ராஸ லீலா

 

ராஸ லீலா என்ற என்னுடைய நாவல் சரியானபடி வாசகர்களைச் சென்றடையவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு.  அதை இப்போது சரி செய்து விடலாம்.  அதன் இரண்டாம் பதிப்புக்கு இப்போது நான் பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  சுந்தர் ஸ்ரீனிவாஸ் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார், ராஸ லீலாவுக்குத் தனியாக ஒரு ரீடர் போடலாம் என்று.  ரீடர் என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒரு புத்தகத்தை எப்படிப் படிப்பது என்ற பயிற்சியை அளிக்கும் நூல் என்றும் ஒரு பொருள் உண்டு.  ராஸ லீலாவை ஒருவர் படித்து முடித்து விட்டேன் என்று சொல்லவே முடியாது.  அது ஒரு maze-ஐப் போல் கட்டமைக்கப்பட்ட பிரதி.  ஒரு பிரதிக்குள் ஏகப்பட்ட உப பிரதிகள் உங்களை எங்கெங்கோ இழுத்துக் கொண்டே செல்லும்.  அந்த நாவலுக்குள் செல்வது ஒரு தீராத பயணம் போல.  அதில் வரும் உப பிரதிகள் பற்றியே தனியாக ஒரு பட்டியல் போடலாம்.  இன்றைய தினம் அந்த நாவலின் சுபானு வருடப் பலன் என்ற அத்தியாயத்தைப் பிழை திருத்தம் செய்து கொண்டிருந்த போது அதர்வ வேதம் காண்டம் 9, ஸூக்தம் இரண்டு, காமன் ஸ்லோகங்கள் 20-24 என்ற பகுதியை மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

ஜோதியும் புவியும் எத்தனை விசாலமாயுள்ளனவோ, எத்தனை தூரம் அக்கினியுண்டோ, நீ அவற்றிற்கெல்லாம் உயர்ந்தவன்.  காமா! அத்தகைய உனக்கு நான் வணக்கமளிக்கிறேன்.

திசைகளும், பிரதிசைகளும் எத்தனைப் பெரியனவோ வானங்களும் ஜோதிக் காட்சிகளும் எத்தனைப் பெரியனவோ, அவற்றிற்கு அதிகமான நீ சதா பெரியவன்.  காமா! அத்தகைய உனக்கு நான் வணக்கமளிக்கிறேன்.

தேனீக்களும் வௌவால்களும் குரூருக்களும் எத்தனையுண்டோ, வகங்களும் மரப் பாம்புகளும் எத்தனையுண்டோ, அவற்றிற்கெல்லாம் நீ அதிகன். சதாப் பெரியவன்.  காமா! அத்தகைய உனக்கு நான் வணக்கமளிக்கிறேன்.

இந்த இடம் வந்ததும் ஒரு சீரிய வாசகனை இந்தப் பிரதி அதர்வ வேதத்தின் காமன் என்ற அத்தியாயத்துக்கு இட்டுச் சென்று விட வேண்டும்.  இங்கே இரண்டாம் பத்தியில் வரும் வகம் என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை.  ஜம்புநாதனின் உரையைப் பார்த்தேன்.  அதிலும் வகங்களும் என்றே குறிப்பிட்டிருந்தது.  அச்சுப் பிழையா என்று யோசித்தேன்.  பிறகு நிகண்டைப் புரட்டினேன்.  வகம் என்றால் குதிரை, வாகனம், திசை என்ற மூன்று பொருள்கள் இருந்தன.  ஆக, இங்கே வகங்களும் என்றால் குதிரைகளும் என்று பொருள்.

ஓரிரு தினங்களில் பிழை திருத்தம் முடிந்து விடும்.  முதலில் என்னை உயிரோடு திரும்பக் கொண்டு வந்த அன்பு நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  அது ஒரு பெரிய கதை.  அதனால் பிழை திருத்தம் முடித்து விட்டு வருகிறேன்.  அதுவரை அடியேனை மன்னியுங்கள்.

Comments are closed.