இன்று மாலை சந்திக்கலாமா? – சிறுகதை

கடந்த பத்து ஆண்டுகளில் வீட்டு நிலைமை வெகுவாக மாறி விட்டது.  தலைகீழாய் மாறி விட்டது என்று சொன்னால்தான் கச்சிதமாக இருக்கும்.  

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வாரம் இரண்டு முறை மதியம் பன்னிரண்டு மணி அளவில் பார்க் ஷெரட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாரில் நண்பர் மணியை சந்திப்பேன்.  கூட நண்பர்களும் இருப்பார்கள்.  பிறகு அந்த இடத்தை டென். டௌனிங் என மாற்றினோம். ஒரு காலத்தில் என் வீட்டைப் போல் இருந்த வெஸ்ட்மின்ஸ்டர் பார் என்ற புனித ஸ்தலத்தைக் கொண்டிருந்த – அந்த ஸ்தலத்தில் அமர்ந்துதான் இரண்டு ஆண்டுகள் ராஸ லீலா நாவலை எழுதினேன் – பார்க் ஷெரட்டன் ஓட்டல் இன்று தரைமட்டமாக்கப்பட்டு விட்டது.  எனது இன்னொரு அகமாக இருந்த பார்க் ஓட்டல் (நுங்கம்பாக்கம்) சினிமா நடிகைகள் தங்களின் அறுபது வயதுக்கு மேல் எப்படி இருப்பார்களோ அப்படிக் காட்சியளிக்கிறது.  வாழ்ந்து கெட்ட வீடுகூடத் தேவலாம்.  அத்தனை மோசம். 

டென்.டௌனிங் காலகட்டத்தில் ஒரு நாள்.  வீட்டுக்குத் திரும்ப மாலை ஐந்து ஆகி விட்டது.  கடுமையான போதை.  வந்ததும் படுத்துத் தூங்கி விட்டேன்.  ஏழு மணி அளவில் ஒரு தொலைபேசி அழைப்பு.  சீனி. 

“நாங்கள் வடபழனி க்ரீன்பார்க் ஓட்டலில் இருக்கிறோம்.  வர முடியுமா?”

உடனே முகத்தைக் கழுவிக் கொண்டு கிளம்பி விட்டேன்.   திரும்புவதற்கு அதிகாலை ஆகி விட்டது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டில் இத்தனை கூத்துகளுக்கும் இடம் இருந்தது.  அதற்குப் பின்னால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, எல்லாமே தலைகீழாக மாறி விட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் வளன் அரசுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு.  அப்போது அவன் அமெரிக்காவிலிருந்து விடுமுறையில் இந்தியா வந்திருந்தான்.  அவனை நான் அந்த விடுமுறையில் சந்தித்திருக்கவில்லை. 

“அப்பா, உங்கள் வீட்டுக்குக் கீழே இருக்கிறேன்.  ஒரு ஐந்து நிமிடம் சந்திக்க முடியுமா?”

“முடியவே முடியாது தம்பி.  வீட்டில் சுனாமி அடித்துக்கொண்டிருக்கிறது.  நீ அடுத்த முறை இந்தியா வரும்போது சந்திக்கலாம்” என்று இறுக்கமான, ரகசியமான குரலில் சொல்லி விட்டு ஃபோனை வைத்து விட்டேன்.

”ஃபோனில் யார்?  மறுபடியும் ஊர் சுற்றப் போகப் போகிறாயா?”

“இல்லை.  விளம்பரம்.”

என்ன காரணம் என்றால், முந்தின நாள்தான் வெளியூரிலிருந்து திரும்பியிருந்தேன்.  அதில் என்ன பிரச்சினை?  இரண்டு தின்ங்களுக்கு முன்பே திரும்பியிருக்க வேண்டும்.  இரண்டு தினங்கள் தாமதம். அதனால்தான் அந்த சுனாமி.

தில்லி சிவில் சப்ளைஸில் ஸ்டெனோவாக இருந்தாலும் நான் ஒரு தாதா போல் இருந்தேன்.  காரணம், நான் மட்டுமே அங்கே இருந்த உருப்படியான ஆங்கில ஸ்டெனோ.  ஒரு பிழையில்லாமல் டிக்டேஷன் எடுத்து தட்டச்சு செய்து கொடுப்பேன்.  அந்தக் குறிப்பு இந்திரா காந்தி வரை போகும்.  நான்கைந்து பக்கக் குறிப்புகளாக இருக்கும். ஒரு பிழை இருக்காது.  அதனால் எனக்கு என்ன பாதகம் என்றால், ஊருக்குப் போய் விட்டுத் தாமதமாகத் திரும்பினால் எல்லா அதிகாரிகளும் என்னை ஏதோ கொலைகாரனைப் போல் பார்ப்பார்கள்.  பிறகுதான் சிமெண்ட் பிரிவுக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு அந்தத் தலைவேதனையிலிருந்து தப்பினேன்.  சிமெண்ட் பூராவும் பணமாகக் கொட்டியது.  என்னை யாரும் கேட்கவில்லை.  நான் செண்ட்ரல் செக்ரடேரியட் லைப்ரரி பக்கம் தப்பினேன்.

அப்படித்தான் வீடும். 

”டிசம்பர் 21, 22 தேதிகளில் நீ பாட்டுக்கு பெட்டியைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விடாதே, அந்த ரெண்டு நாளும்தான் எனக்கு செமினார்.  நான் போயே ஆக வேண்டும்” என்று சொல்லியிருந்தாள் அவந்திகா.  சொன்னது ஜூன் வாக்கில்.  அதாவது ஆறு மாதங்களுக்கு முன்னரே எச்சரிக்கை கொடுத்து விட்டாள்.

இன்னொன்றும் சொல்ல வேண்டும்.  இதுவரை நான் 150 நூல்கள் எழுதியிருக்கிறேன்.  வரும் மார்ச்சில் என்னுடைய முப்பத்தைந்து நூல்கள் வருகின்றன.  இருபத்தைந்து அல்ல.  முப்பத்தைந்து.  இந்த 150 நூல்களையும் எழுத முடிந்ததற்கு முக்கியமான காரணம் அவந்திகா.

நாங்கள் இருவரும் கடல்கரை சென்றதில்லை.  வீட்டின் கொல்லைப்புறத்திலேயே கடல் இருந்தும்.  சினிமாவுக்குப் போனதில்லை.  ஒரே ஒரு சினிமாதான்.  அது பாபா.  அதுவும் நாங்கள் செல்லும்போது இடைவேளை விட்டு விட்டார்கள்.

ஓட்டலுக்குப் போனதில்லை.

கோவிலுக்குப் போனதில்லை.

புடவை எடுக்கப் போனதில்லை.

கல்யாணத்துக்குப் போனதில்லை.

கருமாதிக்கும் போனதில்லை.

என் மகன் கல்யாணத்துக்கே காலையில் போய் மாலையில் திரும்பி விட்டேன்.  கல்யாணம் மும்பையில். 

அவந்திகாவுக்கு வீடுதான் சொர்க்கம் என்பாள்.  ஆனால் அவளால் தனியாக இருக்க முடியாது.  நான் இருக்க வேண்டும்.  இருந்தால் வீடுதான் சொர்க்கம்.

எனக்கு இதுவரை மின்சார பில் கட்டும் அட்டை எப்படி இருக்கும் என்று தெரியாது.  ரேஷன் கார்டைப் பார்த்ததில்லை.  மளிகைக்கடைக்கோ காய்கறிக் கடைக்கோ போனதில்லை.

இதனால் மட்டுமே 150 நூல்களை என்னால் எழுத முடிந்தது.

இப்படி வாழும் அவந்திகாதான் டிசம்பர் 21, 22இல் ஊருக்குப் போகாதே, போனால் தொலைத்து விடுவேன் என்றாள்.

அவளுக்கு அந்த ஆன்மீகக் கூடுகைதான் உயிர்.

ஆனாலும் நான் டிசம்பர் 21, 22இல் கோவா போய் விட்டேன்.

புருஷன் வெளியீட்டு விழாவுக்கு பல ஊர்களிலிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள்.  அப்படி ஒரு வெளியீட்டு விழா நடக்கவே சாத்தியம் இல்லை.  ஐம்பது பேர்.  நான் ஒரு இரண்டு வாரம் படித்து குறிப்புகள் எடுத்திருக்கிறேன். கிறிஸ்துமஸ் என்பதால் எல்லோருக்கும் விடுமுறை.  அதுதான் முக்கியம்.  என் ஒருவனுக்காகத் தேதி மாற்றுவதெல்லாம் யோசிக்கவே முடியாதது.  மேலும், இந்த மாதம் முழுவதும் நான் இலக்கிய விழாக்களுக்காக சுற்றிக்கொண்டிருந்தேன்.

அவந்திகா ஒவ்வொரு ஆண்டும் செல்லும் செமினாருக்கு இந்த ஆண்டு செல்ல முடியாமல் போனது பற்றி எனக்கு எந்தக் குற்ற உணர்வும் ஏற்படவில்லை.  ஏனென்றால், பணிப்பெண்ணை வர வேண்டாம் என்று சொல்லி விட்டு காலையில் கிளம்பிச் சென்றால், இரவு எட்டு மணிக்குத் திரும்பி விடலாம்.  செமினார் ஒன்றும் சந்திர மண்டலத்தில் நடக்கவில்லை.  சென்னையில்தான் நடக்கிறது.  பூனைகளுக்கு உணவை வைத்து விட்டால் அவை பாட்டுக்கு சாப்பிட்டு விட்டு ஒரு பக்கம் தூங்கிக்கொண்டிருக்கும்.  பன்னிரண்டு மணி நேரம் அவை தனியாக இருக்கும்.

என் சிநேகிதி நாற்பத்தைந்து பூனைகளும் இருபத்தைந்து நாய்களும் வளர்க்கிறாள். பெங்களூர், மும்பை, தில்லி என்று இலக்கிய விழாக்களுக்குப் பறந்து கொண்டுதான் இருக்கிறாள்.  அவளுடைய செல்லங்கள் ஒரு பகல், ஒரு இரவு தாங்கும்.  தனி வீடு.  தோட்டம் உண்டு.  பராமரிப்பாளர் இல்லை. 

அப்படிச் செல்ல அவந்திகாவுக்கு மனம் இல்லை.

பொதுவாகவே பெண்களிடம் ஒரு குணத்தைக் காண்கிறேன்.  தன் மேல் தப்பை வைத்துக்கொண்டு ஆண்களை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தி மன்னிப்புக் கேட்க வைப்பது.  இதற்கு விதிவிலக்காக நான் ஓரிரு பெண்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். 

இப்படிப்பட்ட சூழலில் என் வீட்டுக்கு நான் யாரையும் அழைப்பது கனவில்கூட நினைக்க முடியாதது.  ஏன், என் நண்பர்கள் யாரும் எனக்கு ஃபோன்கூட செய்ய முடியாது.  ஒருநாள் சீனி எனக்கு ஃபோன் செய்த போது, அதை அவந்திகா எடுத்து, “இனிமேல் சாருவுக்கு ஃபோன் செய்யாதீர்கள்” என்று மிக்க் கடுமையான குரலில் சொன்னதும் நடந்தது.  நான் பக்கத்தில்தான் இருந்தேன்.  வாயே திறக்கவில்லை. 

காரணத்தை அன்பு நாவலில் எழுதியிருக்கிறேன்.

இம்மாதிரியான ஒரு சிறைச்சாலையில் வாழும் நான் மூன்று நண்பர்களிடம் “இன்று மாலை சந்திக்கலாமா?” என்று கேட்டேன்.

நான் வெளியே செல்வது சிறையில் பரோல் வாங்குவது போல.  அப்படிப்பட்ட நான் கேட்டேன்.  இன்று மாலை சந்திக்கலாமா? இன்று வீட்டு வேலை இருக்கிறது என்றார் ஒரு நண்பர்.  இது நடந்தது மூன்று மாதங்களுக்கு முன். 

ஒரு பதினைந்து நாள் இடைவெளி விட்டு மீண்டும் கேட்டேன்.  அப்போதும் அவருக்கு வேறு வேலை இருந்தது.  நானே ஃபோன் பண்ணுகிறேன், சந்திக்கலாம் என்றார்.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாரம் மூன்று முறை சந்தித்துக்கொண்டிருந்தோம்.

இப்போது அவருக்கு என்னை சந்திக்கத் தோன்றவில்லை என்றால் அதை நான் மதிக்கிறேன்.  மூன்று மாதங்கள் ஆகியும் அவரிடமிருந்து சந்திப்பு பற்றி அழைப்பு வரவில்லை. இனிமேல் வரும் என்று தோன்றவில்லை. இத்தனைக்கும் என் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டரில்தான் அவர் வீடு.

இன்னொரு இளைஞனை இரண்டு தினங்களுக்கு முன்பு மிகவும் தனிமையாகத் தோன்றிய ஒரு நாளில் கேட்டேன். 

இன்று மாலை சந்திக்கலாமா?

எங்கே?

என் வீட்டில்தான்.

உங்கள் வீட்டில் பூனை முடியாக இருக்குமே?  மேலும், நாம் சந்தித்து என்ன பண்ணுவது?

ஏய்யா நீ சீனியை சந்தித்து என்னய்யா பண்றே?  நாம் என்ன ஹோமோசெக்ஸா, சந்தித்து எதாவது பண்ணுவதற்கு?  என்னய்யா பேசறே?

அதற்கு இல்லை, பூனை முடிதான் பிரச்சினை.

பிறகு இன்னொருவரைக் கேட்டேன்.

அவர் பெண்.  அவரை நான் ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவில்தான் சந்திக்க முடிகிறது.  என் தெருவுக்குப் பக்கத்துத் தெருவில்தான் வசிக்கிறார்.

புத்தகத் திருவிழாவிலும் பிரச்சினை என்னவென்றால், அவரைச் சுற்றிலும் ஒரே பூமர் கூட்டம்.  அதனால் பேசக் கூட முடிவதில்லை.

அவர் சொன்னார், நாளை புத்தகத் திருவிழா ஆரம்பம் சாரு.  அரங்கு வேலையெல்லாம் எப்படி நடந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

சரி.

கார்ல் மார்க்ஸ் கடல் கடந்த ஒரு தேசத்தில் வாழ்கிறார்.  வாஸ்தோ இந்தியாவின் தென்னெல்லையில் வசிக்கிறார்.  அவர்களையெல்லாம் ஆண்டுக்கு ஆண்டு புத்தகத் திருவிழாவில் சந்திப்பது நியாயம்.  என் தெருவுக்குப் பக்கத்துத் தெருவில் வசிப்பவரையும் புத்தகத் திருவிழாவில்தான் சந்திக்க வேண்டுமா?  அதிலும் நான் யார்?  ஒரு சிறைக் கைதி.  நான் ஒருவரை சந்திப்பது, சாய் பாபா கருணாநிதி வீட்டுக்குச் சென்றதைப் போல.  ஆயுள் காலத்தில் சாத்தியமில்லாத அதிசயம். 

சரி, நான் அழைக்கும் நேரத்தில் உங்களுக்கு வேலை இருக்கிறது.  நான் அழைத்த தினத்துக்கு மறுநாள் புத்தகத் திருவிழா ஆரம்பம். 

சரி.

ஆனால் இப்போது பந்து உங்கள் பக்கம் இருக்கிறது.

என்ன பிரச்சினை என்றால், அடுத்த புத்தக விழா வரை பந்து என் கோர்ட்டுக்கு வரவே வராது.  வந்திருந்தால் இதை நான் எழுதியே இருக்க மாட்டேன்.

ஆனால் வாஸ்தோ சொன்னார், கவலையை விடுங்கள் சாரு, எக்ஸை (பெயர் சொன்னால் வம்பு!) நாம் பூமர்களிடமிருந்து காப்பாற்றி விடுவோம்.

ம்ஹும்.  முடியாது வாஸ்த்தோ.  இளைஞர்களிடமிருந்து கூட காப்பாற்றி விடலாம்.  பூமர்களிடமிருந்து முடியவே முடியாது. 

ஆள் யார் என்று கேட்காதீர்கள், உயிரே போனாலும் சொல்ல மாட்டேன்.  மன்னிப்பு கேட்டுக் கேட்டு அலுத்து விட்டது. இந்த முறை மாட்ட மாட்டேன்.  உங்களாலும் கண்டே பிடிக்க முடியாது.