18. உங்கள் முகமலர்ச்சிக்குப் பயன்படுத்தும் க்ரீம் என்ன என்று பலரும் கேட்கிறார்கள். சொல்ல முடியுமா?
நிர்மல், கத்தார்.
பதில்: முகமலர்ச்சிக்குப் பயன்படுத்துவது பற்றற்றிருத்தல் என்ற பசை. முகப் பளபளப்புக்குப் பயன்படுத்தும் பசையை வெளியே சொல்லக் கூடாது. உங்களுக்கு மட்டும் வாட்ஸப் பண்ணுகிறேன்.
பொதுவாக இதையெல்லாம் நாமே கண்டு பிடித்து விடலாம். புத்தக விழா நடந்து கொண்டிருந்த போது இயக்குனர் வஸந்தைப் பார்த்தது பற்றி எழுதியிருந்தேன் இல்லையா? அவர் போட்டிருந்த வாசனைத் திரவியத்தின் பெயரைச் சொல்லி “அதுதானே?” என்றேன். பளிச்சென்று சிரித்தபடி ஆமாம் என்றார். உலகத்தில் எத்தனையோ வாசனைத் திரவியங்கள் இருக்க, அவர் போட்டிருந்ததை எப்படிக் கண்டு பிடித்தேன்? மனித வாழ்வில் மணம் என்ற ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. வஸந்த்திடம் அநேகமாக யாருமே அப்படிக் கேட்டிருக்கவும் மாட்டார்கள், சரியாகச் சொல்லியிருக்கவும் மாட்டார்கள். அவரும் கண்ணதாசன் மாதிரி இல்லை என்பதால் பிற சாத்தியங்களும் இல்லை.
ஆனால் நான் போட்டிருக்கும் வாசனைத் திரவியத்தை இந்தியாவில் யாராலும் கண்டு பிடித்துச் சொல்ல முடியாது. அது ஃப்ரான்ஸிலும், பொதுவாக ஐரோப்பாவிலும் மேட்டுக்குடியினர் போட்டுக் கொள்வது. அதை அப்படியே உடம்பிலோ ஆடையிலோ போட்டுக் கொள்ளக் கூடாது. அந்த போத்தலை காற்றில் பிஸ்க் பிஸ்க் என்று அடித்தால் துகள் துகளாக காற்றில் அலையும். அப்போது நாம் அந்த மண்டலத்தின் உள்ளே செல்ல வேண்டும். அது ஆறு மணி நேரத்துக்கு நம் தேகத்தில் கலந்திருக்கும். இதைப் போட்டுக் கொண்டு சென்றால் – ஃப்ரான்ஸில் அல்லது ஐரோப்பிய நாடுகளில் – ஒருக்கண நேரமாவது பெண்கள் உங்களைத் திரும்பிப் பார்ப்பார்கள்.
முன்பெல்லாம் இந்த வாசனைத் திரவியம் பெண்களுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நான் இங்கே மைலாப்பூர் மாதவப் பெருமாளிடம் பிரார்த்தித்துக் கொண்ட பிறகு அது ஆண்களுக்காகவும் தயாரிக்கப்படுகிறது. கடந்த முறை இந்தியா வந்த போது நீங்கள்தான் வாங்கிக் கொண்டு வந்து தந்தீர்கள், ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.