நிறமேறும் வண்ணங்கள் – அராத்து – சிறுகதை தொகுப்பு இலக்கிலாக்கதைகள்


வெறும் ஓர் அதிர்ச்சி விளைவுக்காக அல்லது மரபுகாப்பதற்காக இழவுகூட்டும் இற்றைத் தமிழ் எழுத்தாளர்களைக் கிண்டலடிக்குமொரு நகை-இயல்பின் எழுத்துக்கலை வாரணர் அராத்து.

எனது இந்தத் தமிழ்நடை உங்களை எரிச்சலுறுத்தகூடும். என்ன செய்ய, சின்ன வயதிலேயே இப்படிக் கார்வைபட்டுப்போன என் தனித்தமிழ் மூளை, மாற்றி யோசிக்கவும் மக்கர் பண்ணுகிறது!

மாறாக,

//தெருவில் தூறல் விடவில்லை. ஆனாலும் தூறலை யாரும் மதிக்கவில்லை. தெருவில் ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் டி ஷர்ட்டை கீழே இறக்கி, போதையேறிய யாரோ ஒருவன் அவளின் முலையை முத்தமிட்டான். அந்தச் செய்கையின் ஏதோ ஒரு கணத்தில் காமம் இல்லாததைக் கண்டுகொண்ட, அல்லது காமம் இல்லாததைக் கண்டுகொண்டது போல நினைத்துக்கொண்ட அந்தப் பெண் அவனைத் தாய்போல அரவணைத்தாள். அந்தப் பெண்ணின் பாய் ஃபிரண்ட் மூத்திரம் தாங்க முடியாமல், அதற்கு ஓரிரு வினாடிகள் முன்புதான், ரெஸ்ட் ரூம் தேடிப்போய் வரிசையில் நின்றுகொண்டு இருந்தான்.//

இது அராத்தின் மொழிநடை. ‘டி ஷர்ட்’, ‘பாய் ஃபிரண்ட்’, ‘ரெஸ்ட் ரூம்’ முதலிய ஆங்கிலச்சொற்கள் விரவி வருவதைக் கவனியுங்கள்! நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கு உரை எழுதிய தெய்வத்திரு.பெரியவாச்சான்பிள்ளை யவர்களின் மணிப்பிரவாள நடை போன்றவற்றால் விலகி தமிழ்வழக்கு தொலையாமல் இருக்கவே, தனித்தமிழ் வளர்த்தோம், ஆனால் அதுவும் விளங்காமற் போனால்…!?

ஆங்காங்கே ஆங்கிலம் விரவிய இத் தரத்த அராத்தின் தமிழ்நடை, தவிர்க்கப்பட வேண்டியதொன்றும் ஆகாது. சொல்லப்படுவதின் துல்லியத்தைக் கடத்த, தேவையெனில், பிறமொழிச் சொற்களையும் பிரயோகிக்கலாம் என்று கவிஞர் பிரமிள் போதித்திருக்கிறார்.

சரி, ஆனால் இப்படியே ஆங்கிலம் கலந்துகலந்து காலப்போக்கில் தமிழினிச்சாகும் நிலைமை வந்துபடாதோ?

படாது. காரணம், கெட்டபேச்சு. வடமொழி வழக்கொழிந்து போனதற்கு அம்மொழியில் கெட்டபேச்சு இல்லாததே காரணம் என்கிறார்கள். அதாவது மக்கள்மொழி இல்லாதது.

“சூம்பி” கதையில், ‘அந்த’ மொழி என்னமாய் விளையாடுகிறது பாருங்கள்! வீம்பை விலைகொடுத்து வாங்குகிற நடப்பும் பிறகு ஊ*பியாவது பிரச்சனையைத் தவிர்க்கப் படுகிறபாடும் கதையாகி யிருக்கிறது.

“சூம்பி” கதையில் ஒரு நண்பன் வருகிறான்: ஒடப்பு. “வனயோனா”, “டன் டன் டன்டனக்கர”, “ஜோஹோர் பாஹ்ரு”, “கடவுள் @ காவோ சான் ரோட்” ஆகிய கதைகளிலும் நண்பர்கள் வருகிறார்கள். அராத்து எடுத்துவிரிக்கிற கதைவெளிகளின் ஒவ்வாச்சுருதி (absurdity) வெளிப்பட உதவுகிற பாத்திரங்கள் அவர்கள்.

பொறாமைகொண்டு சண்டையிழுத்து வெளியேறும் ஒடப்பு, முற்றிலும் வெளியேறாமல், கதைவிளிம்பில் காத்திருக்கிறான். இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. கதைமுடிவில் காலொடிந்த சூம்பியைத் தூக்கிக்கொண்டு போக அவனும் ஒருகை உதவுகிறான். இதற்குள் இயங்கும் சாரச் சார்தரு மனிதம் முக்கியமானது.

“ஜோஹோர் பாஹ்ரு” காட்டும் இரக்கமின்மையாய், “முதல் அலை” ஏனோதானோவாய், “மயிர்க்கூச்செறிதல்” நிகர்நிலைக் கோட்டித்தனமாய், “பனிநிலா” சில்லிடத் தரும் தற்சிறையில் முதிர்வதாய், “நிறமேறும் வர்ணங்கள்” கலங்க அடிக்கும் பாலின வன்முறையாய்…

நிலவுகிறது.

இதற்கிடையில்தான், “சூம்பி” கதையில், ‘சகாயம் பண்ணினவனைச் சாய்த்துவைத்து ஓத்தாலும் ஒடப்பு அளவுக்காவது ஒட்டுதல்’ புலர்த்துவதும்; “டன் டன் டன்டனக்கா” கதையில், ‘தனக்குனா ரத்தம்; அடுத்தவனுக்குனா தக்காளிச் சாஸ் நிலைபாடு ஊடாக, இடுக்கண் வருங்கால் நகுக!’ உணர்த்துவதும், “கடவுள் @ காவோ சான் ரோட்” கதையில், ‘நம்மண்மை முற்றும் யோக்கியம்; மற்றமை அரிதாயினும் அயோக்கியம் எனும் கோணம் உதறி, நினைவில் நிலைக்காத விஷயங்களில் ஈடுபடல் தவறில்லை,’ என்று ஆற்றுப்படுத்துவதும்…

நேர்கின்றன.

அராத்து கதைகள், வியக்கத்தக்க வகையில், இந்த அகந்தை, உயர்ச்சிதாழ்ச்சி, போட்டிபொறாமை நிலவரங்களில் இருந்து விலகி, அன்பு அக்கறை நாடுவனவாக இருக்கின்றன.

இந்த முலைத்தாய்மை, அந்தக் கதையில், கடவுள் உருவாகிச் செயலில் இறங்கப்போகும் தருணத்துக்குச் சற்று முந்தி இடம்பெறுகிறது. தியானித்தாலும் தவமிருந்தாலும் பெறமுடியுமோ, கடவுளியல்பின் இன்ன தரிசனங்கள்!

எடுப்பு தொடுப்பு முடிப்பு எனக் கட்டுக்கோப்பு வகுத்து எழுதப்பட்டவை அல்ல, அராத்தின் கதைகள். அதுபாட்டுக்கு நிகழ்ந்து விலகுவன. இதுகாரணம் இலக்கு அற்றவை – இலக்கியம் ஆகாதவை – போன்றொரு தோற்றம் தருபவை. தோற்றம்தான் அப்படி; மற்றபடி, அம்முற்றும் அலட்சியப்படுத்த முடியாத அவதானிப்புகள்!

• ராஜசுந்தரராஜன்

அமேஸானில் கிடைக்கிறது. புத்தக விழாவிலும் ஸீரோ டிகிரி அரங்கில் கிடைக்கிறது. எஃப் 19