புகையும் பால்கனி

நண்பர்களோடு
தங்கியிருந்த அறையின்
பின்புற பால்கனி

அதன்கீழே எப்போதும்
சுநாதமெழுப்பியபடி
ஓடிக்கொண்டிருக்குமோர்
ஓடை

எட்டிப் பார்த்தால்
அச்சமூட்டாத
சிநேகமான அருவி

அடர் வனத்தில்
சூரியனைக் காண
முடிவதில்லை

காலை பத்து மணியிருக்கலாம்
யாரும் எழுந்துகொள்ள
வில்லை

பால்கனியில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருக்கிறேன்

மரங்களோடும்
அருவிகளோடும்
நதிகளோடும்
பிராணிகளோடும்
வாழ்ந்திருந்த மனிதன்
இப்படி
நகரமயத்தினின்றும் விலகி வந்துதான்
இதையெல்லாம்
எட்டிப் பார்க்க முடிகிறது

அப்போது பெருத்தவுடல்
கொண்டவொரு குரங்கு
பால்கனியின் இரும்புக்கம்பியில்
குதித்தமர்ந்து
“பசி..பசி” என்றது

அறைக்குள் சென்று
பழுத்து முதிருந்திருந்தவொரு
பப்பாளியைக் கொண்டு வந்து
கொடுத்தேன்

தட்டிப் பறிப்பது போல்
பிடுங்கிக்கொண்டு
கிளம்பியது

வாய்விட்டு
“ஒரு நன்றி சொல்ல வேண்டாமா?”
எனத் துணுக்குற்றேன்

“ம்ஹும்
” நவில்வதும்
மறப்பதும்”
மானுடத்தின் இயல்பன்றோ?”
எனச் சிரித்தவாறே
அகன்றது
அந்த மந்தி.