என் நண்பர்கள் சிலர் பல மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவர்களாகவும் மிகக் குறைந்த காலத்தில் ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். அந்த விஷயத்தில் நான் பூஜ்யம். ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், அறபி, சம்ஸ்கிருதம் என்று பல மொழிகளைக் கற்றுக் கொள்ள முயன்று தோற்றிருக்கிறேன். ஸ்பானிஷுக்கு நான் செலவு செய்த நேரத்தில் இரண்டு நாவல்களை எழுதியிருக்கலாம். இன்றும் அந்த கனமான நோட்டுப் புத்தகங்கள் என்னிடம் உள்ளன. பக்கம் பக்கமாக பயிற்சி செய்திருக்கிறேன். வேறொரு ஆளாக இருந்தால் பிளந்து கட்டியிருப்பார்கள். எனக்குத் தெரிந்து காயத்ரி அப்படி. ஃப்ரெஞ்ச் தெரிந்தவர்களே, ஃப்ரெஞ்ச் பேராசிரியர்களே பாரிஸ் நகரின் ஃப்ரெஞ்ச் உச்சரிப்பில் சொதப்பி விடுவார்கள். ஃப்ரெஞ்ச் ஆர் அதற்கு முன்னால் ஒருவித ஹெச் ஒலியோடு வரும். பாஹ்ரி என்று சொல்ல வேண்டும். மொழி வராவிட்டாலும் பார்த்துப் படித்தால், அல்லது மனப்பாடம் செய்து சொன்னால் ஏதோ அந்த மொழிக்காரர் என்றே நினைத்து விடும் அளவில் பேசி விடுவேன். ஒரு ஸ்பானிஷ் பாடலை ஸ்பானிஷ் பேசுபவரைப் போலவே என்னால் பாட முடியும். குரல் கழுதைக் குரல். அது வேறு விஷயம். உச்சரிப்பில் அடித்து விளையாடினாலும் மொழி வரவில்லை.
இப்போது என் நண்பர் வட்டத்தில் என்னை அசத்திக் கொண்டிருக்கும் ஒரு பன்மொழித் திலகமாக விளங்குபவர் ப்ரஸன்னா. ஔரங்ஸேப் ரேஹ்த்தா மொழியில் பேசினார் என்றே நாவலில் எழுதினேன். இல்லை என்று மறுத்து, ஔரங்ஸேப் பேசியது ஹிந்தவிதான் என்றார் ப்ரஸன்னா. என் நண்பர் ஃபைஸ் காதரியிடம் பஞ்சாயத்துக்குப் போன போது ஃபைஸ் ஹிந்தவிதான் என்றார். ஹிந்தவி என்பது அக்காலத்திய உர்தூ.