உ.வே.சா.வும் பாரதியும்

ஐயா, வணக்கம்.

உவேசா குறித்த உங்கள் கட்டுரையை படித்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். தமிழ் மொழிக்குப் பெரும் தொண்டாற்றிய மாமனிதரைப் பற்றிய பல அரிய, பயனுள்ள விஷயங்களை மிக்க சுவையுடன் எடுத்துச் சொல்கிறது உங்கள் கட்டுரை. வாழ்த்துக்கள்.

இங்கு எனக்கு எழுந்துள்ள சந்தேகம் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

இந்தக் கட்டுரையில், பாரதியாரைப் பற்றியும் உவேசா கட்டுரை எழுதியிருக்கிறார் என்றுகுறிப்பிட்டுள்ளீர்கள். (நீல நிறம் இட்டிருக்கிறேன்). இது உண்மையா?

பாரதியார் வாழ்ந்த காலத்தில், அவரது மேதாவிலாசத்தை, கற்றவர்கள், பெரிய தமிழ் அறிஞர்கள் பலரும் கூட அறிந்துகொள்ளவில்லை என்பது தான் சோகமான உண்மை. நாடு விடுதலை அடையும் வரை கூட பெரும்பாலும் இதே நிலைதான். தூரதிர்ஷ்டவசமாக, உவேசா வும் கூட பாரதியின் அருமை பெருமைகளை அறியாதவராகவே தான் இருந்திருக்கிறார் என்பது தான் என்னுடைய தாழ்மையான எண்ணம்.

உவேசா ‘தமிழ்த் தாத்தா’ என்றெல்லாம் பலராலும் பாராட்டப்படுவதற்கு முன்பே, அவர்‘மஹாமஹோபாத்யாயர்’ பட்டம் பெற்றதைப் பாராட்டி, அவரது தமிழ்ப்பற்றையும், தொண்டையும் போற்றி, சிறந்த கவிதை இயற்றி வானளாவப் புகழ்ந்தவர் பாரதியார். ஆனால், பாரதியின் தமிழ்த்தொண்டையோ, நாட்டுப்பற்றையோ பற்றி, நான் அறிந்தவரை, உவேசா எங்கும் குறிப்பிட்டதாகவே தெரியவில்லை. ‘என் சரித்திர’ த்திலும் பாரதியாரைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஜீவா போன்ற பாரதி அன்பர்களும் கூட இதை மிக்க ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகவே, சுப்ரமணிய பாரதியார் பற்றியும் உவேசா எழுதியுள்ளார் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளது சரியா?

அல்லது, அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது, உவேசா மிக நன்றாக அறிந்திருந்த கோபாலகிருஷ்ண பாரதியார் ஆ? அதுதான், சுப்ரமணிய பாரதியார் என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா?

தயவுசெய்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

இல்லை, உவேசா சுப்ரமணிய பாரதியார் பற்றியும் கூட எழுதியுள்ளார் என்றால், அந்தக் கட்டுரையை தயைகூர்ந்து தாங்கள் அனுப்ப முடியுமா? அல்லது எங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?

மிக்க நன்றியுடன்

அன்பன்

ஶ்ரீனிவாஸ்

அன்புள்ள திரு ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

வணக்கம்.  உங்கள் கடிதத்தைப் படித்த பிறகு உ.வே.சா. எழுதிய நூற்பட்டியலை மீண்டும் பார்த்தேன்.  நீங்கள்  சொல்வதே சரி.  அவர் கோபாலகிருஷ்ண பாரதியாரைப் பற்றித்தான் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.  சுப்ரமணிய பாரதி பற்றி அல்ல.  பழுப்பு நிறப் பக்கங்கள் நூலாகத் தொகுக்கப்படும் போது இத்தகவல் பிழையைச் சரி செய்து விடுகிறேன்.  எனக்குமே உ.வே.சா. பாரதி பற்றி எழுதாதது ஆச்சரியத்தை அளிக்கிறது.  ஒருவேளை பாரதியின் கலக வாழ்க்கையைக் கண்டு உ.வே.சா.விடம் ஒரு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம்.  தெரியவில்லை.  யூகம்தான்.

தங்கள் கடிதத்துக்கு மிக்க நன்றி.

அடியேன்,

சாரு