இலக்கிய கூட்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை நம் தமிழ் சூழலில் இருக்கிறது. ஒரு ஹால் இல்லையேல் ஒரு பொதுவான இடம் புக் செய்யப்படும். அங்கு புத்தகம் வாசித்த ,வாசிக்காத மனிதர்கள் வருவார்கள். ஒருவர் அங்கு மைக் பிடித்து பேசத் தொடங்குவார். அவர் பேச நாம் கேட்க நாம் கேட்க அவர் பேச என விழா இனிதே நிறைவேறும். உள்ளே செல்லும் போதே எல்லோருக்கும் மிக்ஸர் வழங்கப்படும் என நினைக்கிறேன். வாயை மட்டும் எதிரில் உள்ளவர்கள் திறக்க மாட்டார்கள். திறக்க முடியாது. பேசுபவர்கள் பேசி முடித்து விட்டு கருத்தை சொல்லுங்கள் என்று கேட்கப்படும் .பேச ஆரம்பிக்கும் முன்னர் விழா முடியும் நேரம் வரும். சபை டீ, காஃபியுடன் களையும். சாருவின் இலக்கிய விழா கொஞ்சம் வித்தியாசமாக நடைபெற்றது.நான் பங்குபெற்ற நான் தான் ஔரங்கசீப் நாவல் கொண்டாட்ட நிகழ்வு தான் சாருவுடன் நான் பங்கு பெரும் முதல் இலக்கிய நிகழ்வு. அதைப் பற்றிய எனது பார்வை.
நிகழ்வு ஆரம்பிக்கும் போது அறிமுக உரை ஆற்றிய நண்பர் இப்போது சாரு பேருரை ஆற்றுவார் என்று சொல்லி முடித்தார். சாரு பேசத்தொடங்கிய முதல் வாக்கியம் ” ஒரு சபையில் அனைவரும் அமர்ந்து இருக்க ஒருவர் மட்டுமே பேசுவேன் என்பதே என்னை பொறுத்த வகையில் ஒருவகை அதிகாரம் தான். இது ஒரு வித உரையாடல் தான் “. எனத் தொடங்கினார். இந்த அதிகாரம் தான் நாட்டில் பெரும் பிரச்சனை என்று அதிகாரம் பற்றி பேச ஆரம்பித்தார்.கொஞ்ச நேரம் பேசிவிட்டு கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டே இருக்கும் போது அவருக்கு காஃபி வழங்கப்பட்டது. பொதுவாக எல்லா இடங்களிலும் நடக்கும் ஒன்று தான். நிறைய பேசிய போது பேசுபவர்களுக்கு தாகம் எடுக்கும். பேசும் போது இடையில் நிறுத்தி தண்ணீர் கொடுப்பார்கள். குடித்து முடித்த உடன் அந்த எனர்ஜியில் மீண்டும் ஒரு ஒரு மணி நேரம் பேசுவார்கள். எதிரே இருக்கும் மனிதர்கள் பற்றி சிந்திக்க மாட்டார்கள். சாரு காஃபி குடிக்கும் போதே எல்லாருக்கும் கொடுத்து முடியுங்கள். பிறகு பேசலாம் என்று நிறுத்திவிட்டார். உண்மையில் சாரு ஒரு down to earth மனிதர். சாருவின் ஒவ்வொரு செயலையும் ஒரு மாலை வேளை முழுவதும் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்தி அவர் பெரும்பாலும் எதையும் செய்யவில்லை. உண்மையில் அந்த விழாவின் நாயகன் அவர். அவருக்கான விழா. அவரை பாராட்ட நடந்த ஒரு விழா. அதில் எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்தி அவர் எதையும் செய்யவில்லை.
இலக்கியத்துறையில் எல்லோரும் சொல்லும் ஒரு மூத்த எழுத்தாளர். அன்று இலக்கிய கூட்டதுக்கு வந்த பெரும்பாலானோர் புதியவர்கள். எந்த வித தயக்கமும் இல்லாமல் சாருவிடம் எல்லோராலும் பேச முடிந்தது. சில கேள்விகள் மிகவும் சாதாரணமாக இருந்தாலும், சில கேள்விகள் திரும்ப திரும்ப ஒரே விசயத்தை பேசுவதாக இருந்தாலும் எந்த இடத்திலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவே இல்லை. அவர்களை எதும் சொல்லவும் இல்லை. அவர்களுக்கும் பதில் அளித்தார்.
இந்த புத்தகம் படியுங்கள். இந்த துறையில் வேலை செய்கிறீர்களா இதை படியுங்கள், இதை செய்தால் நீங்கள் மேலும் வளர முடியும் என்று தனது வாசகர்கள் எல்லோரது கேரியரில் அக்கறை கொண்டவராக பேசினார். அந்த நிகழ்வு உண்மையில் ஒரு மெட்சூர் கூட்டம் போலவே இருந்தது.
உதாரணமாக ஒருவர் சாருவின் புத்தகம் படித்துவிட்டு நான் என் வேலையை விட்டுவிட்டேன்.என் வாழ்வை மாற்றியவர் என்று பேசினார். அங்கு இருந்த எல்லோரும் கேட்ட கேள்வி அந்த வேலையை விட்டு எத்தனை நாள் கஷ்டப் பட்டீர்கள் என்பது தான். பிராக்டிகலாக பேசினார்கள்.
ஒருவர் என் குடும்ப பிரச்சனை சாருவின் புத்தகம் படித்ததால் தீர்ந்தது. நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்றெல்லாம் பேசினார். சாருவின் புத்தகம் அவர் மனதை மாற்றி இருக்கிறது. இதுவே எனக்கு கிடைத்த விருது என எடுத்துக்கொள்கிறேன் என்றார் சாரு.
அங்கு DJ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எல்லோருக்கும் பிடித்த பாடல்கள் பல ஓடிக்கொண்டு இருந்தது. இதில் பல பாடல்கள் சத்தியமாக சாருவுக்கு பிடிக்காதவை ஆனால் அதையும் கேட்டுக்கொண்டு எல்லோரிடமும் விவாதித்து,சிரித்துக் கொண்டிருந்தார். இறுதியில் இந்த பாடல்கள் எனக்கு பிடித்த பாடல்கள் இதையும் கொஞ்சம் கேட்டுக் கொள்கிறேன்,இந்த பாடல் என் உயிர் இதை கேளுங்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்று ஒரு குழந்தை போல ஒன்றிரண்டு பாடல்களை கேட்டு போடச் செய்தார். தூக்கம் வருகிறது என்று அந்த பாடல்களை கிண்டல் செய்வதை கூட சிரிப்புடன் ஏற்றுக்கொண்டார். உண்மையில் இந்த இடத்தில் சாருவை பார்த்து வியந்து வாயடைத்து அமர்ந்திருந்தேன்.
ஓரிரு புத்தகம் எழுதியவர்கள் கூட எப்படி பிறரை நடத்துகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. தனக்கு எல்லாம் தெரியும் எனக் காட்டிக்கொண்டே இருப்பார்கள். தனக்கு பிடித்ததை செய்யுங்கள் என்று சொல்வார்கள். எல்லோரிடமும் எரிந்து விழுவார்கள். உலக இலக்கியம் படித்த ஒருவர், எத்தனையோ நூல்கள் எழுதிய ஒரு எழுத்தாளர் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நடந்துகொள்வது உண்மையில் நான் இதுவரை எங்கும் பார்க்காத ஒன்று.
நான் இதுவரை வெளியில் பார்த்த சாரு எழுத்துக்களை கடினமாக விமர்சனம் செய்யும் ஒருவர். வெளிப்படையாக பேசக்கூடிய, எந்த இடத்திலும் தன் இலக்கியத்தை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத ஒருவர். எல்லோரும் பார்த்து மிரளக்கூடிய ஒரு நபர். ஆனால் அந்த இலக்கியக் கூட்டதில் தன் வாசகர்கள் முன்பு அவ்வளவு அன்புடன் பழகினார். ஒவ்வொருவருடனும் அவ்வளவு அன்புடன் பழகும் பேசும் ஒருவராக இருந்தார்.
உண்மையில் இந்த இலக்கியக் கூட்டம் மறக்க முடியாத ஒன்று. ஒரே ஒரு நாள் மாலை வேளை தான் என்றாலும் மறக்க முடியாத நல்ல அனுபவமாக இருந்தது.
Love you Charu
– Senthil Nathan