நண்பர் கார்த்திகைப் பாண்டியன் எழுதிய சிலுவையின் ஏழு வார்த்தைகள் என்ற இந்தச் சிறுகதை இதுவரை வேறு எந்த இதழிலும் வெளியானதில்லை. சமீப ஆண்டுகளில் நான் படித்த் மிகச் சிறந்த கதைகளில் இது ஒன்று.
சாரு
சாக்ரடீஸ் – அறிந்து கொள்! மனிதர்கள் ஒரு பாதாள குகையினுள் வசிக்கிறார்கள். அதன் நாவு வெளிச்சத்தை நோக்கி நீள்கிறது. தங்கள் குழந்தைப்பருவம் தொடங்கி அவர்கள் அதனுள்ளேதான் வாழ்கிறார்கள். அவர்களுடைய கழுத்துகளும் கால்களும் எங்கும் நகர்ந்து போக முடியாதபடி சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களால் நேராகத்தான் பார்க்கவியலும். அவர்களது தலைக்கு மேலும் முதுகின் பின்னாலும் சற்று தொலைவில் நெருப்பு கொழுந்து விட்டெரிகிறது, நெருப்புக்கும் கைதிகளுக்கும் நடுவே ஒரு வழி இருப்பதை நீ காண முடியும். அங்கே ஓர் தாழ்ந்த சுவர் இருக்கிறது. அதன் வழியாக மனிதர்கள் கடந்து போகிறார்கள். கல், மரம் மற்றும் ஏனைய பொருட்களால் செய்யப்பட்ட உருவங்களை ஏந்தி அவர்கள் போகிறார்கள். அவர்களில் சிலர் பேசுகிறார்கள்.. மற்றவர்கள் அமைதியாய் இருக்கிறார்கள்.
க்ளௌகான் – நீங்கள் எனக்கொரு விசித்திரமான காட்சியை விவரிக்கிறீர்கள். அந்தக் கைதிகள் மிக விசித்திரமானவர்கள்.
சாக்ரடீஸ் – ஆம்.. நம்மைப் போலவே..
(தி ரிபப்ளிக்கில் பிளாட்டோ)
இருண்ட அறைக்குள் அவன் தனியாக அமர்ந்திருந்தான். வெளியே கனமான சப்தங்களை அவனால் கேட்க முடிந்தது. மனிதர்கள் அலறும் சப்தம். நாற்காலிகள் உடையும் சப்தம். வாகனங்கள் தேய்ந்து நிற்கும் சப்தம். மரங்கள் சடசடவென முறியும் சப்தம். ஊழிக்காற்றின் சப்தம். நெருப்பின் சப்தம். நீரின் சப்தம். துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தம். அத்தனை சப்தங்களின் நடுவிலிருந்தபோதும் அவன் மிகுந்த ஆசுவாசமாக உணர்ந்தான். அவன் மட்டும் பிரத்தியேகமாகக் கேட்கக் கூடியதொரு குரலை இந்த சப்தங்கள் சில நொடி நேரங்களேனும் இல்லாமல் செய்திருந்தன.
சமீபமாக அந்தக் குரலோடு மங்கலான புகைவடிவ உருவமொன்றும் அவனுக்குத் தென்படத் தொடங்கியிருந்தது. தூக்கத்திலும் அந்தக் குரலைப் பிரிந்திருக்க முடிவதில்லை என்பதோடு அதன் வார்த்தைகளை எப்போதும் மீற முடியாதவனாக இருந்ததும் அவனைப் பெரிதும் துன்புறுத்தியது. ஆனால் அந்தக் குரல் தன்னுடையதல்ல என்பதை மட்டும் அவன் தீர்க்கமாக அறிந்திருந்தான். வெளியிலிருந்து கேட்ட சப்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்து சட்டென ஒரு கணம் ஆழ்ந்த நிசப்தம் சூழ்ந்தது.
இன்னும் எத்தனை நாட்கள் நீ இங்கே தனியனாக இருக்கப் போகிறாய்? உன் மரணம் இங்கேதான் நிகழ வேண்டுமென விருப்பம் கொண்டிருக்கிறாயா?
நான் சாகக்கூடாது. வாழ்க்கையென்னும் புதிர் என்னை ஒன்றுமற்றவனாய்ச் செய்து அலைக்கழித்து எங்கோ வீசியெறியுமுன் நான் அதனை வெற்றி கொள்ள வேண்டும்.
அங்கிருந்து எழுந்து கொண்டவன் தானிருந்த அறையின் கதவினருகே வந்து நின்றான். கம்பிகளின் வழியே தென்பட்ட நீண்ட வராந்தா யாருடைய நடமாட்டமும் இல்லாமல் அமைதியாய் இருந்தது. கதவினருகே காவல் நின்றவன் கண்கள் எங்கோ வெறித்திருக்க நாற்காலியிலிருந்து இடப்பக்கமாய்ச் சாய்ந்து கிடந்தான். அவனது கண்களில் இருந்து வழிந்த ரத்தத் துளிகள் வரிசையாக சுவரையொட்டி தரையின் மீது மெல்ல மெல்ல ஊர்ந்து போய்க் கொண்டிருந்தன. உற்றுப் பார்க்கையில் சாரை சாரையாய் எறும்புகள் ரத்தத்துளிகளை ஏந்தியபடி உறைந்த கண்களிலிருந்து வெளியேறிப் போய்க் கொண்டிருப்பதை இவனால் பார்க்க முடிந்தது. தப்பித்துச் செல்லும் வெறி கொண்டவனாய் அவன் கதவினை உலுக்க மறுபக்கம் தொங்கிக் கொண்டிருந்த பூட்டு இவனைப் பார்த்து விகாரமாகச் சிரித்தது.
நானிருக்கும்வரை உன்னால் எங்கும் போகவியலாது.
இவன் தன் வலது கையின் கட்டைவிரலை வாய்க்குள் அழுந்திக் கடித்து துண்டிக்க மஞ்சள் நிற ரத்தம் சுவர்களில் தெறித்தது. அறுபட்ட நாயின் குறியென தரையில் துடித்துக் கொண்டிருந்த விரலையெடுத்து அவன் பூட்டினுள் நுழைத்தான். இப்போது மிகச்சரியாக அந்த விரல் பூட்டினுள்ளே பொருந்திக் கொள்ள கதவை வேகமாக தள்ளித் திறந்தவன் சாவியினை இறந்து கிடந்தவன் மேலே வீசிவிட்டு வெளியேறி ஓடினான்.
யாருக்காகவும் எதற்காகவும் நிற்காதே.
சாம்பல் நிற வெளிச்சத்தில் சாலைகள் மூழ்கிக் கிடக்க பாதையெங்கும் உடல்கள் பிளக்கப்பட்டு விசிறிக் கிடந்தன. வெளியெங்கும் பச்சை நிற உதிரத்தீற்றல்கள். உயிர் போகாத மனித உடல்களும் மிருக உடல்களும் வலியின் தீவிரத்தில் முனகிக் கொண்டிருக்க இவன் எதையும் பார்க்க விரும்பாதவனாக ஓடிக் கொண்டிருந்தான். சாலையின் இருபுறமும் அடைத்துக்கிடந்த வீடுகளும் கடைகளும் அவனை இன்னுமதிகமாக பீதிக்குள்ளாக்கின.
மீண்டுமொருமுறை பூட்டிய அறைக்குள் நீ அடைபடக்கூடாது.
பூட்டப்படாத ஒரு கதவு தன்னை எதிர்நோக்கி எங்கோ காத்திருக்கும் என்பதாய் நம்பியவன் அதிக வேகத்தோடு ஓடினான். இறுதியாக முடிவற்ற புதிர் அரங்கமென நீண்டு கொண்டே போன அந்த சாலையின் முடிவில் கைவிடப்பட்டதாகத் திறந்து கிடந்த ஒரு கடைக்குள் நுழைந்தான். அது கண்ணாடிகள் விற்கும் அங்காடி என்பதைப் புரிந்து கொள்ள சற்றே நேரம் ஆனது. திரும்பிய திசையெங்கும் ஆளுயுரக் கண்ணாடிகள். கண்ணாடியில் தென்பட்ட மனிதனின் முகங்கள் ஒரே கணத்தில் இவனுக்கு நன்கு பரிச்சயமானதாகவும் அறிந்திராததாகவும் இருந்தன. ஒரு முகம் இவனைப் பார்த்து புன்னகைக்க மற்றொரு முகம் இவனைப் பரிகாசம் செய்தது. ஏனைய முகங்களும் வெகு விகாரமாகத் தோற்றமளித்தன. ஒரு முகத்தில் கண்கள் இருந்த இடத்தில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. இன்னொரு முகத்தின் தலையிலிருந்து மூளை வெண்ணெய்க்கட்டியென பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது. அவன் வெருண்டான்.
இவர்கள் யாரும் நீயில்லை. இவர்கள் யாரும் உனக்குத் தேவையில்லை.
வெகு நீண்ட காலத்துக்குப் பிறகு தனது பிரதிபலிப்பைத்தான் கண்ணாடியில் பார்க்கிறோம் என்பதை உணர்ந்த கணத்தில் அவன் அதிர்ந்து போனான்.
இது நீ இல்லை.
வெறி கொண்டவனாக அருகிலிருந்த இரும்புக்கழியைக் கையிலெடுத்தவன் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினான். தன்னைச் சுற்றியிருந்த அத்தனையையும் அடித்து நொறுக்கியவன் கீழே கிடந்த துண்டங்களை எட்டிப் பார்க்க அவை காலியாயிருந்தன. தனது பிம்பங்களை முற்றிலுமாய் தொலைத்துக் கட்டியதன் நிம்மதியை அவனால் உணர முடிந்தது. இனி என்ன என்னும் கேள்வி அந்தக் கணத்தில் அவனை நிரப்ப குழப்பத்தோடு கடையின் ஒரு மூலையில் சென்றமர்ந்தான்.
வாழ்க்கை என்பது ஒரு கனவே. ஆனால் அந்தக் கனவின் ஒவ்வொரு நிகழ்வையும் நீயே தீர்மானிக்கிறாய்.
வெகு தொலைவில் மெலிதாக ஒலிக்கத் தொடங்கியிருந்த குரலை அவனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. அதுவொரு குழந்தையின் அழுகுரல். தனக்கான எல்லாவற்றையும் தொலைத்து ஆதரவற்று நிற்கும் சிறுபிள்ளையின் இரைஞ்சல். எனது மனைவியும் குழந்தையும் என்னவானார்கள் என்றெண்ணிய கணத்தில் அவன் கண்கள் துயரத்தில் தாமாகவே மூடிக் கொண்டன. அந்தக் கட்டிடத்தின் ஒரு பாதி மருத்துவமனையாகவும் மற்றொரு பாதி கோழி இறைச்சிக் கடையாகவும் இருந்தது. அவன் தன் குழந்தையுடன் மருத்துவமனைக்குள் நுழைந்தான். பிள்ளைக்கு இரண்டு நாட்களாய் உடம்பு சரியில்லை எனச் சொன்னவனிடம் பக்கத்து அறையில் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு செவிலிப்பெண் நகர்ந்து போனாள். அவள் சென்று அமரச் சொன்ன இடம் கோழி இறைச்சிக்கடையின் முகப்பாய் இருந்தது. அங்கே நின்று விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணும் சற்றுமுன் விலகிச் சென்ற செவிலியும் ஒரே பெண் தானோ என்பதாக இவனுக்குத் தோன்றியது. கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்த வெள்ளைநிற பிராய்லர் கோழிகள் விடாமல் சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. இவள் பார்த்திருக்கையில் அந்தப் பெண் கூண்டுக்குள் கைவிட்டு ஒரு கோழியை வெளியே எடுத்தாள். கூண்டிலிருந்து வெளியே வந்த கணம் அது ஒரு குழந்தையாயிருந்தது. அவனுடைய குழந்தையாயிருந்தது. அந்த விற்பனைப்பெண் யாதொரு உணார்ச்சியுமின்றி இப்போது வென்னீர் தொட்டியைத் திறந்து குழந்தையை உள்ளே முக்கியெடுத்தாள். குழந்தையின் உடம்பிலிருந்து ரோமமெல்லாம் உதிர்ந்து போக அது கதறித் துடித்தது. அதன் அலறல்கள் பறவையின் கிறீச்சிடல்களாய் ஒலித்தன. வேண்டாம் என்பதாய்க் குழந்தையின் கைகள் அசைவது கோழியின் சிறகடிப்பை ஒத்திருக்க பார்த்துக் கொண்டிருந்தவன் ஓவென அலறித் துடித்து எழுந்து கொண்டான். அவன் காலடியில் ஒரு குழந்தை பொம்மையின் தலைப்பகுதி மட்டும் தனியாய்க் கிடந்தது. அதனைத் தூக்கி தொலைவில் எறிந்தவன் கடையிலிருந்து வெளியேறி சாலைக்கு வந்து சேர ஒரு பேருந்து அவனை உரசியபடி வந்து நின்றது. அதன் முன்பகுதியில் வெட்டுப்பட்ட பன்றியின் தலை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. இயந்திரக்குரலில் அந்தத் தலை அவனை யாரென விசாரிக்க என்ன சொல்வதெனத் தெரியாமல் நின்றிருந்தான்.
நண்பா இந்த நகரத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் இன்று அநியாயமாகக் கழுகுகளால் கொல்லப்பட்டிருக்கிறார். அதற்கான என் எதிர்ப்பைத் தெரிவிக்கும் பொருட்டு என்னை நானே கொலை செய்யும்படியானது. என்னைப் போலவே மனிதர்களில் பலரும் தாமாகவே முன்வந்து தங்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். இப்போது இந்தப் பேருந்து கூட தன்னைத்தானே எரியூட்டிக் கொள்ளப் போகிறது. உனக்கு விருப்பமிருப்பின் இதனுள்ளே வா. நீயும் எரிந்து உன் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்.
யாரென்று அறிந்திராத மனிதனுக்காக நான் ஏன் சாக வேண்டும். இத்தனை காலம் என்னை இருட்டறைக்குள் பூட்டி வைத்த போது ஏனென்று கேட்காத ஏதோவொரு மயிருக்காக நான் சாக முடியாது.
எனில் உடன் இங்கிருந்து சென்று விடு. பச்சோந்திகளின் படை பின்னால் வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கலகத்தை முன்னின்று நடத்துபவர்கள் அவர்கள்தாம். உன்னை அவர்களுக்குப் பிடிக்காமல் போனால் காற்றோடு கரைத்து விடுவார்கள்.
பேருந்து கொளுந்து விட்டெறியத் தொடங்கியதை அங்கிருந்து நகராமல் நின்றபடி அவன் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் கவச உடையணிந்த பச்சோந்திகளின் பெரும்படை பெருத்த ஆரவாரத்தோடு அங்கே வந்து சேர அவற்றின் தலைவனைப் போலிருந்த பச்சோந்தி சற்றே முன்னால் வந்து நின்று அவனை வினோதமாய்ப் பார்த்தது.
நீ எங்களோடு இருக்கிறாய் அல்லது எங்கள் பாதையின் குறுக்கே நிற்கிறாய். உன் முடிவு என்னவென்பதைச் சொல்.
அவற்றோடு பொருதுவதைக் காட்டிலும் முக்கியமான வேலைகள் உனக்குண்டு. இங்கிருந்து தப்பி ஓடு.
அங்கிருந்து விலகி வெகுதூரம் ஓடி வந்தவன் உடல் மொத்தமாய் வலுவிழந்து போனதொரு கணத்தில் மயங்கி வீழ்ந்தான். மீண்டும் அவன் கண்முழித்தபோது தானிருந்த இடம் ஒரு இடுகாடு என்பதை உணர முடிந்தது. ஒருபுறம் சுதையாலான குதிரைச் சிற்பங்கள் வரிசையாய் நின்றிருந்தன. இன்னொருபுறம் கடவுளர்களின் சிலைகள்.
இறுதியாக நீ வந்தடைய வேண்டிய இடத்தை அடைந்து விட்டாய்.
அவனால் அந்தக் குரலுக்குரிய புகை வடிவத்தை நெருக்கத்தில் மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அதன் கைகள் நீண்டிருந்த திசையில் அமைந்திருந்த சுதை வடிவக் கடவுளின் முகம் இவனுடையதாக இருந்தது.
நீ கடவுளாகப் பிறந்தவன்.
தன் அடிவயிற்றின் வலியைப் பசியென உணர்ந்து கொண்டவன் கடும் கோபத்தோடு அந்த சுதை உருவத்தினை எடுத்து உண்ணவாரம்பித்தான்.
நான் கடவுளை உண்பவன். எனக்கான விதிகளை இனி நானே வகுத்துக் கொள்வேன்.
கைகள் விரித்து அவன் அந்தப் புகை வடிவத்தின் முன் மண்டியிட்டான்.
நான் என்ன செய்ய வேண்டும் என்பதாய் ஆணையிடு. காத்திருக்கிறேன்.
உன்னை உணர்ந்து கொள்ள வேண்டுமெனில் நீ வாழ்வின் ஏழு நிலைகளைக் கடந்து வர வேண்டியவனாகிறாய். அவை உன்னை முழுமையானவனாய்ச் செய்யும். இந்த உலகின் பிடியிலிருந்து விலகி கடவுளாகும் தருணத்தை இனி நீயே முடிவு செய்வாய்.
அந்த வார்த்தைகளின் முடிவில் அவன் தன்னை முழுதாய் அந்தக் குரலுக்கு ஒப்புக்கொடுத்திருந்தான்.
மன்னிப்பு
“பிதாவே.. இவர்களை மன்னித்தருளும்.. தாங்கள் செய்வது இன்னதென்பதை இவர்கள் அறிய மாட்டார்கள்..”
ராட்சதனொருவன் நீண்டு வளர்ந்த தன் எண்ணிலடங்கா கைகளைத் தரையிலூன்றி நிற்பதென ஆலிவ் மரங்கள் அடர்ந்த மலையடிவாரத்திலிருந்த பூங்காவை அவர்கள் வந்தடைந்தபோது நன்கு இருட்டியிருந்தது. உடன் வந்தவர்களில் மூவரை மட்டும் அழைத்துக்கொண்டு தனது இறுதி பிரார்த்தனையைச் செலுத்த விருப்பம் கொண்டவராக அவர் உள்ளே நுழைந்தார். அசைந்து கொண்டிருந்த மரங்களின் நடுவே ஊடாடிய காற்றின் சப்தத்தில் தனது தாயின் மெல்லிய விசும்பலையும் அவரால் தெளிவாகக் கேட்க முடிந்தது. வெறுப்பின் சாயை முகத்தில் படர்ந்திருக்க வானை வெறித்தபடி அமர்ந்திருந்தவரை தொலைவிலிருந்த மரத்தின் மீது ஊர்ந்து கொண்டிருந்த சர்ப்பத்தின் இரு விழிகள் உற்று நோக்கியபடி இருந்தன. தொலைவில் திடீரென எழும்பிய ஆரவாரக் கூச்சல் மெல்ல மெல்ல தன்னை சமீபப்பதை அவரால் உணர முடிந்தது. சப்தம் வந்த பக்கமாகத் திரும்பி நின்றார். எல்லோரும் பின் தங்கி நிற்க அவன் மட்டும் முன்னேறி வந்தான்.
என் பிரிய நண்பனே.. வா.
அவரை நெருங்கி வந்தவன் குருவே என வணங்கிக் கட்டியணைத்து அவரது கன்னத்தில் முத்தமிட்டான். சிறிது நொடிகள் கழித்து விலகியபோது அவர் சிரித்தபடி அவனது கண்களுக்குள் உற்று நோக்கினார். அவரை எதிர்கொள்ள முடியாமல் அந்தப் புன்னகையின் அர்த்தம் புரிந்தவனாக அவன் கண்களைத் தாழ்த்தினான்.
என்னை மன்னியுங்கள்.
அவர் புன்னகை மாறாமல் தனது அங்கிக்குள் கைகளை நுழைத்து அந்த நீண்ட கத்தியை எடுத்து அவனது நடுமார்பில் செருகினார். சற்றும் அதை எதிர்பார்த்திராதவன் சின்னதொரு முனகலோடு மடிந்து கீழே விழுந்தான். அவர் குனிந்து தனது கத்தியை உருவியெடுக்க அவனது மார்பிலிருந்து வெள்ளை நிறப் பறவையொன்று வெளியேறியது. ஒருகணம் தரையில் தத்தளித்த பறவை மெல்ல தன் சிறகுகளை அசைத்துப் பறந்து அருகிலிருந்த ஆலிவ் மரத்தின் கிளையில் சென்றமர அதன் அலகில் இப்போது சின்னதாய் ஆலிவ்இலையொன்று அசைந்து கொண்டிருந்தது. பறவையின் நிறம் சிகப்பாய் மாறத் தொடங்கியிருந்தது.
இரட்சிப்பு
“இன்று நீ உண்மையாகவே என்னோடு சொர்க்கத்திலே இருக்கக்கடவது..”
கொந்தளிக்கும் கடலைகளின் மீதாக அந்த வினோதமான கப்பல் அசைந்தாடிக் கொண்டிருந்தது. கப்பலின் தளங்கள் ஆட்களின் நடமாட்டம் ஏதுமின்றி மௌனத்தில் ஆழ்ந்திருக்க அம்பின் கூர்மையான முனையெனக் குவிந்திருந்த இறுதியில் அந்த அரக்கன் நின்றிருந்தான். நீலமும் பழுப்பும் கலந்த கொழுந்து விட்டெரியும் தீக்களன்களைப் போன்ற பெரிய கண்கள் வேட்டை நாயின் உக்கிரத்தோடு தொலைதூரத்தில் தென்பட்ட கூம்பு வடிவங்களின் மீது நிலைத்திருந்தன. உதடுகள் மர்மமானதொரு புன்னகையைத் தேக்கியிருக்க ஏதோவொன்றை எதிர்பார்த்து அவன் அங்கே காத்திருந்தான்.
நகரத்தின் மையத்திலிருந்த தொழிற்சாலையெனும் மிருகத்தின் அத்தனை அங்கங்களும் செயலற்றுப் போயிருக்க அதன் இருதயமாயிருந்த கூம்பு வடிவ இரசாயன சேமிப்புக் கிடங்கு மட்டும் தனக்கான சமிக்ஞைக்காக ஆவேசம் அடங்காமல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. கப்பலில் இருந்தவன் மெலிதாய் தன் விரல்களை அசைக்க காலியாயிருந்ததொரு குழாயின் வழியே கடல்நீர் வெள்ளமென கூம்பு வடிவத்துக்குள் நுழைந்தது. அந்தத் தருணத்துக்காகக் காத்திருந்ததைப் போலவே நீரோடு பொருந்திய திரவம் ஆவியாக மாறிப் பெரும் காதலோடு ஆகாயத்தில் கலந்திட தாங்கள் நிறைந்து நிரப்ப வேண்டிய நுரையீரல்களைத் தேடி ரசாயன மேகங்கள் ஊருக்குள் நுழைந்தன.
வெப்பம் தாளாமல் கட்டில்களை வெளியே கிடத்தி உறங்கிக் கொண்டிருந்தவர்கள்தான் அந்த மாற்றத்தை முதலில் அறிந்தது. யாரோ தன் கழுத்தின் மீதேறி நிற்பதாய் உணர்ந்தவர்கள் திணறலோடு எழுந்து அலற தங்களைச் சுற்றி பலரும் அதுபோல அரற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். குழந்தைகளின் வீறிடல்கள் இரவின் மவுனத்தை மொத்தமாய்க் கலைத்துப் போட்டன. கறவை மாடுகள் தீனமான குரலில் அலற மரணத்தின் நிழல் மிகுந்த ஆவேசத்தோடு நகரின் மீது படிந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்ட பறவைகள் மட்டும் சிறகுகள் இருக்க ஆசீர்வதிக்கப்பட்டதால் அவசர அவசரமாய் அங்கிருந்து இடம்பெயர்ந்தன. சுவாசம் தடைபட வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்களும் காற்றைத் தேடி மூச்சிரைப்பவர்களாய் வெளியேறி ஒடிவந்தார்கள். மூச்சின் வழி உள்நுழைந்த காற்று ரத்தத்தில் கலந்து மெல்ல மெல்ல அதனை விசமென மாற்றியது. ஆதரவாக அருகிலிருந்தவர்களைப் பற்றிக் கொள்ள முயற்சிக்க வெட்டி எடுத்ததைப் போல உறுப்புகள் கழன்று கையோடு வந்தன. உடம்பின் எல்லா துவாரங்களிலிருந்தும் ரத்தம் பெருக்கி கூட்டம் கூட்டமாக மக்கள் செத்து வீழ வரவிருக்கும் காலங்களுக்கும் மனிதர்களை விடாது துரத்தும் சாபமென தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஆசுவாசத்தோடு நகருக்குள் அலைந்து கொண்டிருந்தது பேய்க்காற்று. உடல் முழுதாய் மண்ணில் புதைந்திருக்க எண்ணற்ற கேள்விகளைத் தன்னுள் தேக்கியவாறு இறந்துபோயிருந்த குழந்தையின் பிதுங்கிய பழுப்பு நிறக் கண்கள் வானத்தை வெறித்தன.
மிகுந்த திருப்தியுற்றவனாக அரக்கன் சிரித்தபடியே கப்பலைச் செலுத்த கடலின் மறுமுனையிலிருந்த தீவினை நோக்கிய அந்த ஆன்மாக்களின் பயணம் துவங்கியது.
அரவணைப்பு
“ஸ்திரியே.. இதோ உன் மகன். இதோ உன் தாய்..”
நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து தர வேண்டும். நீ தவமிருந்து பெற்ற அந்த அஸ்திரத்தை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். செய்வாயா..
பாகீரதி நதிக்கரையில் தன்னை மகனே என்றழைத்தவளின் குரல் அவனுக்குள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. எந்தவொரு விசயத்தையும் மறக்க நினைக்கும்போதுதான் அது இன்னுமதிகமாய் நம் நினைவுகளில் இடறுகிறது. அவன் அவள் பாதம் தொட்டு வணங்கினான். நண்பனை நீங்கி வர இயலாத தன் நிலையை அவளுக்குத் தெளிவாகச் சொன்னவன் எப்படியும் அவளது பிள்ளைகளில் ஐவர் மட்டுமே உயிரோடிருப்பார்கள் என்பதை உறுதியாகக் கூறிவிட்டு பாணத்தை ஒருமுறை மட்டுமே செலுத்துவதாக வாக்களித்தான்.
தனது விரோதியின் ரதம் இருந்த இடத்தை அவன் வந்தடைந்தய மற்றவனும் இவனை நோக்கி முன்னேறி வந்தான். அவனுக்கான இறுதி வாய்ப்பு இது. மந்திரங்களை உச்சரித்து அஸ்திரத்தைச் செலுத்திட நாகம் வில்லிலிருந்து சீறிக்கிளம்பியது. இவன் தலையைக் குறிவைப்பான என நம்பி ரதத்தைச் செலுத்திவந்த இடையர்களின் தலைவன் அதன் சக்கரத்தைத் தரையில் அழுத்தினான். மாறாக இவன் வைத்த குறி விரோதியின் மார்பென்றிருக்க பாணம் சிறிதும் தவறாமல் அவனுடைய தலையைக் கொய்து சென்றது. போர்க்களம் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தது.
தேரிலிருந்து கீழே இறங்கியவன் முன்பாகத் தரையில் கிடந்த தலையற்ற உடலின் கால்கள் மட்டும் அசைந்து கொண்டிருந்தன. கீழே மண்டியிட்டு அமர்ந்து இடையிலிருந்த தனது வாளை உருவியெடுத்தவன் இடப்பக்கமாய் வயிற்றின் உள்ளே நுழைத்து ஒரு ஓவியனின் லாவகத்தோடு நேர்க்கோடாக வலப்பக்கம் நகர்த்தி கீழ்வயிற்றினை அறுத்துத் திறந்தான். உதிரம் பெருத்த ஆவேசத்தோடு திறப்பின் வழியே பெருகியோட உடலின் உள்ளுறுப்புகள் நழுவி வெளியேறுவதை அவனால் உணர முடிந்தது. இறுதியாக வாளினை எடுத்து தனது கழுத்தில் செருகினான்.
உனது பிள்ளைகளில் ஐவர் நிச்சயமாக உயிரோடிருப்பார்கள். இது உன் மீது ஆணை.
கண்களில் நிறைந்திருந்த புன்னகையோடு அவன் சரிந்து வீழ்ந்தான்.
தத்தளிப்பு
“தேவனே.. தேவனே.. ஏன் என்னைக் கைவிட்டீர்..தலைக்கு மேலே மீன்கள் பறந்து கொண்டிருந்த நிமித்தக்காரர்களின் நகரத்துக்கு அவர் இரண்டாவது முறையாக வந்திருந்தார். நகரத்துக்குள் வருவது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பிறகு தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக நிலத்தில் அந்த நகரை நிமித்தக்காரர்கள் நிர்மாணம் செய்திருந்தார்கள். இரண்டு திசைகளில் இருந்து மட்டுமே நுழைய முடியும் நகரின் நுழைவாயில்களில் டிராகனின் சிலை அமைக்கப்பட்டு குதிரையின் தொடையெலும்பாலான ஒரு கோலும் நடப்பட்டிருந்தது. நகரத்தில் இருந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை எண்கோண வடிவத்திலும் மற்றவை பிரமிட் வடிவத்திலும் இருந்தன. அங்கங்கே நட்டு வைக்கப்பட்ட சிலுவைகளில் அறையப்பட்டிருந்த குள்ள மனிதர்கள் யாசகம் கேட்டு அழுது கொண்டிருந்தார்கள். நகரத்துக்குள் நுழையும் யாரையும் தங்களிடம் வந்து ஆருடம் கேட்கும்படியும் தம்மிடமிருக்கும் அதிசயப் பொருட்களை வாங்குமாறு கெஞ்சியபடியும் நிமித்தக்காரர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்.
தனது முதல் வருகையின்போது சந்தித்த அந்த இளைஞனின் முகம் அவரால் மறக்க முடியாததாக மாறியிருந்தது. நகருக்குள் நுழைந்தபோது தன்னிடம் அவர் ஆருடம் கேட்க வேண்டும் என நிர்ப்பந்தித்தவனை ஒதுக்கி விட்டு அவர் விலகி நடந்தார். தளராமல் பின்னால் வந்தவன் தன் கையிலிருந்த மாய வரைபடத்தை விரித்துக்காட்டி அதன் துணையோடு அவர் வேறொரு பரிமாணத்துக்கோ அல்லது விரும்புகிற எந்தவொரு காலத்துக்கோ பயணம் செய்யலாம் என்பதாய்ச் சொன்னான். தனக்கு அதில் விருப்பமில்லை என்று சொன்னபிறகும் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்தவன் மீது அவருக்கு சற்றே கருணை பிறந்தது. தனக்கு எதுவும் வேண்டாமென்று சொன்னவர் கையிலிருந்து சிறிது தங்கத்தை எடுத்துத்தர அவனது முகம் சட்டென்று மாறிப்போனது. தனது ஆருடத்துக்கான தங்கத்தை மட்டுமே யாரிடமும் பெற்றுக் கொள்ள முடியும் எனச் சொன்னவன் அவரிடமிருந்து விலகி நடக்கவாரம்பித்தான். அவனை அழைத்தவர் தன் எதிர்காலம் குறித்து ஆருடம் சொல்லும்படியாகக் கேட்டு அவனுக்கான தங்கத்தைத் தந்தார். வெகுநேரம் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தவன் எப்போது திரும்பி வந்தாலும் தன்னைப் பார்க்க வரும்படி கேட்டுக் கொள்ள அவனிடமிருந்து விடைபெற்றுக் கிளம்பினார். அவனை மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதே அவரது மீள்வருகையின் விருப்பமாயிருந்தது.
நகரம் வெகுவாக மாறி விட்டிருந்தது. முன்பிருந்ததைக் காட்டிலும் அதிகமான நிமித்தக்காரர்கள் அங்கே சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஆருடம் கேட்க வேண்டும் என்பதாய்க் கட்டாயப்படுத்தியவர்களிமிருந்து மீண்டு வருவது அவருக்குப் பெரும் சிரமமாயிருந்தது. அவனை மீண்டும் பார்க்க முடியுமா என்கிற கேள்வியோடு அலைந்து கொண்டிருந்தவர் வரும் போது பயணத்தில் தன்னோடு உடன் வந்த மனிதரொருவர் அழுதபடி திரும்பி வருவதைப் பார்த்தார்.
இந்த நிமித்தக்காரர்கள் நம்மை ஏமாற்ற ஒரு புது வழியைக் கண்டு கொண்டிருக்கிறார்கள். நான் நடந்து செல்லும்போது ஒரு பஞ்சவர்ணக்கிளி என் தோளின் மீது வந்தமர்ந்தது. வெகு சுவாரசியமாக என்னோடு உரையாடவும் செய்தது. அதன் அழகில் மயங்கி செல்லமாய் நான் அதனைத் தடவிக் கொடுக்க சட்டென்று கூட்டமாக அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டர்கள். ஆருடம் சொல்லக்கூடிய இந்தப்பறவை என்னைத் தேர்ந்ததாகவும் நான் கண்டிப்பாக இதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். நான் முடியாது என்றபோது என்னை அடித்தும் உதைத்தும் என்னிடமிருந்த தங்கத்தை பிடுங்கிக் கொண்டு கிளியையும் பறித்துக் கொண்டார்கள்.
அந்த மனிதரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவருக்கு ஆறுதல் சொல்லி நுழைவாயிலில் இருக்கும் காவலர்களிடம் புகாரளிக்கச் சொன்னார். பிழைப்பு என்றானபின் எதையும் செய்யத் துணிந்து விடுகிறார்கள் என்பதன் துயரம் அவரைச் சூழ்ந்தது. தனக்குள் யோசித்துக் கொண்டே நடந்தவரின் தோளில் ஒரு பஞ்சவர்ணக்கிளி எங்கிருந்தோ வந்தமர திடுக்கிட்டு நிமிர்ந்தார். ஹோவென்ற இரைச்சலோடு ஒரு கும்பல் அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது. பெருத்த சப்தத்தோடு அவர்களில் முதல் ஆளாக தன்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தவனை அவரால் அடையாளம் காண முடிந்தது. அது…
தவிப்பு
“நான் தாகமாயிருக்கிறேன்…
பாலைவனத்தின் நீண்ட மணற்பரப்பில் அவர் தனியாக நடந்து கொண்டிருந்தார். எந்தத் திசையில் பார்த்தபோதும் மணற்குன்றுகள் மட்டுமே தென்பட்டன. தான் சரியான பாதையில்தான் செல்கிறோமா எனும் குழப்பம் மேலிட நிமிர்ந்து வானைப் பார்த்தார். தகிக்கும் சூரியனைத் தவிர்த்து வேறெந்த சைகையும் தென்படவில்லை. அவ்வப்போது சுழன்றடித்த காற்று வீசியெறிந்த மணற்துகள்கள் சூரியனையும் மறைக்க முற்பட்டன. மாலையில் சூரியன் சாய சற்றே ஓய்வெடுக்கலாம் என்றமர்ந்தவர் காலையிலிருந்து தான் எதையும் உண்ணவில்லை என்பதை உணர்ந்தார். கண்கள் மூடி தியானித்தவர் தன் கைகளை மணற்பரப்பின் மீது வைத்து அமைதியாய் பிரார்த்தித்தார். சிறிது நேரம் கழித்து அந்த இடத்தைத் தோண்ட அங்கே சில அப்பங்கள் இருந்தன. அவற்றை எடுத்துப் பசியாறியவர் தன்னிடம் மீந்திருந்த சிறிதளவு தண்ணீரையும் குடித்து முடித்தார்.
நான் கண்ட கனவு பலிக்காமல் போகாது. கண்டிப்பாக நாளை நானொரு புதியதொரு நகரைக் கண்டுபிடித்து அங்கே அவனது புகழைப் பாடித்திரிவேன்.
மறுநாள் அதிகாலையில் எழுந்து மீண்டும் அவர் தனது பயணத்தைத் தொடங்கினார். அன்றைய தினம் முழுதும் நடந்து திரிந்த பிறகும் அருகே நகரம் எதுவும் இருப்பதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. முதல் முறையாக அவருக்கு அயர்ச்சியாகவும் கோபமாகவும் இருந்தது. இல்லாதவொன்றைத் தேடி வெறும் கனவை நம்பிக் கிளம்பிய தானொரு முட்டாள் எனப் பாலைவனம் அதிரும்படியாகக் கத்தினார். உண்மையில் அவனுக்குக் கருணையிருந்தால் தன்னை இப்படி அலைக்கழிக்க மாட்டான் என்று புலம்பியவர் மயங்கிக் கீழே வந்தார். மீண்டும் அவருக்கு விழிப்பு வந்தபோது இருளின் மடியில் தனித்திருப்பதை உணர்ந்தார். அவருக்குப் பசியாயும் தாகமாயும் இருந்தது. தன்னைத்தானே கடிந்து கொண்டு கண்களை மூடி பிரார்த்தனை செய்தவர் சிறிது நேரத்தில் தனது கைகளின் கீழேயிருந்த மணலைத் தோண்டிப் பார்க்க அங்கே எதுவுமில்லை. நம்பிக்கையை இழந்தவனாகத் தான் கைவிடப்பட்டதை அறிந்து கொண்டவர் கதறியழ ஆரம்பித்தார். மறுதினம் பாலைவனத்தில் அலைந்து கொண்டிருந்த ஒட்டகமொன்றைக் கண்டவர் வெறியோடு வெட்டி வீழ்த்தி அதன் மாமிசத்தை உண்ணத் தொடங்கினார்.
அர்ப்பணிப்பு
“எல்லாம் முடிந்தது..”
மனிதர்களும் எலிகளைப் போலவே வாழ்கிறார்கள். தங்களுக்கென ஒரு வளையைத் தோண்டி அதற்குள் ஒளிந்து கொள்கிறார்கள். என்றாவது ஒருநாள் அதிலிருந்து வெளியேறி வாழ்க்கையின் உண்மையைத் தேட முனையும்போது அவர்கள் நிதர்சனம் எனும் சூரியனைச் சந்திக்க நேரிடுகிறது. அப்போது தங்கள் கண்பார்வையை இழந்து குருடாகிப் போகிறார்கள்.
அவன் தேவகுமாரனாயிருந்தான். தன்னைக் காட்டிக்கொடுத்தவனை கொலை செய்தபின்பாக சிலுவையில் மரித்தான்.
அவன் சாரோன் எனும் அரக்கனாயிருந்தான். எந்தப் பாகுபாடும் இல்லாது இறந்தவர்களை வாழ்வின் மறுகரைக்கு கொண்டு செல்லும் படகைச் செலுத்தினான்.
அவன் ராதேயனாக இருந்தான். தனது தாய்க்குத் துயரத்தை உண்டாக்க செய்து தனது சத்தியத்தை மீறி தன்னைத்தானே கொலை செய்தான்.
அவன் நிமித்தக்காரனாக இருந்தான். தன் மீது மற்றவர் கொண்டிருந்த நம்பிக்கைக்களை உடைத்தெறிய எப்போதும் அவன் தயங்கியதில்லை.
அவன் தீர்க்கதரிசியாக இருந்தான். தான் வாழும் பொருட்டு யாரையும் எதையும் கடந்துபோக அவன் சித்தமாயிருந்தான்.
எல்லாம் முடிந்தது. அவன் தன்னை முழுதாய் உணர்ந்து கொள்ளும் இறுதி நிலையை நெருங்கியிருந்தான். அவனது பார்வை மெல்ல மெல்ல அவனை விட்டு நீங்கிக் கொண்டிருந்தது.
ஒப்புவிப்பு
“பிதாவே.. என் ஆவியை உமக்குத் தருகிறேன்..”
அந்தப் புகைவடிவத்தின் முன்பாக அவன் இரண்டாகப் பிளந்து அவர்களாக நின்றிருந்தான். தூய வெள்ளை நிறத்தில் ஒரு தேவதையென ஒருவனும் வால் முளைத்து அகோரமான உருவத்துடன் மற்றொருவனும் நின்றிருந்தார்கள். அவர்களின் தலைக்கு மேலே வானில் மேகங்கள் திரண்டு பெருத்த இடியுடன் மழை பொழியத் தொடங்கியது. அவர்கள் இருவரும் நிமிர்ந்து பார்க்க மேகங்கள் சட்டென்று விலகி வானில் ஒரு நுழைவாயில் தோன்றியது. தேவதையென இருந்தவனின் தோளில் இப்போது சிறகுகள் முளைக்கத் தொடங்கியிருந்தன. அதை அவன் விசையோடு அசைத்து தரையிலிருந்து எழும்பி உயரே பறக்கத் தொடங்கினான். ஆனால் அவன் மேலேறிச் சென்றுவிடாமல் எதிரே நின்றிருந்த மற்றவன் விகாரமாகச் சிரித்தபடி தனது வாலால் அவனது கால்களைப் பற்றிக் கொண்டான். பதறிப்போன தேவதை மேலும் மேலும் தனது சிறகுகளை அசைக்க…
நண்பர்களே.. இந்தயிடத்தில் இந்தக் கதையினை எழுதிக் கொண்டிருப்பவனின் இடையீட்டுக்கு அவனை மன்னியுங்கள். கடவுள் என்கிற ஒன்றே இல்லாதபோது மனிதனொருவன் கடவுளாவது எப்படி சாத்தியமாகும்? இந்தத் தீக்கனவை விட்டு வெளியேறி வாருங்கள். நிஜவாழ்க்கை உங்களுக்காகக் காத்திருக்கிறது. திரும்பிச் செல்லுங்கள்.
(அலெஹாந்ரோ ஹொடொரோவெஸ்கிக்கு)
karthickpandian@gmail.com