அவனா நீ?


குமரேசன் ஃபோன் செய்தார்.  “பதற்றம் கொள்ளாதீர்கள்.  இந்த வினீத் பிரச்சினையால் உங்கள் வேலை எதுவும் கெட்டு விடக் கூடாது” என்றார். 

ஔரங்கசீப் படிப்பவர்களுக்குத் தெரியும்.  மாத ஆரம்பத்திலேயே பதினைந்து அத்தியாயங்களை அனுப்பி விடுவேன்.  பிறகு அந்த மாதம் பூராவும் படித்துக் கொண்டிருப்பேன்.  ஆனால் இன்று தேதி ஐந்து ஆகி விட்டது.  ஒரே ஒரு அத்தியாயம்தான் அத்தியாயப் பட்டியலில் இருப்பதை நீங்கள் காண முடியும்.  அவ்வளவுதான் அங்கே உள்ளது.  பதினைந்தில் இன்னும் ஒன்று கூட அனுப்பவில்லை.  நாளைக்குள் இரண்டாவது அனுப்ப வேண்டும்.  விழா முடிந்ததும் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன்.  வினீத் பிரச்சினை குறுக்கிட்டு விட்டது.  அதை முடித்து ஏறக்கட்டினால்தான் அடுத்ததற்குள் நுழைய முடியும்.  

இம்மாதிரி கசங்கள் எல்லாம் என் உள்ளே போவதில்லை.  பாதிப்பதில்லை.  ஆனால் மனம் காலியாக இருக்க வேண்டும்.  

ஸீரோ டிகிரி பதிப்பகம் தொடங்கப்பட்ட ஆண்டு, புத்தக விழாவில் அவர்களின் அரங்கில் நான் அமர்ந்திருந்த போது ஒரு இளைஞன் வந்தான்.  அறிமுகப்படுத்திக் கொண்டு ஒன்றரை மணி நேரம் பேசினான்.  அதை கவனித்துக் கொண்டிருந்த காயத்ரி இன்று ஏதோ அந்தப் பையனுக்கு நேரம் சரியில்லை என்று நினைத்ததாக பிறகு சொன்னாள்.  பையன் முடிப்பதாகத் தெரியவில்லை.  குறுக்கே புகுந்த நான், இனிமேல் நீங்கள் வாய் திறந்தால் நான் மிருகமாக மாறி விடுவேன் என்று ஆரம்பித்து ஏதோ சொன்னேன்.  பையன் போய் விட்டான்.  நேராக விஷ்ணுபுரம் வட்டத்துக்குத்தான் போகிறான் பையன் என்றாள் காயத்ரி.  அவர்கள் சரி செய்து விடுவார்கள் என்றேன்.

மறுநாளும் வந்த பையன் மூன்று மணி நேரம் என்னோடு அமர்ந்திருந்தான்.  ஒரு வார்த்தை பேசவில்லை.  அது நடிப்பு என்று இப்போது புரிகிறது.  காரணம், சற்று முன்பு சமையல் அறையில் நான் பீன்ஸ் நறுக்கிக் கொண்டிருந்தபோது தோன்றியது, ஆ, அந்தப் பையன்தானே வினித் என்று!  ஆம், அதே பையன்தான்.   

பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு இலக்கியக் கூட்டத்தில் முதலில் பேச வந்த ஒரு பெண்மண ஒன்றேகால் மணி நேரம் பேசி எல்லோரையும் தாலியறுத்தார்.  அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அப்போது ஆங்கிலத் துறைத் தலைவி.  அவருடைய தயவு இல்லாமல் நீங்கள் ஆங்கில மொழிபெயர்ப்புப் பக்கமே போக முடியாது.  அவ்வளவு பெரிய லாபி அவருடையது.  அவரைப் பகைத்துக் கொண்டால் ஜென்மத்துக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு கிடையாது.  அவர் பெயரைக் குறிப்பிட்டு இந்த ப்ளாகில் அவர் ஒரு சமூக விரோதி என்று எழுதினேன்.  என் மீது மான நஷ்ட வழக்கு கூடப் போட்டிருக்கலாம்.  அத்தனை கடுமையாக எழுதினேன்.  சிறை செல்லவும் தயாராக இருந்தேன்.  அன்றைய கூட்டமே அவரால் நாசமாகப் போனது.  

எஸ்.என். நாகராசனும் ஊட்டி மார்க்ஸிஸ்டும் இப்படித்தான் செய்வார்கள்.  நான் ஏன் இந்த விஷயத்துக்கு இப்படிக் கொதிக்கிறேன் என்றால் இதுதான் ஐயா ஃபாஸிஸத்தின் அடிப்படையே.  இவர்கள்தான் ஹிட்லர்கள்.  நான் பேசுவதை நீ கேள் என்கிறார்கள்.  “எனக்குத் தெரியும், நான் சொல்கிறேன், கேள்” என்கிறார்கள்.  இவர்கள்தான் ஃபாஸிஸ்டுகள்.   என்னைப் பொறுத்தவரை அடுத்தவரைப் பேச விடாமல் தானே பேசிக் கொண்டிருப்பவன் ஒரு சமூக விரோதி.  அவன் ஒரு ஃபாஸிஸ்ட்.  பின்நவீனத்துவ சிந்தனைக்கு எதிரானவன்.  அவனிடம் இருப்பது அஹங்காரம் மட்டுமே.  இவர்களைப் போன்றவர்களின் சிந்தனைப் போக்கை எதிர்த்துத்தான் நான் நாற்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  

தியாகராஜருக்கு சற்று முன்னே வாழ்ந்த ஒரு ஞானி.  சதாசிவ பிரம்மேந்திரர். சின்ன வயதில் பேசிக் கொண்டே இருப்பார்.  அவருடைய குரு ஒருமுறை கண்டித்ததால் அவர் அதற்குப் பிறகு பேசவே இல்லை.  வாழ்நாள் முழுவதும் பேசமலேயே இருந்தார்.  

எஸ்.என்.நாகநாசனும் ஊட்டி மார்க்ஸிஸ்டும் தன்னிடம் வரும் தோழர்களைக் கொத்தடிமை போல் நடத்தினார்கள்.  நான் நேரில் பார்த்து அனுபவித்தது.   ஃபேன்ஸி பனியன் நாவலில் நான் எழுதியிருக்கும் பாலா என்பவர் அந்த ஊட்டி மார்க்ஸிஸ்ட்தான்.  ஃபாஸிஸ மனோபாவம் ரத்தத்திலேயே இருப்பவர்கள்தான் இப்படிப் பேசுவார்கள்.  நான் பேசுகிறேன் நீ கேள் என்பவன் எப்படிப் பின்நவீனத்துவவாதியாகவோ என் வாசகனாகவோ இருக்க முடியும்?  கல்யாணிக்கு 75 வயது.  உனக்கு 25 வயது.  யார் பேச யார் கேட்க வேண்டும்?  வினீத் செய்தது பிழை அல்ல.  குற்றம்.  250 பேரை ஒருசேர assf**k செய்ததற்குச் சமம்.  

இந்த விவகாரம் பற்றி ஏகப்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.  எல்லாவற்றையும் படித்து விட்டு ஒருவன் இப்படிச் செய்கிறான் என்றால் தடித்தனமும் ஃபாஸிஸமும் அவன் ரத்தத்தில் எவ்வளவு ஊறியிருக்க வேண்டும்?  

Death of the Author பற்றி எத்தனை நூறு பக்கங்கள் எழுதியிருக்கிறேன்?  ஆசிரியனின் மரணம் என்றால் என்ன?  பழைய சிந்தனை முறையில் ‘நான் சொல்கிறேன், நீ கேள்’ என்கிறான் ஆசிரியன்.  அங்கே வாசகனுக்கு வேலையே இல்லை.  என் கற்பனைக்கு அங்கே இடமே இல்லை.  ஆசிரியனே எனக்காகவும் சேர்த்து சிந்தித்து விட்டான்.  நான் அங்கே வெறும் ஒரு நுகர்வோன் மட்டுமே.  எனக்கு மூளை இல்லை.  சிந்திக்கத் தெரியாது.  நான் ஒரு நுகர்வோன்.  இதைத்தான் மதவாதியும் செய்கிறான்.  நான் உனக்காக சிந்திக்கிறேன்.  உன் விடுதலை என் கையில்.  என்னைப் பின்பற்று.  உன் கடவுளையும் நான் கண்டு பிடித்து விட்டேன்.  கடவுளைக் கண்டு கொள்ள இதெல்லாம் வழிமுறைகள்.  எல்லா நிறுவனங்களும் இதுதான்.  குடும்பம் (தலைவர் அல்லது தலைவி), சிறை, மருத்துவமனை, கல்விக் கூடம் என்று எல்லா நிறுவனங்களிலும் இந்தத் தலைமை இருக்கும்.  இதுதான் நமக்காக சிந்திக்கும்.  இது எதிர்த்தரப்பை சலனமின்றி, இயக்கமின்றி வைத்திருக்கிறது.  பின்நவீனத்துவம் இதை மாற்றுகிறது.  நானும் நீங்களும் சேர்ந்து சிந்திப்போம் என்கிறது.  நான் ஒரு பிரதியை உருவாக்கிக் கொடுத்து விட்டேன்.  நீங்கள் அதை வாசிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் உங்களுக்கான பிரதியை இதிலிருந்தே உருவாக்குங்கள் என்கிறது.  இதுதான் எழுத்தாளனின் மரணம் என்பதன் பொருள்.  

மற்றவனின் நேரத்தை அபகரிப்பதும், நான் பேசுகிறேன் நீ கேள் என்பதும்தான் பின்நவீனத்துவ சிந்தனையா?   

ஃபாஸிஸத்தின் இந்தக் கூறுதான் ஒருவனை மணிக்கணக்கில் பேச வைக்கிறது.  அதிலும் மற்றவர்கள் சொல்லியும் கேட்காமல் பேசுவது என்பது ஃபாஸிஸத்தின் உச்சம்.  நீ வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் இதோடு விடுகிறேன்.  இல்லாவிட்டால் அந்த ஆங்கிலத் துறைப் பேராசிரியருக்குக் கொடுத்தது போல் கொடுத்திருப்பேன்.  

உன்னை உன் பெற்றோர் சரியாக வளர்க்கவில்லை.  நீதான் இளைய தலைமுறையின் உதாரணம் என்றால், நம் சமூகம் விளங்கவே விளங்காது.  ஆனால் நான் பார்க்கும் பெரும்பாலான இளைஞர்கள் உன்னைப் போல்தான் இருக்கிறார்கள்.  அல்லது, எதுவுமே தெரியாத மரண மொக்கைகளாக இருக்கிறார்கள்.  உங்களைச் சொல்லிக் குற்றமில்லை.  உங்கள் பெற்றோரைச் சொல்ல வேண்டும்.  ஆனால் பார் வினித், என் பெற்றோர் என்னிடம் இதைச் செய், இதைச் செய்யாதே என்று சொன்னதே இல்லை.   

கடைசியாக இன்னொன்றும் சொல்கிறேன். தெ லாஸ்ட் எம்பெரர் என்ற படத்தில் ஒரு காட்சி. இது பற்றியும் நூறு முறை எழுதி விட்டேன். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்து அந்நாட்டின் கடைசிப் பேரரசனை சிறையில் போட்டு விடுவார்கள். அது ஒரு பயிற்சி மாதிரி. பேரரசனாக இல்லாமல் சராசரி மனிதனாக வாழும் பயிற்சி. அவன் மூத்திரம் போகும் சத்தத்தில் எங்கள் உறக்கம் கெடுகிறது என்பார்கள் சக கைதிகள். சிறை அதிகாரி அவனை அழைப்பார். டேய் இன்னமும் நீ பேரரசன் கிடையாது. யாருக்கும் தொந்தரவு இல்லாமல் மூத்திரம் போக வேண்டும், தெரியுமா என்பான். ஸிப்பை அவிழ்த்து யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சத்தம் கேட்காமல் மூத்திரம் பெய்தும் காண்பிப்பான்.

அது ஒரு அலுமினிய சட்டி. அதன் நடுவில் அடித்தால் எருமை மூத்திரம் அடிப்பது போல் சத்தம் கேட்கும். அதிகாரி, மூத்திரத்தை பாத்திரத்தின் சுவர் ஓரங்களில் அடிப்பான். சத்தமே கேட்காது.

இதிலிருந்து நீ ஆரம்பிக்க வேண்டும் வினித்…