மராட்டி ஒரு இனிமையான மொழி

ஒவ்வொரு எழுத்தாளரின் ஒவ்வொரு புத்தகம் கிடைக்காமல் போய் விடுவதால் பலரைப் பற்றியும் எழுத முடியாமல் கிடக்கிறேன்.  பழுப்பு நிறப் பக்கங்களில் தஞ்சை பிரகாஷ் பற்றி எழுதலாம் என்றால் அவருடைய கரமுண்டார் வீடு கிடைக்கவில்லை.  அதேபோல் எம்.வி.வி.யின் நித்ய கன்னி.  பிரபு காளிதாஸ் கொண்டு வந்து தருகிறேன் என்றார்.  காலையில் வருகிறேன்.  அய்யோ, காலையில் வந்தால் பதினெட்டாம் நூற்றாண்டு நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி மாதிரி இங்கே வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பேனே என்றேன்.  வீட்டு கேட்டுல தொங்குற பைல போட்டுட்டு ஓடிர்றேன் சாரு என்றார் பிரபு.  சரி ஓடிருங்க என்றேன்.  காலையில் எட்டரைக்கு நடைப் பயிற்சி முடித்து விட்டு ஆட்டோவில் பாபா கோவிலைக் கடக்கும் போது அங்கே ஒரு கன்னியிடம் பூ வாங்கிக் கொண்டிருந்தார் பிரபு.  ஆட்டோவிலிருந்து குதித்து இறங்கி அவரைப் போய்ப் பிடித்தேன்.  கோவிலுக்கா பூ?  என்றேன்.  ஹீஹீ என் ஒய்ஃபுக்கு என்றார்.  அடப் பாவி, அதுக்கு இங்கே பாபா கோவிலுக்கா வரணும்?  இங்கேதான் தாமரைப் பூ கிடைக்கும்னாங்க.

அப்படியே அவர் பைக்கில் அமர்ந்து மீன் கடைக்குச் சென்ற  போது சந்தேகப்பட்டு நீங்க சைவமா அசைவமா என்றேன்.  சிரித்துக் கொண்டே நான் தஞ்சாவூரைச் சேர்ந்த மராட்டி என்றார்.  ஓ, அப்படியானால் விமலாதித்த மாமல்லனுக்கு உறவா வருவீங்களே? என்றேன்.  மாமல்லன் மராட்டியில் அவர் அம்மாவோடு உரையாடுவதை 25 ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டிருக்கிறேன்.  மராட்டி எவ்வளவு இனிமையான மொழி என்பதையும் அப்போது உணர்ந்திருக்கிறேன்…