இளையராஜாவின் உளறல்

இளையராஜாவுக்குக் காமன்சென்ஸ் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.  ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து உனக்கு அறிவு இருக்கிறதா என்று கேட்டு, அதற்கு அவர் பதில் சொன்னதும், உனக்கு அறிவு இருக்கிறதா என்பதை எந்த அறிவைக் கொண்டு கண்டு பிடித்தாய் என்று கேட்டுத் தன் காமன்சென்ஸை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தவர் ராஜா.  ரஹ்மானை மேடைக்கு அழைத்து, உனக்கு இசை ஹாபி, எனக்கு இசை சுவாசம் என்று அவமானப்படுத்தியவர்.  இப்போது இயேசுவின் மீது கை வைத்திருக்கிறார்.  இயேசு உயிர்த்தெழவில்லை, யூட்யூபில் பார்த்தேன் என்கிறார் இளையராஜா.  யூட்யூபில் எந்த மடையன் அப்படிச் சொன்னான்?  யூட்யூபில் எவன் எவனோ என்னென்னவோதான் உளறிக் கொண்டிருக்கிறான்.  யூட்யூப் என்ன பெரிய விஞ்ஞானிகளின் சோதனைக் கூடமா?  யூட்யூப் என்றால் என்ன என்று கூடத் தெரியாத ஒருவர்தான் இப்படி உளற முடியும்.  ஒருவர் எதையாவது வாய்க்கு வந்ததை உளறி விட்டு ஒரு புத்தகத்தில் படித்தேன் என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது ராஜாவின் உளறல்.     

சினிமாவின் மூலம் பெரிய ஆளாகத் தெரிய வருபவர்களைக் கடவுள் ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தால் இப்படிப்பட்ட கோமாளித்தனங்கள்தான் நடக்கும்.  ராஜாவின் இசை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?  கேட்டு ரசியுங்கள்.  அதோடு முடிந்தது.  அதை விட்டு விட்டு அவர்தான் தமிழ்நாட்டின் அடையாளம் என்று சொல்லிக் கொண்டு அவர் காலில் விழுந்தால் இப்படித்தான் நடக்கும்.  ஒரு துறையில் வல்லுனராக இருந்தால் அந்தத் துறையில் மட்டுமே அவர் வல்லுனர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு அவர் தனக்கு சம்பந்தமே இல்லாத இலக்கியத்தைப் பற்றி, வரலாற்றைப் பற்றி, அரசியலைப் பற்றி, தீர்க்கதரிசிகள் பற்றியெல்லாம் கருத்து சொன்னால் இப்படிப்பட்ட உளறல்களைத்தான் கேட்க வேண்டியிருக்கும். 

இளையராஜா தன்னை எல்லாத் துறைகளிலும் மேதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.  அதனால் எல்லா விஷயங்களிலும் வாயை வைத்து உளறுகிறார்.  மற்ற சினிமாக்காரர்களும் அப்படித்தான் என்றாலும் ராஜாவுக்கு அடக்கமோ தந்திரமோ கிடையாது என்பதால் மேடையிலேயே தைரியமாக உளறுகிறார்.  மற்றவர்கள் அப்படிச் செய்வதில்லை.  அவ்வளவுதான் வித்தியாசம். 

இன்னும் சில தினங்களில் ராஜா கிறிஸ்தவர்களிடம் மன்னிப்புக் கேட்பார்.  அதோடு இந்த விவகாரம் மறக்கப்பட்டு விடும்.  ஆனால் உண்மையான பிரச்சினை என்னவென்றால், இயேசு பற்றி உளறிய பிறகு ராஜா ரமணர் பற்றிச் சொன்னதுதான்.  அதாவது, உலகிலேயே இறந்த பிறகு உயிர்த்தெழுந்தவர் ரமணர் மட்டும்தான் என்கிறார் ராஜா.  இதையேதான் அத்தனை மதவாதிகளும் சொல்கிறார்கள்.  என் கடவுள்தான் கடவுள்.  உன்னுடைய கடவுள் கடவுளே இல்லை.  இதுதான் அத்தனை கடவுள் நம்பிக்கையாளர்களும் சொல்வது.  இதுதான் ஃபாஸிஸத்தின் முதல் படி.  இந்த ஃபாஸிஸக் கருத்தைத்தான் இளையராஜா வெளிப்படுத்தியிருக்கிறார். 

உண்மையில் ராஜா கிறிஸ்தவர்களை மட்டும் புண்படுத்தவில்லை.  ரமணரையும் ரமணரின் உண்மையான பக்தர்களையும் சேர்த்துப் புண்படுத்தியிருக்கிறார்.  இறைவனைப் புரிந்து கொண்டவன் மற்றவர்களின் இறை நம்பிக்கையை அசிங்கப்படுத்த மாட்டான்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக எல்லா ஆன்மீகவாதிகளும் மாற்று நம்பிக்கைகளை அசிங்கப்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.