இப்போது எழுதப் போகும் விஷயம் பற்றி சுமார் ஐம்பது கட்டுரைகள் எழுதியிருப்பேன். இப்போதும் எழுதுகிறேன். இன்னமும் என் உயிர் உள்ள வரை எழுதுவேன்.
எனக்குக் கிடைக்கும் ராயல்டி 1,90,000 ரூ. மாதமாக வகுத்தால் 16000. தெருவில் இஸ்திரி போடும் தொழிலாளியின் ஊதியம் 25000. அதை விட என் ஊதியம் கம்மி. என் புதிய நாவல் வெளிவந்தால் ஐந்து நாளில் 500 பிரதி விற்கும் ஒரு எழுத்தாளனின் வருமானம் இப்படி என்றால், மற்றவர்களின் நிலையை நான் எழுத வேண்டியதில்லை. ஒரு ஆண்டில் 200 பிரதி விற்கும். 200 ரூ விலை. இதற்கு அந்த எழுத்தாளருக்குக் கிடைக்கும் ராயல்டி தொகை 4000 ரூ. ஒரு பிச்சைக்காரனின் வருமானத்தை விட குறைவு. பிச்சைக்காரர்களுக்கு தினமும் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் வருகிறது.
தமிழ் எழுத்தாளர்களின் நிலையை நான் அடிக்கடி நான் கடவுள் படத்தில் வரும் பிச்சைக்காரக் கூட்ட்த்தோடு ஒப்பிடுவது வழக்கம். ஆனால் எதார்த்தம் அதை விட மோசம். சங்க காலப் புலவர்களிலிருந்து தொடங்கி பாரதி வரை நீடித்து இன்று நவீன இலக்கியவாதிகள் வரை பிச்சைக்கார நிலைதான் தொடர்கிறது.
இதை இந்த 2000 ஆண்டு இலக்கிய வரலாற்றில் முதல் முதலில் சொல்லி, விவாதித்து, அவமானங்களைச் சந்தித்து, இந்த அவல நிலை மாறுவதற்கு அல்லது இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த ஒரே ஆள் நான்தான். ”பாரதி போல், புதுமைப்பித்தனைப் போல், தர்மு சிவராமு போல், கோபி கிருஷ்ணன் போல் நான் பட்டினி கிடந்து சாக முடியாது. நான் உங்களுக்கு ஞானத்தை வழங்குகிறேன். எனக்கு நீங்கள் குரு தட்சணை கொடுங்கள்” என்று தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தேன். அதற்காக ஞாநி என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று எழுதினார். (கடைசியில் அவரே என்னைப் போல் கையேந்த வேண்டி வந்தது விதியின் விளையாட்டு!) ”அந்த எழுத்தாளரைப் போல் வாசகர்களிடம் பணம் கேட்பவன் அல்ல நான்” என்று சாடையாக எழுதினார் பிரபஞ்சன். அவரையும் கடைசிக் காலத்தில் சினிமாக்காரர்கள்தான் காப்பாற்ற வேண்டி வந்தது.
சமூகம்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு எனக்கு வந்தது கோபி கிருஷ்ணனின் இறுதிக் காலத்தை நேரடியாகப் பார்த்த அனுபவம்தான். அவர் நோயிலெல்லாம் படுக்கவில்லை. பார்க்க முப்பத்தைந்து வயது ஆள் மாதிரி ஜம்மென்று இருப்பார். தொடர் சிகரெட். ஆனால் அந்த சிகரெட் சுண்டு விரல் சைஸ் இருக்கும். உலகிலேயே விலை கம்மியான சிகரெட். பீடியை விட சற்றே விலை அதிகம். சிகரெட் குடிப்பதற்குக் கூட காசு இருக்காது. அவர் சொன்னார், சிகரெட்டுக்கும் டீக்கும் மாதம் ஐநூறு கிடைத்தால் போதும், இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகள் நிம்மதியாக உயிர் வாழ முடியும் என்று. அவர் கதைகளை எடுத்துக் கொண்டு பத்திரிகை பத்திரிகையாக அலைந்தேன். அவர் பெயர் யாருக்கும் தெரியாது, உங்கள் கதை இருந்தால் கொடுங்கள் என்றார்கள். சரியாக ஒரே மாதத்தில் இறந்து விட்டார்.
ஔவை ஒரு வாயிற்காப்போனிடம் “எனக்குப் பரிசில் தர மறுத்து விட்டான் உன் மன்னன், அவன் உருப்படுவானா?” என்று சபித்து ஒரு பாடலைப் பாடுகிறாள். சங்கப் புலவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னனிடம் போய் பிச்சை எடுத்திருக்கிறார்கள். 2000 ஆண்டு வரலாற்றில் அது பிச்சை என்று சொன்ன முதல் ஆள் நான்தான். எழுதியவனை தமிழ்ச் சமூகம் கைவிட்டு விட்டதால்தான் புலவன் பிச்சை எடுத்தான். நம் கண் முன்னே பிச்சை எடுத்தவன் பாரதி. பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறான்.
நான் சொல்வது சங்கடமாக இருந்தால் இளைய பாரதி தொகுத்த புதுமைப்பித்தன் கடிதங்களைப் படித்துப் பாருங்கள். பெயர், கண்மணி கமலாவுக்கு… புதுமைப்பித்தன் தன் மனைவி கமலாவுக்கு எழுதிய கடிதங்கள். ஒவ்வொரு கடித்த்திலும் அவன் தன் பட்டினி பற்றி எழுதுகிறான். கமலாவும் பதிலுக்கு நான் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை என்று பதில் எழுதுகிறாள். கண்ணம்மா, உனக்கு ஒரு வாரமாகக் கடிதம் எழுதவில்லையே என்று கோபிக்காதே, நீ பதில் எழுதுவதற்குத் தேவையான ஸ்டாம்ப்பை கவரில் வைத்து அனுப்ப கையில் காசு இல்லை. நேற்றுதான் பணம் கிடைத்தது, இன்று எழுதுகிறேன். நீ பதில் எழுதுவதற்குத் தேவையான ஸ்டாம்ப் இத்துடன் உள்ளது.
பாருங்கள், தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளனின் நிலை!
அதனால்தான் நான் என் வாசகர்களிடம் பணம் அனுப்பச் சொல்லிக் கேட்கத் தொடங்கினேன். அவர்கள் பணத்தில்தான் வாழ்கிறேன். இல்லாவிட்டால் எப்போதோ மேலே போயிருப்பேன்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்கு ஒரு எழுத்தாளனுக்கு எத்தனை தைரியம் வேண்டும்? என்னுடைய வாசகர் வட்டத்தினர் மூன்று முறை நடத்திக் காட்டினார்கள். ஒவ்வொரு முறையும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தார்கள். காமராஜர் அரங்கில் சினிமா நடிகர்கள் மட்டுமே நிகழ்ச்சி நடத்துவார்கள். ஒவ்வொரு முறையும் நான்கு லட்சம் ரூபாய் செலவாயிற்று.
பிறகுதான் யோசித்தேன், இந்த நான்கு லட்சத்தைக் கொண்டு உலகப் பயணம் செய்யலாமே என்று. அதோடு நிறுத்தி விட்டேன்.
கொரோனா காலத்தில் ஸூம் மூலமாக உரையாற்றினேன். அறுபதிலிருந்து நூறு பேர் வரை கலந்து கொண்டார்கள். கட்டண உரை. ஆனால் கட்டணத்தை அவரவரே நிர்ணயம் பண்ணிக் கொள்ளலாம். சிலர் 5000 ரூ அனுப்பினார்கள். பலர் ஐநூறும் சிலர் நூறும் அனுப்பினார்கள். ஒவ்வொரு சந்திப்புக்கும் 80000 இலிருந்து ஒரு லட்சம் வரை சேர்ந்தது.
ஏன் இத்தனை விவரமாக எழுதுகிறேன் என்றால், எழுத்தாளனின் நேரமும் உழைப்பும் ஓசி இல்லை என்று நிறுவுவதற்காக. அதில் நான் வெற்றி அடைந்து விட்டேன். இன்று ஒரு எழுத்தாளனின் உரையைக் கேட்க 500 ரூ. கட்டணம் செலுத்த ஒவ்வொருவரும் தயாராகி விட்டார்கள்.
அதே மாதிரிதான் என் நாவல்களின் முதல் பிரதி விற்பனை. ஒரு லட்சம் ரூபாய் வரை நாவலின் முதல் பிரதி விற்றிருக்கிறது. சமீபத்தில் கூட அன்பு நாவல் அச்சில் வருவதற்கு முன்பே பிடிஎஃப் பதிப்பாக விற்றேன். ஒரு பிரதி பத்தாயிரம் ரூபாய். இருபது பேர் வாங்கினார்கள்.
இதெல்லாம் ஏன்? மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்களைப் போல் பட்டினி கிடந்து சாகக் கூடாது என்றுதான்.
இதையெல்லாம் நான் செய்யாமல் இருந்திருக்கலாம். வாசகர்களிடம் காசு கேட்காமல் இருந்திருக்கலாம். பத்திரிகைகள் ஒழுங்காக சன்மானம் கொடுத்திருந்தால். 75 ரூபாய் அனுப்புவார்கள். இன்றளவும் 20000 ரூ. அனுப்ப வேண்டிய கட்டுரைக்கு 900 ரூ. தான் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். (மீதி நூறு வரிக்காகவாம்!) 200 ஆண்டுகளுக்கு முன் தென்னமெரிக்க நிலக்கரிச் சுரங்கங்களில் நடந்த கொடூரச் சுரண்டலுக்கு இணையானது இந்தச் சுரண்டல்.
இந்த நிலையில்தான் அராத்துவின் நோ டைம் டு ஃபக் என்ற நெடுங்கதை NFT மூலம் வெளியாகியுள்ளது. இந்தக் கதையின் விலை 25000 ரூ. ஒரே ஒரு பிரதிதான் விற்பனைக்கு இருக்கும். அதை ஒரு அன்பர் வாங்கியிருக்கிறார். யாரும் வாங்க மாட்டார்கள் என்று சொன்னேன். என் யூகம் பொய்த்தது. அத்தோடு சரி. இது ஒரு ஓவியம் மாதிரி. ஒரே ஒரு பிரதி விற்பனைக்கு வைக்கப்பட்டு விற்று விட்டது. ஆனால் இது ஓவியம் மாதிரியும் இல்லை. நெடுங்கதையின் வேறு மென்பிரதிகளும் இருப்பதால் இன்னும் 99 பிரதிகள் வேறு விலையில் விற்கப்படும்.
ஆக, இதை வேறு யாரும் படிக்க முடியாதா?
முடியாது.
இது அநியாயம் இல்லையா?
அநியாயம்தான். தமிழ்ச் சமூகம் எழுத்தாளனை assfuck பண்ணி அவனைப் பிச்சைக்காரனாக அலைய விட்டிருப்பதால் அவன் பதிலுக்கு தமிழ்ச் சமூகத்தை இப்படிப் பழி வாங்குகிறான். நல்ல வார்த்தையில் சொன்னால், தன் எழுத்தின் பண மதிப்பை உயர்த்தி விட்டான். தங்கம் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த அநியாயத்தை நிறுத்த வழியில்லையா?
இருக்கிறது. ஒரு நாவல் வந்தால் ஐந்து லட்சம் பிரதிகள் விற்க வேண்டும். விற்றால் இந்த அநியாயத்தை நிறுத்தலாம்.
சினிமாவுக்குத்தான் தமிழ்நாட்டில் மதிப்பு. எழுத்துக்கு இல்லை. இன்னமும் எழுத்தாளன் நடிகனின் முன்னே பவ்யமாகத்தான் நிற்க வேண்டியிருக்கிறது. காந்தியை விட பதின்மூன்று வயது இளையவரான பாரதி காந்தியின் கட்டிலில் காந்தியின் முன்னே கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு ”மிஸ்டர் காந்தி, இன்றைய கூட்டத்துக்கு வர முடியுமா?” என்று கேட்கிறார். சந்திப்பு முடிந்ததும், “உங்கள் போராட்டம் வெல்ல என் ஆசீர்வாதம்” என்கிறார். இப்படியெல்லாம் என்னை விட மூன்று வயது சிறியவரான கமல்ஹாசனின் முன்னே என்னால் செய்ய முடியுமா? நான் அல்லவா அவர் முன்னே பவ்யமாக நிற்க வேண்டியிருக்கிறது? குறைந்த பட்சம் அவருக்குச் சமமாகவாவது என்னால் பேச முடியுமா?
முடியும். எப்போது முடியும் என்றால், ஜப்பானிய சமூகம் முராகாமியை எப்படி வைத்திருக்கிறதோ அப்படி என்னை வைத்தால் கமலே என் வீட்டுக்கு வந்து பேசுவார். ஜப்பான் மக்கள் தொகை பன்னிரண்டரை கோடி. தமிழ் எட்டரை கோடி. இப்போதைய என் நாவல் விற்பனை ஆயிரம் பிரதிகள். மொத்த பிரதிகள் என்றால் இரண்டாயிரம்தான் அதிக பட்சம். எக்காலத்திலும் விற்பனை இரண்டாயிரத்தைத் தாண்டாது. அதிலும் ஔரங்ஸேப் போன்ற பெரிய நாவல்கள் ஆயிரம்தான். அதைத் தாண்டாது. முராகாமி நாவல்கள் ஜப்பானில் விற்பனை: 40 லட்சம். (சர்வ தேச விற்பனை அல்ல. ஜப்பான் மட்டும்.)
அராத்துவின் நெடுங்கதை 10000 ரூபாய்க்கும் கிடைக்கும் போல் தெரிகிறது. இது பற்றி விவரங்களை அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார். கீழே தருகிறேன்.
NFT புத்தகம் – சந்தேகங்கள் & விளக்கங்கள்.
1. கிரிப்டோகரன்ஸி மூலம் வாங்கலாம்.
2. வாங்கியவர் அந்தப் பிரதியின் உரிமையாளர்.ஒவ்வொரு பிரதியும் தனித்தனியானது, தனித்துவமானது. லிமிட்டட் எடிஷன் என்பதால் குறிப்பிட்ட பிரதிகள் மட்டுமே கிடைக்கும். அது விற்று முடித்த பின் கிடைக்கவே கிடைக்காது. வாங்கியவரிடம் இருந்து அவர் சொல்லும் விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.
3.இந்த புத்தகத்தை பைரசி செய்ய முடியுமா ? பிரதிகள் போட்டு மற்றவர்களுக்கு கொடுக்கலாமா ?
பைரசியை தடுக்க முடியுமா ? வாங்கியவர் நினைத்தால் அதை பிரதி எடுத்து தெரிந்தவர்களுக்கு கொடுக்கலாம். பொதுவிலும் போடலாம். ஆனால் இவ்வளவு பணம் போட்டு வாங்கியவர் அதை பொதுவில் போட மாட்டார் என்ற நம்பிக்கைதான்.
4. பத்து பேராக சேர்ந்து பணம் போட்டு வாங்கி ,பத்து காப்பி ஆக்கி படிக்கலாமா ?
லாம். ஆனால் ஓனர்ஷிப் யாரேனும் ஒருவர் பெயரில்தான் இருக்கும். ஒருவர் பெயர் மட்டுமே உரிமையாளர் என்று அதை வாங்கிய வலைத்தளத்தில் இருக்கும்.அந்த ஒருவர் மட்டுமே அதை எதிர்காலத்தில் யாருக்கு வேண்டுமானாலும் விற்க முடியும்.
5. எதிர்காலத்தில் இது பேப்பர் பேக் அல்லது கிண்டில் புக் ஆக வருமா ?
வராது.
6. யாரேனும் காப்பி போட்டு புழக்கத்தில் விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலுமா?
இயலும். ஆனால் நான் எடுக்க மாட்டேன்.
7. இதை வாங்குவதால் என்ன பயன் ?
ஒரு பயனும் இல்லை. வான்கா ஒரிஜினல் ஓவியத்தை வைத்திருப்பவனுக்கு இருக்கும் பெருமைதான். பொருளாதார ரீதியாகக் கேட்டால் – எதிர்காலத்தில் இதன் மதிப்பு அதிகரிக்கலாம். நான் ஏதேனும் விருது வாங்கினாலோ அல்லது மண்டையைப் போட்டாலோ மதிப்பு கன்னா பின்னாவென உயரலாம். ஆனால் இந்த ஃபில்ஸ்டைன் சொசைட்டியில் எதுவும் நிலையில்லை.
நான் ஒரு புது முயற்சியை முன்னெடுக்கிறேன். நாளை இது பரவலாகலாம். அந்த புது முயற்சியில், அதுவும் உலகின் முதல் தமிழ் NFT புத்தக முயற்சியில் நாமும் பங்கு பெற்றோம் என்ற திருப்திதான்.
8. வாங்கியவர் இறந்த பிறகு ?
சொத்து பத்துக்களை மனதிற்கு பிடித்தமானவருக்கு எழுதி வைப்பது போல இதையும் உரிமை மாற்றி கொடுத்து விடலாம்.
9.ஒவ்வொரு பிரதியும் எப்படி தனித்துவமானது?
வாங்கியவுடன் வாங்கியவர் என்னை தொடர்பு கொண்டு , தன் பெயர் அல்லது தனக்குப் பிடித்தமானவரின் பெயருக்கு டெடிகேட் செய்ய சொல்லலாம். மட்டுமல்லாமல் வாங்கியவரின் பெயர் போட்டு அவருடைய புத்தகம் என டைட்டிலிலேயே இருக்கும். ஒவ்வொரு பிரதியிலும் என்னுடைய ஒரு புகைப்படம் இருக்கும். அது இதற்காகவே போட்டோ ஷூட் செய்யப்பட்டது.அதை வேறெங்கும் பயன்படுத்த மாட்டேன்.
ஒவ்வொரு புத்தகத்தின் அட்டையும் தனித்தனியாக மைனிங் செய்யப்பட்டு இருக்கும் . அதில் உரிமையாளரின் தகவல் இருக்கும். ஒவ்வொரு பிரதியும் தனித்தனி ஆர்ட் வொர்க்காகக் மைனிங் செய்யப்பட்டு இருக்கும்.
10. எப்படி வாங்குவது ?
Binance website சென்று ஒரு கணக்கு திறந்து கொள்ள வேண்டும். அதை உங்கள் வங்கியுடன் இணைக்க வேண்டும். புத்தகத்தின் தொகையை விட 500 ரூபாய் அதிகமாக வங்கியில் இருந்து பினான்ஸ் வேலட்டுக்கு அனுப்பி பினான்ஸ் காயின் வாங்கிக்கொள்ள வேண்டும். அதை வைத்து பினான்ஸ் NFT marketplace சென்று புத்தகம் வாங்க வேண்டும். புத்தகம் உங்கள் அக்கவுண்டுக்கு வந்து உங்கள் வேலட்டில் சேர்ந்து விடும். அங்கே டிஸ்கிரிப்ஷனில் ஈ மெயில் ஐடியும் என் போன் நம்பரும் இருக்கும். நீங்கள் வாங்கிய ஸ்கிரீன் ஷாட் மற்றும் உங்கள் பினான்ஸ் ப்ரொஃபைல் லிங்க் அனுப்பி யார் பெயருக்கு புத்தகம் + யாருக்கு டெடிகேஷன் என்று சொன்னால் 72 மணி நேரத்துக்குள் உங்களுக்கான தனித்துவமான புத்தகம் உங்களை வந்தடையும்.
11. ஒரு மாதிரி தலையை சுற்றுகிறதே ….வாங்கலாம் என நினைத்தாலும் சிரமமாக இருக்கிறதே ? சுலபமான வழி உண்டா ?
உண்டு. பணத்தை எனக்கு அனுப்பி விட்டு உங்கள் மொபைல் எண்ணை கொடுங்கள். நண்பர் மனோ உங்களைத் தொடர்பு கொண்டு சில தகவல்கள் பெற்று அவர் செய்து கொடுப்பார்.
12. இனிமேல் எழுதப்போகும் அனைத்து புத்தகமும் NFT தானா ?
இல்லை.ஆனால் பொதுவில் எழுத முடியாத புத்தகம் அல்லது மிக மிக வித்தியாசமான ஆக்கங்களை அவ்வபோது NFT யில் விடுவேன்.