மனப்பிறழ்வும் கலையும்…

அன்புள்ள சாரு,

என்னை முகநூலில் பிளாக் செய்துள்ளீர்கள், இன்றுதான் கவனித்தேன். என்ன காரணமென்று தெரியாமல் குழப்பமாக இருக்கிறது. நான் என்ன தவறு செய்தேன் என்று நேரமிருந்தால் கூறுங்கள் சாரு.

செந்தில்குமரன், ஆட்டையாம்பட்டி.

அன்புள்ள செந்தில்,

பொதுவாக மனிதர்கள் ஒரு தவறு செய்து விட்டு, அதை சரி செய்வதாக நினைத்துக் கொண்டு அதை விடப் பெரிய தவறைச் செய்வார்கள்.  நீங்களும் அதையேதான் இப்போது செய்திருக்கிறீர்கள்.  இப்போது எனக்குக் கடிதம் எழுதிக் கேட்பதுதான் இரண்டாவது தவறு.  காரணத்தை நீங்கள் மிகச் சுலபமாக வினித்துக்கு ஃபோன் போட்டுக் கேட்டிருக்கலாம்.  அல்லது, சீனியையாவது கேட்டிருக்கலாம்.  சீனியை நம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் டூர் ஆபரேட்டர் மாதிரி நடத்திக் கொண்டிருப்பதை நான் கவனித்து வருகிறேன்.  அப்படி இருக்கும்போது இந்த முக்கியமான விஷயத்தைக் கேட்டால் சீனி கோபித்துக் கொண்டிருக்க மாட்டார்.  நீங்கள் இப்போது எனக்கே கடிதம் எழுதிக் கேட்டிருப்பதால், என் கடிதங்கள் அத்தனையும் பொதுவானவை என்பதால் எல்லோரும் அறிய இதை எழுத வேண்டியிருக்கிறது.  மேலும், நீங்களும் அதை ஃபேஸ்புக்கில்தான் எழுதியிருந்தீர்கள்.  அப்போதே அங்கேயே பதில் அளித்திருப்பேன்.  நீங்கள் என் நெருங்கிய நண்பர் என்பதால் புண்படுத்தக் கூடாது என்று விட்டு விட்டேன்.  ஆனால் இப்போது நீங்களே வலிய வந்து கேட்பதால் பொதுவிலேயே சொல்லத் துணிந்தேன். 

அராத்துவின் நோ டைம் டு ஃபக் என்ற கதை உலகின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்று என்று நான் அக்கதைக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தேன்.  அது பற்றி ஃபேஸ்புக்கில் ஒரு குறிப்பும் வந்தது.  சிலர் என் எழுத்தையும் அராத்துவின் எழுத்தையும் ஒப்பிட்ட போது அராத்து என்ன சொன்னார் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?  சாருவுக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி, அவரைப் போன்ற ஒரு எழுத்தாளர் இல்லை.  இனிமேலும் வருவதற்கான சாத்தியமே தெரியவில்லை – இது அராத்துவின் வார்த்தை.

இது ஒரு எழுத்தாளனை மகிழ்ச்சியூட்ட வேண்டும்.  ஆனால் எனக்கு மகிழ்ச்சி இல்லை.  யாராவது ஸீரோ டிகிரியை விட, ராஸ லீலாவை விட நல்ல நாவலை எழுதினால் அதில்தான் எனக்கு மகிழ்ச்சி உண்டாகும்.  ஆனால் இளைஞர்களிடம் நடப்பது என்னவென்றால், என்னை நகல் எடுப்பதுதான்.  அராத்து என்னை நகல் எடுக்கவில்லை.  என்னுடைய சாயலே அவரிடம் இல்லை.  ஆனால் என்னுடைய சென்ஸிபிலிட்டியைப் பிடித்து விட்டார்.  என்னுடைய தத்துவத்தைப் பிடித்து விட்டார்.  

அந்த ஃபேஸ்புக் பதிவில் நீங்கள் என்ன காமெண்ட் போட்டீர்கள், ஞாபகம் இருக்கிறதா?  அராத்து சாருவைத் தாண்டி விட்டார்.  இது உங்கள் காமெண்ட்.  நீங்கள் உள்வட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் உங்களை விமர்சித்து எழுதாமல், எதுவுமே எழுதாமல் அமைதி காத்தேன்.  இப்போது நீங்களே வந்து ”என்னை அடி” என்கிறீர்கள்.  இதற்கும் நீங்கள் என்ன விளக்கம் சொல்வீர்கள் தெரியுமா?  “’அராத்து, நீங்கள்தானே எதுவாக இருந்தாலும் சாருவிடமே கேட்டுக் கொள், ஏன் இடையில் நான் வேறு?’ என்று சொன்னீர்கள்?  இப்போது பாருங்கள், உங்கள் பேச்சைக் கேட்டு நான் பாட்டு வாங்க வேண்டியிருக்கிறது.”  அடக் கடவுளே, குதிரைக்குக் குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரமா?  எந்த விஷயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கணக்கு இல்லையா? உங்கள் மீது கோபப்பட்டுத்தானே ஃபேஸ்புக்கில் உங்களை ப்ளாக் பண்ணியிருக்கிறேன்?  அப்புறமும் என்னிடம் வந்து காரணம் கேட்டால், இப்படித்தான் பொதுவெளியில் பதில் சொல்வேன்.

ஸீரோ டிகிரி, ராஸ லீலா போன்ற நாவல்களை விடுங்கள்.  அராத்துவை விடுங்கள்.  Book of Fuzoos, உன்னத சங்கீதம், கர்னாடக முரசு போன்ற சிறுகதைகளைப் போன்ற படைப்புகளை உலக அளவிலேயே யார் எழுதியிருக்கிறார்கள், சொல்லுங்கள்?  போர்ஹேஸ் என்ற ஒரே ஒரு பெயர்தான் காணக் கிடைக்கிறது.  வேறு ஒருத்தர் கூட இல்லை. 

சரி, யார் என்னைத் தாண்ட முடியும் தெரியுமா?

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை.  ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே உள்ள பேச்சிலர்ஸ் லாட்ஜின் ஒரு அறையில் நாலைந்து நண்பர்கள் மது அருந்திக் கொண்டிருந்தோம்.  மதியம் மூன்று மணி இருக்கும்.  ஒரு நெருங்கிய நண்பர் “ஸீரோ டிகிரியை நான்தானே எழுதிக் கொடுத்தேன்?” என்றார்.  பக்கத்திலிருந்து குடையை எடுத்து அதன் கம்பியால் அவரை மிக வலுவாகக் குத்த எத்தனித்தேன்.  அவர் படுகாயம் அடைந்திருக்கலாம்.  நகர்ந்து விட்டதால் தப்பினார்.  பிறகு கீழே இறங்கிப் போய் ஒரு பெட்டிக் கடையிலிருந்து எனக்குத் தெரிந்த ஒரு தாதாவுக்கு ஃபோன் பண்ணினேன்.  தாதா கிடைக்கவில்லை.  எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 

லாட்ஜுக்கு வந்து ஆடைகளைக் களைந்து விட்டு முழு நிர்வாணமாக லாட்ஜின் ஹாலில் பதினைந்து நிமிடங்கள் நடந்தேன்.  அத்தனை பேர் முன்னிலையிலும்.  நான் அப்போது அடைந்த சீற்றத்துக்கு முக்கியக் காரணம், அந்த நண்பரின் ஆசிரியரே நான்தான்.  என்னிடம் பாடம் கேட்டு வளர்ந்த பையன். 

இந்த நிர்வாணக் காட்சி கிங் லியர் நாடகத்திலும் வருகிறது.  பதினைந்து நிமிடம் கழித்து என் ஆடைகளை அணிந்திருக்காவிட்டால் இப்போதும் நான் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்தான் இருந்திருப்பேன். அந்த்தோனின் ஆர்த்தோவைப் போல.  அதிர்ஷ்டம், தப்பினேன். 

இந்த மனப்பிறழ்வு இருந்து, அந்த மனப்பிறழ்வை கலையாகவும் மாற்றத் தெரிந்தால் என்னைத் தாண்டலாம். இது தவிரவும் என் மொழி ஒரு விசேஷம்.  எப்படிக் கைவரப் பெற்றது என்று எனக்குத் தெரியவில்லை. 

போகன் சங்கர் ஒருமுறை எழுதினார், பாரதிக்குப் பிறகு மொழியை செழுமைப்படுத்தியவர்களில் முதன்மையானவர் சாரு என்று.  நடுவில் புதுமைப்பித்தனைக் கூட அவர் சேர்க்கவில்லை. 

அதனால் செந்தில், நீங்கள் என்னை சம்பந்தப்படுத்தி வாய்க்கு வந்ததையெல்லாம் உளறக் கூடாது.   ஃபேஸ்புக்கில் உங்களை ப்ளாக் பண்ணியதால் உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை.  என் இணையதளத்திலேயே நேரடியாகப் படித்துக் கொள்ளுங்கள்.   

சாரு