பராரி


1

காந்தியைக் கண்டதில்லை
ஞானிகளின் முகமறியேன்
சூஃபிகளின் சொல்லறியேன்
அதிசயங்கள் பற்றிப் படித்ததோடு
சரி

மனையாள் சொன்னாள்:
“ஒரு ஞானியைக் கண்டேன்
எல்லோரையும் கட்டியணைத்தார்
கட்டியணைத்தவரெல்லாம்
மயங்கி விழுந்தார்”
என்னையும் கட்டிணைத்தார்
மயக்கமில்லை
அவர் அடித்திருந்த Brut
நறுமணம் மட்டும் மனதில்
தங்கியது

‘நீவிர் அடிக்கடி
தொலைக்காட்சியில் தோன்றுவீர்’
என்றார் ஆசி வழங்கும் வேளையில்
இன்று அவர்
பணமோசடியில் கம்பி எண்ணுகிறார்
அதிசயங்களில் என் அனுபவம்
இத்தோடு முடிந்தது

ஆனாலும் எனக்கு அதிசயங்கள் மீதான
ஆர்வம் குறையவில்லை
ததாகதர் முதல் ரமணர் வரை

2

சத்திய லோகத்தில்தான் அதிசயங்கள்
உண்டு என்றொரு நாள்
கனவு கண்டு
சத்திய லோகம் புறப்பட்டேன்

நம்ப முடியாததொரு பாழ்வெளி
செவிகள் கிழிபடும் மௌனம்
பஞ்சத்தில் மாண்ட
எலும்புக்கூடுகளின் குவியல்
உயிர் பிழைத்திருந்தோர்
முனகியதைக் கேட்டால்
தண்ணீர் தண்ணீரென்று
காதில் விழுந்தது

வாட்டர் பாட்டிலைத் தேடினேன்
மனையாள் நினைவு வந்தது
‘சத்திய லோகத்தில்
தேனாறும் பாலாறும் ஓடாதா?
பாட்டில் எதற்கு?’

அவள் பேச்சைக் கேட்டது தவறு
தவித்த வாய்க்குத் தண்ணீர் இல்லை

3

நாய் பாஷை பூனை பாஷை
எனக்குத் தெரியும்
வழியில் இரு ஆண் நாய்கள்
எலும்பும் தோலுமாய்

‘நாம் ஏன் பிறந்தோம்?
நமக்கு ஏன் இப்படி?’
ஒரு நாய் முனகியது
‘அதுதான் தெரியவில்லை,
நாம் ஏன் பிறந்தோம்?
நமக்கு ஏன் இப்படி?’
இன்னொரு நாய் அரற்றியது

எந்நாளும் எவர்க்கும் உணவு
உண்டாக இறைவனிடம் தயை கேட்ட
மூத்தோனின் வாக்கும்
பலிக்கவில்லை

மொழியால் பயனுமில்லை
உணர்வைக் கடத்தவோர்
உபாயம் வேண்டும்
எனக்கோ
மொழி தவிர வேறொன்றும் தெரியாது
நாய்களின் வாதையைச்
சொல்ல வார்த்தையன்றி
வேறேதும் அறியேன் நான்
நாய்களின் பசியாற்ற
முடியாதெனில் இந்தப் பிரபஞ்சம்
தெறித்து வீழட்டுமென
அறம் பாடிவிட்டு
அப்பால் நகர்ந்தேன்

4

அவரைப் பார்த்தது போலிருந்தது
எப்போதும் பார்த்த முகம்
ஆனாலும் முள்கிரீடம் இல்லை
நீண்ட அங்கி இல்லை
ஒளிவட்டமும் இல்லை

ஏதோவொரு பராரியைப் போல்
அமர்ந்திருந்தார்
தனக்குள் பேசினார்
அராமிக் இல்லை
மானுட மொழியுமில்லை
ஏதோ ஒரு ஒலிச்சேர்க்கை

பிதாவே, ஏன் என்னைக் கைவிட்டீரெனக்
கதறிய தீர்க்கதரிசி நீர்தானே
எனக் கேட்டேன்

ஆமென்று தலையசைத்தார்

இப்போது புரிகிறதா
என்றேன்

உமக்குப் புரியவில்லை
பிதா என்னைச் சிலுவையில் கைவிட்டாலும்
மூன்றாம் நாள் உயிர்ப்பித்தார்
அதுவே பரலோகத்தின் சாட்சி
யென்றார்

பாழ்வெளியைக் காட்டி
இதுவா எனக் கேட்டேன்

கொலைக்கருவி
தியாகத்தின் குறியீடாக மாறியதா
இல்லையா என்றார்

பேசிப் பயனில்லையென
நகர்ந்தேன்

5

சத்திய லோகத்தில் காந்தி
இல்லாமலா?
ஒரு மூலையில் அமர்ந்து
பகவத் கீதையை நோட்டுப்
புத்தகத்தில் எழுதிக்கொண்டிருந்தார்
பக்கத்தில் ஏழெட்டு காந்தி குல்லாய்
எல்லாம் நான் தைத்தது என்றார்

அவரிடம் அதிகம் பேச்சு
வைத்துக்கொள்ளாமல்
சத்திய லோகத்திலிருந்து
பொய்களின் நிலத்துக்குக் கிளம்பினேன்

6

சொர்க்கமெனத் தோன்றியது
அந்நிலம்
அரண்மனைகள்
தோட்டங்கள்
சிங்கம் புலி
யானையெல்லாம்
செல்லப் பிராணிகள்

பெண்களின் ஆடைகள் –
முலைக்காம்பில் ஸ்டிக்கர் பொட்டுகள்
பளபளக்கும் வண்ணங்களில்
இடுப்பில் மெல்லிய நூல்
நடுவே யோனிப்பிளவை மறைக்கவொரு
ஒரு நூல்
கால்கள் விரியும்போது
நூல் பிளவில் மறையும்

விமர்சிக்கும் ஆண்களுக்கு
வன்கலவிக் குற்றம்
வாதாடுவோர்
சிறுமிகளை வன்கலவி செய்து
கொன்றவர்கள்

கலப்பட மருந்து
மனைவியை எரித்தவர்
மாஃபியாக்கள்
கோடிகளில் கொள்ளையடித்தோர்
கார்ப்பொரேட் சாமியார்
அலங்காரமாயிருந்தது அந்த நிலம்

7

விதவிதமாய் பப்கள்
தாந்த்ரிக் என்ற பப்பில் நுழைந்தேன்
அங்கேவொரு சாமியார் அம்மண
அழகியரோடு சால்ஸா ஆடிக்கொண்டிருந்தார்
சால்ஸாப் பிரியனான நானும் கலக்க
முனைந்தேன்
பௌன்ஸர் பலர் என்னைத் தாக்க
துண்டைக் காணோம் துணியைக்
காணோமென
ஓடினேன்

வெளியே இறைந்து கிடந்த
ஸ்டிக்கர்கள் சிலவற்றைப்
பொறுக்கியெடுத்துக்
கொண்டேன்
ஞாபகார்த்தமாக இருக்கட்டுமென…