குடிக்க மாட்டான், ஆனாலும் ஆறேழு லார்ஜ் போட்ட மாதிரியே கண்கள். எல்லாம் சிந்தனையும் தத்துவமும் தந்த போதை. புகைக்கவும் மாட்டான். பெண்கள்? மூச். ஹலோ சொல்லும் பெண்களிடமும் மிலோராத் பாவிச் தெரியுமா ப. சிங்காரம் தெரியுமா என்று பயமுறுத்தி விரட்டி விடுவான். மூன்று மாதம் பழகிய பெண், உன்னை நெனச்சா பயமா இருக்குடா என்று பிரேக் அப் பண்ணி விட்டது. எங்கள் ஊர்க்காரன். இந்தக் காலத்து இளைஞனிடம் காணும் எந்த அடையாளமும் இல்லாதவன். என் காலத்துக்குப் பிறகு என் புகழை திக்கெட்டும் சொல்லப் போகின்றவன். என் பலம். என் பிள்ளை. என் அறிவியக்கத்தின் போர்வாள். என் வாசகர் வட்டத்தின் முன்னணிச் செயல்வீரன்.
கல்யாணம் பண்ணிக்கோடா என்று சொல்லவே பயமாக இருக்கிறது, எனக்குத் தெரிந்த சில ஆண்களை நினைத்தால். இன்று கூட சில டிப்ஸ் சொல்லியிருக்கிறேன். ஆனால் என்ன டிப்ஸ் கொடுத்தாலும் நடப்பதுதான் நடக்கும். அதுதான் திருமண விதி. ஒரு பையன் தன் அம்மாவை கொடூர டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருந்தான். இவனுக்கு இருக்கு, இவனுக்கு இருக்கு என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். வந்தவளோ அவனைத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகிறாள். மாமியாரோ அம்மாவை விட ஆயிரம் மடங்கு. இப்படியும் கொடுத்து வைத்தக் குந்தானிகள் சில இருக்கின்றன.
நான் எத்தனையோ நற்காரியங்கள் செய்திருக்கிறேன். அவற்றின் புண்ணியம் வினித்திக்குச் சென்றால் மகிழ்வேன். அவனுக்கு என் அன்பும் ஆசீர்வாதமும் என்றும் நிலைக்கும்.