இன்று மாலை மூன்றரை மணிக்கு புத்தக விழாவின் வெளியே ஞானாம்பிகா உணவகத்துக்கு எதிரே உள்ள ஊறுகாய்க் கடைக்கு வருவேன். நான் ஒரு ஊறுகாய் அடிக்ட். இதை வைத்துக் கொண்டு எல்லோரும் ஊறுகாய் சாப்பிட ஆரம்பித்தீர்கள் என்றால் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் பெருகி விடும். என் வாழ்க்கை முறை எதுவும் மற்றவர்கள் பின்பற்றுவதற்கானதல்ல. நான் ஒன்றரை மணி நேரம் யோகாவும் ஒரு மணி நேரம் நடைப் பயிற்சியும் செய்கிறேன். அம்மாதிரி ஆள் ஊறுகாய் சாப்பிடலாம். இதுவரை வாழ்நாளில் இன்று வரை நான் எந்த விதமான உணவுக் கட்டுப்பாடுகளும் வைத்துக் கொண்டதே இல்லை. எண்ணெய் வடியும் பஜ்ஜியா சரி, கொடுங்கள். ஜிலேபியா கொடுங்கள். ஹல்வாவா கொடுங்கள். எல்லாம் உண்டு. ஆனாலும் ஏன் வியாதியிலிருந்து தூரத்தில் இருக்கிறேன் என்றால், நான் இதுவரை நொறுக்குத் தீனியே தின்றதில்லை. முறுக்கு, சீடை, அதிரசம், தட்டை, ஹல்வா, தம்ரூட் எல்லாம் சாப்பிடுவேன். ஆனால் அதற்கு அடுத்த வேளை உணவு எடுத்துக் கொள்ள மாட்டேன். பலகாரம் சாப்பிட்டாயிற்று அல்லவா, அத்தோடு சரி. காலையில் ஒரு முறுக்கு சாப்பிட்டேன் என்றால், இட்லியில் இரண்டைக் குறைத்து விடுவேன். பொதுவாக இரைப்பையை நான் டார்ச்சர் செய்வதில்லை. அதேபோல் நாக்கையும் வாட விடுவதில்லை.
எனக்குத் தென்னிந்திய ஊறுகாய்களை விட வட இந்திய ஊறுகாய் என்றால் அதிக இஷ்டம். ஒரு நாலைந்து ஊறுகாய்களை வாங்க வேண்டும். ஆனால் ஃப்ர்ட்ஜில் வைக்க விட மாட்டாள் பத்தினி. அவளால் ஊறுகாய் சாப்பிட முடியாது என்பதால் வந்த ஒரு மனிதாபிமானம். மேல் அடுக்கில் வசிக்கும் கார்த்திக்கின் ஃப்ரிட்ஜில்தான் கொண்டு போய் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஊறுகாயை யாரேனும் ஸ்பான்ஸர் செய்தால் மகிழ்வேன். ஏன் இத்தனை கஞ்சப் பிசுநாறியாகி விட்டேன் என்றால், மார்ச் முதல் அல்லது இரண்டாம் வாரம் சீலே கிளம்ப வேண்டும். இறை சித்தம். கையிலிருந்த பணம் எல்லாம் ஆவணப் படத்துக்குப் போய் விட்ட்து. இருபத்தைந்து லட்சம். ஒரு நண்பர் ஐந்து லட்சம் கொடுத்தார். இப்படியாக ஒரு பத்துப் பன்னிரண்டு லட்சம் நண்பர்களிடமிருந்து வந்திருக்கும். நான் ஒரு பதினைந்து லட்சம். அதனால்தான் இப்போது பைசா பைசாவாக கணக்குப் பார்க்கிறேன். இன்று ஊறுகாய்க் கடைக்கு வர இயலாதவர்கள் ஊறுகாயை மட்டும் ஸ்பான்ஸர் செய்வதாக இருந்தால் பணமாக அனுப்பி விடுங்கள். உங்கள் பெயரைச் சொல்லி ஊறுகாயைத் தொட்டுக் கொள்கிறேன். பிரண்டை ஊறுகாயெல்லாம் இருப்பதாக அறிந்தேன். இப்போதே நாக்கில் ஜலம் ஊறுகிறது.
நான் விதவிதமான ஊறுகாய்களைச் சாப்பிடுவேன். பூண்டு ஊறுகாய், கேரட் ஊறுகாய், கருவாட்டு ஊறுகாய் (மலேஷியா), இறால் ஊறுகாய், வெங்காய ஊறுகாய், பச்சை மிளகாய் ஊறுகாய் என்று நூற்றுக்கணக்கான ஊறுகாய்கள் உண்டு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்யங்கம் என்ற விஷயம் வாழ்வில் இல்லாமல் போய் விட்ட்து போலவே ஊறுகாயும் உணவில் இடம் பெறாமல் போய் விட்ட்து. ஹார்ட் அட்டாக்தான் காரணம். ஏதேதோ கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் என்றெல்லாம் சொல்லி அலோபதி மருத்துவர்கள் பயம் காட்டி ஊறுகாயைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டி விட்டார்கள். சரி, ஊறுகாய் சாப்பிடாமால் ஹார்ட் அட்டாக்கைக் குறைத்திருக்கிறார்களா என்றால் இல்லை. இந்த ஊறுகாய் விஷயத்தில் நான் அலோபதி மருத்துவர்களின் பேச்சைக் கேட்பதில்லை. பாவம் பிராமணர்கள், பாவம் தமிழர்கள்.
ஆனாலும் ஊறுகாய் என்ற உணவு வகை முற்றாக அழிந்து விடாமல் டாஸ்மாக்குகள் காப்பாற்றுகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் சாராயக் கடைகளில் பார்த்த அதே ரவீஸ் ஊறுகாய் இன்னமும் டாஸ்மாக்கில் கிடைக்கிறது. ஒரு பாக்கெட் ரெண்டு ரூபாய்.
இந்தப் பதிவில் அப்யங்கம் என்ற ஒரு வார்த்தை உள்ளது. அர்த்தம் எண்ணெய்க் குளியல். நான் தினமும் அப்யங்கம் செய்து கொள்கிறேன். ஆம், தினமும். தலைக்கு அல்ல. தலைக்குப் போட்டால் எனக்கு ஒத்துக் கொள்வதில்லை. அதனால் உடம்புக்கு மட்டும். அந்த எண்ணெயில் நாற்பது வகை மூலிகைகள் கலந்துள்ளன.
பின்குறிப்பு: வழக்கம்போல் நாலரையிலிருந்து ஒன்பது வரை ஸீரோ டிகிரி அரங்கு எஃப் 19இல் இருப்பேன்.