அமலா பாலை அழைத்திருக்கிறீர்களா, ராம்ஜி?

வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் ஆயுளோடு ஒப்பிட்டால் மனித ஆயுள் எத்தகையது?  ஒப்பிட முடியுமா?  ஒரு புல் நுனியில் திகழும் நீர்த் துளியோடு சமுத்திரத்தை ஒப்பிட முடியுமா?  நீர்க்குமிழி.  ஈசல்.  இவ்வாறாக, மனித ஆயுளின் அற்பத்தன்மைக்கு எத்தனையோ எண்ணிலடங்கா உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். 

ஆனாலும் ஒரு ஹெடோனிஸ்டுக்கு கண்ணிமைக்கும் ஒரு கணம்தான் ஆதி அந்தம் இல்லாதது.  Eternal.  இந்தப் பின்னணியில் பின்வரும் விஷயத்தைப் படிக்கவும்.

ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  என் காலத்திய இலக்கிய நிகழ்ச்சி மவுண்ட் ரோடு எல்.எல்.ஏ. பில்டிங்கில் உள்ள ஒரு அறையில் நடக்கும்.  கிராமத்துப் பள்ளிகளில் ஒண்ணாங்கிளாஸில் போட்டிருக்கும் பெஞ்சுகளும் டெஸ்குகளும் உள்ள அறையில்தான் நிகழ்ச்சி நடக்கும்.  மொத்தமே இருபது பேர்தான் அமரலாம்.  பத்து பேர் வந்தால் அந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்ததாகும்.  இதில் பேச்சாளர்களே ஐந்து பேர்.  அதில் மூன்று பேர் அந்த நூலை குப்பை என்று திட்ட இரண்டு பேர் பாராட்டுவார்கள்.  இப்படித்தான் ஸீரோ டிகிரி வெளியீட்டு விழா நடந்தது.  இந்திரா பார்த்தசாரதி பாராட்டிப் பேசினார்.  பத்து பேர் வந்திருந்தனர்.  ஐவர் பேச்சாளர். 

அதனாலெல்லாம் மனதளவில் ரொம்பப் பாதிக்கப்பட்டதனாலோ என்னவோ நான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக வேறு மாதிரி நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டேன்.  இப்போதைய இலக்கிய நிகழ்வுகள் நிகழ்வுகள் அல்ல.  விழாக்கள்.  நான் கவனம் செலுத்துவது புகைப்படக் கலைஞரை.  எத்தனையோ பிரபலங்கள் பிரமுகர்கள் வருவதால் நிகழ்ச்சியின் புகைப்பட  ஆல்பத்தில் தேடினால் எங்கேயோ ஒரு மூலையில் இருப்பேன் நான்.  அதனால் என்னுடைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள் காமராஜர் அரங்கில் நடக்கும் போது புகைப்படக் கலைஞரிடம் சொல்லி விடுவது வழக்கம்.  நான் நன்றாக வர வேண்டும். 

கலைஞரும் எடுத்தார்.  கலைஞரை எடுப்பவர்.  அதனால் அதேபோல் என்னையும் எடுத்து விட்டார்.  நூற்றுக்கணக்கான புகைப்படங்கள்.  எல்லாம் என் முகத்தின் க்ளோஸப்புகள்.  அடப்பாவி,  நான் என்ன சினிமா சான்ஸ் கேட்பதற்கா புகைப்படம் எடுக்கச் சொன்னேன்?  அவ்வளவு பெரிய காமராஜர் அரங்கைக் கூட எடுக்காமல் என்னையே வளைத்து வளைத்து எடுத்துத் தள்ளி விட்டார் கலைஞர்.  (அப்போதெல்லாம் எனக்கு பிரபு காளிதாஸைத் தெரியாது.)

இப்போது பிரபு இருக்கும் உயரம் வேறு.  அதனால் நாளைய நிகழ்ச்சிக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.  செந்திலை அழைத்தேன்.  அவர் ஹார்மோனியப் பெட்டி சைஸுக்கு ஒரு கேமராவை வைத்துக் கொண்டு நிகழ்ச்சியில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருப்பார்.  என் தீவிர வாசகர்.  நேற்று போன் செய்தேன்.  ”வெளியூர் போயிருக்கிறேன்.  உள்ளூரில் இருந்தாலும் கேமராவை சர்விஸ் பண்ண வேண்டும்” என்று சொல்லி விட்டார். 

பிறகு ஒரு நண்பருக்கு போன் செய்தேன்.  அவர் கலை ரசனையுடன் புகைப்படம் எடுப்பவர்.  புகைப்படம் அவர் தொழில் அல்ல.  பொழுதுபோக்கு.  அவர் கேமராவும் சர்விஸ் செய்ய வேண்டுமாம்.  ஆனால் அவர் ஒரு philanthropist என்பதால் வேறு ஒருவரை ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். 

நான் நண்பரிடம் என்ன சொன்னேன் என்றால், நிகழ்ச்சியில் எத்தனையோ பிரமுகர்கள் எழுத்தாளர்கள் சினிமாத் துறையினர் எல்லாம் வருவார்கள்.  பதிப்பகத்தாரே புகைப்படக்காரரை ஏற்பாடு செய்திருப்பார்கள்.  ஆனால் அந்தப் புகைப்படக்காரர் என்னுடைய தருணங்களை (moments) பிரத்தியேகமாக எடுக்க சாத்தியம் இல்லை அல்லவா?  மேலும், நாளைய நிகழ்வின் நாயகர் அ. மார்க்ஸ்.  இன்னொரு நாயகர், நாவல் போட்டியில் முதல் பரிசு வாங்குபவர்.  குறும்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஐவரில் ஒருவர். இந்த இரண்டு விழா நாயகர்களையும் விட்டு விட்டு என்னைப் புகைப்படம் எடுங்கள் என்று சொல்வது நன்றாக இருக்காது.    இதையெல்லாம் மீறி என்னையே எடுங்கள் என்று சொல்வதற்கு நான் நிகழ்ச்சியை நடத்தும் பதிப்பகத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும்.  அல்லது, ரஜினியாக இருக்க வேண்டும்.  இரண்டுமே இல்லை என்பதால் என் பிரச்சினையை நான்தானே பார்த்துக் கொள்ள வேண்டும்?  அதனால்தான் இந்த மாற்று ஏற்பாடு.  என் நண்பரிடம் சொன்னேன், என்னுடைய தருணங்கள் புகைப்படமாகப் பதிவாக வேண்டும்.  ஆனால் அவர் ஏற்பாடு செய்திருக்கும் புகைப்படக் கலைஞர் முன்பு என் முகத்தை மட்டுமே 300 க்ளோஸப் படம் எடுத்த கலைஞர் போல் இருந்து விடக் கூடாதே என்று இப்போது கவலையாக இருக்கிறது.  உதாரணமாக, நானும் அமலா பாலும் பேசிக் கொண்டிருப்பது ஒரு நல்ல தருணம்தானே?  அதைப் படம் எடுக்க வேண்டாமா?  (ஆமாம் ராம்ஜி, நாளைய நிகழ்ச்சிக்கு அமலா பாலை அழைத்திருக்கிறீர்கள்தானே?)

அப்படி இல்லாமல் திரும்பவும் என் முகத்தை மட்டுமே க்ளோஸப்பில் எடுத்து எனக்குப் போட்டுக் காண்பித்தீர்கள் என்றால் அப்புறம் இருக்கிறது சேதி. 

பின்குறிப்பு: உங்கள் ஆசான் என்று சொல்கிறீர்களே அ.மார்க்ஸ், அவரைப் பற்றி பதினைந்து நிமிடம் பேசுவதற்குத் தயார் செய்து விட்டீர்களா என்று கேட்டார் கோவிந்தன்.  ”அடப் போய்யா, நான் என்ன தொழில்முறைப் பேச்சாளனா?  அதற்குத்தான் கல்யாணி இருக்கிறார், முருகேச பாண்டியன் இருக்கிறார்.  நாம் எல்லாம் ஹெடோனிஸ்டாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.  நமக்கு எதற்குப் பேச்சு கீச்சு எல்லாம்?” என்றேன் பதிலுக்கு.