ஆப்பம் தேங்காப்பால்

என் அளவுக்கு உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு மனிதனை நான் இதுவரை சந்தித்தது இல்லை.  ஓரளவுக்கு ஷங்கர் என்ற நண்பரைச் சொல்லலாம்.  அவர் இப்போது தன் நண்பருடன் இணைந்து கோவை அலங்கார் விலாஸ் என்று ஒரு உணவகம் வைத்திருக்கிறார்.  எனக்குத் தெரிந்து அண்ணா நகரிலும் நந்தனத்திலும் இரண்டு பிரிவுகள் உள்ளன.  ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் அவரும் எங்கெல்லாம் நல்ல உணவு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சென்று சாப்பிடுவது வழக்கம்.  இப்போது அவர் வீடு மாற்றிக் கொண்டு போனதிலிருந்து சந்திக்க வாய்க்கவில்லை. 

சீனியும் நல்ல உணவு ரசிகர்தான்.  ஆனால் அவரை நான் வெளியூரில்தான் சந்திக்கிறேன் என்பதால் உணவில் அதிகம் கவனம் செலுத்த முடிவதில்லை.  வெளியூர் செல்வதே பேசுவதற்காகவும் வைன் அருந்துவதற்காகவும் என்றபடியால் உணவின் முக்கியத்துவம் குறைந்து விடுகிறது.  உணவுக்காக சந்திப்பது என்றால் உணவு மட்டுமாகவே இருக்க வேண்டும்.  மது குறுக்கிடக் கூடாது.  அநேகமாக நான் சீனியுடன் ஒரு வேளை கூட சாவகாசமாக அமர்ந்து உணவு அருந்தியதில்லை என்று தோன்றுகிறது.  ஆனால் ஸ்ரீராமுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான முறை சாப்பிட்டிருக்கிறேன்.  ஸ்ரீராம் மது அருந்தும் பழக்கம் இல்லாதவர் என்பது முக்கியக் காரணம்.  நான் எதிர்பார்த்தது போலவே ஸ்ரீராமுக்குத் திருமணம் ஆன பிறகு அவரோடு ஒருமுறை கூட சாப்பிட வாய்க்கவில்லை.  அதில் ஆச்சரியமும் இல்லை.  ஆனால் தேருக்கு வடம் பிடிக்கும் பணியில் மட்டும் முன்வரிசையில் முதல் ஆளாக நிற்கிறார் ஸ்ரீராம்.  அதில் ஒன்றும் சுணக்கம் இல்லை. 

இப்போது அடிக்கடி வினித்துடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.  வினித்துக்கும் மது அருந்தும் பழக்கம் இல்லை என்பது முக்கியம்.  ஆனால் வினித்துக்குத் திருமணமானால் வினித் காணாமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு என்று நம்புகிறேன்.  இப்படித்தான் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு நவீன் என்று ஒரு நண்பர் என் நிழலைப் போல் இருந்தார்.  கோவையைச் சேர்ந்தவர்.  திருவல்லிக்கேணியில் குடியிருந்தார்.  கல்யாணம் ஆனது.  காணாமல் போய் விட்டார்.  தொடர்பே இல்லை.  தயாநிதி என்று மற்றொரு நண்பர்.  கல்யாணம் ஆனதும் காணாமல் போனவர்.  இப்படி அந்தப் பட்டியல் மிகவும் பெரியது.   

சாப்பாடும் மதுவும் ஒன்றாகச் சேர்வது இல்லை என்றேன்.  வைன் அருந்தினால் இரவுதான்.  பகலில் மது அருந்துவதில்லை.  இரவிலோ நான் சாப்பிடுவதில்லை.  இரவில் எப்போதுமே பழம்தான்.  வைன் அருந்தினாலும் கொஞ்சம் பழம்தான்.  அதனால்தான் சீனியோடு சாப்பிடும் வாய்ப்பே ஏற்பட்ட்தில்லை.  சீனியும் பகலில் மது அருந்த மாட்டார். 

ஆனால் பெரூ போனால் அந்த விரதத்தை உடைத்து விடலாம்.  அங்கே சாப்பிடும்போதே பிஸ்க்கோ (Pisco)  அருந்துவார்கள்.  பிஸ்க்கோவை அருந்திக் கொண்டே செவிச்சேயை (ceviche) சாப்பிட முடியும்.  பிஸ்க்கோவில் அல்கஹால் அதிகம்.  நாற்பதிலிருந்து ஐம்பது சதவிகிதம் வரை.  குடித்தால் கடும் போதை இருக்கும் என்றாலும் உடம்புக்குக் கேடு இல்லை.  காரணம், வைன் போலவேதான் பிஸ்க்கோவும் பழங்களை நொதிக்கச் செய்து தயாரிக்கப்படுகிறது.  செவிச்சே என்பது எலுமிச்சை சாறில் ஊற வைத்த பச்சை மீன்.  உலகின் அதியற்புதமான உணவு வகைகளில் ஒன்று செவிச்சே.  ஜப்பானிய சுஷியை விட ருசியாக இருக்கும்.  பிஸ்க்கோவில் என்ன பிரச்சினையென்றால், அத்தனை அற்புதமான மது பக்கத்து தேசமான சீலேயில் கூட கிடைக்கவில்லை.  மெக்ஸிகோவின் டக்கீலா இங்கே கூடுவாஞ்சேரியில் கூட கிடைக்கிறது.  உலகத் தரமான மதுவான பிஸ்க்கோ பெரூவின் பக்கத்து நாட்டிலேயே கிடைக்கவில்லை.  சாவோ பாவ்லோ (ப்ரஸீல்) விமான நிலையத்தில்கூடத் தேடினேன்.  பிஸ்க்கோ கிடைக்கவில்லை.  பிஸ்க்கோவைத் தண்ணீர் கலக்காமல் அருந்த வேண்டும். 

என் அளவுக்கு உணவின் மீது ஈடுபாடு உள்ளவர்களாக சிலர் இருக்கிறார்கள்தான்.  இருந்தும் ஒரு விஷயத்தில் தோற்று விடுகிறார்கள்.  ருசி, தரம் ஆகிய விஷயங்களைப் பொருத்தவரை அகோரிகளைப் போல் இருக்கிறார்கள்.  அகோரிகள் எதையும் சாப்பிட வேண்டும்.  அசூயை இல்லாமல் சாப்பிட வேண்டும்.  அந்தப் பயிற்சியில் வென்றால்தான் அவர்களால் மேற்கொண்டு பயணிக்க முடியும்.  இல்லாவிட்டால் அகோரியாக ஆக முடியாது.  (கலவிச் சோதனை கூட உண்டு.  கலவி கொள்ளும்போது அவர்கள் உச்சம் அடையக் கூடாது.  கலவியின் உச்சத்தில் அவர்கள் சிவனை நினைக்க வேண்டும்.  மிகச் சாதாரணமாக விந்து பிரிந்து போக வேண்டும்.)  உணவுப் பயிற்சியில் அவர்கள் மனித மலத்தையும், மனித மாமிசத்தையும் முகம் கோணாமல் சாப்பிட வேண்டும்.  அந்த அகோரிகள் மாதிரிதான் பலரும் எதைக் கொடுத்தாலும் முகம் கோணாமல் சாப்பிடுகிறார்கள்.  தமிழ்நாட்டில் கிடைக்கும் சிக்கன் கறி ஒரு பிளாஸ்டிக் துண்டையோ ரப்பரையோ வாயில் போட்டு மெல்லுவதைப் போல் இருக்கிறது.  அதைத்தான் எட்டு கோடி ஜனங்களும் ஒரு புகாரும் இல்லாமல் தின்று கொண்டிருக்கிறார்கள். 

இதெல்லாம் இன்று ஒரு சிநேகிதியோடு பேசிக் கொண்டிருக்கும்போது ஞாபகம் வந்தது.  நான் ஒரு ரசம் அடிக்ட்.  அவந்திகா மூன்று மாதம் மும்பை சென்றிருந்தபோது ரசம் சாப்பிட வேண்டும் என்று தோன்றி விட்டது.  மைலாப்பூரில் பல இடங்களிலிருந்தும் தருவித்துப் பார்த்து விட்டேன்.  ஒரு இடமும் தேறவில்லை.  ஒரு தோழி பூண்டு வெங்காயம் இல்லாமலேயே நன்றாக சமைப்பார்.  ரசமும் பிரமாதமாக வைப்பார்.  கேட்டேன்.  மகளுக்குத் திருமணம் என்று பிஸியாக இருந்ததால் மூன்று மாதமுமே ரசம் வரவில்லை.  மூன்று முறை கேட்டு விட்டு விட்டு விட்டேன்.  அப்போது நான் ஈஸ்வரியை மறந்து போனேன்.  என் எழுத்தின் தீவிர ரசிகை.  ஒருமுறை அவந்திகா வெளியூர் சென்றிருந்த போது எனக்கு டெங்கு வந்தது.  அப்போது எனக்கு ஒரு மாத காலம் உணவு அளித்து உயிர் காத்தவர் ஈஸ்வரி.   சமையல் கலையில் விற்பன்னர்.  அவரிடம் கேட்டிருந்தால் ரசம் வந்திருக்கும்.  மறந்து போனேன்.

சிநேகிதியோடு பேசிக் கொண்டிருந்தபோது இரண்டு உணவுப் பண்டங்கள் ஞாபகம் வந்தன.  ஆப்பம் தேங்காப் பால்.  சப்பாத்தி கொண்டக்கடலைக் கறி.  இரண்டும் எனக்கு உயிர்.  ஆனால் சாப்பிட்டு நாலைந்து வருடங்கள் இருக்கும்.  கடைசியாக சாப்பிட்ட அனுபவத்தை இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது.

சிநேகிதி வீடு.  சிநேகிதியின் மாமியார் வந்திருந்தார்.  மாமியார் வந்தால் அந்தத் தெருப் பக்கமே போக மாட்டேன்.  சிநேகிதிதான் ஆப்பம் தேங்காப்பால் என்று சொல்லி அழைத்தார்.  போனேன்.  மாமியார் வந்தால் சமையலறை மாமியாரின் பொறுப்பு.  மாமியார் ஆப்பம் தேங்காப் பால் கொடுத்தார்.  பக்கத்திலேயே என் சிநேகிதியின் பையன் தேங்காப் பாலை ஆப்பத்தில் தோய்த்துத் தோய்த்து விளாசிக் கொண்டிருந்தான்.  எனக்கு நாக்கில் ஜலம் ஊறியது.  அவனோடு கூடவே எனக்கும் ஆப்பம் போட்டு தேங்காப் பால் ஊற்றினார் மாமியார்.  உவ்வே.  பக்கத்தில் இருந்த பையன் எனக்கு அகோரியாகத் தெரிந்தான்.  எனக்கு வந்த வாந்தியை அடக்கிக் கொண்டு மாமியார் சமையல் உள்ளுக்குள் சென்றிருந்த போது பாதி ஆப்பத்தை எடுத்துக் கொண்டு போய் க்க்கூஸில் போட்டுத் தண்ணீர் ஊற்றி விட்டேன்.  பாதியைக் கஷ்டப்பட்டு விழுங்கினேன்.  ஒன்றே போதும் என்றேன்.  மாமியாரும் அதோடு விட்டு விட்டார்.  அடுத்து என் சிநேகிதியும் பையனின் ஆர்வத்துக்குச் சற்றும் குறையாமல் சாப்பிட்டார்.  ”பாவிகளா, குடும்பமே அகோரி போலிருக்கிறதே!  தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டோமே!” என்று நினைத்துக் கொண்டேன்.  அதற்குப் பிறகு நீண்ட காலம் அந்தத் தெருப்பக்கமே போகவில்லை. 

பிறகு ரொம்ப நாள் கழித்து மேலே உள்ளதை அப்படியே சொல்லி, ஆப்பம் ஏன் அப்படி இருந்தது என்று சிநேகிதியிடம் கேட்டேன்.  “ரொம்ப்ப் பண்ணாதீங்கப்பா, ஆப்பம் மாவு புளிச்சுப் போச்சு.  அதோடு, மாவு போதலைன்னு கொஞ்சம் இட்லி மாவையும் கலந்து விட்டார் மாமியார்” என்றார் சிநேகிதி. 

இப்படி ஆப்பத்தைப் பற்றி நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறாற்போல் பண்ணி விட்டீர்களே, அடுத்த ஜென்மாவில் உங்களுக்கு ஆப்பமே கிடைக்கப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டேன்.  வேறு என்ன சொல்ல?

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு திலகவதி டி.ஜி.பி.யாக இருந்த போது – அப்போது அவர் அடிக்கடி எங்கள் இல்லத்துக்கு வருவார் – ஒருநாள் இரவு ஒன்பது மணி அளவில் ஆப்பம் தேங்காப்பால் சாப்பிட வேண்டும் என்று சொல்லி விட்டேன்.  திலகவதிக்கு நான் என்ன ஆசைப்பட்டாலும் அது உடனே நடக்கச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டு.  உடனே காரை எடுத்துக் கொண்டு திலகவதி, அவந்திகா, நான் மூவரும் சென்னை முழுவதையும் அலசி பிறகு எங்கோ வடசென்னையில் ஒரு ரோட்டுக் கடையில் சாப்பிட்டோம்.  அவந்திகா மட்டும் பிரெட் சாப்பிட்டாள்.  அவளுக்கு வெளியே சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது. 

முன்பெல்லாம் லயோலா கல்லூரியில் ஒரு பேராசிரியர் ஞாயிற்றுக்கிழமை தோறும் பன்றி அடித்து விற்பார்.  கோதுமையும் காய்கறிகளும் உண்ணும் வெண்பன்றி.   வாரம் ஒருமுறை அதை வாங்கி வருவேன்.  அய்யங்கார்ப் பெண்ணான அவந்திகா அதை எனக்குப் பிரமாதமாக சமைத்துக் கொடுப்பாள்.  அற்புதமாக சமைப்பாள்.  வெறும் மணத்தை வைத்துக் கொண்டே ருசி சேர்த்து விடுவாள். 

அப்பேர்ப்பட்டவளுக்கு அக்கார அடிசலும் ஆப்பமும் பண்ணத் தெரியாது.  எங்கள் வீட்டில் ஒருமுறை கூட ஆப்பம் செய்ததில்லை.  ஆனால் கொண்டக்கடலைக் கறி இந்த முப்பது ஆண்டுகளில் மூன்று முறை செய்திருக்கிறாள்.  கடைசியாகச் செய்து பத்து ஆண்டுகள் இருக்கும்.  இனி செய்ய மாட்டாள்.  பேரன் வந்து விட்டான். 

ஒருநாள் காயத்ரியின் இல்லத்தின் பால்கனியில் நானும் ராம்ஜியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.  மாலை நேரம்.  சூடாக கேசரி வந்தது.  அட்டகாசமாகச் செய்திருந்தாள் காயத்ரி.  கூடவே மிளகாய் பஜ்ஜி ஆர்டர் பண்ணினார் ராம்ஜி.  இப்படி வாரம் ஒரு முறை இந்த பால்கனியில் சந்தித்து, ஏதாவது பட்சணம் சாப்பிடலாம் என்றாள் காயத்ரி.  சரி, முதலில் ஆப்பம் தேங்காப் பால் பண்ணு என்றேன். 

அதற்கு அடுத்து அவளை இன்று வரை பார்க்கவே இல்லை.  காரணம், அடுத்த வாரமே கொரோனா வந்து விட்டது.  அதற்குப் பிறகு ஒன்றரை ஆண்டுகள் நான் வீட்டை விட்டே வெளியில் வரவில்லை.  அதற்குப் பிறகும் கூட – இன்று வரை நான் காயத்ரியைச் சந்திக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.   கும்பலோடு கும்பலாக புத்தக விழாவில் பார்ப்பதையெல்லாம் பார்க்கும் கணக்கில் நான் சேர்ப்பது இல்லை.   

ஞாயிற்றுக்கிழமைகளில் மாரிஸ் ஓட்டலில் ஆப்பம் தேங்காப் பால் என்று சொன்னார்கள்.  போய்ப் பார்க்க வேண்டும்.  ஆனால் என்ன இருந்தாலும் ஓட்டலில் கிடைக்கும் ஆப்பம் தேங்காப்பால் சரியாக வராது.  வீட்டில் செய்ய வேண்டும்.  சப்பாத்தி கொண்டக்கடலைக் கறிக்குத்தான் என்ன செய்வது என்று தெரியவில்லை.  தில்லியில் பத்து ஆண்டுகள் காலையில் டோஸ்ட் பண்ணின ப்ரெட்டும் கொண்டக்கடலைக் கறியும்தான் சாப்பிட்டு வளர்ந்தேன்.  ஐ.பி. கல்லூரியின் (இந்த்ர ப்ரஸ்தா கல்லூரி) அருகே உள்ள சந்தன் சிங் கடையில்.