சாரு நிவேதிதா எழுத்தின் தனித்தன்மை என்ன என சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.
தமிழில் அநேகமாக குற்றவுணர்ச்சியில் இருந்து விடுவிக்கும் எழுத்து சாரு நிவேதிதாவினுடையது. பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கும் அல்லது குற்றவுணர்ச்சியை அதிகரிக்க வைக்கும். கழிவிரக்கம் , ஏங்கி ஏங்கி நொந்து போதல் , மருகுதல் , தோல்வியை சிலாகித்தல் , கையாலாகாத்தனத்தை ஹீரோயிஸமாக்குதல் , ஏழ்மையை , ஆண்டாண்டுகாலமாக இருந்து வரும் தாய் , மகள் போன்ற குடும்ப உறவுகளை காவியமாக்குதல் – இவைகள் தான் தமிழ் எழுத்தாளர்கள் களமாடும் களங்கள்.
இந்தக் குற்றவுணர்ச்சியை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். அப்படிப் பிரிக்கும் போது சுவாரசியமான சங்கதி ஒன்று தெரிய வரும்.திருடுவது, ஊழல் செய்வது ,ஏமாற்றுவது , அடுத்தவர் வாய்ப்பைப் பறிப்பது , வேலை செய்யாமல் ஏமாற்றுவது இன்னும் பல அநீதியான செயல்களைச் செய்கையில் பலருக்கும் குற்றவுணர்ச்சி வரவே வராது. மது அருந்துவது , சிகரட் புகைப்பது , சினிமா பார்ப்பது , சுற்றுலா செல்வது , பார்ட்டி செய்வது , காலையில் அதிக நேரம் தூங்குவது , அதிகம் செலவு செய்வது , லாங் டிரிப் செல்வது , நண்பர்களுடன் கூத்தடிப்பது போன்ற செயல்களில்தான் குற்றவுணர்ச்சி பிடித்து ஆட்டும். அதாவது கொண்டாட்டமான சூழலில் கொஞ்ச நேரம் இருந்தாலே அடுத்து குற்றவுணர்ச்சி ஆட்கொள்ளும். ஜாலியாக இருக்கக்கூடாது , கொண்டாட்டமாக இருக்கவே கூடாது என எப்போதோ எப்படியோ நம் ஜீன்களில் ஏற்றப்பட்டிருக்கிறது.
இது அல்லாமல் , ஜஸ்ட் ஃபிரண்டுதான்…ஆனா ஆட்டோவுல பக்கத்து பக்கத்துல ஒக்காந்து ஒண்ணா போனமா …லீக் ஆயிடிச்சி, ஃபிரண்டோட லவ்வரு , அவள நெனச்சி சுய இன்பம் அனுபவிச்சிட்டேன், அடிக்கடி சுய இன்பம் செய்றேன் , பொண்டாட்டி /புருஷன தாண்டி இன்னொருத்தர நெனச்சிகிட்டே இருக்கேன் போன்ற கோஷ்டிகள். சத்தம் போடாம மேட்டர முடிச்சிட்டு தொடைச்சிட்டு ஜாலியா போற கோஷ்டிகளை விட இந்த ஒண்ணுமே செய்யாம குற்றவுணர்ச்சி அடையும் இதைப்போன்ற கோஷ்டிகள் ஒரு வகை.
பட்டியலிட்டால் இன்னும் ஆயிரக்கணக்கில் குற்றவுணர்ச்சிக்கான காரணங்கள் வரும். இந்த வகை குற்றவுணர்ச்சிகளை கவனமாக அதிகப்படுத்தும் வேலையை மற்ற எழுத்தாளர்கள் பார்த்துக்கொண்டிருக்க , சத்தம் போடாமல் இவ்வகை குற்றவுணர்ச்சிகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கக்கூடிய எழுத்து சாரு நிவேதிதாவினுடையது. மீண்டும் அழுத்தி சொல்லவேண்டியிருப்பதால் சொல்கிறேன். இவ்வகை குற்றவுணர்ச்சியை அதிகரிக்கும் வகை எழுத்துக்களை எழுதும் எழுத்தாளர்களை வாசிப்பவர்கள் , மற்ற அநீதிகளை எல்லாம் குற்றவுணர்ச்சியே இல்லாமல் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். உதாரணமாக கள்ள பணம் , ஊழல் , உழைப்பை சுரண்டுதல் , போன்றவைகளைச் செய்பவர்களைப் பாருங்கள் , பெரும்பாலும் உல்லாசமாக இருக்க மாட்டார்கள் , கொண்டாட்டமாக இருக்க மாட்டார்கள். சரியான நேரத்துக்கு வேலைக்கு அல்லது தொழிலுக்கு வந்து விடுவார்கள். குளித்து முடித்து நெற்றியில் பட்டையோ திலகமோ இட்டு பழம் மாதிரி ஏசி அறையில் அமர்ந்து கொண்டு உழைப்பின் மேன்மையையும் , உழைத்தலின் சிறப்பையும் செல்லத் தொப்பையைத் தடவிக்கொண்டு பேசுவார்கள். சிக்கனமாக இருக்க வேண்டியதை வலியுறுத்துவார்கள்.பணத்தையும் சொத்தையும் ஏற்றிக்கொண்டே செல்வார்கள்.
இப்படிச் சொல்லலாம் – சாருவின் எழுத்து தேவையில்லாத குற்றவுணர்ச்சியைப் போக்கும். உண்மையாக குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டிய செயல்களுக்கு எதிராக இருக்கும்.
பி.கு : நானும் எவ்வளவுதான் மீறப் பார்த்தாலும் 10 நாட்கள் தான் தாங்குகிறது. 10 நாட்களுக்கு மேல் ஊர் சுற்றினால் குற்றவுணர்ச்சி வந்து விடுகிறது. ஓரிரு நாட்கள் அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்ததால்தான் சரியாகிறது. எத்தனை ஜென்மங்களாக ஜெனிடிக்காக ஏற்றி விடப்பட்டதோ …..நம் அடுத்த தலைமுறையாவது இந்தத் தேவையற்ற குற்றவுணர்ச்சியில் இருந்து விடுவிப்போம்.