சுவாமி பேணுகுண்டாவில் இருக்கிறாரா அல்லது அமெரிக்காவா என்று தெரிந்து கொள்வதற்காக அவருடைய இணைய தளத்துக்குப் போனேன்.  ஊழ்வினையை யாரால் மாற்ற முடியும்?  காலேஷ்வர் சுவாமி 39 வயதிலேயே கிட்னி ஃபெய்லியரில் பெங்களூரு மருத்துவமனையில் 2012இலேயே காலமாகி விட்டாராம்.  ஊருக்கே ஹீலராக இருந்தவர் ஆயிற்றே?  இம்மாதிரி இக்கட்டான கேள்விகளுக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது.  சரி, இந்தியாவில் சாமியாருக்கா பஞ்சம், வேறு யாரையாவது பார்க்கலாம் என்று நினைத்தால் இன்னொரு இடி.  ஓப்ரா வின்ஃப்ரே தன் நிகழ்ச்சியை நிறுத்திக் கொண்டு விட்டாராம்.