அக்டோபர் 10ஆம் தேதி த அவ்ட்ஸைடர் 11 வந்துள்ளது. தொடர்ச்சி வேண்டுவோர் அதைப் படித்து விட்டு இங்கே வரலாம்.
(ஸ்பானிஷை தென்னமெரிக்காவின் ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு மாதிரி உச்சரிக்கிறார்கள், பேசுகிறார்கள். சீலேயிலேயே தெற்கு சீலேயர்கள் பேசுவது ஸ்பானிஷே இல்லை என்று வட சீலேயர்கள் கிண்டலடிக்கிறார்கள். மெக்ஸிகோவின் ஸ்பானிஷ் எதையோ மென்று மென்று துப்புவது போல் உள்ளது. மெக்ஸிகோ என்று சொல்லாதே, மெஹீகோ என்று சொல் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். ஸ்பானிஷின் தாய் தேசமான ஸ்பெயினில் பேசப்படும் ஸ்பானிஷ் தென்னமெரிக்க ஸ்பானிஷிடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது. ஆனாலும் ஸ்பானிஷில் சில பொது விதிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஸ்பானிஷில் மற்ற ஐரோப்பிய மொழிகளைப் போல் எந்த எழுத்தும் மௌனம் அல்ல. எல்லா எழுத்துக்களையும் உச்சரித்தே ஆக வேண்டும். (தமிழைப் போல!) ஐரோப்பிய மொழிகளில் இது ஸ்பானிஷுக்கு மட்டுமே உள்ள தனித்தகுதி என்கிறார்கள். இதை மனதில் வைத்துக் கொண்டு இந்தத் தொட்ரை வாசிக்கும்படி கோருகிறேன்.)
பால்தொமெரோ லிஜ்ஜோ (Baldomero Lillo) சீலேயைச் சேர்ந்த ஒரு சிறுகதை ஆசிரியர். பிறப்பு 1867. இறப்பு 1923. அவர் எழுதி 1904இல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பான Sub Terra சீலேயின் இலக்கியம் மற்றும் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. சப்த்தெர்ரா என்றால் பூமிக்குக் கீழே. லோத்தா (Lota) என்ற ஊர் ஸாந்த்தியாகோ நகரிலிருந்து 463 கி.மீ. தூரத்தில், சீலேயின் மத்தியில் கான்ஸெப்ஸியோன் மாநிலத்தில் உள்ளது. இந்த ஊரில் இருந்த நிலக்கரிச் சுரங்கம்தான் அது செயல்பாட்டில் இருந்த போது உலகின் மிகப் பெரிய நிலக்கரிச் சுரங்கமாக இருந்தது. மப்பூச்சோ மொழியில் லோத்தா என்றால் சிறிய நிலம் என்று பொருள். அதுவே அந்த ஊர்ப் பெயராகவும் அமைந்து விட்டது.
லோத்தாவிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள தல்க்கவ்வானோ (Talcahuano) என்ற துறைமுக நகருக்கு வந்த பிரிட்டிஷ் கப்பல்கள்தான் முதன்முதலில் லோத்தாவின் நிலக்கரியை வாங்கி விற்பதில் ஈடுபட்டன. நிலக்கரியை மிகக் குறைந்த விலையில் வாங்கி மிக அதிக விலையில் விற்றதால் உள்ளூர் முதலாளிகளும் கப்பல் உரிமையாளர்களும் பெரும் செல்வந்தர்கள் ஆனார்கள். சுரங்கத் தொழிலாளர்களின் நிலை மிருகங்களின் நிலையை விட மோசமாகப் போனது. மனித வாழ்வின் மிகக் கேவலமான நிலையில் வாழ அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். மாட்டுத் தொழுவங்களை விட மோசமாக இருந்தது அவர்களின் வாழ்விடங்கள். பசியிலும் பட்டினியிலும் நோயிலும் செத்து மடிந்த அந்த மனிதர்களின் வாழ்வைத்தான் எழுதினார் பால்தொமெரோ லிஜ்ஜோ.
லிஜ்ஜோவின் சப்த்தெர்ரா 2003இல் அதே பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இந்தத் தொகுப்பின் முதல் கதையில் வைரம் என்ற கிழட்டுக் குதிரையின் கதையைக் கூறுகிறார் லிஜ்ஜோ. சுரங்கத் தொழிலாளர்களைப் போலவே சுரங்கத்தில் உழைத்து உழைத்துக் கிழமாகிக் கிடக்கிறது வைரம். இப்போது அதை ஒரு வல்லூறு பார்த்தால் சிரமமில்லாமல் தின்று விடும். வைரத்தினால் இப்போது ஒரு வல்லூறை எதிர்த்துப் போரிட முடியாது. வைரம் ஒரு நடமாடும் பிணம். அந்த வைரத்தைப் போலவேதான் இருந்தார்கள் சுரங்கத் தொழிலாளர்களும். நிலக்கரியை அவர்கள் தங்கள் கைநகங்களால் எல்லாம் சுரண்ட வேண்டியிருந்தது. மிகக் கொடூரமான இருட்டிலும் உஷ்ணத்திலும் பூமிக்கு அடியில் அவர்கள் செத்துக் கொண்டிருந்தார்கள்.
இவர்களுக்கும் சென்னையில் வசிக்கும் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்பதை முடிந்த வரையில் புரிந்து கொள்ள முயல்வதுதான் the outsider என்ற ஆவணப்படத்தின் நோக்கம் என்று சொல்ல்லாம்.
சீலேயின் இரண்டு மனிதர்கள் இந்த சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஒருவர், டாக்டர் அயெந்தே. அவரைப் பற்றிப் பார்த்து விட்டு அடுத்தவருக்குச் செல்வோம். டாக்டர் ஸால்வதோர் அயெந்தே ஏழு முறை பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனாலும் அவரால் அதிபராக ஆக முடியாமல் இருந்தது. அதனால் அவர் நினைத்த சீர்திருத்தங்களைச் செய்ய முடியவில்லை. அப்போதெல்லாம் அவர் சொல்வதுண்டு, ”அதிபராகாமல் நான் இறந்து போனால், ’சீலேயின் வருங்கால அதிபர் இங்கே உறங்குகிறார்’ என்று என் கல்லறையில் எழுதுங்கள்” என. அந்த அளவுக்கு சீலேயில் பெருமுதலாளிகளும், ராணுவமும் டாக்டர் அயெந்தே அதிபர் ஆவதற்குத் தடையாக இருந்தன.
ஆனால் அத்தனை தடைகளையும் மீறி 1970இல் அயெந்தே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனேயே அவர் லோத்தாவின் நிலக்கரிச் சுரங்கங்களை அரசுடமை ஆக்கினார். ஆனால் மூன்றே ஆண்டுகளில் சாந்த்தியாகோ நகரின் அதிபர் மாளிகையான மொனேதா அரண்மனையில் ராணுவ அதிகாரி பினோசெத்தின் விமானப்படை குண்டுகளை வீசி, முறையான தேர்தல் மூலம் அதிபராக ஆன அயெந்தேயை வீழ்த்தியது. விமானப்படையும் தரைப்படையும் ஒரே நேரத்தில் தாக்கியதால் வேறு வழியில்லாமல் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் டாக்டர் அயெந்தே. அது செப்டம்பர் 11, 1973.
ராணுவ பயங்கரவாதத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த பினோசெத் உடனடியாக லோத்தா நிலக்கரிச் சுரங்கங்களை மீண்டும் தனியார் மயமாக்கினார். மீண்டும் லோத்தா சுரங்கத் தொழிலாளிகள் பழைய மிருக வாழ்க்கைக்கே தள்ளப்பட்டார்கள்.
இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஒரே நாளில் நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கு டாக்டர் அயெந்தே ஒன்றும் மந்திரவாதி அல்ல. பூர்ஷ்வாக்களும் தொழிலதிபர்களும் அயெந்தேவின் கொள்கைகளுக்கு எதிராக இருந்த நிலையில் அயெந்தேவினால் அவர் நினைத்த காரியங்களை உடனுக்குடன் செய்ய முடியவில்லை. அப்போது நடந்த ஒரு மக்கள் சந்திப்பில் ஒரு சுரங்கத் தொழிலாளி எழுந்து நின்று, “இப்போது நடப்பது shitty governmentதான், ஆனால் அது என்னுடைய கவர்ன்மெண்ட்” என்று சொன்னார். உடனே அதிபர் அயெந்தே தன் இருக்கையை விட்டு எழுந்து சென்று அந்தத் தொழிலாளியின் கைகளைக் குலுக்கினார் என்பது வரலாறு.
இதுவரையிலான உலகின் அரசியல் தலைவர்களில் டாக்டர் அயெந்தே அளவுக்கு மக்களால் நேசிக்கப்பட்டவர் யாரும் இல்லை என்றே சொல்ல முடியும். மகாத்மா காந்தியையும் உள்ளடக்கியே இதைச் சொல்கிறேன். கிட்டத்தட்ட அயெந்தே சீலேயில் ஒரு இதிகாச நாயகனைப் போலவே கருதப்படுகிறார்.
காரணம், அயெந்தே உயிரோடு இருந்த வரை அவர் செல்லாத வீடுகளோ அல்லது அவர் சம்பந்தப்படாத ஒரு நிகழ்ச்சியோ எந்த ஒரு வீட்டிலும் இல்லை என்ற நிலையே இருந்திருக்கிறது. ஒரு தொழிலாளியின் வீட்டில் ஒரே ஒரு நாற்காலி மட்டும் மற்ற நாற்காலிகளை விட நல்ல நிலையில் இருந்திருக்கிறது. காரணம் கேட்டால், அது டாக்டர் அயெந்தே எங்கள் வீட்டுக்கு வந்த போது அமர்ந்த நாற்காலி, அதனால் நாங்கள் யாரும் பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்றார்களாம்.
அந்தப் புத்தகத்தின் பெயர் Clandestine in Chile. மிகேல் லித்தின் சொல்ல, எழுதியவர் கார்ஸியா மார்க்கேஸ். அந்தப் புத்தகத்தை நான் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் படித்தேன். அதுவும், Battle of Chile என்ற ஆவணப்படமும்தான் சீலே என்ற விதை என்னுள் முளை விடக் காரணமாக அமைந்தவை.
மிகேல் லித்தினை எல்லோருக்கும் தெரியும். சீலேயின் புகழ் பெற்ற இயக்குனர். (பிறப்பு 1942) Jackal of Nahueltoro என்பது அவருடைய பிரசித்தமான திரைப்படம்.
பினோசெத் ராணுவ பயங்கரவாதத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்த அன்றே சாந்த்தியாகோவில் இருந்த பேராசிரியர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மாணவர் தலைவர்கள், திரைப்பட இயக்குனர்கள் என்று 5000 பேரைக் கைது செய்து கொன்று விட்டார். ”இதை செய்தியாகப் படிக்கும் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்; ஆனால் நான் நேரில் பார்த்தேன். சீருடை அணியாதவர்கள் கும்பல் கும்பலாக வந்து டாக்டர் அயெந்தேவின் ஆதரவாளர்களை நடுத்தெருவில் அடித்துக் கொன்றார்கள். ஒருவர் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் செத்து விடுவர். அதற்கு முன் அவரை மருத்துவர்களிடம் அழைத்துப் போக முயன்றவர்களையும் கும்பல் கட்டையால் அடித்தது. இன்னொரு இடத்தில் சுவர் ஓரத்தில் வரிசையாக ஆட்களை நிற்கச் சொல்லி ராணுவத்தினர் துப்பாக்கியால் குறி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.”
இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு சிப்பாய் லித்தினைக் காப்பாற்றியிருக்கிறான்.
”நீங்கள்தானே பிரபலமான இயக்குனர் மிகேல் லித்தின்?”
“ஆமாம்.”
“ஜக்கால் தெ நவ்வல்த்தோரோ?”
“ஆம், நான் இயக்கியதுதான்.”
அதற்குப் பிறகு, சினிமாவில் எப்படி நிஜ ரத்தம் மாதிரியே காண்பிக்கிறீர்கள் என்று கேட்கிறான் சிப்பாய். லித்தின் விளக்கியிருக்கிறார். அப்போது அங்கே வந்த ஒரு ஆள் “ஆ, இவர்தான் இயக்குனர் மிஸ்டர் லித்தின், இந்தப் பிரச்சினைக்கெல்லாம் இவர்தான் காரணம்” என்று கத்த, அந்த சிப்பாய் அந்த ஆளை மண்டையில் அடிக்க, அவன் மயக்கம் போட்டு விழுந்து விட்டான்.
(மிகேல் லித்தின் சீலேயின் பிரபலமான இயக்குனர் என்பதையும் தாண்டி, அவர் டாக்டர் அயெந்தேயின் தேர்தலுக்காக மிகவும் உழைத்திருக்கிறார் என்பதால் அவருக்கு எக்கச்சக்கமான அரசியல் எதிரிகளும் இருந்தார்கள்.)
அப்போது அந்த இட்த்துக்கு வந்த ஒரு ராணுவ அதிகாரி சிப்பாயைப் பார்த்து “இவனையும் சுட்டுக் கொல்” என்று உத்தரவிட்ட போது “இவன் ஒரு காமன்மேன், தொலைந்து போன தன் மனைவியைத் தேடிக் கொண்டிருக்கிறான்” என்று சொல்லி உடனடியாக லித்தினைத் தப்ப வைத்திருக்கிறான். (அப்போதும் அந்த அதிகாரி “யார் இந்த மடையன், இப்படி ஒரு களேபரத்தில் தன் மனைவியைத் தேடி வந்திருக்கிறான்? உடனடியாக இவனை இங்கிருந்து கிளம்பச் சொல்” என்று சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறான்!)
அந்த சிப்பாய் ஒரு திரைப்பட ரசிகனாக இருந்த்தால் அது சாத்தியமானது. இல்லாவிட்டால் விக்தர் ஹாராவின் நிலைதான் மிகேல் லித்தினுக்கும் ஏற்பட்டிருக்கும்.
இது சீலேயின் கலாச்சார சீர்மைக்கு ஒரு உதாரணம். ஒரு ராணுவ சிப்பாய் ஜக்கால் தெ நவ்வல்த்தோரோவைப் பார்த்திருக்கிறான். ஏனென்றால், மிகேல் லித்தின் ஒரு வணிக இயக்குனர். ஜனரஞ்சக சினிமா இயக்குனர் அல்ல. ஜக்கால் தெ நவ்வல்த்தோரோவும் ஒரு கலைப்படம். இது சீலேயில் சாத்தியமாகியிருக்கிறது.
சீலேயின் கலாச்சார சீர்மைக்கு மற்றொரு உதாரணம் சொல்கிறேன்.
மிகேல் லித்தின் சீலேயை விட்டுத் தப்பி விட்ட்தால் நிரந்தரமாக நாடு கட்த்தப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெற்று விட்டது அவர் பெயர். அவர் சீலேயில் நுழைந்தால் கைது செய்யப்பட்டு கொல்லப்படுவார். அதனால் ஸ்பெய்னில் தன் குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருந்த மிகேல் லித்தின் தன்னுடைய பன்னிரண்டு ஆண்டு எக்ஸைல் வாழ்க்கைக்குப் பிறகு 1985இல் மாறுவேடத்தில் சீலேயில் நுழைந்தார். அதை மாறுவேடம் என்று கூட சொல்ல முடியாது. மாற்று உருவத்தில் என்று சொல்ல்லாம். வேறு பெயர். வேறு உருவம். இது எப்படி சாத்தியமாயிற்று? சினிமா நடிகர்கள் தங்கள் தோற்றத்தை மாற்றிக் கொள்வது போல் மாற்றிக் கொண்டார் லித்தின். உருகுவாய் நாட்டைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர்ரைப் போல் உருவத்திலும் பேச்சிலும் மாறினார். அதற்காகப் பல மாதங்கள் உணவு முறையையும் பேச்சு முறையையும் மாற்றிப் பயிற்சி எடுத்தார். ஏற்கனவே குறிப்பிட்ட்து போல் ஒவ்வொரு தேசத்தவரும் ஒவ்வொரு மாதிரி ஸ்பானிஷ் பேசுவார்கள். தாடி வைத்த லித்தின் சே குவேராவைப் போல் ஒரு புரட்சிக்காரனைப் போல் இருப்பார். ஆனால் இந்த உருகுவாய் கோடீஸ்வர்ரோ தொப்பையோடு, மழித்த கன்னத்தோடு ஒரு பூர்ஷ்வாவைப் போல் தோற்றம் தந்தார். கோடீஸ்வர்ர் என்பதால் அதிகம் பேசவும் கூடாது. அதோடு லித்தினின் சிரிப்பு அவர் நண்பர்களிடையேயும் எதிரிகளிடையேயும் மிகவும் பிரபலமானது. அதனால் லித்தினின் நண்பர், சீலேயில் நீ சிரித்தால் உனக்கு உடனடி மரணம் என்றாராம்.
சீலேயில் லித்தினின் நெருங்கிய நண்பர்களால் கூட லித்தினைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பன்னிரண்டு ஆண்டுக் காலம் என்பது எத்தனை பெரிய இடைவெளி என்று மலைக்கிறார் லித்தின். அப்போது ஒருமுறை சாந்த்தியாகோவின் தெரு ஒன்றில் அவருடைய மாமியாரைப் பார்த்து விடுகிறார் லித்தின். அந்தப் பெண்மணி ஆறு மாதத்துக்கு முன்புதான் லித்தினை ஸ்பெய்னில் சந்தித்தவர். அதனால் அவரால் லித்தினை மிக எளிதில் அடையாளம் கண்டு கொண்டு விட முடியும்.
அவர் மட்டும் உணர்ச்சிவசப்பட்டு “ஆ, மிகேல்” என்று கத்திவிட்டால் எனக்கு மரணம்தான் என்று எழுதுகிறார் லித்தின். மாமியாரின் கண்களையே உற்றுப் பார்த்தபடி அவரைக் கடந்து செல்கிறார். அதிர்ஷ்டவசமாக அவரும் லித்தினைக் கண்டு கொள்ளவில்லை.
அந்தத் தருணம் கொடுத்த அதிர்ச்சியின் விளைவிலிருந்து மீள்வதற்காக அந்த இடத்துக்கு அருகில் இருந்த ஒரு சினிமா தியேட்டருக்குள் நுழைந்தாராம். அங்கே ஒரு நீலப் படம் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது. அதை ஒரு பத்து நிமிடம் பார்த்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு வந்தேன் என்கிறார்.
ஆம், அங்கே தியேட்டரில் நீலப்படமும் ஓடுகிறது. மற்றொரு தியேட்டரில் மிலோஸ் ஃபோர்மனின் அமாத்யூஸ் படமும் ஓடுகிறது. இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். 1985இல் மாற்று உருவத்தில் சீலே வருகிறார் லித்தின். அமாத்யூஸ் திரைப்படம் 1984இல் வெளியானது. ஆக, ஒரே வருட்த்தில் பொதுமக்களுக்கான திரையரங்கில் காண்பிக்கப்படுகிறது அமாத்யூஸ் என்ற கலைப்படம். இந்தியாவில் அதை அப்போது திரைப்பட சங்கங்களில் மட்டுமே காணக் கூடியதாக இருந்த்து. ஏன், இப்போதும் கூட அம்மாதிரிப் படங்களைப் பொதுவெளியில் காண்பது இந்தியாவில் சாத்தியமே இல்லை.
1985இல் – பதினைந்து வருட ராணுவ சர்வாதிகார ஆட்சியில் சீலே எப்படி இருந்தது என்பதை நமக்கு விளக்குகிறார் மிகேல் லித்தின். படப்பிடிப்புக்காக சாந்த்தியாகோ நகரின் செண்ட்ரல் ஸ்டேஷனில் கான்ஸெப்ஸியோன் நகருக்கு இரவு பதினோரு மணி ரயிலைப் பிடிக்கிறார்கள் லித்தினும் ஒளிப்பதிவாளரும். அந்நாட்களில் இரவு முழுவதுமே ஊரடங்கு உத்தரவு இருந்தது. ரயில் ஓடும். ஆனால் ரயிலில் யாரும் யாருடனும் பேசக் கூடாது. சத்தம் போடக் கூடாது.
கான்ஸெப்ஸியோன் மாநிலம் முழுவதும் நாஸிகளின் வதை முகாம் மாதிரி இருந்தது என்கிறார் லித்தின்.
கான்ஸெப்ஸியோன் மாநிலம் மட்டும் அல்ல; தேசம் முழுவதும்தான்…