இப்போதைய என் நிலையை retreat என்று சொல்லலாம். ஆனால் ராணுவத்தினர் பயன்படுத்தும் பொருளில் அல்ல; ஆன்மீக ரீதியான அர்த்தத்தில். இதற்குத் தமிழ் வார்த்தை என்ன என்று தெரியவில்லை. இந்தக் காலகட்டத்தில் அதிகம் படித்துக் கொண்டிருக்கிறேன். நாவல் எழுதும் காலத்தில் சரியாக பத்து மணிக்கே உறங்கச் சென்று விடும் நான் இப்போது சமயங்களில் இரவு பனிரண்டு வரை கூட விழித்துக் கொண்டிருக்கிறேன். இரவு முழுவதும் கூட விழிக்க முடியும். ரெமி மார்ட்டினைத் துறந்த பிறகு பத்து மணிக்கே கொட்டாவி விட்டுக் கொண்டு உறக்கம் வருவதில்லை. எப்போதும் புத்துணர்ச்சியாகவே இருக்கிறது. ஆனால் இரவு விழிப்பது என் உடல்நலத்துக்கு ஆகாது. ஆறு மணி நேர உறக்கம் அவசியம் என்று மருத்துவர் சொல்வதால் அதைக் கேட்க வேண்டியிருக்கிறது. மாணவர்கள் தேர்வுக்குப் படிப்பது போல் படித்துக் கொண்டிருக்கிறேன். ஃப்ரெஞ்ச் மற்றும் தமிழ் இலக்கியம் மட்டும். வா.மு. கோமுவின் சமீபத்திய நாவலைக் கூட மேஜையில் வைத்திருக்கிறேன்.
இடையில் புதிய தலைமுறைக்கு வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் தொடருக்காக ஒருநாள், அந்திமழை கேள்வி பதிலுக்காக ஒருநாள் ஒதுக்கிக் கொள்கிறேன். ரெமி மார்ட்டினைத் துறந்தது எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பல நண்பர்கள் அக்கறையுடன் விசாரித்தார்கள். இவ்வளவு கொண்டாடிக் கொண்டாடிக் குடித்தவன் குடியை நிறுத்திய பிறகு அதைக் குறித்து வருந்துவானோ என்ற எதிர்பார்ப்பு அவர்கள் விசாரிப்பில் இருந்தது. ரெமி மார்ட்டினைத் துறந்தது செம குஷியாக இருக்கிறது. அதை விட சந்தோஷத்தைக் கண்டு பிடித்து விட்டேன். வாசிப்பு. அடுத்த நாவலாக எதை எழுதுவது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை. நாவல் எது பற்றியது என்ற வெளிச்சத்தின் கீற்று தெரியும் போது Retreat முடிந்து விடும்.
ஒரு விஷயம் ரொம்ப ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது. ஆங்கிலத்தில் தேர்ந்த புலமையும், ஆழ்ந்த வாசிப்பும் கொண்ட அன்பர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதுபவர் – தமிழர் – என் எழுத்தைப் பற்றி மிக மட்டமாக எழுதியிருக்கிறார். ”இவனெல்லாம் போங்கு, எழுத்தாளனே இல்லை.” இதுதான் சுருக்கம். உலக இலக்கியமெல்லாம் படித்தவருக்கு எப்படி என் எழுத்து வெறும் குப்பை என்று தோன்றுகிறது என்று ஆச்சரியமானது எனக்கு. எனக்கே கொஞ்சம் குழப்பம் வந்து விட்டது. நாம் எழுதுவது வெறும் குப்பைதானோ? ஒருக்கணம். பிறகு யோசித்தேன். நான் உலக இலக்கியத்தின் தேர்ந்த வாசகன். என்னால் என் எழுத்தை ஒரு வாசகனாகவும் எடை போட முடியும். அப்படிப் பார்த்த போது தொடர்ந்து 35 ஆண்டுகளாகவே என் எழுத்து குப்பை என்றே ஒரு சாரார் சொல்லி வருகின்றனர். சமீபத்தில் கூட அமிர்தா பத்திரிகையில் லக்ஷ்மி மணிவண்ணன் என்னைப் பற்றி எழுதும் போது 25 ஆண்டுகளுக்கு முன்பே சாரு நிவேதிதா ஆபத்தான கட்டத்தில் இருந்தார் என்று எழுதியிருக்கிறார். ”இன்னும் கொஞ்ச நேரத்துல பூடும்பா” என்று சொல்வார்கள் இல்லையா, அது மாதிரி. நேநோ, the joker was here, பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும், கர்னாடக முரசு போன்ற சிறுகதைகளை உலக இலக்கியத்திலேயே கண்டு பிடிப்பது சிரமம். போர்ஹேஸின் தரத்துக்கு இணையானவை அந்தக் கதைகள். அதில் ஒன்றிரண்டு கதைகளையும் ஸீரோ டிகிரியையும் படித்து விட்டுத்தான் என் எழுத்தை வ்ளதிமீர் நபக்கோவுடன் ஒப்பிடுகிறார் வாணி கபில்தேவ்.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் எனக்குக் குழப்பமாகவே இருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதும், உலக இலக்கியத்தை சீரிய முறையில் வாசிக்கும் ஒருசில தமிழர்களுக்கு மட்டும் ஏன் எழுத்து குப்பையாகத் தெரிகிறது? அம்பையிலிருந்து ஆரம்பித்து இப்போது இந்த இணைய எழுத்தாளர் வரை இதே கதைதான். இந்த ஆங்கில வாசகர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது ஒரு பொது விதியாக உள்ளது. வாணி கபில்தேவுக்கோ, விவேக் நாராயணனுக்கோ, தருண் தேஜ்பாலுக்கோ, ஷர்மிஷ்தா மொஹந்திக்கோ, ஆங்கிலப் பத்திரிகையாளர் T.R. விவேக்குக்கோ ஏன் அப்படித் தோன்றவில்லை? கனடாவில் வசிக்கும் சந்த்ரா சித்தனும் ப்ரதீப் செபாஸ்டியனும் ஏன் இந்தியாவின் 50 சிறந்த புத்தகங்களில் ஒன்றாக ஸீரோ டிகிரியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? ஏன் ஆங்கில வாசகர்களாக இருக்கும், ஆங்கிலத்தில் எழுதும் ராமஸ்வாமிகளுக்கும் சுப்ரமணியன்களுக்கும் லக்ஷ்மிகளுக்கும் என் எழுத்து குப்பையாகத் தெரிகிறது? இவ்வளவுக்கும் அந்தக் குறிப்பிட்ட ஆங்கில இணைய எழுத்தாளரின் வாசிப்பு எனக்கு பிரமிப்பு ஊட்டுவதாக இருக்கிறது. போகட்டும். எனக்கு காஃப்காவையும் கம்யுவையும் பிடிக்கவில்லை. அதற்கு என்ன செய்ய முடியும்? தஸ்தயேவ்ஸ்கியின் இடியட் எனக்குத் தமிழ்த் தொலைக்காட்சி சீரியல்களை ஞாபகப்படுத்துகிறது. தஸ்தயேவ்ஸ்கி வெறும் ஜனரஞ்சக எழுத்தாளர்; அவரிடம் சரக்கு இல்லை என்று எழுதுகிறார் வ்ளதிமீர் நபக்கோவ். ஆனால் குறுநாவல்களில் சிகரம் தொட்டிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. அழைய விருந்தாளி என்ற ஒரு கதை போதும். நீதிபதி சந்துரு, அப்துல் கலாம், ஞாநி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை போன்ற நல்லவர்கள் எல்லோரும் எனக்கு அழையா விருந்தாளியில் வரும் அந்த அன்பான அதிகாரியையே நினைவூட்டுகின்றனர்.
என் எழுத்தை குப்பை என்று வர்ணிக்கும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஆங்கில விமர்சகக் குஞ்சுகள் அத்தனை பேரிடமும் நான் காணும் இன்னொரு பொதுத்தன்மை இவர்கள் அனைவரும் ஜெயமோகனை இந்த நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளராகக் கொண்டாடுகின்றனர். சுபஹானல்லாஹ்!
ஸீரோ டிகிரியை இருபது ஆண்டுகளுக்கு முன் போர்னோ, குப்பை, மலம் என்று எல்லோரும் திட்டிய போது அந்த நாவல் மிகப் பெரிய cult status-ஐ அடையும் என்று நான் எதிர்பார்த்தேன். நடந்தது. இப்போது ராஸ லீலாவும் எக்ஸைலும் ஸீரோ டிகிரி அடைந்த இடத்தை விட மேலே போகும் என்பது என் கணிப்பு. இலக்கியத்தைப் பொறுத்தவரை என்றுமே என் கணிப்பு பொய்த்ததில்லை. ஆனால் இரண்டும் எப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு ஆகும் என்று எனக்குத் தெரியாமல் இருக்கிறது. ஸீரோ டிகிரி ஜெர்மனில் விரைவில் வெளியாகலாம் என்ற சாத்தியம் தெரிகிறது.
இதற்கிடையில் அமெரிக்காவிலிருந்து ஒரு பெண் வந்திருக்கிறார். அவரால் சல்மான் ருஷ்டி சொன்னதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. ருஷ்டி மீது அவருக்கு ரொம்பக் கோபம். ருஷ்டி அப்படி என்ன சொன்னார்? ”இந்தியாவில் பிராந்திய மொழிகளில் எழுதப்படுவதெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் படுவதற்குத் தகுதி ஆனவை அல்ல.” இது ருஷ்டி. சுத்தப் பேத்தல். அவரால் இந்தியப் பிராந்திய மொழிகளில் வந்த எத்தனை புத்தகங்களைப் படித்திருக்க முடியும்? மலையாள ஸக்கரியாவை, பஷீரை, தமிழில் அசோகமித்திரனை, இந்தியில் நிர்மல் வர்மாவை, இன்னும் வங்காளத்தில் ஜாய் கோஸ்வாமியை இன்னும் இது போன்ற எத்தனையோ எழுத்தாளர்களை அவர் படித்திருக்க முடியுமா? இதற்கிடையில் புயலிலே ஒரு தோணி போன்ற நாவல்கள் இன்னும் ஆங்கிலத்துக்கே போகவில்லை. ஆனால் பொதுவாக சராசரியான நாவல்கள் மட்டுமே ஆங்கிலத்தில் – அதுவும் மொண்ணையான ஆங்கிலத்தில் – சென்னையில் வசிக்கும் ஆங்கில ஆசிரியர்களால் மொழிபெயர்க்கப்படுகிறது. புளியமரத்தின் கதை குப்பையான ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு ஒரு ஆங்கிலப் பேராசிரியர். ஆனாலும் ருஷ்டி அப்படி பொதுப்படையாக உளறக் கூடாது. இந்திய ஆங்கில இலக்கியம் மகா குப்பை. லஜ்ஜா ஒன்று போதும் உதாரணத்துக்கு. மற்றொரு உதாரணம், ஒய்ட் டைகர். குப்பை என்று சொல்ல முடியாது. படு சராசரி.
இந்த நிலையில் அந்த அமெரிக்கப் பெண்மணியை நாளை சந்திக்கப் போகிறேன். அவர் ஸீரோ டிகிரியைப் படித்து விட்டார். வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்றவர்களைப் போல் இருக்கிறது என்றார். தமிழிலிருந்து நீங்கள் உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான எழுத்தாளர் அசோகமித்திரன் என்று சொன்னேன். பல்ஸாக், விக்தொர் யூகோ, ஃப்ளெபர், தஸ்தயேவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்களுக்கு இணையானவர் அசோகமித்திரன். அந்தக் கிழவருக்கு என் எழுத்து பிடிக்காமல் போனால் எனக்கு என்ன? அது அவர் பிரச்சினை.
புதிய தலைமுறையில் வாராவாரம் வெள்ளி அன்று என் கட்டுரையைப் படியுங்கள்.
டாக்டர் ஸ்ரீராம் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
ஹாய் சாரு,
அந்திமழை படித்தேன். வழக்கம் போலவே educative ஆக இருந்தது. கடைசி பதிலில் இப்படியொரு வாக்கியம் வருகிறது.
“பத்தாய் 1935-இல் எழுதி முடித்த Blue Moon என்ற நாவலும் 1957-இல் தான் பிரசுரமாயிற்று.”
விக்கிபீடியாவில் பார்த்தேன். நாவலின் பெயர் ‘Blue of Noon’
என்று உள்ளது.
http://andhimazhai.com/news/
புதிய தலைமுறை இதழை, கடைகளில் ஒரு வருடம் வாரா வாரம் வாங்கினால், மொத்தம் ரூ.1040/- ஆகிறது.
புதிய தலைமுறை வார இதழை இணையத்தில் படிக்க ஒரு வருட சந்தா, இதற்கு முன் ரூ.799/- ஆக இருந்தது. தற்பொழுது ஒரு வருட இணைய சந்தா -ரூ.299/- ஆக சலுகை விலையில் கிடைக்கிறது.
ஸ்ரீராம்.
ஜார்ஜ் பத்தாய் எழுதிய அந்த நாவலின் ஃப்ரெஞ்ச் தலைப்பு Le Bleu du Ciel. இதன் பொருள் வானத்தின் நீலம். இதை ஆங்கிலத்தில் Blue Moon என்றும், Blue of Moon என்றும் இரண்டு விதமாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஃப்ரெஞ்சிலேயே போட்டால் புரியாது என்பதற்காக ஆங்கிலத்தில் எழுதினேன். என் வாசகர்கள் ஓரளவுக்காவது ஃப்ரெஞ்ச் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விழைகிறேன்.
***
ஒரு குறுங்கதை
இன்று அநேகன் போனேன். என் இடது பக்கத்தில் இரண்டு பேரழகிகள். படம் ஓடும் போதே ஆங்கிலத்தில் அளவளாவிக் கொண்டிருந்தனர். பேரழிகள் என்பதால் நான் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. இடைவேளையில் விளக்கு போட்டதும் நீங்கள் சாரு தானே என்று தமிழில் கேட்டது ஒரு பேரழகி. ஆமாம் என்றேன். பிறகு அநேகன் பற்றித் தமிழில் மூவருமாகச் சேர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தோம். படம் ஓடும் போதேதான். அதுவும் அந்த ஜட்டி காட்சியில் விழுந்து விழுந்து வயிறு வலிக்கச் சிரித்தோம். என் வலது கைப்பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவர் எழுந்து போய் விட்டார்.
***