குருவைக் கண்டடைதல்

இந்த விஷயத்தைப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் தன் உடல் நலம் குறித்து அக்கறை கொள்வோர் பலரும் காலையில் நடைப் பயிற்சிதான் செய்கிறார்கள்.  அப்படி நடைப் பயிற்சி செய்தாலும் அறுபது வயதில் பைபாஸ் அறுவை சிகிச்சை அல்லது ஸ்டெண்ட் வைத்துக் கொள்வது போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடிவதில்லை.  நான் உட்பட. 

எனக்கு பதினாறு வயதில் காச நோய் வந்தது.  ஒரு நூற்றியிருபது ஸ்ட்ரெப்டொமைசின் ஊசி போட்டார்கள்.  சரியாயிற்று.  அதன் பிறகு ஐம்பத்தைந்து வயது வரை ஜுரம், தலைவலி, வயிற்று வலி, ஜலதோஷம், கண் வலி எதுவுமே வந்ததில்லை.  சென்னை முழுவதுமே மெட்றாஸ் ஐ வியாதியில் தவிக்கும் போதும் எனக்குக் கண் வலி வந்ததில்லை.  தலை வலி என்றால் என்னவென்றே தெரியாது.  இதன் காரணமாக, நம் உடம்பு கொஞ்சம் அசாதாரணமானது என்று நினைத்துக் கொண்டு மருத்துவ சோதனை எதுவும் செய்யாமலே விட்டு விட்டேன்.  ஆனால் நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி, ஜிம் எல்லாம் விடாமல் தொடர்ந்தது. 

ஐம்பத்தைந்து வயதில் மாரடைப்பு.  பைபாஸ் சர்ஜரி.  அதன் பிறகும் நடை.  ஓட்டத்தை நிறுத்தி விட்டேன்.  ஓடினால் நெஞ்சு வலிக்கும்.  ஆனால் தினமும் நடக்க வேண்டும். 

நான் உடல் நலத்தைப் பேணுகின்றவன்.  என்னால் இன்னமும் ஆறு மணி நேரம் ஏழு மணி நேரம் சம்மணம் இட்டபடி எந்த சுணக்கமும் இல்லாமல் தரையில் அமர்ந்திருக்க முடியும்.  மாலை ஏழு மணிக்கு நண்பர்களுடன் பேச அமர்ந்தால் காலை நான்கு மணி வரை அமர்ந்தபடியே பேசிக் கொண்டிருப்பேன்.  காலோ இடுப்போ வலிக்காது.  ஆனால் இருதயத்தில் உள்ள அடைப்பின் காரணமாக மலை ஏற முடியாது.  ஏறினால் நெஞ்சு வலிக்கும்.  வேகமாகவும் நடக்க முடியாது.

நான் மைதானத்தில் ஓட்டப் பயிற்சியிலும் நடைப் பயிற்சியிலும் ஈடுபட்டதற்கு பதிலாக ஆரம்பத்திலிருந்தே யோகா செய்திருந்தால் என் இதயம் பத்திரமாக இருந்திருக்கும்.  யோகாவின் பலன்கள் எனக்கு மிக நன்றாகத் தெரியும்.  பதஞ்சலியின் யோக சூத்ரா படித்தவன் நான்.  ஆனால் ஐம்பது ஆண்டுகளாக எனக்கு சரியான குரு கிடைக்கவில்லை.  காரணம், நான் தேடவில்லை.  வேறு எந்தக் காரணமும் இல்லை. 

மேலும், நான் ஒரு சிறைச்சாலையின் அறை போன்ற சூழலில் நாள் முழுவதும் எழுதிக் கொண்டோ படித்துக் கொண்டோ இருப்பவன்.  எனக்கு ஒரு மணி நேரமாவது வெளியே போய் வந்தால்தான் இதமாக இருக்கும்.  அதனால்தான் காலையில் நடைப் பயிற்சிக்காக வெளியே செல்ல ஆரம்பித்தேன்.  யோகா என்றால் அறையிலேயே முடிந்து விடும்.  இன்னொன்று, ஏற்கனவே சொன்னபடி குரு அமையவில்லை. 

அவந்திகா சென்னையின் பிரபலமான யோகா மையத்தில் கற்றுக் கொண்டாள்.  அவள் செய்வதையெல்லாம் பார்த்தால் யோகா பக்கமே போக வேண்டாம் என்று தோன்றி விட்டது.  அவ்வளவு கடினமாக இருந்தன.  மல்லாந்து படுத்து இரண்டு கால்களையும்  மேலே தூக்கி பாதத்தினால் தரையைத் தொட வேண்டும்.  அது ஒரு ஆசனம்.  பெயர் மறந்து விட்டேன்.  எடுத்த எடுப்பில் தரையைத் தொட்டால் முதுகு பேர்ந்து விடும் என்று தெரியும் ஆதலால் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தேன்.  கொஞ்சம் கொஞ்சமாக முயற்சித்தும் கடைசியில் இடுப்பு வலி வந்ததுதான் மிச்சம்.  இந்த ஆசனத்தை நான் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், தொப்பையைப் போக்க வேண்டும் என்பது.  கடைசியில் தொப்பையில் ஒரு மாற்றமும் இல்லாமல் இடுப்பு வலி வந்து விட்டதால் யோகாவே இனி வேண்டாம் என்று ஓடியே வந்து விட்டேன்.  இப்படித்தான் யோகாவின் பக்கம் பார்வை கொள்ளும் நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேர் ஓடி விடுகிறார்கள்.  இடுப்பை வளைத்துப் பழக்கமே இல்லாததால் ஒரே நாளில் ஓட்டமெடுக்கும்படியான நிலை ஏற்பட்டு விடுகிறது.  நல்ல யோகா குருவிடம் கற்றுக் கொண்டால் இந்த நிலை ஏற்படாது.  இதில் சந்தேகமே இல்லை.

ஆனால் நல்ல குருவை எங்கே போய்ப் பிடிப்பது என்று விட்டு விட்டேன்.

சமீபத்தில் ஜெயமோகனின் ப்ளாகில் சௌந்தர் பற்றிய குறிப்பைப் படித்து, அவரும் ஒரு இலக்கிய வாசகர் என்று அறிந்து அவரைத் தொடர்பு கொண்டேன்.  ஆஹா, உங்களுக்குக் கற்பிப்பதில் எனக்குப் பெரும் ஆனந்தம் என்றார்.  எனக்கும் கடைசி கடைசியில் ஒரு குருவைக் கண்டு பிடித்து விட்டோம் என்ற உள்ளுணர்வு ஏற்பட்டது.  எல்லாம் ஒத்து வர வேண்டும்.  இதுவே அவர் கோயம்பத்தூர் என்றால் அவரை நான் சந்திக்க வாய்ப்பே இருந்திராது.  நம் வட பழனி.  என் சாந்தோமிலிருந்து பதினைந்து நிமிடம். 

இன்று காலை சென்றேன். 

நாற்பத்தைந்து நிமிடம்.  வெகு எளிமையான ஆசனப் பயிற்சிகள்.  அதைச் செய்த பிறகுதான் என் உடல் இதுவரை எத்தனை வலியுடன் இருந்திருக்கிறது என்பதே எனக்குப் புரிந்தது.  நாற்பத்தைந்து நிமிடத்தில் என் உடல் லேசானதை உணர்ந்தேன்.  வலி என்னிடமிருந்து அகன்று விட்டதை உணர்ந்தேன்.  அதுவரை என் உடம்பில், என் முதுகில் வலி இருந்திருக்கிறது என்பதே எனக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது.  வலி அகன்று, உடம்பு லேசான பிறகுதான் பழைய நிலை பற்றிப் புரிந்தது.

பத்து நாள் தொடர்ந்து செய்து விட்டு அடுத்த கட்ட பயிற்சிகளுக்கு வரச் சொன்னார்.  இனி வாழ்நாள் முழுவதும் யோகாவைத் தொடர்ந்து செய்வேன்.  கடந்த இருபது ஆண்டுகளாக நான் தியானம் செய்யாத நாள் என்று எதுவும் இல்லை.  இனி சௌந்தர் கற்பித்த யோகாவும் அதேபோல் என்னுடன் தங்கும். 

சௌந்தர் ரிஷிகேசத்தில் உள்ள சிவானந்த ஆசிரமத்தில் யோகம் கற்றவர்.  அதன் பிறகும் பல யோகிகளிடமிருந்து உயர்நிலை யோக முறைகளைக் கற்றவர்.  அவரைப் பற்றிய அறிமுகத்தை இந்தச் சுட்டியில் காணலாம்.  சௌந்தரின் தொடர்பு எண்: 99529 65505

சௌந்தரிடமிருந்து யோகா கற்றுப் பயன் பெறுங்கள்.  ஆனால் இதனாலெல்லாம் யாரும் மசிய மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.  இருபத்திரண்டு வயதில் பதஞ்சலியின் யோக சூத்ராவைப் படித்த எனக்கே எழுபது வயதில்தான் புத்தி வந்திருக்கிறது என்கிற போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.  ஏனென்றால், பஸ் ஸ்டாண்டில் நின்று ஏ பாவிகளே பாவிகளே என்று அழைத்து நல்ல பளபளா தாளில் அச்சடிக்கப்பட்ட சிறு சிறு புத்தகங்களை இலவசமாக விநியோகிக்கும் மத போதகரைப் போல் நானும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நின்று கொண்டு யோகா கற்றுக் கொள்ளுங்கள் யோகா கற்றுக் கொள்ளுங்கள் என்று நா வரள கத்தியிருக்கிறேன்.  ஒருத்தர் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.  ஏனென்றால், நம்மை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் யோகாவை மதிக்கவில்லை.  வெள்ளைக்காரனே மதிக்காத ஒரு விஷயம் நமக்கு எதற்கு?  புல்ஷிட்.  நமக்கு நடைப் பயிற்சியே போதும்.  அறுபது வயதில் ஸ்டெண்ட் வைத்துக் கொள்ளலாம்.  மூன்று லட்சம் ஆகும்.  அதையும் இன்ஷூரன்ஸ்காரன் கொடுத்து விடுவான்.  நம் கைக்காசு நட்டமில்லை.  இதுதான் இந்தியர்களின் மனோபாவம்.  அல்லாமல் யோகா பற்றிப் பேசினால் இந்துத்துவா முத்திரை குத்தி விடுவார்கள்.  நான் அறிந்ததைச் சொல்கிறேன்.  யோகாவுக்கும் மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  பகுத்தறிவுவாதிகளும், கம்யூனிஸ்டுகளும், செக்யூலரிஸ்டுகளும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இதைக் கற்றுக் கொள்ளலாம். 

சிறைச்சாலை அறையிலிருந்து எழுதுகிறேன் என்று சொன்னேனே, பிறகு எந்த நேரத்தில் யோகா செய்வேன் என்று கேட்டால் என் பதில்.  நான் நான்கு மணிக்கு எழுந்து கொள்பவன்.  ஐந்திலிருந்து ஆறு வரை யோகா செய்து விட்டு நடைப் பயிற்சிக்கு ஓடி விட வேண்டியதுதான்…    

http://www.satyamtraditionalyoga.com