திணிக்கப்பட்ட மௌனத்தின்
இருண்ட குழிகளிலிருந்து
இப்போதுதான்
வெளிவந்திருக்கிறாய்
சுற்றுப்புறம் கண்டு
சிலகாலம் திகைத்த
நீ
இப்போதுதான்
பேச ஆரம்பித்திருக்கிறாய்
இப்போதுதான்
மறுக்கவும் ஆரம்பித்திருக்கிறாய்
காலமறியாத் தனிமையில்
அஃறிணையாய்க் கிடந்த
நீ
இப்போதுதான்
சிரிக்க ஆரம்பித்திருக்கிறாய்
உன்னைப் பைத்தியமென்று
சொன்ன
நோய்மைக் கூட்டத்தை
இப்போதுதான்
நீ
புறக்கணிக்க ஆரம்பித்திருக்கிறாய்
இப்படியாக
இந்தக் கல்மலைகளில்
எதிரொலிக்கும்
உனது
விடுதலைப் பாடலை
எனது வார்த்தைகளில்
எழுத
முயன்று கொண்டிருக்கிறேன்