ஜனவரி 17 அன்று சாருஆன்லைனில் கீழ்க்கண்ட கேள்வி பதில் பகுதியில் க்ரியா ராமகிருஷ்ணன் பற்றி சில வரிகள் பாதகமாக எழுதியிருந்தேன். என்ன என்று அந்தக் கேள்வி பதிலைப் படித்துக் கொள்ளுங்கள்.
http://charuonline.com/blog/?p=2204
உடனே 19-ஆம் தேதியே க்ரியா ராமகிருஷ்ணனிடமிருந்து பின்வரும் கடிதம் வந்தது.
அன்புள்ள சாரு நிவேதிதா,
வணக்கம். உங்களை ‘notorious writer’ என்று சொன்னது உண்மை. நான் சற்று விளையாட்டாக அப்படிச் சொல்வதற்கு உரிமை எடுத்துக் கொண்டது தவறு என்பதை இப்போது உணர்கிறேன் . அப்படிச் சொன்னதற்கு உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
ராமகிருஷ்ணன்.
மேற்கண்ட கடிதத்தைப் படித்து விட்டு மிகவும் வருத்தப்பட்டேன். நான் தான் பலரிடமும் மன்னிப்புக் கேட்டிருக்கிறேனே தவிர பிறர் என்னிடம் மன்னிப்புக் கேட்டதில்லை. அப்படிக் கேட்டால் நம் மன உணர்வு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. நான் மன்னிப்புக் கேட்டால், அந்த மன்னிப்பையும் அவர்கள் ஏற்றுக் கொண்டால் ஒரு அற்புதமான அருவியில் குளித்து வந்தது போல் இருக்கும். மன்னிப்புக் கேட்பதும் மன்னிப்பை ஏற்பதும் மிக உயர்ந்த மன எழுச்சியை ஏற்படுத்தக் கூடியவை. பெரும்பாலும் நான் அவந்திகாவிடம் தான் மன்னிப்புக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் என்னை விட மூத்த ஒரு எழுத்தாளர் என்னிடம் அந்த வார்த்தையை உபயோகப்படுத்தியதும் கதிகலங்கிப் போனேன். அவர் விளையாட்டாகச் சொன்னதை நான் ஏன் சீரியஸாக எடுத்துக் கொண்டேன் என்று யோசித்தேன். தொடர்ந்து பிறரால் அவமானப்படுத்தப் படுவதால் கூட என்னிடமிருக்கும் விளையாட்டுத் தனம் விடுபட்டுப் போயிருக்கலாம். (ஐந்து நிமிடத்துக்கு முன்பு கூட ஒரு ஆள் “சாரு, நீ ஒரு முட்டாள்; நீ எழுதுவதெல்லாம் குப்பை; நீ எழுதுவதை நிறுத்து” என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். நீ மூச்சு விடுவதை நிறுத்து என்று என்னிடம் சொல்ல நீ யாரடா நாயே என்று பதில் எழுதத் தோன்றியது. எழுதவில்லை. இன்னொரு சந்தேகம். நான் எழுதுவது குப்பை என்று தெரிந்தும் இவர்கள் ஏன் படிக்கிறார்கள்? தெருநாய் தானே குப்பைத் தொட்டியைக் கிளறும்? அப்படியானால் என் எழுத்து குப்பை என்று தெரிந்தும் படிப்பவர்களைத் தெருநாயோடுதானே ஒப்பிட முடியும்? சரி, போகட்டும்.)
எடுத்த விஷயத்துக்கு வருகிறேன். க்ரியா ராமகிருஷ்ணன் விளையாட்டாகச் சொன்னதை சீரியஸாக எடுத்துக் கொண்டு அவரைப் புண்படுத்தும் விதத்தில் ஒரு பதிவையும் எழுதி விட்டேன். அதற்கு அவர் மன்னிப்புக் கேட்ட போது கலங்கி விட்டேன். அவருக்கு நான் பின்வருமாறு ஒரு பதில் எழுதினேன்.
டியர் ராமகிருஷ்ணன்,
உங்களைப் படித்து வளர்ந்தவன் நான். உங்களையும் உங்கள் காலத்திய எழுத்தாளர்களையும். உதாரணமாக, ஞானக்கூத்தன், அசோகமித்திரன், சா. கந்தசாமி என்று பலர். நீங்கள் என்னிடம் மன்னிப்பு என்ற வார்த்தையை எழுதுவது என் மூத்த சகோதரன் என்னிடம் மன்னிப்புக் கேட்பதைப் போல் இருக்கிறது. உங்களை அப்படி தர்மசங்கடப்படுத்தி விட்டதற்காக நீங்களே என்னை மன்னிக்க வேண்டுகிறேன். என் இதயபூர்வமான வார்த்தை இது. நீங்கள் தமிழுக்குச் செய்திருக்கும் தொண்டு பற்றி சமயம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி வருபவன் நான். உங்கள் அகராதியைத்தான் நான் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறேன். க்ரியா பற்றித்தான் தி இந்துவிலும் எழுதினேன். என் நண்பர்களிடமும் சரி, பத்திரிகைகளிலும் சரி, க்ரியாவின் தரத்தை வேறு எந்தப் பதிப்பகமும் எட்டவில்லை என்றே சொல்லி வருகிறேன். உங்களிடமும் நேரில் அதைச் சொன்னேன். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர்களே தொடர்ந்து ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருப்பது எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
நீங்கள் விளையாட்டாகச் சொன்னதை சீரியஸாக எடுத்துக் கொண்டு அதைப் பற்றி எழுதியதற்காக உண்மையிலேயே நான் மனம் வருந்துகிறேன். ஆனாலும் ராமகிருஷ்ணன், ஒரு விளையாட்டைக் கூட சீரியஸாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு தினந்தோறும் நான் பலராலும் அவமானப்படுத்தப்படுகிறேன். பொது இடங்களில். ஒருவரிடம் அன்பாகப் போய் கை கொடுத்தால் கையை உதறி விட்டுப் போகிறார். இது சமீபத்தில் இரண்டு முறை நடந்து விட்டது. அப்படியே கன்னத்தில் அறை வாங்கியது போல் இருக்கிறது. வலிக்கிறது. எழுதுவதைத் தவிர நான் என்ன தவறு செய்தேன். இந்தக் காயத்தினால்தான் நீங்கள் விளையாட்டாகச் சொன்னதைக் கூட சீரியஸாக எடுத்துக் கொண்டு விட்டேன்.
மன்னியுங்கள். எனக்கு இருக்கும் பிம்பத்துக்குத் துளியும் சம்பந்தமில்லாத ஆள் நான். பழகினால் தெரிந்து கொள்வீர்கள்…
மிக்க அன்புடன்,
சாரு.
இதற்கும் ராமகிருஷ்ணனிடமிருந்து பதில் வந்தது. மற்றவர்களிடம் கடிதங்களை அவர்களின் ஒப்புதல் இன்றி நான் வெளியிடுவதில்லை. ஆனால் அதில் அவர் எழுதியிருந்த ஒரு விஷயம் என்னை மீண்டும் அவரிடம் மன்னிப்புக் கேட்க வைத்தது. நான் என் கடிதத்தில் எழுதியிருந்த ஒரு விஷயம்: ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர்களே தொடர்ந்து ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருப்பது எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
மீண்டும் என் பக்கத்திலிருந்து பிழை. ஒருவரைப் பற்றி நம் சூழலில் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பத்திலிருந்தே நாமும் அவரைப் பற்றிய கருத்தை/அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்கிறோம் என்பதற்கு நான் தான் மிகச் சரியான உதாரணமாக இருக்க முடியும். என்னைப் பற்றிய பிம்பம்: குடிகாரன், ஸ்த்ரீலோலன், வில்லங்கம் செய்பவன், முரடன், இன்னபிற. ஆனால் என் நண்பர்களுக்குத் தெரியும், இந்த பிம்பத்துக்கும் எனக்கும் துளிக்கூட சம்பந்தம் இல்லை என்பது. ஆக, அதையே தான் ராமகிருஷ்ணன் விஷயத்திலும் நானும் செய்து விட்டேன். அது பற்றி ராமகிருஷ்ணன் பின்வருமாறு எழுதினார்:
“பலர் என்னைப் பற்றித் தவறான எண்ணங்களைக் கொண்டிருப்பது நான் அறிந்ததே. அதற்கு நீங்கள் சொல்வது ஒரு உதாரணமாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன்.”
இதற்கு என் பதில்:
அன்புக்குரிய ராமகிருஷ்ணனுக்கு,
உண்மையிலேயே மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நேரில் வந்தேன். நீங்கள் இல்லை. இது பற்றிய என் மன்னிப்பை சாருஆன்லைனில் எழுதுவேன். பொதுவாக நிலவும் தவறான அபிப்பிராயங்களையே நானும் நம்பி அதை எழுதியது என்னுடைய மிகப் பெரிய தவறுதான். இப்போது இந்த மின்னஞ்சலில் மன்னிப்புக் கேட்பதை விட என் ப்ளாகில் எழுதி மன்னிப்புக் கேட்பதே சரியாக இருக்கும். செய்வேன்.
மன்னித்து விடுங்கள் ராமகிருஷ்ணன். இனி இதுபோல் தங்கள் விஷயத்தில் மட்டும் அல்ல; மற்றவர்களின் விஷயத்திலும் நடக்காமல் இருக்கும்படி என்னை கவனித்துக் கொள்வேன்.
மிக்க அன்புடன்,
சாரு.
ஜனவரி 20 அன்று எழுதியது இந்தக் கடிதம். ஒருவரைப் புண்படுத்தும் போது எது பற்றியும் யோசிக்காமல் க்ஷணப்பொழுதில் செய்து விடுகிறோம். ஆனால் மன்னிப்புக் கேட்கும் போதும் மட்டும் அதைச் செய்யாமல், காலம் சரி செய்து விடும் என்று காலத்தின் மேல் பழி போட்டு விடுகிறோம். அதையே நானும் செய்திருக்கிறேன்.
மன்னிப்பு என்றாலே இனி இப்படி நடக்காது என்று தான் பொருள். அந்தப் பொருளில்தான் க்ரியா ராமகிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொண்டு தமிழை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மிகுந்த தமிழ்நாட்டில் தமிழுக்கு உண்மையான தொண்டு செய்பவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் க்ரியா ராமகிருஷ்ணன். அவரது தமிழ் அகராதிப் பணிகளும் அவர் தொடர்ந்து பதிப்பித்து வரும் நூல்களுமே அதற்குச் சான்று. அந்தப் பணி இன்னும் மேலும் மேலும் தொடர வேண்டும் என அவரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.