Cradle of Filth பற்றி ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன்,

எனக்கு எம்.கே.டி., பி.யு. சின்னப்பாவிலிருந்து துவங்கி நடுவில் பி.பி. ஸ்ரீனிவாஸ், மலேஷியா வாசுதேவன், டி.எம்.எஸ்., டி.ஆர். மகாலிங்கம், இளையராஜா மற்றும் இப்போதைய கார்த்திக் வரை எல்லா பாடகர்களையும் பிடிக்கும்.  எஸ்.பி.பி.யையும்தான்.  அதே போல் டாகர் பிரதர்ஸ், கங்குபாய் ஹங்கல், மல்லிகார்ஜுன் மன்ஸூர், பண்டிட் ஜஸ்ராஜ், மற்றும் கர்னாடக சங்கீதத்தில் உள்ள அத்தனை பேரும் என்று சுமார் ஐநூறு கலைஞர்களைப் பிடிக்கும்.  பிஸ்மில்லா கான் என் கடவுள்.

இதே போல் மேற்கத்திய சங்கீதத்தில் உள்ள எல்லோரையும் பிடிக்கும்.  ரொம்பப் பிடித்தவர்  மொஸார்ட்.  அதிலும் அவருடைய மரண சங்கீதம்.  அதேபோல் ட்சைக்காவ்ஸ்கி.  வாக்னர்.  அதேபோல்  பீத்தோவன்.  சரி, பாப் இசையில் மைக்கேல் ஜாக்ஸன்.   அதேபோல், மரியா கேரி, பீஜீஸ், ஜஸ்டின் பீபர், ப்ரிட்னி, பெயான்ஸ், ரிஹான்னா  என்று பெரிய பட்டியல் போடலாம்.

இப்படிப்பட்ட சங்கீத ரசிகனான எனக்குப் பின்வரும் குழுவையும்  என் உயிருக்கு உயிராகப் பிடிக்கிறது.  இந்தக் குழுவைப் பிடித்தவர்கள் எனக்குத் தெரிந்து 25 வயதுக்குள் தான் இருக்கிறார்கள்.  இந்த இசையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?  ரசிக்க முடிகிறதா?  முடியவில்லை எனில் ஏன்?  இந்தக் குழுவை ஏன் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களும் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனும் கொண்டாடுகிறார்கள்?  இவர்களின் குரல் நாம் இதுவரை இசை என்று நம்பி வந்த குரலுக்கும் இசைக்கும் நேர் எதிராக இருக்கிறதே ஏன்?  குப்பை என்று இதை ஒதுக்கி விட முடியுமா? இலக்கியம் என்பது உலகம் முழுவதும் பொதுவாக இருக்கிறது.   ஆஃப்ரிக்க இலக்கியத்தை நம்மால் ரசிக்க முடிகிறது.  லத்தீன் அமெரிக்க இலக்கியம் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.  ஆனால் எமினெம், cradle of filth போன்ற குழுக்களின் இசையை தமிழ்ச் செவிகளால் ஏன் ரசிக்க முடியவில்லை?  தமிழ்ச் செவி என்பது 30 வயதுக்கு மேற்பட்ட செவி.   ஒருநாள் நான் கவிஞர் ஆனந்தோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு மணி நேரம் போல் பல இசைக் கலைஞர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவர்கள் அனைவரும் எனக்குப் பிடித்தவர்கள்.  மேலே உள்ள சாஸ்த்ரீய சங்கீதக் கலைஞர்கள்.  ஒரு மணி நேரம் சென்று cradle of filth, எமினெம் பற்றிக் குறிப்பிட்டேன்.  என் மகன் இதையெல்லாம் கேட்டு நான் பார்த்திருக்கிறேன் என்றார் கவிஞர் ஆனந்த்.  அப்படியானால் நான் உங்கள் மகனோடுதான் பேச வேண்டும் என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

காமரூப கதைகள் நாவலில் க்ரேடில் ஆஃப் ஃபில்த் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.

டியர் ஜெ, இதை உங்களுக்கு வரும் எண்ணற்ற வாசகர் கடிதங்களில் ஒன்றாகக் கருதி உங்கள் ப்ளாகில் பதில் சொன்னால் மகிழ்ச்சி அடைவேன்.

ஒன்றுமில்லை…  எதிர்ப் பக்கத்தை நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன்.  சரி, உங்களுக்கு ஏன் இந்த இசை பிடித்திருக்கிறது என்று நீங்கள் என்னைக் கேட்டால் எனக்கு பதில் தெரியாது.  எனக்குப் பிடித்திருக்கிறது.  முத்துஸ்வாமி தீட்சிதரை எந்த அளவுக்குப் பிடித்திருக்கிறதோ அதே அளவுக்கு எமினெம், க்ரேடில் ஆஃப் ஃபில்த் போன்ற இசையையும் பிடித்திருக்கிறது.  ஏன் பிடித்திருக்கிறது என்றால் அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது என்று நினைக்கிறேன்.  தெய்வம் என்றால் அதற்கு நேர் எதிராக அரக்கன் என்ற அம்சமும் இருக்கிறது அல்லவா?  வெர்னர் ஹெர்ஸாகின் நாஸ்ஃபராட்டோ பார்த்திருப்பீர்கள்…  அது போல.  இன்றைய வாழ்வின் இன்னொரு பக்கம் கலையாக மாறியிருக்கிறது என்று நினைக்கிறேன்.  இன்னொரு பக்கம் என்றால், இருள், அதீதம், madness எல்லாம்.  மாதிரிக்கு நான்கு பாடல்களை அனுப்புகிறேன்.  முக்கியமாக நான்காவது பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=6dW6aNAZGTM&hd=1

http://www.youtube.com/watch?v=0U6eM3jpON8&hd=1

http://www.youtube.com/watch?v=qRNfeMaUBbo&hd=1

http://www.youtube.com/watch?v=K_aMnV1uaCY

உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

அன்புடன்,

சாரு

4.10.2014.

இரவு ஏழரை மணி அளவில் நான் அனுப்பிய மேற்கண்ட கடிதத்துக்கு அதே நாள் நள்ளிரவு 2.31 மணிக்கு ஜெயமோகன் அனுப்பியிருந்த பதில் கீழே:

அன்புள்ள சாரு நிவேதிதா,

கிரேடில் ஆஃப் ஃபில்த்-ஐ நான் கேட்டது 1996 ல். நித்ய சைதன்ய யதியை பார்க்கவந்த ஜெர்மனிய ஹிப்பி ஒருவரிடமிருந்து. அப்போதெல்லாம் கேஸட்தான். மாபெரும் ஒலிக்கருவிகளை அவரே கொண்டுவந்து அவரே தன் அறையில் பொருத்தியிருந்தார்.எனக்கு பெரிய அதிர்ச்சிதான் முதலில். ஆனால் பின்னர் அதிலிருந்து பிரக்ஞை விலகாமலிருப்பதையும் புரிந்துகொண்டேன்
அன்று அதைப்பற்றிப்பேசியபோது நித்யா  heavy metal  பற்றிச் சொன்னார். இசையில் இரண்டு வகைகள். ஒன்று தியானத்தன்மை கொண்டது. இன்னொன்று பழங்குடித்தன்மை கொண்டது. இரண்டுமே இரண்டுவகையில் மனிதனின் ஆழத்துக்குள்செல்கின்றன. ஆழத்தை கலக்கி மேலேகொண்டுவரும் தன்மை பழங்குடி இசைக்கு உண்டு. பழங்குடி இசையின் ஒரு சமகால நீட்சி என்று நித்யா இதைச் சொன்னார்.
‘சுடுகாட்டில் மனிதத்தோலை உரித்துக்கட்டிய உடுக்கை அடித்து சிதைவெளிச்சத்தில் பிணத்தின்மீது நின்று நடனமாடி ஒரு இசையை உருவாக்கமுடியும் என்றால், அதை நாம் ரசிப்போம் என்றால் இதை ஏற்பது கடினம் அல்ல’ என்றார்.
அது ஒரு திறப்பாக இருந்தது. கிரேடில் ஆஃப் பில்த்தின் இவில், டஸ்க் என இரண்டு கேசட்டுகளை நாலைந்து வாரம் கேட்டிருக்கிறேன். அதன்பின் இப்போது நினைவுக்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள்
நான் இப்படிச் சொல்வேன். தியானத்தன்மைகொண்ட இசை ஒருவகை நேர்நிலை உன்னதம். இது எதிர்நிலை உன்னதம்.உன்னதம் [sublime] என்பது எல்லா வகையிலும் நிகழமுடியும் என நெடுங்காலமாகவே இந்தியமரபு சொல்லிவந்துள்ளது. இங்குள்ள தாந்த்ரீக முறை எதிர்மறை உன்னதத்தை இலக்காகக் கொண்டது.
இந்தவகை இசைக்கு எதிராக இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே கசப்பும் உள்ளது. பொதுவாக பக்தி இயக்கம் இந்தியா முழுக்க உருவாக்கிய மனநிலை என்பது தியானத்துடனும் மென்மையான களியாட்டத்துடனும் இணைந்தது. இந்தியாவிலிருந்த எல்லா பழங்குடிக் கலையம்சங்களையும் அது உள்ளிழுத்துக்கொண்டு  நேர்நிலை உன்னதம் நோக்கிச் சென்றது
ஆகவே எங்கெல்லாம் வலுவான பக்தி இயக்கம் உள்ளதோ அங்கெல்லாம் இந்த இசைக்குக் காது இருககது. கேரளம் அப்படி அல்ல. கேரளத்தின் பஞ்சாரி, பாண்டிமேளங்களை நீங்கள் கேட்டிருக்கலாம். உச்சக்ட்ட ஓசைகள், கொம்பு மற்றும் குழலின் அலறல்கள், இலைத்தாளத்தின் உலோகப்பேரொலிகள் கலந்தது அது
சிறுவயதிலேயே அதைப்பழகியவர்கள் அதில் அடையும் பரவசம் வேறு. அது மழைககலத்தில் அருவிக்குக்கீழே நிற்பதுபோல வலியும் பதைப்பும் கலந்த உன்னத அனுபவம். ஆனால் தமிழகத்திலிருந்து வந்த ஒரு நண்பர்கூட அதை ரசித்ததில்லை. ஒரு நண்பர் அதைக்கேட்டு வயிறுகலங்கி வாந்தி எடுத்து படுக்கையில் விழுந்துவிட்டார். செண்ட மேளம் கேட்டு மலையாளிகளுக்கு இரும்புக்காது வந்துவிட்டது, அவர்களால் சங்கீதம் கேட்டு ரசிக்கமுடியாது என்று தி.ஜானகிராமன் ஒருமுறை சொன்னார்
அந்த ஜெர்மனிய ஹிப்பி பீட்டர் பஞ்சாரி-பாண்டிமேளத்தின் பரமரசிகர் என்பதை சொல்லவேண்டும். எனக்கும் இதனுள் நுழைய முடிந்தமைக்குக் காரணம் இதுவே.
நான் மேலை இசை கேட்பதுண்டு. ஆனால் எந்த இசையைப் பற்றியும் எதுவும் சொல்வதில்லை. சொல்வதற்கு நான் இன்னும் நிறைய கேட்க வேண்டும். அதற்கு நிறைய நேரத்தை அளிக்க வேண்டும், உங்களைப்போல. அந்த அளவு தேவையில்லை என்பதே என் எண்ணமாக இருக்கிறது.
ஜெ

Comments are closed.