த அவ்ட்ஸைடர் – 15 (பிஸாகுவா)

1925 ஜூன் 25 அன்று லா கொருன்யாவில் நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து இந்த நூறு ஆண்டுகளில் கார்லோஸ் கார்ரிதோவின் (Carlos Garrido) கதை அங்கே ஒரு புராணக் கதை போல் – நம் ஊர் மதுரை வீரன் கதை போல் ஆகி விட்டது.  ஜூன் 25 படுகொலைகள் கார்லோஸின் வன்முறைப் பேச்சினால் தூண்டப்படவில்லை என்று கருதும் மற்றொரு விவரமும் நமக்குக் கிடைக்கிறது.  தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை தொழிற்சாலை அதிகாரி ஒருவன் அடித்துக் கொன்று விட்டான்.  அந்த அதிகாரியை அந்தப் பெண்ணின் கணவன் கொன்றான்.  இதற்குப் பிறகே ராணுவம் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியது.  அந்தத் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிய ஒரு தொழிலாளி, ”ராணுவத்தினர் தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் குருவியைச் சுடுவது போல் சுட்டார்கள்” என்று சொல்கிறார்.

இதெல்லாம் போதாது என்று தொழிலாளர் குடியிருப்புகளின் மீது பீரங்கிகளாலும் மெஷின் கன்களாலும் தாக்கியிருக்கிறது ராணுவம்.  அதற்குப் பிறகு தொழிலாளர்கள் நைட்ரைட் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் டைனமைட்டை ராணுவத்தின் மீது எறிந்திருக்கிறார்கள். 

நான்தான் ஔரங்ஸேப்… நாவலை நான் எழுதிக் கொண்டிருந்த போது “ஏன் நாம் வரலாற்றைத் திரும்பத் திரும்ப மீள் உருவாக்கம் செய்ய வேண்டும்? ஏன் இன்றைய வாழ்க்கையை எழுதக் கூடாது?  வரலாற்றை எழுதுதல் என்பது இன்றைய நெருக்கடிகளிலிருந்து தப்பிச் செல்வதாகாதா?” என்ற கேள்வி என்னிடம் பலமுறை கேட்கப்பட்டது.  அரசு நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது இதைத்தான்.  மறதி என்பதன் மீதுதான் அரசு அதிகாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது.  உதாரணமாக, 1925 ஜூன் படுகொலைகளை நேரில் பார்த்த கமாச்சோ (Anisate Camacho) 1994இல் அது பற்றி நினைவு கூர்கிறார்.  1925இல் அவருக்கு 20 வயது இருந்திருக்கும் என்றால், 1994இல் இந்தப் பேட்டியைக் கொடுக்கும் போது அவர் வயது 89.  இருந்தாலும் அந்தப் படுகொலையை என்னால் மறக்க முடியவில்லை என்கிறார்.  கமாச்சோ ஒரு மெக்கானிக்.  அதனால் ராணுவத்தினர் அவரை லா கொருன்யாவுக்கு அழைத்திருக்கிறார்கள்.  நடந்த படுகொலைகளுக்கு சாட்சியாக இருந்திருக்கிறார் கமாச்சோ.  அப்போது ராணுவ அதிகாரி கமாச்சோவிடம் சொன்னது: “இதை நீ வெளியே சொன்னால் உன்னையும் சுட்டு இந்தக் குழியில் தள்ளி விடுவோம்.” 

அதாவது, ’வாயை மூடு’ (சைலன்ஸ்) என்பதுதான் அரசு அதிகாரத்தின் அடையாளம்.  அதை நாம் ‘ஞாபகம்’ (மெமரி) என்பதைக் கொண்டுதான் எதிர்த்தாக வேண்டும்.  எனவேதான் வரலாற்றைத் திரும்பத் திரும்ப எழுதிப் பார்க்க வேண்டியிருக்கிறது.  இதெல்லாம் நடந்து ஒரு நூற்றாண்டு ஆன போதிலும் வாசகர்களிடம் யாசகம் பெற்று இம்மாதிரி ஊர்களுக்கெல்லாம் செல்ல வேண்டியிருக்கிறது.   69 ஆண்டுகள் கழித்து வாயைத் திறந்த கமாச்சோ நமக்கு ஒரு ஆதாரம்.  (Salt in the Sand: Memory, Violence, and the Nation State in Chile, 1890 to the Present.  Lessie Jo Frazier.)  இந்த ஆய்வுக்காக ஃப்ரேஸியர் எடுத்த பல பேட்டிகளில் ஒன்றுதான் கமாச்சோவின் பேட்டி. 

இந்த முறை சீலே செல்லும் போது அதன் வட எல்லையில் உள்ள அத்தாக்காமா (Atacama) பாலைவனத்தைப் பார்க்க வேண்டும்.  நூறு ஆண்டுகளாக மழை இல்லாத பாலைவனம்.  அத்தாக்காமா பாலைவனப் பகுதியில் உள்ளதுதான் தாராப்பாக்கா மாநிலம்.  அங்கேதான் பெரூ – சீலே எல்லைப் பகுதியில் இருக்கிறது பிஸாகுவா (Pisagua) என்ற மிகச் சிறிய கிராமம்.  சாந்த்தியாகோவிலிருந்து இக்கீக்கேவுக்கு (Iquique) (1800 கி.மீ.) விமானத்தில் சென்று அங்கிருந்து மிகக் கொடூரமான ஒரு சாலை வழியே பிஸாகுவா செல்ல வேண்டும். 

பிஸாகுவா ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பிரபலமான துறைமுகமாக இருந்தது.  அப்போது பிஸாகுவாவில் 4000 பேர் வசித்தார்கள்.  பெரூவிடம் இருந்த பிஸாகுவாவை 1879இல் சீலே படையெடுத்துச் சென்று கடுமையான சண்டைக்குப் பிறகு தன் வசத்தில் எடுத்துக் கொண்டது.   

இக்கீக்கே நகரம் காணொலி கீழே:

ஆளே இல்லாத பிஸாகுவா கிராமம் குறித்த காணொலி கீழே:

பிஸாகுவா இயற்கையாகவே ஒரு சிறைச்சாலை போல் அமைந்திருக்கிறது.  மேற்கில் பஸிஃபிக் பெருங்கடல்.  கிழக்கே மலைகள்.  ரயில் மூலம் பல உள்ளூர்களிலிருந்து கொண்டு வரப்படும் நைட்ரேட் பிஸாகுவா துறைமுகத்திலிருந்து உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. 

இன்று பிஸாகுவாவில் 250 பேர் மட்டுமே வசிக்கிறார்கள் என்கிறது விக்கிபீடியா. கோன்ஸாலஸ் விதேலாவின் (Gonzales Videla) ஆட்சியில் பிஸாகுவா சிறைச்சாலையின் நிர்வாக அதிகாரியாக இருந்த பினோசெத் கம்யூனிஸ்டுகளையும், புத்திஜீவிகளையும் சித்ரவதை செய்து கொண்டிருந்த 1940களின் பிற்பகுதியிலேயே இங்கே வசித்த மக்கள் வேறு ஊர்களுக்கு ஓடி விட்டனர்.  2006ஆம் ஆண்டில் கூட பிஸாகுவாவில் எங்கு தோண்டினாலும் மனித சடலங்கள் கிடைத்திருக்கின்றன.   

1980களில் பிஸாகுவா சென்று வந்த ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளர் அங்கே 60 பேர் மட்டுமே வசிப்பதாக எழுதுகிறார்.  இப்போதைய பிஸாகுவாவாசிகள் கடலில் மீன் பிடித்து ஜீவனம் செய்கிறார்கள்.  பிஸாகுவாவின் துயரக் கதைகளைத் தெரிந்திருக்கும் பயணிகள் எப்போதாவது அங்கே போனால் அவர்கள் கொடுக்கும் பணமும் அந்த மக்களுக்கு உதவுகிறது. 

மனித நடமாட்டமே இல்லாத பிஸாகுவா கிராமம்
புகைப்படம்: விக்கிபீடியா

பிஸாகுவாவுக்கு பல துயரக் கதைகள் உண்டு.  அதில் பிரபலமானவை 1925 மற்றும் 1945.  இது தவிர ஜெனரல் கார்லோஸ் இபான்யேஸ் தெல் காம்ப்போ (Carlos Ibáñez del Campo) சீலேயின் அதிபராக இருந்த இரண்டு கால கட்டங்களிலும் – 1927இலிருந்து 1931 வரை; 1952இலிருந்து 1958 வரை – ஓரினச் சேர்க்கையாளர்களைப் பிடித்துக் கொண்டு வந்து பிஸாகுவாவில்தான் போடுவார்கள். அதிபர் கார்லோஸ் இபான்யேஸ் இதைத் தானாகவே செய்யவில்லை.  சீலேயின் கத்தோலிக்கத் திருச்சபைதான் இபான்யேஸுக்கு அந்த நெருக்கடியைக் கொடுத்தது.  மனிதர்களின் உடலை ஒடுக்குவதில் மதம் எந்த இடத்தை வகிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.  ஆணும் பெண்ணும் இணைவதாக இருந்தால் சமூகத்தில் இடம் உண்டு; இல்லையேல் சிறையில் இருந்து சித்ரவதை செய்யப்படுவீர்கள் என்பதுதான் உலகெங்கிலும் மதம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கையாக இருந்து வருகிறது. 

பிஸாகுவா ரயில் நிலையம்
புகைப்படம் விக்கிபீடியா

கார்லோஸ் இபான்யேஸ் பற்றி இன்னொரு சுவாரசியமான செய்தி இருக்கிறது.  இவர் கம்யூனிஸ்ட் அனுதாபி போல் நடித்து, கம்யூனிஸ்டுகளின் உதவியோடு பதவிக்கு வந்து, பதவிக்கு வந்த கையோடு கம்யூனிஸ்டுகளைப் பிடித்து சிறையில் போட்டு சித்ரவதை செய்தார்.  அந்த இடம்தான் பிஸாகுவா சிறைச்சாலை.   

ஆனால் பினோசெத்தின் காலத்தில் பிஸாகுவா சிறைச்சாலைக்குக் கூட அல்ல; பிஸாகுவாவுக்கு அனுப்பினாலே அவர்கள் நாடு கட்த்தப்பட்டவர்களாகத்தான் கருதப்பட்டார்கள்.  தன்னை எதிர்ப்பவர்களை பஸிஃபிக் கடலில் தூக்கிப் போடுவதும் பிஸாகுவாவுக்கு அனுப்புவதும்தான் பினேசெத்தின் வழக்கமாக இருந்தது.  அப்படி அங்கே அனுப்பப்பட்டவர்களைப் பார்த்து பிஸாகுவாவில் வசிக்கும் பத்து இருபது மீனவர் குடும்பங்கள் “நீங்கள் என்ன குற்றம் செய்ததால் இங்கே அனுப்பப்பட்டீர்கள்?” என்று ஆச்சரியத்துடன் கேட்பது வழக்கம்.    

இன்றைய பிஸாகுவா

கலகம் காதல் இசை என்ற என்னுடைய புத்தகத்தில் Inti-Illimani என்ற இசைக்குழு பற்றி எழுதியிருக்கிறேன்.  அந்த இசைக்குழுவினர் பாப்லோ நெரூதா பிஸாகுவா பற்றி எழுதிய கவிதைகளைப் பாடியிருக்கிறார்கள். 

இன்றைய பிஸாகுவா.  சீலே பற்றிய என்னுடைய இந்தக் குறிப்புகளை ஜனவரியில் என்னோடு சீலே வர இருக்கும் நண்பர்கள் நகல் எடுத்து வைத்துக் கொண்டால் உதவியாக இருக்கும்.  இதையும் சீனியே செய்வார் என்று இருந்து விடாதீர்கள்.  இனிமேல் யாருக்கும் ’க்ளெரிக்கல்’ உதவி செய்வதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக தாய்லாந்தில் வைத்து அவர் சொன்னார்.