NH 10 – சாரு: மதுரை ஆசைத்தம்பி

மதுரை ஆசைத்தம்பி எழுதியது:

சாருவை நீங்கள் பெண்ணாகப் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் நான் பார்த்தேன். தான் மாறியதோடு நில்லாமல் உங்களையும் ஒரு பெண்ணாக மாற்றி இருப்பார். எங்கே? எப்படி? என்று எழும் வினாக்களுக்கான விடை ஒரு சிறிய கட்டுரையில் உள்ளது. அந்தக் கட்டுரை பெயர். NH -10. பெண்களின் வலிகளை வரிகளாக வரைந்திருக்கும் அந்தக் கட்டுரை சாருநிவேதிதாவின் நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற புத்தகத்தின் இரண்டாம் கட்டுரை.

எழுத்தாளர்களுக்கு சாதி மதம், இனம், தேசம் குடும்பம் என்ற அடையாளங்கள் இருக்க முடியாது என்று நம்புகிறவன் நான். ஒட்டு மொத்த மனித குலத்துக்காக பேச வேண்டிய நிலையில் இருப்பவரே எழுத்தாளர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற குறளில் அந்த பொதுத் தன்மையை நாம் காணலாம். அந்த வகையில் ஒரு ஆண் எழுத்தாளர் தன்னை பெண்ணாகவும் உணர வேண்டிய அவசியம் இருக்கிறது. நம் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள் எல்லாம் அப்படி பெண்ணாகத் தங்களை உணர்ந்தவர்கள் தான். நான் எப்போதும் ஒரு பெண்ணின் மனநிலைக்குள் செல்ல விரும்புகிறேன். அல்லது அவர்களின் அந்தரங்க உணர்வுகளை கேட்க விரும்புகிறேன். அந்தரங்கம் என்றால் அது உடலின் தாபம் பற்றி தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை . எனக்குத் தெரிந்த ஒரு 35 வயது பெண்மணி. அவர் ஒரு மழைக்காலத்தில் தன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். சாலையின் நடுவில் தண்ணீர் தேங்கி இருந்தது. ஸ்கூட்டரை சற்றே ஒதுக்குகிறார் அந்தப் பெண். பின்னால் வந்த கார் அந்தப் பெண்ணின் ஸ்கூட்டரில் மோதி விட்டது. அந்தப் பெண் பின்னால் சற்றுத் திரும்பி ,” என்ன சார் ! கொஞ்சம் பார்த்து வரக் கூடாதா? என்று தணிந்த குரலில் கூறினார். காரை ஓட்டி வந்த 32 வயது ஆடவன் காரின் கண்ணாடிக் கதவை இறக்கிவிட்டு,” உன்ன அடிச்சு தூக்கி இருக்கணும்” என்கிறான். பிறகு அந்தப் பெண்ணின் ஸ்கூட்டரை இடிப்பது போல காரை ஓட்டிச் செல்கிறான். இந்த சம்பவத்தில் உள்ள மிக முக்கியமான மற்றொரு விஷயம் காரை ஓட்டி வந்த ஆடவனுக்கு பக்கத்தில் பள்ளி சீருடையில் 7 வயது மதிக்கத்தக்க சிறுவன் இருந்தான் என்பது தான். ஆக கார் ஓட்டியவர் டிரைவர் அல்ல அந்த சிறுவனின் தந்தை. இப்படி சாலையில் போகும் பெண்ணின் மீது காரை இடித்துவிட்டு,” இது போதாது , உன்னை அடித்து தூக்கி இருக்கணும் ” என்று கொலைவெறி கொள்ளும் ஆள் தன் மனைவியை எப்படி நடத்துவான்? இதையெல்லாம் பார்த்து வளர்கிற ஒரு பையன் எதிர்காலத்தில் எப்படி இருப்பான்? ஆக குடும்பத்திலேயே நாம் குழந்தைகளை சமூக விரோதிகளாக வளர்த்து வருகிறோம் .அதுபோக அந்தப் பெண்ணின் மனநிலையை யோசித்துப் பார்ப்போம் அவருக்கு 35 வயது இருக்கும் இத்தனை வயதில் அவர் இது போல் எத்தனை கொடூரமான ஆண்களை பார்த்திருப்பார். ஒரு பெண்ணை முறைத்துப் பார்ப்பதே அவரை துன்புறுத்தும் செயல்தான். எத்தனை நிர்வாக சீர்திருத்தங்கள் வந்தாலும் எத்தனை ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்கினாலும் ஒரு பெண்ணுக்கு இந்திய சமூகம் நிம்மதியானதாக இல்லை பெண்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு NH 10 என்ற படம் நினைவுக்கு வருகிறது. கதைக்குள் போவோம். இளம் தம்பதி மீரா- அர்ஜுன். மீரா தமிழ் பெண் கணவன் வட இந்தியன். பொதுவாக வட இந்திய பெண்களை விட தமிழ் பெண்கள் முற்போக்கானவர்கள் என்று அங்கே ஒரு கணிப்பு உண்டு . டில்லியில் ஒரு நாள் இரவு இருவரும் இரவுப் பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கும்போது மீராவுக்கு அலுவலகத்தில் இருந்து ஒரு அவசர வேலை என்று போன் வருகிறது. மீரா அர்ஜுனை அங்கேயே விட்டுவிட்டு காரில் கிளம்பி செல்கிறார். அப்போது காரின் பக்கத்தில் பைக்கில் வரும் இரண்டு இளைஞர்கள் அவளோடு தகராறு செய்கிறார்கள். அவள் காரை விட்டு இறங்கவில்லை. மிக வேகமாக அவர்களிடம் இருந்து தப்பிச் செல்கிறாள் .ஆனாலும் அந்த இளைஞர்கள் அவளுக்குள் ஏற்படுத்தும் பதற்றத்தையும் பீதியையும் இந்திய சினிமாவில் நான் அரிதாகவே கண்டிருக்கிறேன். என் சினிமா அனுபவத்தில் என்னால் மறக்க முடியாத காட்சி அது. ஏன் அது மறக்க முடியாத காட்சி என்றால் நான் கூடு விட்டு கூடு பாய்ந்து அந்த பெண்ணாக மாறுகிறேன். தன் நண்பனோடு ஒரு பஸ்ஸில் ஏறிய அந்த டெல்லிப் பெண்ணாக உணர்கிறேன். நீங்கள் ஆண்களாக இருந்தால் ஒரு கணம் நீங்களும் அப்படி மாறி அந்தத் தருணத்தை மனதால் வாழ்ந்து பாருங்கள். நாலைந்து பேர் உங்கள் உடலைக் குதறத் தயாராகிறார்கள். சுற்றிவர ஆள் நடமாட்டமே இல்லை அப்போது ஏற்படும் பீதியை அதன் தாக்கத்தை வாழ்நாளில் என்றேனும் தாண்டி வர முடியும் என்று நினைக்கிறீர்களா ? ஒரு ஆணாகிய என்னாலேயே அது முடியவில்லை. ஏனென்றால் இந்தியாவில் அது அன்றாட நிகழ்வு. மீராவின் பதற்றத்தைக் குறைக்க அர்ஜுன் அவளை தேசிய நெடுஞ்சாலை வழியே காரில் நெடுந்தூரம் அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்கிறான் . வழியில் ஒரு ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடும் போது ஒரு பெண்ணையும் பையனையும் சில பேர் அடித்து உதைத்து கொண்டிருக்கிறார்கள். தடுக்கப்போகும் அர்ஜுனுக்கு அறை விழுகிறது .”அவள் என் தங்கை, உன் வேலையை பார்த்துக் கொண்டு போ என்கிறான் அடித்தவன். சமூகவெளியில் ஏதாவது அநீதி நடந்தால் அதை வேடிக்கை பார்ப்பவர்கள் மீது எல்லோரும் பாய்கிறார்கள். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டபோது பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது பலரும் தர்மா விஷம் கொண்டார்கள் அநீதியை தடுத்தால் தடுக்க முனைவோர்க்கும் அடி என்பதே இந்திய எதார்த்தம் சாதி விட்டு சாதி மாறி காதலித்ததால் அந்த பெண்ணையும் அந்த இளைஞனையும் கொன்று விடுகிறார்கள். தடுக்கப்போன அர்ஜுனும் அந்த கும்பலால் கொல்லப்படுகிறான். மீரா தப்பி விடுகிறாள் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு வந்து அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவியிடம் விசயத்தைச் சொல்லுகிறாள். சொல்லும்போதுதான் சுவரில் பார்க்கிறாள் கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படம். கடைசியில் அந்த பெண்ணின் வீட்டுக்கே வந்து சேர்ந்திருக்கிறாள். உடனே அந்த பஞ்சாயத்து தலைவி மீராவை வீட்டிலேயே அடைத்து போட்டுவிட்டு தன் மகனிடம் செய்தி சொல்ல போகிறாள். படத்தின் முதல் காட்சி எப்படி மறக்க முடியாதோ அதேபோன்று ஒரு மறக்க முடியாத காட்சி கடைசி காட்சி. அடைத்து வைக்கப்பட்ட வீட்டிலிருந்து தப்பும் மீரா ஒரு குடிசையின் திண்ணையில் கால் மேல் கால் போட்டபடி சிகரெட் குடிக்கிறாள். அவள் எதிரே காலில் அடிபட்டு நகர முடியாமல் கிடக்கும் பெண்ணின் அண்ணன் அதைப் பார்த்து உச்சபட்ச கோபம் அடைகிறான். ஏனென்றால் அவன் பார்த்தவரை பெண் என்றால் ஒரு ஆணை ஏறிட்டு பார்ப்பதே குற்றம். கண்களைப் பார்த்து பேசுவது கொலைக்கு சமம். ஒரு கட்டத்தில் மீராவிடமும் அவன் சொல்கிறான்,” என் கண்ணை பார்த்து பேசாதே! பெட்டை நாயே “என்று. அடிபட்டவனின் முன்னால் முழு சிகரட்டையும் ஊதுகிறாள் மீரா. இன்னும் கதை போகிறது. ஆணாதிக்க வாதிகள் ஹரியானாவில் மட்டுமல்ல உன்னை அடித்து தூக்கி இருக்க வேண்டும் என்று சொல்லியபடி தமிழ்நாட்டிலும் திரிகிறார்கள்.

மதுரை ஆசைத்தம்பி