வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் (1)

புதிய தலைமுறை வார இதழில் நான் எழுதி வரும் பத்தியின் முதல் கட்டுரையை இங்கே மறு வெளியீடு செய்கிறேன்.

***

சமீபத்தில் நார்வேயில் வசிக்கும் நண்பர் ஒருவருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே ஒரு மாடு சென்றது.  அந்த மாடு சாலையைக் கடக்கும் வரை கூட பொறுமை இல்லாமல் எல்லா வாகனங்களும் கன்னாபின்னா என்று ஹாரனை அடித்த போது அந்த மாடு மிரண்டு போய் சாலையின் போக்கில் ஓட ஆரம்பித்தது.  உடனே வாகன ஓட்டிகளும் இன்னும் அதிக அளவில் ஹாரனை அடிக்க, மாடு இப்போது இன்னும் கலவரமாகி ஓடியது.  சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் சாலையிலேயே அங்குமிங்குமாக ஓடிய மாடு கடைசியில் சாலையைக் கடந்தது.  அவ்வளவு தூரமும் வாகன ஓட்டிகளும் விடாமல் ஹாரனை அடித்துக் கொண்டே இங்கும் அங்கும் கார்களைத் திருப்பிக் கொண்டிருந்தனர்.  பார்ப்பதற்கு ஏதோ ஒரு பைத்திய உலகம் போல் தோன்றியது.

இந்தச் சம்பவம் எனக்குப் பல கேள்விகளை எழுப்பியது.  உலகில் பெரும்பாலான நாடுகளில் வாகனம் ஓட்டும் போது ஹாரன் அடிப்பதில்லை.  அடிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.  ஆனால் நம் ஊரில் மட்டும் ஏன் சிவப்பு விளப்பு எரியும் போது கூட பின்னால் இருக்கும் நபர் ஹாரனை விடாமல் அடிக்கிறார்?  நமக்கு அருகில் இருக்கும் இலங்கையில் கூட நீங்கள் ஹாரன் சப்தத்தைக் கேட்க முடியாது.  இந்தியாவில் சாலைப் போக்குவரத்து ஒழுங்காக இல்லை என்பது தவிர இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பொறுமையின்மை.  மாடு சாலையைக் கடக்கும் வரை ஹாரன் அடிக்காமல் இருக்க முடியவில்லை.  இந்தப் பொறுமையின்மைக்குக் காரணம், மன அழுத்தம்.  நம் நாட்டில் இன்று மன அழுத்தம் இல்லாதவர்களையே பார்க்க முடிவதில்லை.

சமீபத்தில் ரஞ்சன் தாஸ் என்பவரின் மரணம் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.  ரஞ்சன் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக (சி.இ.ஓ.) இருந்தார். இந்தியாவில் அந்தப் பதவியை வகித்தவர்களிலேயே அவர் தான் இளையவர்.  வயது 42.  குடி, சிகரெட் இல்லை. எல்லா மாரத்தன் ஓட்டங்களிலும் (சென்னையில் கூட) கலந்து கொண்டார்.  .  (மும்பை) பாந்த்ராவின் கார்ட்டர் ரோட்டில் அவர் ஓடிக் கொண்டிருப்பதை பலரும் பார்த்திருக்கிறார்கள்.   இது தவிர தினமும் ஜிம்முக்குப் போவார். மாரடைப்பால் மரணம் அடைந்த அன்று கூட அப்போதுதான் ஜிம்மிலிருந்து வந்திருந்தார்.  ஆரோக்கியத்தைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருப்பார்.  இப்படிப்பட்டவருக்கு ஏன் மாரடைப்பு வந்தது என்பது இன்று பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.  இதற்குப் பலரும் சொல்லும் காரணம், ரஞ்சன் தினமும் நான்கு மணி நேரம் தான் தூங்குவார்.  எனவே எல்லோரும் குறைந்த பட்சம் ஏழு மணி நேரம் தூங்க வேண்டும்.  இந்த விஷயத்தை விலாவாரியாக என்னிடம் விவரித்த நண்பர் இரவில் எட்டு மணி நேரமும் பகலில் இரண்டு மணி நேரமும் தூங்குபவர்! நண்பரின் வாதத்தை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.  ஏனென்றால்,  சாதனையாளர்கள் அனைவருமே நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் உறங்குகிறார்கள்.  உதாரணமாக, கருணாநிதி, இளையராஜா, மோடி எல்லோரும் நான்கு ஐந்து மணி நேரம் உறங்குபவர்களே.  ஆனால் இப்படிக் குறைந்த அளவு உறங்குபவர்கள் தியானமும் யோகாவும் செய்பவர்கள்.  அரை மணி நேர தியானம் இரண்டு மணி நேர ஆழ்ந்த உறக்கத்துக்கு சமம் என்கிறார்கள்.  சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது.  ரஞ்சன் தாஸின் மரணத்துக்கும் இதுதான் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.  மன அழுத்தத்தை ஜிம்முக்குப் போவதால் சமன் செய்ய முடியாது.  அதைச் செய்யக் கூடியது தியானமும் யோகாவும் தான்.  நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஹாரனை அடித்துக் கொண்டே மாட்டை கலவரப்படுத்தியவர்களும் இந்த மன அழுத்த நோயால்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  அந்த நார்வே நண்பர் சொன்னார், எங்கள் நாடாக இருந்தால் மாடு சாலையைக் கடக்கும் வரை கார்களை நிறுத்தியிருப்போம்.

இதோடு தொடர்புடைய இன்னொரு விஷயமும் இருக்கிறது.  நமக்கு மிருகங்களையும் பிராணிகளையும் எப்படி நடத்துவது என்றே தெரியவில்லை.  தில்லி மிருகக் காட்சி சாலையில் நடந்த மரணம் ஒரு உதாரணம்.  மதிலுக்கு அப்பால் இருந்தவர்கள் புலியைக் கல்லால் அடிக்காமல் இருந்திருந்தால் அந்த இளைஞர் பிழைத்திருக்கக் கூடும்.  ஏனென்றால், அது காட்டுப் புலி அல்ல.  மிருகக்காட்சி சாலையிலேயே பிறந்து வளர்ந்தது.  இரைக்காக மனிதனை அடிப்பது என்ற விஷயமே அதற்குத் தெரியாது.

பலரும் சமஸ்கிருதத்தை இறந்து போன மொழி என்று வாதிடுகின்றனர்.  நான் அந்த வாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.  ஆனால் அந்த மொழி நம் இந்தியப் பாரம்பரியத்தின் அற்புதமான பல பொக்கிஷங்களைக் கொண்டிருக்கிறது.  அகத்தியர் 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் முனி.  தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்.  தமிழ் அளவுக்கு சமஸ்கிருதத்திலும் எழுதியவர்.  (50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்ப் புலவர் என்றால் அவர் சமஸ்கிருதத்திலும் புலமை வாய்ந்தவராகவே இருந்தார்.  சமீபத்திய உதாரணம், கரிச்சான் குஞ்சு.) ஆனால் அகத்தியர் எழுதிய தமிழ் நூல்கள் தொலைந்து விட்டன.  சமஸ்கிருதத்தில் எழுதியவைகளில் அகஸ்திய சம்ஹிதா என்ற நூல் மட்டும் கிடைக்கிறது.  அதில் அவர் மின்சாரம் தயாரிப்பது எப்படி என்பதை சோதனை முறையின் மூலம் விளக்குகிறார்.   ”ஒரு மண் குடுவையை எடுத்து அதன் உள்ளே தாமிரத் தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவத்தை நிரப்ப வேண்டும். பின்னர் அதனுள் ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருண சக்தியைப் பெறலாம்.”

மின்சாரத்தைத்தான் அகத்தியர் மித்ரவருண சக்தி என்கிறார்.  இந்த விஷயம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்றால், 1891-ஆம் ஆண்டு புனேவில் கிருஷ்ணாஜி என்பவர் பழைய ஆவணங்களை ஆய்வு செய்த போது அவருக்குக் கிடைத்ததுதான் இந்த சம்ஹிதா.  இதைக் குறித்து அவர் பல பண்டிதர்களையும் அணுகிக் கேட்ட போது சிகிக்ரிவம் என்ற வார்த்தைக்கு மயிலின் கழுத்து என்று தெரிந்திருக்கிறது.  ஆனாலும் மயிலின் கழுத்தை வைத்துக் கொண்டு எப்படி மேலே கண்ட சோதனையைச் செய்வது என்று குழம்பி ஒரு பறவை ஆய்வாளரைக் கேட்டிருக்கிறார்.  அவர்தான் கிருஷ்ணாஜிக்கு அது மயிலின் கழுத்து அல்ல;  மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள் என்று சொல்லியிருக்கிறார்.  அப்படியானால் அது காப்பர் சல்ஃபேட்.  அதன் பிறகு மின்கலம் தயாராகி விட்டது.  அதில்  1.38 ஓப்பன் சர்க்யூட் வோல்டேஜும், 23 மில்லி ஆம்பியர் ஷார்ட் சர்க்யூட் மின்சாரம் கிடைத்திருக்கிறது. ஆக, 4000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழன் மின்சாரத்தைக் கண்டு பிடித்திருக்கிறான்.  ஆனால் நாமோ மின்சாரம் கண்டு பிடித்தது பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் என்று நம் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறோம்.  சமஸ்கிருதத்தை இறந்த மொழி என்கிறோம். இது சரியா என்று யோசிக்க வேண்டும்.

***

சமீபத்தில் என் நண்பர் குமாருடன் கோவைக்கு அருகில் உள்ள டஸ்கர் பள்ளத்தாக்கு சென்றிருந்தேன்.  பெயரிலேயே யானை இருக்கிறது.  அதனால் பஞ்சமில்லாமல் தென்னை மரங்களை அழித்துப் போட்டிருந்தன யானைகள்.  தப்பு யானைகள் மீது அல்ல.  வனத்தில் நீர் இல்லாததால் தாகத்துடன் வெளியே வருகின்றன யானைகள்.  வனத்தில் ஏன் நீர் இல்லை?  மனிதனின் பேராசையே காரணம்.  மரங்களையும் வனத்தையும் அழிக்கிறோம்.  அதனால் மழை இல்லை.  நடைப் பயிற்சிக்குக் கூட வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தனர்.  ஆனாலும் மாலை ஆறு மணிக்கு மேல் தான் யானைகள் இறங்கும் என்று தெரிந்ததால் ஐந்து மணிக்கே நடைப் பயிற்சிக்குக் கிளம்பினோம்.  பார்த்தால் சாலையின் குறுக்கே ஒரு பெரிய கரடி அமர்ந்திருந்தது.  உடனே புதரில் பதுங்கியபடி நண்பருக்கு போன் செய்து காரை எடுத்துக் கொண்டு வரச் செய்து தப்பினோம்.

பள்ளத்தாக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது.  சுற்றிவர மலைகள்.  நண்பர் குமார் சமீபத்தில் குடிப்பழக்கத்தை நிறுத்தியவர்.  ஆனாலும் அடிக்கடி புலம்பிக் கொண்டே இருந்தார்.  அவரிடம் நான் “எல்லாம் நன்மைக்கே” என்றேன்.  என்ன இது வேதாந்தம் என்றார்.  வேதாந்தம் இல்லை ஐயா, குறள் என்றேன். யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.  இது உங்களுக்காகவே எழுதப்பட்ட குறள். ஒருவன் எதிலிருந்தெல்லாம் நீங்குகிறானோ அதனால் எல்லாம் ஏற்படும் துன்பம் அவனுக்கு இல்லை.

கோவையில் இரண்டு இடங்களில் சாப்பிட்டேன்.  ஜூனியர் குப்பண்ணாவில் பள்ளிப்பாளையம் மீன் கறி.  எண்ணெயே இல்லாமல் ருசி பிரமாதமாக இருந்தது.  ஆனால் மீன் குழம்பில் சொதப்பி விட்டார்கள்.  எக்கச்சக்கமாக தேங்காயைப் போட்டு இட்லி மாவைப் போல் இருந்தது குழம்பு.  மீன் குழம்பு என்றால் கொஞ்சம் தண்ணியாக இருக்க வேண்டும்.  சிறிய வெங்காயத்தை முழுசாகப் போட்டு, தக்காளி, இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் மிக்ஸியில் போடாமல் நேரடியாக மண் சட்டியில் போட்டு வதக்கி (பக்கத்திலேயே இருந்து நன்றாகத் தோய்ந்து வரும் அளவுக்கு வதக்க வேண்டும்), அதில் புளிக் கரைசலை ஊற்றி நன்கு கொதித்ததும் marinate செய்து வைத்திருக்கும் மீனைப் போட்டு எடுப்பது ஒரு வகை முறை.  இன்னும் இதுபோல் பலவகை உண்டு.  ஆனால் மீன் குழம்பு இட்லி மாவைப் போல் இருந்தால் அது தப்பு. மறுநாள் ஹரி பவனில் மீன் குழம்பு சாப்பிட்டேன்.  நன்றாக இருந்தது.  மற்ற ஐட்டங்களும் பிரமாதம்.

***

நன்றி: புதிய தலைமுறை