2
ஆள் நடமாட்டமில்லாத தெருவில்
நடைபயிலும் பொழுது
ஹலோ வணக்கம் என்றொரு குரல்
சுற்றுமுற்றும் நோக்கினேன்
யாருமே இல்லை பயந்து போனேன்
பேய்கள் அதிகமிருக்கும் ஊரில் தான்
நான் வளர்ந்தேன்.
பேய் அடித்துச் செத்தவர் பலர்
அங்குண்டு.
எனதொரு சகோதரிக்கே பேய்
பிடித்திருக்கிறது
மலையாளத்தில் கத்தினாள்.
மலையாளப் பேய் என்ற
றிந்தோம்
ஒரு புள்ளி விபரம்
இந்த மகா நகரத்தில் பேய்களில்லை
என்கிறது
நகர மாந்தர் குறித்து பேய்களுக்குப் பேரச்சம் போலும்.
என்றபோதும்
யாருமற்ற தெருவில்
ஹலோ வணக்கம்
கேட்டு வியர்த்துப் போனேன்
மீண்டும் கேட்டது குரல்
ஹலோ வணக்கம் அஞ்ச வேண்டாம்
குனிந்து பாருங்கள் என்றது குரல்
3
ஒரு கூழாங்கல்லிலிருந்துதான்
அந்தக் குரல் என்றறிந்து கொண்டேன்
என்னை அறிந்தோரோ, வாசகரோ
வணக்கம் சொன்னால்
காதில் விழாததுபோல்
சென்றுவிடும் நான்
அந்தக் கூழாங்கல்லுக்கு
பதில் வணக்கம் சொன்னேன்
கூழாங்கல்லோடு பேசுவது
புதியதோர் அனுபவமென்பதால்
அதை எடுத்துக்
கையில் வைத்துக்கொண்டு நடந்தேன்
4
கூழாங்கல் தன்
கதை சொல்லத் தொடங்கியது
முதலில் நீ ஆணா பெண்ணா
சொல்லென்றேன்
என் மொழியில் அஃறிணைக்குப்
பாலின வித்தியாசம்
கொடுப்பதில்லை
யென்றாலும் வேறுபல
மொழிகளில் அது உள்ளதென்பதால்
கேட்கிறேனென்றேன்
எங்கள் மொழியில்
மானுட மொழி இலக்கணம் செல்லாது,
உனக்குத் தமிழ்தான் தெரியுமென்பதால்
தமிழில் பேசினேனென்றது
கூழாங்கல்
5
அது சொன்ன கதை பெருங்கதை
அதுவொரு பயணக் கதை
நூற்றாண்டுகள் பல கடந்த கதை
அறிவியலும் நிலவியலும்
குருதிப்புனல் பொங்கும் சரித்திரமும்
கலந்த கதை
இமயமலையிலிருந்து தொடங்கிய
அந்தக் கதை சொல்ல
எனக்கோர் ஆயுள் போதாது
இருந்தாலும்
என்றாவது உங்களுக்குச்
சொல்ல முயல்கிறேன்
1
வீட்டுக்கு வந்ததும்
“உள்ளங்கையைப்
பரவசமாகப் பார்த்துக் கொண்டே
பேசியபடி-
பெருந்தூரம்” சென்றேனாம்.
பலரும் அக்கறையோடு பகிர்ந்த தகவலைச்
சொன்னவாறே
என்னைக் கவலைமிகப்
பார்த்தாளென்
மனையாள்.