கடிதம் குறித்த எதிர்வினைகள்…(1)

அன்புள்ள சாருவுக்கு,
நீங்கள் கமலுக்கு எழுதிய கடிதம் படித்தேன். மிகுந்த  மனவருத்தம் அடைந்தேன். எப்படி இந்த அளவுக்கு ஒருவரை உதாசீனம் செய்ய முடியும் என்று தெரியவில்லை. அன்பின்  மொத்த உருவம் நீங்கள் என்பது உங்கள் எழுத்தைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும். சில விஷயங்களை அதிகம் யோசித்தால் நிம்மதி குலையும். இந்த சம்பவமும் அப்படிப்பட்ட  ஒன்று. எனது பணிவான கோரிக்கை இதுவே – தயவு செய்து எந்த “பெரிய” மனிதரிடமும் நீங்கள் அன்பை காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன். இதனை மிகுந்த மன வருத்தத்திலேயே எழுதுகிறேன்.  எனக்கு ஒன்று படுகிறது – உங்களிடம் இவ்வாறு நடந்து கொள்பவர்கள் நிச்சயமாக உங்களின் ஒரு புத்தகமும் படித்திருக்க மாட்டார்கள்.
உங்களின் ஸீரோ டிகிரி-யை படித்திருந்தால், அதில் சூர்யா ஜெனிசிஸ்-க்கு எழுதிய கடிதங்களை படித்திருந்தால் அவர்கள் சக மனிதர்களிடம் மிகுந்த அன்புடன் நடந்து கொள்வார்கள். அன்பின் உயிர் அல்லவா சூர்யாவின் கடிதங்கள்!

உங்களின் அன்பன்,
ராமசாமி.
அன்புள்ள ராமசாமி,
இந்தச் சம்பவத்தைப் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன்.  ஆனால் ராஸ லீலா பிரதியில் பிழை திருத்தம் செய்து கொண்டிருந்த போது Ran படத்தின் காட்சியைப் படித்தவுடன் எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றியது.  மற்றபடி என் இலக்கெல்லாம் ஆங்கிலச் சூழலுக்கு மாறி விட வேண்டும் என்பதுதான்.  எந்தச் சம்பவத்தையும் நினைத்து மனதை வருத்திக் கொள்வது எனக்குப் பிடிக்காது.  எனவே கவலை வேண்டாம்.  தமிழ்ச் சூழலை விட்டு மாறி விட வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருக்கிறது.  அதற்கான கடும் முயற்சிகளில் இருக்கிறேன்.
சாரு
அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு,
உங்கள் ரசிகனின் ஒருவனான அருண் எழுதுகிறேன்.  எனக்கு சொந்த ஊர் நாகர்கோயில். பிறந்து வளர்ந்தது மதுரையில்..பிடித்த ஊரும் அது தான். இயல்பாகவே எனக்குப் படிக்கும் ஆர்வம் உண்டு. என் வீட்டில் என்னையும் அம்மாவையும் தவிர யாருக்கும் இப்பழக்கம் இல்லை என்பது வருத்தம்.  ஆரம்பத்தில் வார இதழ்களை படித்து பின் புத்தகங்களை தொட்டேன்..நான் இது வரை முழுமையாகப் படித்த புத்தகங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் ..ஆமாம்…
நான் இந்த கடிதத்தை எழுதிய காரணம் என்னவென்றால், நான் உங்களால் கவரப்பட்டேன் ,பல வாசகர்களைப் போல…உண்மையைச் சொன்னால் ,நான் உங்கள் புத்தகம் ஒன்று கூட படித்ததில்லை…அப்புறம் என்ன டா கவரப்பட்டாய் என்று நீங்கள் கேட்கக்கூடும்…படிக்காததற்கு தயவு செய்து மன்னியுங்கள்…நான் உங்கள் ப்ளாக்  படிக்கிறேன்…அதில் நீங்கள் கூறும் கருத்துக்கள் ஆணித்தரமாக இருக்கிறது…அதுவே என்னை இழுத்தது…ஒரு எழுத்தாளன் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்..உங்களின் தோற்றம் தனித்துவமாக இருக்கிறது ..வெள்ளை பிரெஞ்சு தாடி ,ரிம்லெஸ் கண்ணாடி ..செம்மையாக இருக்கிறது ..நான் உங்கள் ராஸ லீலா வைப் படித்து விட்டுத் தான் உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன்…அனால்,உங்களிடம் பேசவேண்டும் என்ற ஆவல் என்னை எழுத வைத்து விட்டது…நேற்று நீங்கள் கமல்ஹாசன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தை படித்தேன்….நிறைய தகவல்களைப் பெற்றேன் ..குறிப்பாக,granta புக்ஸ்.அப்படி ஒன்று இருப்பதே நேற்று தான் தெரியும்…நான் கமல் அவர்களின் தீவிர ரசிகன்…
இருப்பினும் அவர் அப்படி நடந்து கொண்டது வேதனை தான்…அடுத்ததாக,நீங்களும் அராத்து அவர்களும் rohtang பாஸ் சென்ற வீடியோ பார்த்தேன்…மிகவும் அற்புதமான இடம் …நான் என் நண்பர் இரண்டு பேருடன் இன்னும் 10 நாட்களில் அங்கே செல்கிறேன் ஐயா ..பூரிப்பாக இருக்கிறது…ஆகையால் ,எனக்கு நல்ல டிப்ஸ் அது சம்பந்தமாக ஏதேனும் இருந்தால் கூறுங்களேன் …(உங்களுக்கு நேரம் இருந்தால்)  வாசகர்களின்  தேவை இல்லாத விமர்சனங்களைப் பார்த்து மனம் நொந்து போகாதீர்கள்..உங்களைப் போன்ற எழுத்தாளன் மிக மிகக் குறைவு…எங்களுக்கு உங்கள் சித்தாந்தம் வேண்டும்…பழுத்த மரத்துக்குத் தான் கல்லடி…என்று நினைத்துக் கொள்ளுங்கள்…உங்கள் படைப்புகள் தொடர வேண்டும்.
வணக்கம்..
என்றும் அன்புடன் ,
அருண்குமார் .சோ

Comments are closed.