முகநூல்

முகநூலால் எவ்வளவோ பயன்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அனைவரும் அறிவோம்.  அதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லை.  எனக்கு செய்தித்தாள் படிக்க நேரமில்லை.  முகநூல் மூலம் தான் என்ன முக்கிய செய்திகள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.   ஆனால் ஆயிரக் கணக்கான மொக்கைகளும் முகநூலில் உலவிக் கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றன.  புகைப்படத்தைப் போட்டு ஆயிரம் லைக்ஸ் அள்ளும் அழகி மொக்கைகளின் அட்டகாசம் அதில் ஒன்று.  அது பற்றி ஜ்யோவ்ராம் சுந்தர் முகநூலில் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன்.

”நண்பரின் பதிவொன்றில், ஒருவர் இனிய காலை வணக்கம் என்று பின்னூட்டமிட்டிருந்தார். ஒரு நடிகையின் படம் ப்ரொஃபைல் பிக்சராக இருந்தது. சரி, யார் எனப் பார்க்கலாம் என அவர் பெயரைக் கிளிக் செய்து போனேன். பெண் ஐடி.
ஒரு 3000 பேர் அந்த ஐடியைப் பின் தொடர்கிறார்கள். சரி, என்னதான் எழுதுகிறார் எனப் பார்த்தால், அவ்வப்போது இனிய காலை வணக்கம் பதிவு. வேறு ஒன்றுமே இல்லை.

ஜுலை ஆறாம் தேதி காலை வணக்கம் பதிவுக்கு மட்டும் 469 லைக்ஸ், 190 பின்னூட்டங்கள். தமிழில் எவ்வளவு விதம் விதமாக காலை வணக்கம் சொல்லலாம் என்பதை அந்தப் பின்னூட்டங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இனிய காலை வணக்கம், இனிய காலை, இனிய காலை வணக்கம் சகோ, என்று ஆரம்பித்து, இனிய மதிய வணக்கம், மாலை வணக்கம், இனிய இரவு வணக்கம் என்று நீண்டு மறுபடியும் மறுநாள் காலையில் அதே பதிவுக்கு காலை வணக்கத்தைத் துவக்கி விட்டார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு தோன்றியவை :

1. நமக்குத் துளிக்கூடத் தொடர்பில்லாத – தெரியாத – ஒரு பெரிய கூட்டமே ஃபேஸ்புக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
2. இந்த அளவுக்கா காய்ந்து போயிருக்கிறார்கள் நம் மக்கள்?”

ஜ்யோவ்ராம் சுந்தர்