புத்தகத் திருவிழா – 1

இன்று மாலை (28 டிசம்பர்) நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது வரை ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். அரங்கு எண் 540 – 541.

என்னுடைய எழுபது நூல்கள் ஸீரோ டிகிரி அரங்கிலும் ஒரு நூல் ஆட்டோ நேரட்டிவ் அரங்கிலும் கிடைக்கும்.

ஒரு நூல் 300 பிரதி விற்றால் 71 x 300 = 21300 ஆகிறது. ஒரு நூலுக்கு இருபது ரூபாய் ராயல்டி என்றாலும் சில லட்சங்கள் கைக்கு வரும்.

அப்படி விற்காமல் பத்து இருபது என்று விற்றிருந்தால் என் இலக்கியப் போராட்டத்தின் ஒரு பகுதியாக புத்தக விழா முடியும் அன்று புத்தகத் திருவிழா அரங்கின் வாசலில் லங்கோடு அணிந்தபடி சாட்டையால் அடித்துக் கொள்வேன். வேட்டி அணிந்தால் உடம்பின் மேல் பகுதியில்தான் சாட்டை அடி விழும். அதனால் என் தேகம் பூராவும் அடி விழ வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு. சாட்டைக்கு ஏற்பாடு செய்து விட்டேன்.

இந்த அறப் போராட்டத்துக்கு என் சக எழுத்தாளர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க முடியாது. இதற்கு முன்னோடியாக இருந்த அண்ணாமலை சாருக்கு என் வந்தனம். என் அட்மின் ஸ்ரீராம் இந்தப் போஸ்டை அண்ணாமலை சாருக்கு tag பண்ணும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வாசகர்களாகிய நீங்கள் என்னுடைய இந்த அறப் போராட்டத்தை முறியடிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் போராட்டத்தின் தோல்விதான் எனக்கு உண்மையில் ஜெயம். ஜெய்ஹிந்த்!!!