அனுவின் வயது 22. இப்போதுதான் சட்டப்படிப்பு முடித்திருக்கிறார். மாடலிங் செய்கிறார். எதற்கு இத்தனை முஸ்தீபு என்றால் வெள்ளிக்கிழமை இரவு (டிசம்பர் 16) என்னைச் சந்திப்பதற்காகவே தன் தமையன் சேகரனோடு வட சித்தூர் வந்து நள்ளிரவு இரண்டு மணி வரை பண்ணை வீட்டில் நடந்த ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத் தொடக்க விழா மற்றும் அராத்துவின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.
அன்றைய தினம் நான் களைப்பாக இருந்தேன். அருஞ்சொல் பேட்டியில் மும்முரமாக இருந்ததால் நான் ஒரு வாரமாக சரியாக உறங்கியிருக்கவில்லை. அதோடு பத்து மணிக்கு மேல் என்றால் உறக்கத்தில் சாமியாட ஆரம்பித்து விடுவேன். இது எல்லாவற்றோடும் சேர்த்து அன்றைய தினம் கடும் குளிர். குளிரில் எனக்கு உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்க ஆரம்பித்து விட்டது. அம்மாதிரி தருணங்களில் ராஜா வெங்கடேஷ் எப்போதும் கை கொடுப்பார். அவருடைய ஜெர்க்கினை அணிந்த பிறகுதான் கொஞ்சம் நிதானமானேன். அப்புறம் ஒரு கிளாஸ் சீலே வைன் அருந்திய பிறகு நிதானம் கூடியது.
அன்றைய தினம் நான் பேசிய பேச்சு எப்போது யூட்யூபில் வரும் என்று தெரியவில்லை. எனக்குப் பேச வராது என்று ஒரு பொது நம்பிக்கை. நேரம் பற்றிய ஒரு எண்ணத்தை என்னிடம் விதைத்து விட்டீர்களானால் என்னால் சரியாகப் பேச முடியாது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் என்றால் அதகளம்தான். அன்றைய தினம், அராத்துவின் புத்தகம் பற்றி, தூக்கக் கலக்கத்தோடு, பசியோடு, குளிரோடு பேசினேன். ஆனால் அந்தப் பேச்சு என் சிறந்த பேச்சுகளில் ஒன்றாக அமைந்தது. பேசி முடிக்கும் போது ஒரு மணி இருக்குமா? அப்புறம் இசை. நடனம். ஜார்ஜ் மைக்கேலின் கேர்லஸ் விஸ்ப்பருக்கு நான் ஒரு நடனம் ஆடினேன். என் பின்னே ஆடுபவர் கணேஷ் அன்பு. கடைசிக் காட்சியில் கண் அடிப்பவர் அனுவின் அண்ணன் சேகரன். ஏன் இத்தனை அனு என்றால், அன்றைய நடனத்தைத் தன் கைபேசியில் படம் எடுத்தவர் அனு. நம் ஆட்கள் யாரும் எடுக்கவில்லை போல.
ஏன் நீங்கள் என்னோடு வந்து ஆடியிருக்கலாமே என்று அனுவைக் கேட்டேன். நீங்கள் அழைக்கவில்லையே என்றார். உங்களோடு ஆட முடியாத ஏமாற்றத்தையும் சோகத்தையும் நிவர்த்தி செய்து கொள்வதற்காகவே உங்கள் நடனத்தை அனுபவித்து அனுபவித்து விடியோ எடுத்தேன் என்றார்.
எனக்கு விஜய் ஆடுவது பிடிக்கும். ஆனால் அவர் அப்படி ஆடுவதற்கு இந்தியாவின் முக்கிமான நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் கடுமையான பயிற்சிகளைத் தருகிறார். தன்னுடைய ஒவ்வொரு அசைவுக்கும் விஜய் ஒரு மணி நேரம் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அசைவும் விஜயின் கற்பனை அல்ல. ஜானி மாஸ்டரின் மூளை.
எனக்கோ காற்றும் என் உடலும் மனமும்தான் கையிருப்பு. அனு போன்ற இளம் பொடுசுகள்.
ஸோர்பா எனும் கிரேக்கன் நாவல் படித்திருக்கிறீர்களா? நிக்கோஸ் கஸான்ஸாக்கிஸ் எழுதியது. இன்றைய இந்தியாவின் வாழும் ஸோர்பா நான் ஒருவன்தான். ஹிந்தி சினிமாவில் ஒன்றிரண்டு பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நூறு கோடி சம்பளம் வாங்குகிறவர்கள். ஆனால் நான் இணையதளத்தில் எழுதி சந்தா கொடுங்கள் என்று துண்டு விரிப்பவன். நான்தான் நிஜமான ஸோர்பா. கோடிகளால் உருவான ஸோர்பா அல்ல. கொண்டாட்டத்தினால் மட்டுமே உருவான ஸோர்பா. எனக்கும் கிரேக்க ஸோர்பாவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவன் படிக்காதவன், நான் படித்தவன்.
சொல் பெண்ணே, எது மகிழ்ச்சி என்று அனுவிடம் கேட்டேன். அவர் சொன்னார். உங்கள் எழுத்து இல்லையேல் இப்போதைய அனு இல்லை. என் உயிரை மீட்டெடுத்தது உங்கள் எழுத்து. சேகரனின் பதிலும் அதுவாகவே இருந்தது.
சென்ற பிறந்த நாள் அன்று, “என் ஆயுளில் பாதியைத் தருகிறேன்” என்றார் 25 வயது ஸ்ரீ. இந்த பிறந்த நாளில் என் உயிரையே கொடுத்தது உங்கள் எழுத்து என்கிறார்கள் 22 வயது அனுவும் 24 வயது சேகரனும்.
அடுத்த ஆண்டு பதின்பருவ வாசகிகள் வருவார்கள் போல. அதற்குள் இந்தியாவிலிருந்து தப்பி விட வேண்டும் இந்த ஸோர்பா.