எனக்கொரு வாட்ஸப் சேதி வந்தது
ஹாய், நான்தான் உன் பக்கத்து வீட்டுப் பஞ்சவர்ணக் கிளி
எப்படி நம்புவது
உடனே வந்தது செல்ஃபீ
ஒரு சோபாவில் அமர்ந்திருந்தது கிளி
என் எஜமானர் வாங்கிக் கொடுத்தார் என்றது
அதற்குப் பிறகு வந்தன ஏராளமான வாட்ஸப் சேதிகள்
ஒருநாள் குட்மார்னிங் வந்தபோது
இனிமேல் இப்படி அனுப்பாதேயென
பதில் அனுப்பினேன்
இளைய கிளி என்பதால் சர்வ சாதாரணமாகப் பறந்தன
சிகப்பு நிற இதயக் குறிகள்
வீட்டில் பார்த்தால் ரகளையாகுமே என்று
இனிமேல் வேண்டாம் இதயக் குறி என்றேன்
ஓக்கேயென வந்தது அதற்குமொரு இதயக் குறி
பெண்கிளி போலும் என்றெழுந்த எண்ணத்தைக் கிள்ளியெறிந்தேன்
பெண்ணியவாதிகளைப் பகைத்து வாழ்தல்
தற்கொலைக்குச் சமானம்
கொஞ்ச நாளில் பார்த்தால்
கிளியிடமிருந்து வந்த குறுஞ்செய்திகளும்
குரல் சேதிகளும் ஒரு தினுசாக மாறின
கவனமாக அவதானம் கொண்டேன்
காலையில் தேவதை
இரவில் ரத்தக் காட்டேரி
இரவு நேரத்து சேதிகளில் கொலைவெறித்
தாக்குதல்
காலையில் பார்த்தால் ராத்திரியின் ஞாபகமே
இல்லாமல் Hai dude…
நடந்ததையெல்லாம் சொன்னாலும்
மலங்க மலங்க விழிக்கிறது
வேறு வழியில்லாமல்
வாட்ஸப்பில் கிளியை ப்ளாக் செய்தேன்
ஆனால் காலையையும் காலை நேரத்து அன்பையும்
தடுப்பார் யாருண்டு தரணியிலே
கடைசியில்
என் நிலை பார்த்துக் கலங்கிய கிளியே
சொன்னது ஒரு வழி
கிளியாய் மாறி விடு
நீயும்