அபிராமி

நாகேஸ்வர ராவ் பூங்காவில் வாக்கிங் முடித்து விட்டு சரியாக காலை எட்டு மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ராகவனும் நானும் பூங்காவை அடுத்து உள்ள மஹாமுத்ரா உணவகத்துக்கு காப்பிக்குப் போய் விடுவோம்.  நாங்கள்தான் எப்போதும் முதல் வாடிக்கையாளர்கள்.  அன்றைய தினம் காலையில் வாக்கிங் போக முடியாததால் மாலை ஆறு மணி அளவில் போனேன். மாலை நேரமாதலால் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.  இந்தியாவில் சமையல் வேலை உட்பட வீட்டு வேலைகள் யாவும் பெண்களே செய்வதால் அவர்களால் காலையில் வர முடிவதில்லை என்பதை இத்தனை நாள் நடைப் பயிற்சி வாழ்க்கையில் நான் அவதானித்து வைத்திருக்கிறேன்.  காலையில் நடக்கும் பெண்கள் ரொம்பவே அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும்.

வாக்கிங்கை முடித்து விட்டு மஹாமுத்ராவுக்குச் சென்ற போது மணி ஏழரை இருக்கும்.  வெட்ட வெளி அரங்கம்.  சுற்றிலும் அடர்த்தியான மரங்கள்.  பலா மரத்தில் அடிப்பகுதியிலிருந்தே நெருக்கமாக காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன.  உணவரங்கில் ஒரு மூலையில் நடுத்தர வயதுள்ள ஒருவர் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  நான் வழக்கமாக அமரும் நாற்காலியில் அமர்ந்தேன்.  அங்கே அமர்ந்தால் அங்கிருக்கும் அத்தனை மரங்களையும், வந்து போகிறவர்களையும் நன்றாகப் பார்க்க முடியும்.  காப்பி ஆர்டர் சொல்லி விட்டு நிமிர்ந்த போது ஒரு முப்பத்தைந்து வயதுள்ள பெண் உள்ளே வந்து சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, என் எதிரே இருந்த நாற்காலிக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்தார்.  அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  மூலையில் காப்பி குடித்துக் கொண்டிருந்த நபரும் போய் விட்டிருந்தார்.  அந்த இடமே முற்றிலும் காலியாக இருந்தது.  அப்படி இருக்கும் போது இந்தப் பெண்மணி ஏன் இந்த இருக்கையைத் தேர்ந்தெடுத்தார் என்று குழம்பினேன்.

வாழைப்பூ வடை சொல்லி விட்டு எங்கேயோ பார்த்தார்.  பார்ப்பதற்கு தி. ஜானகிராமனின் கதாபாத்திரம் ஒன்றை நேரில் பார்ப்பது போல் இருந்தது.  அந்தக் கால மோஸ்தரில் புடவை; காதணிகள், மூக்குத்தி.  நெற்றித் திலகம் கூட ஒரு நூற்றாண்டு பிந்தியிருந்தது.

யார் இந்தப் பெண்மணி?  இவர் ஏன் இங்கே தனியாக வந்திருக்கிறார்? இவ்வளவு காலி இருக்கைகளை விட்டு விட்டு ஏன் இங்கே வந்து என் எதிரே அமர வேண்டும்? இது போன்ற மேட்டுக்குடி உணவகங்களில் பெண்களை நான் தனியாகப் பார்த்ததில்லை. காப்பி வரும் வரை என்ன செய்வதென்று தெரியவில்லை.  அந்தப் பெண்மணியின் பக்கம் பார்வை சென்று விடாமல் இடப்பக்கம் பார்த்தேன்; வலப்பக்கம் பார்த்தேன். மேலே பார்த்தேன்.  அட… இதென்ன, முழு நிலவு.  ஆனால் முழுசாகப் பார்க்க முடியாமல் மரக்கிளைகள் குறுக்கே பாய்ந்தன. காப்பி வந்தது. குடித்தேன். அவந்திகாவுக்கு வாழைப்பூ வடை எடுத்துப் போகலாம் என்று ஆர்டர் செய்தென்.  வரும் நேரம் வரை மறுபடியும் என்ன செய்வதென்று தெரியாமல் ஆகாயத்தையும் மூன்று திசைகளையும் பார்க்க ஆரம்பித்தேன்.

அதிக நேரம் எடுத்துக் கொண்டது போல் தோன்றியது.  ம்ஹும். தனியாக வந்திருப்பதால் அப்படித் தோன்றுகிறது.  ஆற அமர அமர்ந்து பேசுவதற்கான உணவகம் அது.

எப்போதாவது அந்தப் பெண்மணியைப் பார்க்க நேர்ந்தால் அவரும் அதே சமயம் என்னைப் பார்த்தார்.

வடை வந்தது.  காசு கொடுத்து விட்டு எழுந்து கொள்ளும் போது “உங்கள் எழுத்துக்களைப் படித்ததில்லை; டிவியில் நீங்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.  நான் என்ன நினைக்கிறேனோ அதையே பேசுகிறீர்கள்.  என்ன பேசுவது என்று தெரியாததால்தான் இவ்வளவு நேரம் சும்மா இருந்தேன்.  இப்போது நீங்கள் கிளம்புவதைப் பார்த்ததும் பேசாமல் இருக்க முடியவில்லை” என்று புன்முறுவலுடன் சொன்னார் அந்தப் பெண்மணி.

பெயர் என்ன என்றேன்.  அபிராமி என்றார்.

***

இன்று இரவு ஒன்பது மணிக்கு புதிய தலைமுறை சேனலில் புத்தக விழா பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொள்கிறேன்.

 

Comments are closed.