த அவ்ட்ஸைடர் – 17 (Más fuerte Perra – இன்னும் சத்தமாகக் குரை பெண்நாயே!)

உடலை ஒடுக்குதல் என்பது சர்வாதிகாரத்தின் பண்புகளில் ஒன்று. அதனால்தான் ஹிட்லர் ஓரினச் சேர்க்கையாளர்கள் அனைவரையும் வதைமுகாமுக்கு அனுப்பினார்.  அதைப் போலவேதான் சீலேயின் ஓரினச் சேர்க்கையாளர்களும் பிஸாகுவாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.  இது கிட்டத்தட்ட ரஷ்யாவில் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை சைபீரியாவின் பனிப்பாலைகளுக்கு அனுப்பியதற்கு நிகர்.   

லியனார்தோ ஃபெர்னாந்தஸ் என்பவர் சீலேயின் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றி ஆய்வு செய்தவர்.  இபான்யேஸ் தெல் காம்ப்போவின் (Ibáñez del Campo) ஆட்சியில் – அதாவது, 1920களின் இறுதியில் – ஓரினச் சேர்க்கையாளர்கள் வால்ப்பரைஸோ நகரிலிருந்து படகு மூலமாக பிஸாகுவாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.   ஃபெர்னாந்தஸ், பிஸாகுவாவில் ஒரு முதியவரைச் சந்திக்கிறார்.  அந்த முதியவர் தான் இளைஞனாக இருந்த போது ஒருநாள் பிஸாகுவாவில் இருந்த சிப்பாய்கள் ஐம்பது ஓரினச் சேர்க்கையாளர்களை சுட்டுக் கொன்று குழியில் தள்ளினார்கள் என்பதை நினைவு கூர்கிறார். 

எரேமியா 21- 22 இப்படிச் சொல்கிறது:

வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம் பண்ண சாவு நம்முடைய பலகணிகளில் ஏறி, நம்முடைய அரண்மனைகளில் பிரவேசித்தது.

மொனேதா அரண்மனையின் முன்னே உள்ள டாக்டர் ஸால்வதோர் அயெந்தேவின் சிலைக்கு முன்னால் – 2019

மனிதரின் பிரேதங்கள் வயல்வெளிகளில் கிடக்கும் சாணத்தைப் போலவும், யாரும் வாரிக் கொள்ளாதிருக்கின்ற தானியக் கதிர்களைப் போலவும் கிடைக்கும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொல்.

பிஸாகுவா இப்படித்தான் இருந்ததாக சாட்சியங்கள் கூறியதை ஃப்ரேஸியர் தனது நூலில் பதிவு செய்கிறார்.     

விக்தர் ஹாரா ஸ்டேடியத்தின் வாசலில்

பிஸாகுவா என்ற அந்த ஆளற்ற பாலைநிலத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமிகுதிக்கு இன்னொரு காரணம், மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் சீலே சென்ற போது குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காமல் நான் பட்ட துன்பத்தைப் பற்றி பல பக்கங்கள் எழுதி விட்டேன்.  இப்போதோ சீலே அரசாங்கமே தண்ணீர்ப் பிரச்சினை பற்றி வெளிப்படையாக அறிவித்து விட்டது.  இதையெல்லாம் விட சுவாரசியம், பிஸாகுவா நூறு ஆண்டுகளாக மழை பெய்யாத அத்தாகாமா பாலைவனத்தில் இருக்கிறது.  அங்கே வசிப்பவர்கள் தாகமெடுத்தால் பியர்தான் குடிப்பதாக அங்கே சென்று வரும் பயணிகள் எழுதுகிறார்கள்.  அந்த இடத்தைப் பார்க்க வேண்டும்.  அதிலும் அசாதாரணமான அளவில் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க வேண்டிய நான் அந்த இடத்தை அனுபவிக்க வேண்டும்.  (பிஸாகுவா என்பதன் பொருளும் சுவாரசியமாக இருக்கிறது.  அகுவா – தண்ணீர்.  பிஸா என்றால் கிடைக்கவில்லை, இல்லை என்று பொருள்.  தண்ணீர் இல்லாத இடம்.)

விக்தர் ஹாரா ஸ்டேடியத்தின் உள்ளே. இந்த இடத்தில்தான் பினோசெத் பதவிக்கு வந்த அன்று 5000 பேர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். இங்கேதான் விக்தர் ஹாரா கொல்லப்பட்டார்

ஆரம்பத்தில் சீலேயின் திருச்சபைகள் மக்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சியில் இருந்த ராணுவ அதிபர்களுக்கு எவ்வளவு சாதகமாக இருந்தன என்று பார்த்தோம்.  ஆனால் 1980களில் நிலைமை தலைகீழாக மாறியது.  பாதிரிமார்கள் மனித உரிமைப் போராளிகளுக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தனர்.  அதே கால கட்டத்தில் தன்னை எதிர்க்கும் அத்தனை பேரையும் பிஸாகுவாவுக்கு அனுப்ப ஆரம்பித்தார் பினோசெத்.  இவ்வாறாக, எண்பதுகளில் மத்தியில் பினோசெத் தன்னுடைய பழைய வதைமுகான பிஸாகுவாவை மீண்டும் உயிர்ப்பிக்க ஆரம்பித்தார்.  மனித உரிமை பற்றிப் பேசியவர்கள் அனைவரும் பிஸாகுவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இப்போதைய ஸாந்த்தியாகோ போலீஸார் சிநேகமாக இருக்கிறார்கள். ஒருவேளை வெளிநாட்டுப் பயணி என்பதால் நட்பு பாராட்டியிருக்கலாம்

பாப்லோ நெரூதா 1948 படுகொலைகள் பற்றி இப்படிப் பாடுகிறார். 

”Beneath the nitrate and thorns / I found

a drop of my people’s blood, / and each drop burned like fire.’’

பாப்லோ நெரூதாவின் வீட்டின் முன்னே பள்ளி மாணவிகள் நடனமாடுகிறார்கள். அங்கே மாணவிகளின் பள்ளிச் சீருடையும் இப்படித்தான் இருக்கிறது.

1987இல் La estación del regreso என்று ஒரு திரைப்படம் வந்த்து.  ஒரு பெண் தொலைந்து போன தன் கணவனைத் தேடி பிஸாகுவா செல்வதாக கதை.  கடைசியில் அவள் கணவன் கிடைப்பதில்லை.  ஆனாலும் அந்தப் பயணம் அவளுக்குப் பெரியதொரு அனுபவத்தை அளிக்கிறது. 

இந்த்த் தொடரை எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு இன்று காலையில் திடீரென்று ஒரு சந்தேகம் வந்த்து.  இந்தத் தொடரை யாரேனும் படிக்கிறார்களா?  படித்தால், இதில் எழுதப்படும் விஷயங்களோடு கொஞ்சமாவது தங்களைத் தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறதா?  அல்லது, யாரோ ஒரு பைத்தியக்காரன் ஏதோ தொலைதூரத்தில் உள்ள ஒரு தேசத்தைப் பற்றி, நமக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்களாகக் கிறுக்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறார்களா?   நேற்றைய பதிவை எழுதுவதற்கு எனக்கு பத்து மணி நேரத்துக்கு மேல் ஆனது.  அந்த அளவுக்குப் படிக்க வேண்டியிருக்கிறது.  அந்த அளவு உழைப்பைக் கோரும் இந்தத் தொடர் யாருக்காவது அர்த்தமாகிறதா?

ஸான் க்றிஸ்தோபால் குன்றின் மீதிருந்து ஸாந்த்தியாகோ நகரம்

ஏன் இத்தனை சிரமம்?

Diamela Eltit என்று ஒரு சீலே எழுத்தாளர் இருக்கிறார்.  இப்போது வயது 75.  சீலேயின் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் வயது பொதுவாக தொண்ணூறைத் தாண்டுகிறது.  எல்த்தித்தின் நாவல்கள் எதுவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாததால் ஸ்பானிஷை விட்டு வெளியே அவர் பெயர் பிரபலமாகவில்லை.  அவருடைய நாவல் ஒன்று Por la patria (1986).  பாத்ரியா என்றால் தந்தை தேசம் (மேற்கத்திய நாடுகள் பெரும்பாலானவற்றில் தாய்நாடு என்று சொல்வதில்லை).  போர் லா பாத்ரியா என்றால் நமது தேசத்துக்காக என்று பொருள்படும். 

தியாமலா எல்த்தித் தன்னுடைய போர் லா பாத்ரியாவில் ஞாபகம் என்ற கருத்தாக்கத்தைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.  ஞாபகம் மட்டுமே மனித குலத்தை உயிர்த்திருக்க வைக்கிறது என்கிறார்.  தென்னமெரிக்கா கண்டத்தின் ஞாபகத்தையே ஐரோப்பியர்கள் துடைத்தழித்த வரலாறு நமக்குத் தெரியும்.  தென்னமெரிக்கப் பூர்வகுடிகளின் கடவுள்கள், மொழிகள், பண்பாட்டு அடையாளங்கள் அனைத்தும் ஐரோப்பாவிலிருந்து தப்பி ஓடி வந்த கிரிமினல்களாலும், பயணிகளாலும், அரச தூதர்களாலும், மத்த்தைப் பரப்ப வந்த பாதிரிகளாலும் அடியோடு அழித்தொழிக்கப்பட்ட வரலாற்றை “ஞாபகம்” என்ற கருத்தாக்கத்தோடு நாம் இணைத்துப் பார்க்கலாம். 

சாதி, சதி போன்ற சில எதிர்மறையான விஷயங்களைப் பயன்படுத்தி ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ’ஞாபக’த்தை அழிக்க முயன்று அதில் ஓரளவு வெற்றியும் அடைந்தார்கள்.  இதில் என்ன பிரச்சினை என்றால், ஞாபகத்தை ஒட்டு மொத்தமாக அழிக்க முயலும்போது ’ஞாபகம்’ தன்னை அடிப்படைவாதமாக உருமாற்றிக் கொண்டு முன்னே வரும்.  இந்தியாவில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.  இந்தியாவின் பண்பாட்டு அடையாளங்கள் சுத்தமாக மறைந்து ’ஞாபகம்’ இந்துத்துவ அடிப்படைவாதமாக, இந்துத்துவ அரசியலாக முன்னுக்கு வருகிறது. 

போர் லா பாத்ரியா நாவலின் நாயகி கோயாவின் குடும்பம் ஒரு நாள் இரவு அரசின் வன்முறைக்கு உள்ளாகிறது.  கோயாவின் வீட்டைச் சோதனையிடும் ராணுவம் அவள் தந்தையைக் கொலை செய்கிறது.  கோயாவையும் கைது செய்கிறது.  கோயாவின் குடும்பத்தைக் காட்டிக் கொடுப்பவன் யுவான் என்ற சிப்பாய். ஆனால் அவன்தான் அன்றைய தினம் கோயாவின் உயிரைக் காப்பாற்றுகிறான்.  ”நடந்த சம்பவங்களுக்கெல்லாம் காரணம் அரசு அல்ல, உன் குடும்பம்தான், உன் நினைவுகளை நீ மாற்றி எழுது” என்று கோயாவை வற்புறுத்துகிறான்.  அவளும் அவ்வாறே மாற்றி எழுதுகிறாள்.  அவள் எழுதியதுதான் அரசு ஆவணமாகப் பாதுகாக்கப்படுகிறது.

(நண்பர்களே, அரசு நமக்குத் தரும் வரலாறு என்பது இம்மாதிரி பொய்யாகத் திரிக்கப்பட்ட, கற்பனையாகப் புனையப்பட்ட வரலாறுகள்தாம்.  அது அசோகரின் வரலாறாக இருந்தாலும் சரி, அக்பரின் வரலாறாக இருந்தாலும் சரி, ஷா ஜஹானின் வரலாறாக இருந்தாலும் சரி, அந்த அரச வரலாறுகள் இட்டுக் கட்டப்பட்டவையே ஆகும்.  அதனால்தான் எழுத்தாளர்கள் அப்படிப் பொய்யாகப் புனையப்பட்ட வரலாற்றில் ஒரு இடையீட்டை/குறுக்கீட்டை நிகழ்த்தி வேறோர் வரலாற்றை எழுத முயல்கிறார்கள்.  அதுவே subaltern history என்றும் subaltern literature என்றும் அழைக்கப்படுகிறது.  சப் என்பது ஆங்கில ராணுவ அதிகாரிகள் தங்களுக்குக் கீழே இருந்தவர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்திய சொல்.  அதைத்தான் அந்த்தோனியோ க்ராம்ஸி (Antonio Gramsci) விளிம்புநிலை மனிதர்களின் வரலாற்றைக் குறிப்பதற்குப் பயன்படுத்தினார்.  இதுவரை கேட்கப்படாதவர்களின் கதை.  இதுவரை பேசப்படாதவர்களின் கதை.  இதுவரை குரலற்றவர்களாய் இருந்தவர்களின் கதை.)

கோயாவின் உடம்பைத் திரும்பத் திரும்ப அடிப்பதன் மூலம், அவள் உடலை வதைப்பதன் மூலம் அவளுடைய ஞாபகத்தை இல்லாமல் ஆக்கப் பார்க்கிறது அரசு.  அப்படி அவள் ஞாபகம் இழப்பதற்குள் அதையெல்லாம் வெறும் பேச்சாகவே இன்னொருவரிடம் சொல்லிப் பதிவு செய்கிறாள் கோயா.  மேலும், ஞாபகம் என்பது திரும்பவும் பின்னோக்கிச் செல்வதல்ல.  ஞாபகத்தின் துணை கொண்டு நம்மை நாமே உயிர்ப்பித்துக் கொள்ளுதல்.  மேலும், கோயா தன் ஞாபகத்தைத் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் அதைத் திரும்பவும் நிகழ்த்திக் காண்பிக்கிறாள்.  நிகழ்த்திக் காண்பிப்பதன் மூலம் அதை அவள் தனக்கு உரித்தானதாக ஆக்கிக் கொள்கிறாள்…

வதைமுகாமில் அவளைச் சித்ரவதை செய்வதன் மூலம் ராணுவம் அவளுடைய ஞாபகத்தை அழித்தொழிக்கப் பார்த்தது.  அவளோ தன் ஞாபகத்தைக் கதைகளாக மாற்றி நம்மிடம் சொல்வதன் மூலம் அதைத் தக்க வைத்துக் கொள்கிறாள்.  கொல்லப்பட்ட ஒன்றை தன் கதைகள் மூலம் உயிர்ப்பிக்கிறாள். 

வதைக் கூடம் என்று அடிக்கடி படிக்கிறோம்.  வதைக் கூடம் என்றால் எப்படி இருக்கும்?  பிஸாகுவா வதைக்கூடத்தில் ஒரு ‘டார்ச்சர் செஷன்’.  அடி வாங்கியதில் கோயாவின் உடலெங்கும் காயங்கள்.  சில காயங்களிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது.  அவள் கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன.  குத்துச் சண்டை நடக்கும் வட்டத்தைப் போல் ஒரு இடத்தில் அவளைத் தள்ளி விடுகிறார்கள் சிப்பாய்கள்.  வட்டத்துக்குள் ஒரு வெறி நாய் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நிற்கிறது.  அவளும் நாயைப் போல் குரைத்தால் நாய் சற்று நகர்ந்து போகிறது.  கோயா குரைப்பதை நிறுத்தினால் நாய் அவளைக் கடிக்க வருகிறது. 

நீங்கள் அலெஹாந்த்ரோ கொன்ஸாலஸ் இயக்கிய Amores Perros படம் பார்த்திருக்கிறீர்களா?  அதில் வரும் நாய்ச் சண்டையை நினைவு கூருங்கள்.  அதே மாதிரிதான் பிஸாகுவா வதைமுகாமில் நடக்கும்.  ஆனால் சினிமாவுக்கும் எதார்த்தத்துக்குமான வித்தியாசம் பிஸாகுவா வதைமுகாமில் நாய்க்கும் ஒரு பெண்ணுக்கும் சண்டை. 

சண்டை நடந்து கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் நாய் அவளைக் கடித்து விடுகிறது.  அப்போது சிப்பாய்கள் பெரும் ஆரவாரமிட்டு ”Más fuerte Perra” என்று தொண்டை கிழியக் கத்தி கோயாவை உற்சாகப்படுத்துகிறார்கள்.  பெர்ரா என்றால் நாய்.  Bitch.  இங்கே கோயா.  மாஸ் ஃபுவர்த்தே என்றால் இன்னும் பலமாக என்று பொருள்.  இன்னும் பலமாகக் குரை, நாயே. 

அவமானத்திலும் வலியிலும் வேதனையிலும் கோயா அந்தக் கயிற்று வளையத்திலிருந்து வெளியே வந்து விழுகிறாள்.     

இம்மாதிரி விதம் விதமான வதை நாடகங்களை பிஸாகுவாவின் சிப்பாய்கள் தினந்தோறும் நிகழ்த்திப் பார்க்கிறார்கள்.  அந்தப் பாலைநிலத்தில் அவர்களுக்கும் பொழுது போக வேண்டுமே?  ஆனால் ஒருநாள் நிகழ்த்தப்பட்ட வதை நாடகம் இன்னொரு நாள் நடக்காது.  விதம் விதமாகக் கற்பனை செய்யப்பட்டு தினமும் இந்த வதை நாடகங்கள் நடக்கும்.  இந்த வதைகளின் விளைவாக அந்தப் பெண்கள் ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தினரையும் நண்பர்களையும் காட்டிக் கொடுப்பவர்களாக மாறுகிறார்கள்.  ஆனால் கோயாவும் அவள் தோழிகளும் தங்கள் ஞாபகத்தைத் திரும்பத் திரும்ப எழுதுவதன் மூலமும், சொல்வதன் மூலம், நிகழ்த்துவதன் மூலமும் பயம் என்ற உணர்வை இழக்கிறார்கள்.  ஒரு கட்டத்தில் யுவான் அந்தப் பிஸாகுவா வதைமுகாமுக்கு மாற்றப்படும் போது அவன் மீது கோயாவுக்கு எந்த பயமும் இல்லாமல் போகிறது.  எனக்கு இனிமேல் எதைப் பற்றியும் கவலையில்லை என்கிறாள் அவனிடம்.  கடைசியில் நாவல் முடிவுறும்போது “இந்த அனுபவங்களெல்லாம் என்னிடம் ஒரு காவியமாக சேகரமாகி விட்டன” என்கிறாள். 

”இதையெல்லாம் நான் எழுதப் போகிறேன்.  இது என்னுடைய ஆவணம்.  நீயும் உன்னுடைய சக சிப்பாய்களும் என் ஞாபகத்தை அழிப்பதற்கு எத்தனையோ பாடுபட்டீர்கள்.  ஆனால் உங்களுடைய ஆவணம் மதிப்பிழந்து விட்டது.  என்னுடைய இந்த ஆவணம்தான் – சொற்களாக வெளிப்பட்டுள்ள என்னுடைய இந்த ஞாபகங்கள்தான் – கதைகளாக வெளிப்பட்டுள்ள என்னுடைய இந்த ரணங்களும் காயங்களும்தான் – காலம் உள்ளளவும் நிற்கும்.  பிறரால் வாசிக்கப்படும்.  பிறரால் நடித்துக் காண்பிக்கப்படும்.   

 

Diamela Eltit - Wikipedia

Diamela Eltit

நான் சிந்திக்கும் மொழி, எழுதும் மொழி, பேசும் மொழி தமிழ்.  ஆனாலும் இந்தத் தமிழ் மண்ணில் நான் ஒரு அந்நியனாக உணரும் காரணம் என்ன?  ஒரு சினிமாப் பாடகர் இறந்து விட்டார்.  உடனே தமிழ்நாடே உருகி உருகிக் கண்ணீர் வடிக்கிறது.  புரிந்து கொள்கிறேன்.  ஒரு எழுத்தாளனின் மறைவுக்கு இங்கே கண்ணீர் வடிக்க நாதி இல்லை.  அந்த எழுத்தாளர் யார் என்றே தமிழ்ச் சமூகத்துக்குத் தெரியாது.  ஆனால் எழுத்தாளன் என்பவனாவது இந்தக் கச்சடாவிலிருந்து விலகி இருக்க வேண்டும் அல்லவா?  பொழுதுபோக்கும் இலக்கியமும் வேறு வேறு என்று ஒரு எழுத்தாளனுக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?  இதை எழுதியதற்காக 65 வயதான கவிஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார்.  நாற்பது ஆண்டுக் கால நண்பர்.  இன்னொரு எழுத்தாளர் – தமிழின் மிகச் சிறந்த நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியவர் – அந்தப் பாடகரை ஒரு விமான நிலையத்தில் பார்த்த போது அவர் பாதம் தொட்டு வணங்க நினைத்ததாக எழுதுகிறார்.

நான் ஸாந்த்தியாகோ சென்று தியாமலா எல்த்தித்தின் கரங்களைப் பிடித்து முத்தமிட விரும்புகிறேன்.  பிஸாகுவா சென்று அந்த நிலத்தில் முத்தமிட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் விட விரும்புகிறேன்.

ஏனென்றால்,

1990 வரை ஒரு நூற்றாண்டுக் காலமாக அந்த மண்ணை – தண்ணீரின் மணமறியா அந்த மண்ணை – சர்வாதிகாரிகளின் சேவகர்கள் சீலேயர்களின் குருதியினால் குளிப்பாட்டியிருக்கிறார்கள்.      

தமிழ் எழுத்தாளனுக்குத் தமிழ் சினிமாப் பாடகனின் காலில் விழத் தோன்றுகிறது.  எனக்கு சந்திர மண்டலத்துக்குப் பக்கத்திலே இருக்கின்ற ஒரு ரத்த பூமியில் நின்று கண்ணீர் விடத் தோன்றுகிறது. 

இதனால்தான் நான் அந்நியன்.

இன்னொரு விஷயம்.  ஆங்கிலத்தில் இன்னும் மொழிபெயர்க்கப்படாத Por la patria நாவலை நான் முழுமையாகப் படிக்க முடியவில்லை.  ஆய்வுகளுக்காக மொழிபெயர்க்கப்பட்ட சில பகுதிகளைத்தான் படிக்க முடிந்தது.  சில பகுதிகளை அகராதியின் துணை கொண்டு ஸ்பானிஷில் படித்தேன்.  போர் லா பாத்ரியா இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.  கோயாவின் வதைமுகாம் அனுபவங்கள் அவள் நாவலில் குறிப்பிடுவது போல் காவிய மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால் அதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், காவிய மொழியும் Coa என்ற ஸ்பானிஷும் கலந்து இருக்கிறது.  கோவா என்பது சீலேயின் சேரிப்பகுதிகளில் பேசப்படும் கொச்சையான ஸ்பானிஷ். இந்தக் கலப்பு பற்றி எல்த்தித்திடம் கேட்கப்பட்ட போது ”அது linguistic incest” என்று பதில் கூறினார்.  ஏனென்றால், பழைய செவ்வியல் ஸ்பானிஷ், கோவா என்று அழைக்கப்படும் சேரி ஸ்பானிஷ், செவ்விந்தியர்களின் மப்பூச்சோ ஸ்பானிஷ் என்ற மூன்றும் சகோதர மொழிகள்.  அந்த மூன்றையும் கலந்ததால் linguistic incest என்று சொல்கிறேன் என்றார் எல்த்தித்.  மேலும், ஒரு காவியத்தில் சேரி மொழியைக் கலக்கும் போது அது உடனடியாக transgressive மொழியாகவும் மாறி விடுகிறது. 

சீலேயின் ஸ்பானிஷ் பற்றிய ஒரு அபிப்பிராயம் என்னவென்றால், சீலே அளவுக்கு வேறு எந்த நாட்டிலும் இத்தனை வகை ஸ்பானிஷ் பேச்சு மொழிகள் கிடையாது.  வடக்கே ஒரு ஸ்பானிஷ்.  மத்தியில் ஒரு ஸ்பானிஷ்.  தெற்கே பேசப்படும் ஸ்பானிஷோ மற்ற பகுதி மக்களுக்குப் புரியாது.  காரணம், தெற்கே ஜெர்மனியிலிருந்து புலம் பெயர்ந்து வந்த பலர் உண்டு.  அவர்களின் ஜெர்மனும் அந்த ஸ்பானிஷில் கலந்து இருக்கும்.  என் பயண வழிகாட்டி ரொபர்த்தோவின் தாத்தா ஜெர்மன்காரர் என்று சொன்னது ஞாபகம் வருகிறது.