படித்ததில் பிடித்தது…

சுமார் மூன்று ஆண்டுகளாக என்னைத் தின்று கொண்டிருந்த எக்ஸைல் வேலை நேற்று இரவு ஒன்பது மணியோடு முடிந்து விட்டது.  இனி அதில் கை வைக்க எதுவும் இல்லை.  அதிலும் கடந்த ஆறு மாதங்களாக நான் வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் போய் விட்டது.  நேற்று இரவே பதிப்பாளருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி விட்டேன்.

காலையில் எழுந்து மூன்று மாதமாக நாட்டு நடப்பு பற்றித் தெரிந்து கொள்ள இணையத்தை மேய்ந்தேன்.  பாரதி விஷயமாக மோதிக் கொண்ட மேதைகள் இருவரும் ராசியாகி ஒருவருக்கொருவர் பகடி செய்து கடிதம் எழுதிக் கொண்டதைக் கண்டு மகிழ்ந்தேன்.  கொரியன் கோழியை செவ்வியல் பாணியில் எப்படிச் சமைப்பது என்றும் தெரிந்து கொண்டேன்.   உள்ளுக்குள்ளிருக்கும் சைத்தான் திப்பு சுல்தானின் கோழிகள் பற்றி ஞாபகப்படுத்தினான்.  சே சே dirty fellow என்று அவனை விரட்டி விட்டு தினசரிகளைப் புரட்டினேன்.  தி இந்துவில் (இந்த தி என்ற எழுத்துக்கு என்ன அர்த்தம் என்றே விளங்க மாட்டேன் என்கிறது.  ஏதாவது பின் நவீனத்துவ மோஸ்தரா?  ஒன்றும் புரியவில்லை) சமஸ் எழுதி வரும் நீர் நிலம் வனம் என்ற தொடரை ஒன்றுக்குப் பத்து தடவை படித்து மகிழ்ந்தேன்.  சமீப காலத்தில் இவ்வளவு சுவாரசியமான, பயனுள்ள தொடரைப் படித்ததே இல்லை என்று சொல்லலாம்.  ஒரு புனைகதையைப் படிப்பது போல் உள்ளது.  அவர் நீலத் திமிங்கிலம் பற்றி எழுதியிருப்பவை எல்லாமே ஒரு நாவலின் அத்தியாயம்.  சமகாலப் புனைவெழுத்து (தமிழில்) எனக்கு ரசிக்கவே இல்லை; பத்து பக்கத்துக்கு மேல் படிக்கவே முடியவில்லை என்று தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் பத்திரிகைகளில் நண்பர்கள் அதைக் கட்டுரைகளாக எழுதி விடுகிறார்கள்.  ஜூனியர் விகடனில் மெரினா கடற்கரையில் பேய்களை விரட்டிக் கொண்டிருந்த மலையாள சாமியார் பற்றிய கட்டுரை தான் எவ்வளவு அட்டகாசம்!  இதெல்லாம்தான் இன்றைய சமூகத்தின் கதைகள்.  ஆனால் இதெல்லாம் ஏதோ அந்தையார் என்ற பெயரில் வந்து அப்படி அப்படியே காணாமல் போய் விடுகின்றன.  போகட்டும்.

சமஸின் நீர் நிலம் வனம் ஒரு அற்புதமான கட்டுரைத் தொடர். எக்ஸைல் 1700 பக்கங்கள் வந்துள்ளது.  அதில் சுமார் 700 பக்கங்கள் விலங்குகள் பற்றித்தான் எழுதியிருப்பதாக நினைக்கிறேன்.  ஆக, எக்ஸைல் நாவலுக்கும் இந்தத் தொடருக்கும் ஒரு சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.  திமிங்கிலங்கள் பற்றிய பல்வேறு விஷயங்களைச் சொல்கிறார் சமஸ்.  திமிங்கிலங்களும் பெரிய மீன்களும் மீனவர்களின் சத்தியத்துக்குக் கட்டுப்படுகின்றனவாம்.  அந்த மீன்களைக் கண்டதும் கை கூப்பி பிரார்த்தனை செய்து விட்டு (என்ன பிரார்த்தனை என்று கட்டுரையில் பாருங்கள்) ஊம்ம்ம்ம்ம்… என மெல்லமாக அழுவது போல் ஓசை தந்தால் பெரிய மீன்கள் தானாகப் போய் விடும் என்று மீனவர்கள் நம்புகிறார்கள்.  சமஸின் கட்டுரையில் இன்று நான் படித்த தகவல் இது.  இதே போன்ற ஒரு கட்டத்தில் தான் 1700-ஆவது பக்கத்தில் நான் எக்ஸைலை முடித்திருக்கிறேன்.  என்ன கட்டம் அது, அது என்ன மீன் என்றெல்லாம் நாவலில் பாருங்கள்.  மனிதனுக்கு முன்னே இருக்கும் பிரம்மாண்டமான பிரபஞ்ச சக்தியையும், மனிதனை விட அதிவல்லமை கொண்ட விலங்குகளையும் – ஒரு திமிங்கிலம் நாற்பது யானை எடை இருக்குமாம் – மனிதன் எப்படி எதிர் கொள்கிறான் என்று சமஸின் கட்டுரை பேசுகிறது. 1700 பக்கங்களில் நானும் அதைத்தான் முயற்சி செய்திருக்கிறேன்.

 

Comments are closed.