ஜெயலலிதா விடுதலை : கா. மார்க்ஸ்

முகநூலில் கார்ல் மார்க்ஸ் எழுதிய இதையே என் கருத்தாகவும் கொள்ளவும்.  அப்புறம் டிசம்பரில் என் புத்தக வெளியீட்டில் வந்து ஜெயலலிதா விடுதலை பற்றி சாரு எதுவும் சொல்லவில்லை, பயப்படுகிறாரா என்று புகார் சொல்லக் கூடாது.  இனி கார்ல் மார்க்ஸ்:

கடந்த முறை ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட போது ”இந்த தண்டனைக்கு முற்றிலும் தகுதியானவர் ஜெயலலிதா” என்று சொல்லியிருந்தேன். எந்த டிவியில் என்று கேட்காதீர்கள். இதே முகனூலில்தான். இப்போது இந்த விடுதலைக்கும் அவர் முற்றிலும் தகுதியானவர் என்றே சொல்ல விரும்புகிறேன். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

அவருக்கு தண்டனை என்று தெரிந்தவுடன், தமிழ் நாடே ஆபாசக் கடலாக மாறியது. பால் காவடி, அலகு குத்துதல், மொட்டை அடித்துக்கொள்ளுதல், எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜை என ஊரே திமிலோகப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் சர்ச்சுகள் மசூதிகளும் கூட கலந்துகொண்டன. மந்திரிகள் மண் சோறு சாப்பிட்டார்கள். உணவு பரிமாறப்பட்ட இலைகளில் உருண்டு பிரார்த்தித்தார்கள் எம்எல்ஏக்கள். எல்லா பிரார்த்தனைகளுக்கும் தேவையான கூலி கட்சிப் பிரதிநிதிகளால் முறையாக வழங்கப்பட்டது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் கூட இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டார்கள். எங்காவது ஒரு ஊரில் ஏதாவது ஒரு பிரார்த்தனையோ ஊர்வலமோ நடந்துகொண்டே இருந்தது. இன்று வரையிலும் நடக்கிறது.

ஓ. பன்னீர் செல்வம் முதலவராக பதவியேற்றுக்கொண்ட அன்று, கண்ணீரில் மிதந்தது அந்த நிகழ்வு. முத்தாய்ப்பாக, கறுத்த உருவமும், உடல் முழுக்க நகையுமாக, பெரிய மீசையோடு கண்ணீர் விட்டு அழும் கட்சிக்காரர் ஒருவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலா வந்து பெரும் கவனத்தை ஈர்த்தது. அப்படி ஒரு வசீகரமான அழுகை அது.

இங்கு தான் கேள்வி எழுகிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்ற யாருக்குமே ஏன் கூச்சமில்லை?? இது ஆன்மாவின் சீரழிவு என்று ஏன் யாருக்குமே உறுத்தவில்லை?? காசு வாங்கிகொண்டு பிரார்த்தனைகளில் கலந்து கொள்வதற்கு ஏன் யாரும் தயங்கவில்லை. கோவில் பூசாரி முதல், முல்லாக்கள், பாதிரியார்கள் வரை எல்லாரும் வெளிப்படையாக சோரம் போனார்களே ஏன்?? இது ஆன்மீக வறுமை இல்லையா, அப்பட்டமான துயரம் இல்லையா??

இந்த ஊழலுக்கு எதிராக, வழக்கு தொடர்ந்த திமுக விலிருந்து தொடங்குவோம். இப்படி ஒரு வழக்கு தொடரவோ, அதில் அரசு தரப்பாக இணைந்து கொள்ளவோ எந்த தார்மீகத் தகுதியும் உண்டா திமுகவுக்கு. ஜெயலலிதாவின் தண்டனையைக் கொண்டாடிய திமுக ஆதரவு கவிஞர்கள், முகநூல் செயல்பாட்டாளர்கள், 2ஜியில் நடந்தது ஊழலே இல்லை என்று நம்பும் அறிவு ஜீவிகள் என இந்த ஆபாசத்தின் பங்குதார்களுக்கு ஜெயலலிதாவின் விடுதலையை விமர்சிப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லைதானே.

இந்த வழக்கு 18 ஆண்டு காலமாக இழுத்தடிக்கப்பட்டு, தீர்ப்பை நெருங்கியது. மனசாட்சியுடைய சில நீதிபதிகளும் வக்கீல்களும் விசாரணை கட்டத்திலேயே மனம் நொந்து வெளியேறினார்கள். குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, குறிப்பிட்ட ஒரு நீதிபதி இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று கூட உச்சநீதி மன்றத்தில் மனு போட்டார். அதையும் ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.

இந்த மேல்முறையீட்டில் அரசு தரப்பு வக்கீலையும், குற்றம் சாற்றப்பட்டிருப்பவரின் தரப்பில் இருக்கும் அரசே நியமிக்கிறது. அது தவறென்று சொல்ல நீண்ட நாட்களும், விவாதமும் தேவைபடுகிறது உச்ச்சநீதிமன்றதுக்கு. ஆனால் சல்மானுக்கு இரண்டு மணி நேரத்தில் ஜாமீனும், ஒரே நாளில் தண்டனை நிறுத்தி வைப்பும் சாத்தியமாகிறது அதே நீதிமன்றத்தில்.

மேல்முறையீட்டு விசாரணையில் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று தெளிவான வழிகாட்டுதலை விசாரிக்கும் நீதிபதிக்கு வழங்குகிறது உச்சநீதிமன்றம். எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு தான் விடுதலை செய்து உத்தரவை வழங்கியிருக்கிறார் குமாரசாமி. நீதியின் மாண்பு குறித்த பிரசங்கங்களை நிகழ்த்தும் வல்லமை இன்னமும் உண்டா நீதிமன்றத்துக்கு??

தமிழகத்துக்கு வருவோம். இங்கு அரசு நடக்கிறதா என்றே தெரியவில்லை. அரசு அழைக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள கூட முதலீட்டாளர்கள் தயாராக இல்லை. வேலைகள் முடிந்து செயல்பாட்டுக்குத் தயாராக இருக்கும் மெட்ரோ இரயிலின் ஒரு பகுதியை திறந்து வைக்கக்கூடத் தயங்கும் தற்காலிகத் தலைமை. ஆனால் முடிந்த வரை எல்லாரும் சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

கமிஷன் கொடுத்து கட்டுப்படியாகாமல் இவர்கள் தான் அதிகமாக ஊழல் வாங்கும் அதிகாரிகள் என ஒரு பட்டியலை ஊழல் ஒழிப்புத்துறையிடம் சமர்ப்பிக்கிறார்கள் ஒப்பந்தக்காரர்கள். ஒதுக்கப்படும் பணத்தில் 45% கமிஷனாகவே போய்விட்டால் எப்படி பணியை முடிப்பது என்று வெளிப்படையாக கேட்கிறார்கள் அவர்கள். கமிஷன் பிரச்சினை இல்லை அவர்களுக்கு. கட்டுப்படியாத கமிஷன் தான் தாங்க முடியவில்லை.

இத்தகைய ஒரு சூழலில் ஜெயலிதா மட்டும் எதற்காக ஜெயிலுக்குப் போக வேண்டும். இந்த ஊழலின் பங்குதாரர்களாக, அதிகாரிகளும், கட்சிக்காரர்களும், பெரும்பான்மை மக்களும் ஆகியிருக்கும்போது அவ்வாறு நாம் விரும்புவது அபத்தம் இல்லையா. இப்போதுள்ள சூழலில் இங்கு ஜெயலலிதாக்கள் மட்டும் தான் தலைமையேற்க முடியும், அரசை வழி நடத்த முடியும். அவரை தண்டிக்கும் தகுதியையோ, ஏன் மன்னிக்கும் தகுதியையோ கூட நாம் இழந்திருக்கிறோம். இந்த விடுதலைக்கு முற்றிலும் தகுதியான அவரை வரவேற்போம்.

http://grademiners.com

Comments are closed.