பொதுவாக எனக்குப் பணம் அனுப்புபவர்களின் பெயரை நான் வெளியிடுவது இல்லை. அது சம்பந்தப்பட்டவர்களுக்கு இடைஞ்சலைத் தருகிறது என்பதால். ஆனால் என் அன்புக்குரிய நண்பர் நேசராஜ் செல்வத்தின் (கிருஷ்ணகிரி) இந்தக் குரல் செய்தியை அப்படியே உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், நான் உண்மையிலேயே சொல்கிறேன், த அவ்ட்ஸைடர் தொடர் அளவுக்கு உணர்வுபூர்வமாக நான் வேறு எதையுமே எழுதியதில்லை. ஸீரோ டிகிரி மட்டுமே விதிவிலக்கு. ஆக, அவ்ட்ஸைடரை யாரும் படிக்கிறார்களா, அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்கிறார்களா என்று ஒவ்வொரு எழுத்தைத் தட்டச்சு செய்யும்போதும் நினைத்துக் கொள்வேன். இனி அப்படி நினைக்க மாட்டேன். நேசராஜ் செல்வத்தின் குரல் செய்தி போதும்.
நேசராஜ், விஷ்ணுபுரம் விழாவுக்கு வருவீர்கள் என்று நம்புகிறேன். வர வேண்டும் என்று அழைக்கிறேன். இந்த 5000 ரூ. அதற்குத் தேவைப்படும் எனில் அனுப்ப வேண்டாம். இல்லாவிட்டால் அனுப்பலாம். இரண்டு பேர் கோவை வர வேண்டும், தங்க வேண்டும், செலவாகும் இல்லையா?
நாம் ஒன்றாகப் பணியாற்றிய நாட்கள். உங்களுடைய சிரித்த முகம். நம்முடைய டார்ச்சர் சேம்பர் அலுவலகத்தில் நீங்கள் எப்படித்தான் எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருந்தீர்களோ? ஒரு விஷயம், ராகவனிடம் (மெயில் செக்ஷன்) நான் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன். யோவ், நான் சல்மான் ருஷ்டியை விட பெரிய ஆள் ஐயா, இங்கே நான் மாறுவேஷத்தில் வாழ்கிறேன் என்று. அது இப்போது ஞாபகம் வந்தது.
எக்ஸைல் – புதியவர்கள் பயந்து விடுவார்கள். ராஸ லீலாதான் ஜோர். மிகச் சுலபமாகத் தங்களை அதில் பொருத்திக் கொள்வார்கள்.
உங்கள் வாய்ஸ் மெஸேஜ் எனக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. நன்றியும் அன்பும்.
சாரு