1.
சொல் ஏன் பிறந்தது
மனதைச் சொல்ல
உன் மனதை நானும்
என் மனதை நீயும்
சொல்ல முயன்றோம்.
காலக் கணக்கு தெரியவில்லை
2
ஒரு கட்டத்தில்
வேறு? என்றேன்
ஒன்றுமில்லை என்றாய்
உன் குரல்
வேறு பல கதைகள் சொன்னது
பால்கனிக்கு
தினமும் வந்து நீர் அருந்தி
பிஸ்கட் தின்னும்
அணில் குஞ்சுகள் பற்றி,
வளர்ப்பு முயல்குட்டி
அதிக அளவு
ரொட்டி தின்று
வயிற்றுவலியால் அவதியுற்றது பற்றி,
ஒரு பெண்
உன்னை அவமதித்தது பற்றி,
மார்பகங்கள்
நெறி கட்டி
நீ வாதையுற்றது பற்றி,
பைத்தியமா
என்று நீ
கேட்கையில்
எனது பதில்
உண்மைதானா என்று சோதித்தறிய மறந்தது பற்றி
மறந்தது பற்றி
மறந்தது பற்றி
நிதம்ப ஆராதனையின்
போது
உனது கூச்சலில்
பட்சிகள் நித்திரை கலைந்து,
அவைகளும் உன்னோடு சேர்ந்து
கரைவது பற்றி,
இந்த இருபத்தெட்டு வயதிலும்
நீயொரு சின்னவளாகவே
அலைவதையும்
என்னிடம் சேட்டைகள் புரிவதையும்
நான் புரிந்து கொள்கிறேனா
என்பது பற்றி
தூமை பெருக்கெடுக்கும்
நாட்களில்
நீ
மனம் கொதிப்புறுவது பற்றி
இயல்பிலேயே
இருக்க விடாமல்
தத்துவ மூட்டைகளை
தோளில் ஏற்றி வைத்து
உன்னைத் திணற அடிக்கும்
மடமை பற்றி…
3
ஒன்றுமில்லை
என்பதற்குள்
ஒளிர்கின்றன
ஒராயிரம் நட்சத்ரங்கள்.
இன்னும்
எத்தனை
யெத்தனையோ
கதைகளிருந்தும்
ஒன்றுமில்லை என்றுதான்
உன்னால் சொல்ல முடிந்தது.