உலகின் கலாச்சார கேந்திரம் சீலே என்றால் சீலேயின் கலாச்சார கேந்திரம் கான்ஸெப்ஸியோன் என்று சொல்லலாம். சீலேயின் கல்லூரி நகரம் என்று அழைக்கப்படும் கான்ஸெப்ஸியோனில்தான் அதிக அளவில் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் இருக்கின்றன. அங்கேதான் சீலேயிலேயே தீவிரமான கலை இலக்கியச் செயல்பாடுகளும் அதிக அளவிலான நாடக அரங்குகளும் இருக்கின்றன. அதன் காரணமாகவே சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களிலும் கான்ஸெப்ஸியோன் முன்னணியில் இருந்தது. அதனால் கான்ஸெப்ஸியோனை போராட்டங்களின் கேந்திரம் என்றே அழைத்தனர்.
1932இலிருந்து 1973இல் பினோசெத்தின் ராணுவ ஆட்சி தொடங்கும் வரை சீலேயில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு அதிகமாகவே இருந்தது. புத்திஜீவிகளும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் எந்த விதிவிலக்கும் இன்றி இடதுசாரிகளாகவே இருந்தார்கள். அதற்கு அடிப்படையான காரணங்கள் இரண்டு.
ஒன்று, அளவுக்கு அதிகமாக மைய அரசில் அதிகாரம் குவிக்கப்பட்டது. அதே சமயம், ராணுவமே மைய அரசின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தது.
இதற்கு உதாரணமாக சில சம்பவங்களைக் குறிப்பிடலாம். பினோசெத்தின் பதினேழு ஆண்டுக் கால (1973 – 1990) ராணுவ பயங்கரவாத ஆட்சியின் போது கொல்லப்பட்டவர்கள், சடலம் கூடக் கிடைக்காமல் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டும். ஆனால் பினோசெத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்ரீஸியோ ஆல்வின் பதவிக்கு வந்த பிறகும் பினேசெத்தே ராணுவத்தின் முப்படைத் தளபதியாக – பதவியிலிருந்து ஓய்வு பெறும் வரை – இருந்தார். அதாவது, பத்ரீஸியோ ஆல்வின் பதவிக்கு வந்தது 1990. உடனடியாக ராணுவத் தளபதியாக மாறிய பினோசெத் 1998 வரை அந்தப் பதவியிலேயே இருந்தார். பினோசெத் மீது எந்த வழக்கும் தொடுக்க முடியாதபடி அவர் பதவியில் இருந்த போதே அரசியல் சட்டத்தையும் மாற்றி வைத்திருந்தார். 1998இல் அவர் ராணுவத் தளபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட ஆயுள் காலம் வரை அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இதுவும் அவர் மாற்றி வைத்த அரசியல் சட்டம்தான். சீலேயில் அவர் ஆட்சியில் இல்லாத போதும் கூட அவரை எதுவும் செய்ய முடியாதபடி சட்டத்தை மாற்றி வைத்திருந்தார் பினோசெத். எந்த நாட்டிலும் அரசியல் அதிகாரம் ஒரே இடத்தில் குவியக் கூடாது என்பதற்கான வரலாற்று உதாரணம் இது. பின்னர், பினோசெத் லண்டனுக்குச் சென்ற போதுதான் சர்வதேசக் கைது வாரண்டின் அடிப்படையில் லண்டனில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் செயல்பட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், விக்தர் ஹாராவின் மனைவி அமெரிக்க நீதிமன்றங்களில் தொடுத்த வழக்குகளும்தான் பினோசெத்தின் கைதுக்குக் காரணமாக அமைந்தன.
இன்னொரு சம்பவம், செப்டம்பர் 11 (1973) அன்று மொனேதா அரண்மனையில் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ஸால்வதோர் அயெந்தேயின் உடலைத் தனி விமானத்தில் கொண்டு வந்து Viña del Marஇல் புதைக்க உத்தரவிட்டார் பினோசெத். சவ அடக்கத்தின் போது டாக்டர் அயெந்தேவின் மனைவி மட்டுமே உடன் இருக்க அனுமதிக்கப்பட்டார். ஆனால் சவப்பெட்டியில் பிரேதத்தைப் பார்க்க அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. காரணம், அந்த அளவுக்கு டாக்டர் அயெந்தேவின் முகம் துப்பாக்கிக் குண்டினால் சிதைந்திருந்த்து.
இதில் ஒரு நகைமுரண் என்னவென்றால், டாக்டர் அயெந்தே தன்னைச் சுடுவதற்குப் பயன்படுத்திய ஏகே 47 துப்பாக்கி ஃபிதல் காஸ்த்ரோ அயெந்தேவுக்குக் கொடுத்த அன்பளிப்பு. அந்தத் துப்பாக்கியில் இப்படி எழுதப்பட்டிருந்தது: ”To my good friend Salvador from Fidel, who by different means tries to achieve the same goals.”
பின்னர் 1990இல் பத்ரீஸியோ ஆல்வின் பதவிக்கு வந்தபோது டாக்டர் அயெந்தேவின் உடல் வீஞா தெல் மாரிலிருந்து சாந்த்தியாகோ கொண்டு வரப்பட்டு அங்கே உள்ள மத்திய இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த நாளை தேசிய துக்க தினமாக அறிவிக்கும்படியும், சவப்பெட்டியை மொனேதா அரண்மனைக்குக் கொண்டு சென்று அங்கிருந்து மத்திய இடுகாட்டுக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லலாம் என்றும் அதிபர் பத்ரீஸியோ ஆல்வினுக்குப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தபோது ஆல்வின் அதை மறுத்து விட்டார். ஒரே காரணம், அவர் ராணுவத்தையும் அதன் தலைவர் பினோசெத்தையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.
அந்த அளவுக்கு ராணுவம் சீலேயில் வலுவான அதிகாரத்தைத் தன்னிடம் வைத்திருந்தது. அதாவது, பொதுமக்களின் வாக்குகளால் பதவிக்கு வந்தாலும் சீலேயின் அதிபர் ராணுவத்துக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டும்.
சீலேயிலும் மற்ற தென்னமெரிக்க நாடுகளிலும் கம்யூனிசம் செல்வாக்கில் இருந்ததற்கு இது ஒரு காரணம். இன்னொரு காரணம், நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு நடைமுறையில் இருந்த சுரண்டல். பணக்காரர்களும் தொழிலதிபர்களும் தொழிலாளர்களை மிகக் கொடுமையாக சுரண்டிக் கொண்டிருந்தார்கள். அதனால் ஒட்டு மொத்தமாக மத்தியதர வர்க்கம் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களாக இருந்தார்கள். தொழிலாளர் வர்க்கம் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
இந்தச் சுரண்டலும் வறுமையும் எப்படி இருந்தது என்றால், மிகேல் லித்தின் மாற்று உருவத்தில் சீலேவுக்குச் சென்றது 1985இல். பினோசெத் பதவிக்கு வந்தது 1973. பினோசெத்தின் ஆட்சியில் சீலேயின் வறுமை அகன்று விட்டது, செல்வச் செழிப்பில் கொழிக்கிறது சீலே என்றார்கள். ஆனால் பினோசெத்தின் பன்னிரண்டு ஆண்டு ஆட்சியில் சீலேயின் அந்நியக் கடன் பெருமளவு அதிகரித்து விட்டது. ஏழைகள் பரம ஏழைகள் ஆக, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி விட்டார்கள். லித்தின் ஒரு காரணம் சொல்கிறார். சீலேயர்கள் அடிப்படையில் எளிமையானவர்கள், ஆடம்பரத்திலோ கேளிக்கைகளிலோ ஆர்வம் இல்லாதவர்கள், கலை இலக்கியத்துக்கே முதலிடம் கொடுப்பவர்கள். கலை இலக்கியம்தான் அவர்களின் கேளிக்கை. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் பினோசெத் ஆடம்பரத்தைப் புகுத்தினார். திடீரென்று கடைத்தெருக்களில் ஆடம்பரப் பொருட்கள் குவிய ஆரம்பித்தன. பினோசெத் இதை “சீலேயின் முன்னேற்றம்” என்று படம் பிடித்து உலகத்திடம் காண்பித்தார். ஆனால் பத்தே ஆண்டுகளில் பினோசெத் காண்பித்த ‘பொருளாதார முன்னேற்றம்’ ஏமாற்றுவேலை என்று தெரிந்து விட்ட்து.
ஒரு உதாரணமாக, கான்ஸெப்ஸியோன் நகரில் தனக்கு சவரம் செய்து கொள்ள ஒரு சலூனிலும் வெந்நீர் கிடைக்கவில்லை என்று சொல்லி அதற்காக ஒரு அத்தியாயத்தையே செலவிட்டிருக்கிறார் மிகேல் லித்தின். பூஜ்யம் டிகிரி குளிரில் பச்சைத் தண்ணீரில் சவரம் செய்து கொள்ள நேர்ந்ததாம் அவருக்கு. இது நடந்தது 1985. நானும் குளிர்காலத்தில்தான் சீலே சென்றேன். குளிர் மைனஸைத் தொட்டது. ஆனால் எந்த இடத்திலும் வெந்நீர் கிடைக்கவில்லை. 33 ஆண்டுகள் சென்றும் – 2019இலும் சீலேயில் இதுதான் நிலைமை. எனக்குக் குளிப்பதற்கு வெந்நீர் கிடைக்கவில்லை. வெந்நீரில் குளித்துக் கொண்டிருக்கும்போதே இடையில் குளிர்ந்த நீர் கொட்டி உடல் விறைத்து விடும். எத்தனை பெரிய உணவகத்திலும் கை கழுவுவதற்குக் குளிர்ந்த நீர்தான் கிடைக்கும். வெந்நீர் என்ற பேச்சே கிடையாது.
என் பயண வழிகாட்டியான ரொபர்த்தோவின் வீட்டில் போர்த்திக் கொள்வதற்கு வெறும் கிழிந்து போன கம்பளிதான்.
சில தினங்களுக்கு முன்பு நானும் நண்பர்களும் தாய்லாந்தின் பல்வேறு தீவுகளில் த அவ்ட்ஸைடர் ஆவணப்படத்துக்கான படப்பிடிப்புகளை முடித்து விட்டு பாங்காக் நகரின் அதி தீவிர கொண்டாட்டத் தெருவான காவோ ஸான் சாலையில் நின்று கொண்டிருந்தோம். வெறும் கொண்டாட்டம் மட்டுமே அன்றைய இரவின் நோக்கமாக இருந்தது. அப்போது பார்த்து நான் சீலே கதையை ஆரம்பித்தேன். நம் நாட்டிலும் அப்படியெல்லாம் இருக்கிறது என்றார் சீனி. இந்தக் கொண்டாட்ட இரவில் சீலேயும் பினோசெத்தும் அயெந்தேவும் நெரூதாவும் தேவையா என்பது அவர் வாதம். அவர் சொன்னது சரிதான். ஆனால் நம் நாட்டிலும் அப்படி இருக்கிறது என்பது தவறு. சீலேயின் அரசியலோடு ஒப்பிட்டால் நம் நாடு சொர்க்கம். இங்கே 1947க்குப் பிறகு ராணுவம் யாரையும் சுட்டுக் கொல்லவில்லை. சீலேயில் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். அங்கே மக்களாட்சி நடந்தாலும் ராணுவம் வைத்ததுதான் சட்டம். அந்தக் காரணத்தினால்தான் அங்கே ஒரு அயெந்தே உருவாகிறார். கலாச்சாரம் என்று எடுத்துக் கொண்டால், பொதுத் திரையரங்குகளில் அமாத்யூஸ் ஓடுகிறது. டாக்ஸி ஓட்டுநர் ரோபர்த்தோ பொலாஞோ படிக்கிறார்.
ஆகவேதான் இந்தியாவை ஒருபோதும் சீலேயுடன் ஒப்பிட முடியாது. இப்படியெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டாலும் அன்றைய தினம் காவோ ஸான் சாலையில் நான் ஆல்கஹால் கம்மியான (நாலு சதவிகிதம்) பியரைக் குடித்தபடி நடு ரோட்டில் நின்று கொண்டு சக மேலைநாட்டு நடனர்களுடன் ஆட ஆரம்பித்தேன்.