எனக்குப் பிடித்த இசைஞானிகள்…

மலைப்பாக இருக்கிறது, 28 வாரமா ஓடி விட்டது என்று… அந்திமழையில் நான் எழுதி வரும் கேள்வி பதில் பகுதி இதோடு 28 வாரமாக வந்து கொண்டிருக்கிறது.  தொலைக்காட்சியில் போய் வாயையே திறக்காமல் உட்கார்ந்திருந்து விட்டு வந்தால் நூறு பேர் ஃபோன் செய்து பேசுகிறார்கள்.  நண்பர்கள் விசாரிக்கிறார்கள்.  இதுவரை – நம்பினால் நம்புங்கள், இல்லாவிட்டால் விடுங்கள் – இந்த 28 வாரமாக ஒரு நண்பர் கூட “உங்கள் கேள்வி பதில்களைப் படிக்கிறேன்” என்று என்னிடம் சொன்னதில்லை.  நானோ வெட்கம், மானம், சூடு, சொரணை, லஜ்ஜை எதுவும் இல்லாதவன் என்பதால் நானாகவே அதிஷா, ராஜேஷ், கணேஷ் போன்ற நண்பர்களிடம் கேட்பேன்.  அதிஷா என் ஃபோனில் இணைப்பு வருவதில்லை என்றார்.  நான் தான் லிங்க் கொடுக்கிறேனே என்றேன்.  லிங்க் குடுக்காதீங்க சார்; அப்பிடியே எடுத்துப் போடுங்க, படிக்கலாம் என்றார்.  அதில் எனக்கு உடன்பாடு இல்லை.  இன்னொரு பத்திரிகையில் நான் எழுதுவதை எடுத்து எப்படி சாருஆன்லைனில் போடுவது?  அது தர்மம் இல்லையே?  ராஜேஷிடம் மேற்கூறிய ஐந்து சமாச்சாரங்களையும் உதிர்த்து விட்டுக் கேட்டேன்.  ஓ, அட்டகாசமா இருக்கே, ஒவ்வொரு வாரமும் படிக்கிறேன் என்றார்.  கணேஷிடம் கேட்டேன்.  அப்படியா சாரு, அந்திமழையில எழுதுறீங்களா?  தயவு செஞ்சு தப்பா நினைச்சுக்காம ஒவ்வொரு வாரமும் எனக்கு லிங்க் அனுப்பிடுங்களேன் என்றார்.  ம்…  போரூரிலிருந்து விரால் மீன் கொண்டு வந்து கொடுத்த மகான்.  ஒன்றும் சொல்ல முடியவில்லை.  அந்திமழை ஆசிரியரைக் கேட்பேன்.  ரெஸ்பான்ஸ் பயங்கரமா இருக்கு சாரு என்பார்.  எது எப்படியிருந்தாலும், இதுவரை என் வாழ்நாளில் இப்படிப்பட்ட இனிமையான எழுத்து அனுபவம் எனக்கு ஏற்பட்டதில்லை.  பிறகு என்ன?  நீங்கள் இரங்கல் கட்டுரை எழுத விரும்பும் நபர் யார் என்று யாராவது யாரிடமாவது கேட்க முடியுமா சொல்லுங்கள்.  என்னிடம் அந்திமழை வாசகர் ஒருவர் கேட்டார்.  என் வாழ்நாளில் நான் எதிர்கொண்ட மிக சுவாரசியமான கேள்வி என்றால் அதுதான்.  இந்த வாரம் நான் பதில் அளித்திருக்கும் ஒரு விஷயம் சர்ச்சைக்கு உள்ளாகலாம்.  எனக்குத் தெரியாது.  நடந்ததைச் சொல்கிறேன்.  அவ்வளவுதான்.

http://andhimazhai.com/news/view/charu28.html