அறுபத்தொன்பது வயதில் வாய்த்ததில்லை
என் வசிப்பிடத்தில்
ஒரே ஒரு இரவின் தனிமை
உளறுகிறேன் என்பீர்
அதுவொரு நம்ப முடியாத கதை
மகன் திருமணம் மும்பை பவய் ஹீராநந்தானியில்
காலையில் விமானத்தில் சென்று
இரவில் விமானத்தில் திரும்பினாள் மனைவி
அப்பன் சாவுக்குப் போகவா வேண்டாமா எனக் கேட்டாள்
இதோ கூப்பிடு தூரத்தில் இருக்கும் சின்மயா நகர்தான் பெற்றோர் வீடு
மாடியிலிருந்து தெரியும் மெரினா கடற்கரை சென்றதில்லை
உணவகம் போனதில்லை
சினிமா கல்யாணம் காது குத்து எதுவுமில்லை
வீடே சொர்க்கம்
வீடே நரகம்
என்று ஒரு பெண்
ஒருநாள் சீலே சாந்த்தியாகோ நகரில்
ஓர் இரவு வாய்த்தது தனிமை
அறையிலேயே இருந்த சீலேயின் உயர்தர வைன்
சவிஞோன் ப்ளாங்க்கை அருந்தத் தோன்றவில்லை
பதின்பருவத்திலேயே உலகப் பிரசித்தி பெற்று விட்ட
அந்த இசைக் கலைஞனுக்கு
எனது இரவின் தனிமை சொன்னேன்
சூஃபி பாடல்களை அனுப்பி வைத்தான்
அந்த இரவு முழுவதும் அவனுக்கு நானும் எனக்கு அவனும்
மின்னஞ்சல் அனுப்புவதிலேயே கழிந்தது
ஆ, பூமிப் பரப்பின் மறுமூலையான சென்னையிலிருந்த
அவனுக்கு அது இரவல்ல, பகல்
இப்போது முதல்முதலாய் வருவேன் என்றது
தனிமை கூடிய இரவு
மொத்தமாய் ஆறு இரவுகள்
சிறை வாழ்வில் மாற்றமில்லை
மொத்த பூனை இருபது
லக்கி தாய்ப்பூனை
டெட்டி கெய்ரோ ச்சிண்ட்டூ ஸிஸ்ஸி
மற்றும் பெயரிடப்படாத வாண்டுகள் அஞ்சு
கீழே தரைத்தளத்தில் சுதந்திரமாய் உலாத்தும் பெயரற்ற பத்து
அனைத்துக்கும் இரு வேளை உணவு
பராமரிப்பாளனாக நான்
கைக்கெட்டிய தனிமை
வாழ்வுக்கெட்டாமல் நழுவியது