எரியும் உண்மை


பயணிகளின் கூட்டமற்ற
ஒரு பருவம்
வங்காள விரிகுடாவின்
ரௌத்திரத்துக்கு மாறாக
ஆரவாரமற்ற அமைதியான
அரபிக்கடல்

கோவாவின் அஞ்ஜுனா கடற்கரையில்
நண்பர்கள் வட்டமாக
மணலில் அமர்ந்திருக்கிறோம்
கைகளில் மதுக்கோப்பை
மணல் குறுகுறுப்பாக உரச
அது ஒரு வித்தியாசமான அனுபவம்

ஆளாளுக்கு எது பிடிக்குமென்று
சொல்ல வேண்டுமென்றான் ஒருவன்.

இசை என்றார் ஒருவர்,
பெண்கள் என்றார் மற்றொருவர்
பயணம்
வாசிப்பு
அதற்கு மேல் ஏதுமில்லை
அற்புதங்கள் அருகிப்போன
மனித வாழ்வு.

சுற்று என் பக்கம் வந்தபோது,
மது என்றேன்
அது நாக்கில் கசந்து
தொண்டையை எரிக்கையில்,
ஆன்மா ஒரு கணம் குளிர்கிறது.
வெறுமைக்கும் அபத்தத்துக்கும்
குடியே பதில் –
தற்காலிகமானாலும்,
எரியும் உண்மையானாலும்.

இப்படிச் சொல்லி,
என் கோப்பையை உயர்த்தியபோது,
ஒருவன் கேட்டான்:

“இதற்குப் பின்னால் ஒரு கதை
இருக்க வேண்டும், அதைச் சொல்.”

நான் மௌனித்து,
கடலைப் பார்த்தேன்—
அமைதியான அரபிக்கடல்.
“அவள்” என்றேன்.